Sunday, August 01, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் - 2

இதே தலைப்பில் தமிழ்நாட்டில் இருந்து ரொரன்ரோ வருகை தந்து ஒரே மருந்தினையே எல்லா வியாதிகளுக்கும் கொடுத்து காசு பார்த்த ஒரு ஆயுள்வேத வைத்தியரைப் பற்றி எழுதியிருந்தேன்

சில வாரங்களுக்கு முன்னர். தமிழ் பத்திரிகைகளில் பார்த்தேன். கும்பகோணத்தில் இருந்து ஒரு சோதிடர் வந்திருக்கிறார் என்று பூனூல் சகிதம் போட்டோ
விளம்பரம். இப்போது தமிழ்நாட்டில் இருந்து நாடி சோதிடர்,எண் சோதிடர்,சாமியார்கள் இப்படி பலருக்கு
ரொரன்ரோ தான் சொர்க்கமாக மாறிவிட்டது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் முன்னேறிய கனடா போன்ற
நாட்டிற்கு வந்த பின்னரும் இப்படிப் பட்டவர்களிடம் ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது.

இப்போது ரொரன்ரோ வில் உள்ள மக்களுக்கு தெய்வீக தரிசனம் அளிக்க கேரளத்தில் இருந்து வந்திருப்பவர்
மாதா அமிர்தானந்தமாயி அம்மா. தனது நாட்டில்,மாநிலத்தில் எவ்வளவோ மக்கள் துன்பத்தில்,வறுமையில் உழன்று கொண்டுஇருக்கின்றனரே அவர்களை எல்லாம் விட பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு தரிசனம் தர வந்திருக்கும் அம்மாவின் கருணைதான் என்ன?

இங்குள்ள 5 நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருக்கும் அம்மா தனது பக்தர்களை ஆரத்தழுவி ஆசீர்வதிக்கிறார்.
இதற்கு கட்டணம் தலைக்கு 50 கனேடியன் டொலர்கள்.இப்படி பணம் கட்டி ஆசிர்வாதம் பெறத்துடித்த 5800 பக்தர்களை இரவு 10.00 மணி தொடங்கி காலை 6.45 வரை கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்த அம்மா
திரட்டிய பணம் எவ்வளவு என்று பார்த்தீர்களா? அமிர்தானந்தமாயி அம்மாவின் வருகையை ஒட்டி இங்கு
வெளிவரும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று தடல்புடல்தான்போங்கள். எல்லாம் டொலரின் மகிமைதான்.

அண்மையில் தான் சாயிபாபாவின் லீலைகள் பற்றி பி.பி.சி.யில் வெளிவந்து உலகமே சிரித்தது. அன்னை தெரேசாவை இன்றும் உலகம் மதிக்கிறது என்றால் அவர் தன்னைக் கடவுள் என்று சொல்லவில்லை
பணம் சேர்த்தார்,அனாதைகளுக்கு,நோயால் பாதிக்கப்படடவர்களுக்கு உதவிகள் செய்தார்.

சத்தியசாபி பாபா உதவிகள் செய்யவில்லையா என்று கேட்பீர்கள்.பாபாவைப் சுற்றி ஒரு மர்ம திரை இருப்பதை காலத்துக்கு காலம் நிகழும் சம்பவங்களும்,வரும் செய்திகளும் சொல்கின்றனவே.
அது என்னவோ தெரியவில்லை இப்படி சாமியார்களைச் சுற்றி இருக்கும் பக்தர்கள் யார் ஏன்று பார்த்தால் மெத்தப் படித்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் கல்கி சாமியாரிடம் படித்தவர்கள்
பலர் சீடரானதும் ,ஏற்பட்ட சர்ச்சைகளும் ஞாபகத்திற்கு வருகிறது.

எனது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வெற்று நிலம் நீண்டகாலமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் பார்த்தபோது புள்டோசர்கள் அந்த நிலத்தினை துப்பரவாக்கிக் கொண்டு இருந்ததைக் காணமுடிந்தது.நேற்றுப்
பார்த்தேன். ஒரு விளம்பரப் பலகை ஒன்று காணப்பட்டது.இது சத்தியசாயி பாபா நிலையத்துக்காக ஒதுக்கப்பட நிலம் என்ற வாசகங்கள் ஆங்கிலத்தில் பளிச்சிட்டது.






No comments: