Sunday, October 31, 2004

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?

இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்துபேச தமிழகத்தில் வலுவான சக்திகள் இல்லை என்று கூறுவதன் மூலம் யாருக்கு தெம்பூட்டுகிறார்?

பத்திரிகையாளன் என்ற நிலைக்கு அப்பால் இலங்கை விவகாரத்தில் இவர் அதீத ஈடுபாடு


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காமினி திசாநாயக்கவின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "இந்து' வின் பிரதம ஆசிரியர் நரசிம்ஹன் ராம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

"இந்தியாவும் இலங்கையும்; முன்னாலுள்ள எதிர்காலம்' என்ற தலைப்பில் ராம் ஆற்றிய ஒரு மணிநேர உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்தன.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் இலங்கை அரசியல் மீது ராம் ஆரம்பத்தில் காட்டி ய ஈடுபாடு பின்னர், அவரே ஒத்துக் கொள்கின்ற முறையில், பத்திரிகைத் தேவைக்கு அப்பால் சென்று விட்டது. "ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவிடம் இருந்து பேட்டியொன்றைப் பெறுவதற்காகவே நான் அப்போது இலங்கைக்கு வந்தேன். பின்னர் எனது பங்கு பத்திரிகைத் துறைக்கு அப்பால் சென்று விட்டது' என்று அன்றைய நினைவுப் பேருரையில் ராம் குறிப்பிட்டி ருக்கிறார்.

இப்போது ராம் இலங்கை அரசினதும் அரசுக்கு வரக்கூடிய அரசியல் கட்சிகளினதும் உயர் மட்டத் தலைவர்களின் நெருங்கிய நண்பனாக வந்து போகிறார். காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்களுடனான அதீத நெருக்கம் பற்றிக் குறிப்பிடும் ராம், கடந்த வாரம் உரையாற்றுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நண்பர் ராஜபக்ஸ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நண்பர் ரணில் என்றும் அடிக்கடி, விளித்தார். இத்தகையதொரு நெருக்கம் இந்தியாவின் வேறு ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கும் இருக்கும் என்று நினைப்பதற்கில்லை.

ராம் மீண்டும் இந்துவின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கை இன நெருக்கடி விவகாரத்தில் அப்பத்திரிகை ஆழமான ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் கருணா முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய பின்னர் அந்த விவகாரம் குறித்து "இந்து' பத்திரிகை 4 க்கும் அதிகமான தடவைகள் ஆசிரிய தலையங்கம் தீட்டி யிருந்தது. கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் ஆசிரிய தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. 100 கோடி க்கும் அதிகமான மக்களையும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் கொண்ட இந்திய தேசத்தின் ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகை இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு அரசியல் முக்கியத்துவ நிகழ்வுப் போக்கிற்கும் அதன் பிரதிபலிப்பை ஆசிரிய தலையங்கம் ஊடாக வெளிக்காட்டுகின்றதென்றால், அதன் ஆசிரியருக்கு இலங்கை விவகாரத்தில் ஒரு பிரத்தியேகமான ஈடுபாடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் துரதிர்ஸ்டவசமாகத் தேக்க நிலையடைந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசு நிலை உறவுகள் எவ்வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறித்து தனது உரையில் ராம் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்திருக்கிறார்.
1987 ஜூலை 29 இல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனாவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும்பில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்திய சமாதான உடன்படிக்கையில் இருந்து ஆரம்பித்து, அந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போன காரணங்களைச் சொல்லி அதன் பின்னரான இன்றைய நிலை பற்றிய தனது ஆய்வைச் செய்திருக்கிறார் "இந்து' பிரதம ஆசிரியர். சமாதான உடன்படி க்கையை நடைமுறைப்படுத்த முடியாமல் போன சூ ழ்நிலைக்கு கொழும்பு செய்த எதிர்மறையான பங்களிப்புக் குறித்து கவனத்தை ஊன்றாமல் மேலோட்டமாகப் பேசிய ராம், விடுதலைப்புலிகள் மீதே அதற்கான குற்றத்தை முழுமையாகச் சுமத்தும் தொனியில் கருத்து வெளியிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இங்கு ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை, இன நெருக்கடி தொடர்பிலான இந்திய அனுகுமுறையை, தற்போதைய சமாதான முயற்சிகள் தொடர்பிலான தங்கள் அனுகுமுறைகளையெல்லாம், 1991 மே 21 க்குப் பின்னரான பின்புலத்திலேயே அதாவது சென்னைக்கு அடுத்ததாகவுள்ள பெரம்புதூரில் ராஜீவ் காந்தி தற்கொலைக் குண்டுப் போராளியினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னரான இந்திய உணர்வு நிலைகளின் பின்புலத்தில் தான் ராம் நோக்கின்றார். 1991 க்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டதை தனது உரையின் பல இடங்களில் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கை அரசியலின் ஒவ்வொரு நிகழ்வுப் போக்கிலும் உள்ள நுண்ணிய அம்சங்கள் மீதெல்லாம் அக்கறை காட்டுகின்ற ராம், இலங்கை இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான தற்போதைய சமாதான முயற்சிகளில், பேச்சுவார்த்தைகளில் இந்தியா எந்தவிதத்திலுமே பங்குபற்ற முடி யாதென்பதை தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்டி ருப்பதே இதற்குக் காரணம் என்று காரணம் கற்பிக்கும் ராம், அந்த விவகாரத்தில் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு இந்தியா தயாரில்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார். விடுதலைப்புலிகள் என்னதான் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றிருந்தாலும், மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டாலும் நாட்டுப் பிரிவினை என்ற அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் விலகவேயில்லை என்று உறுதிப்படக் கூறுகிறார் ராம்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறியதற்கு பின்னரான கால கட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் சீரடைந்ததன் விளைவாக வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார உறவுகள் குறித்து தனதுரையில் ராம் பெருமளவுக்கு குறிப்பிட்டி ருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்ததாக இலங்கையுடன் பெருமளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடாக இலங்கை இன்று விளங்குகிறது. இலங்கையில் கணிசமான இந்திய முதலீடு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் மேம்பாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சி செய்த பங்களிப்பை ராம் வெகுவாகப் பாராட்டுகிறார்.

இதற்காக ஐ.தே.க. வையும் ரணிலையும் பாராட்டும் 'இந்து" பிரதம ஆசிரியர், சமாதான முயற்சிகள் தொடர்பில் இன்று ஐ.தே.க. எடுத்திருக்கும் நிலைப்பாட்டை வரவேற்கவில்லை. விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடி ப்படையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்; அதற்கு பரிபூரண ஆதரவு அளிக்கத் தயார் என்று, ஐ.தே.க. செய்திருக்கும் பிரகடனம் ராமின் மனதுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுபோலும். ராமின் பேச்சு முழுவதிலும் ஒருவரியைத் தவிர தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகள் - உரிமைகள் பற்றி அவர் எதையுமே பேசவில்லை.

விடுதலைப் புலிகளின் எந்தக் கோரிக்கைக்குமே இணங்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதில் அதீத அக்கறை காட்டிய ராம், அத்துடன் நின்றுவிடாமல், இலங்கையின் வடக்கு, கிழக்கின் நிலைவரங்களில் அடிப்படையில் தளமாற்றம் ஏதாவது இடம்பெறுமானால், இந்தியாவின் தற்போதைய இலங்கைக் கொள்கை தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுகிறார். அத்தகைய, அடிப்படை மாற்றம் எதுவுமே நிகழுமானால், இந்தியா பார்த்துக் கொண்டி ருக்காது என்று தென்னிலங்கைச் சிங்கள அரசியல் சமுதாயத்துக்கு ராம் தெம்பபூட்டுகிறார்.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும், பாக்குநீரிணையில் கூட்டு ரோந்தில் ஈடுபடவேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் யோசனைக்கு ராம் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இனநெருக்கடி, தொடர்பில் தமிழகத்தில் எந்தவித உணர்வு நிலைமாற்றமும் ஏற்படுவதற்கில்லை. தென்னிலங்கை அது குறித்து அஞ்சவே தேவையில்லை என்றும் ராம் தெம்பூட்டுகிறார். ஒருசில குழுக்களும் தமிழுணர்வு அரசியல் இயக்கங்களுமே குரலெழுப்புகின்றன. மற்றும்படி இலங்கைத் தமிழர் சார்புப் போக்கு என்பது தமிழகத்தில் இல்லை என்று கூறும் ராம், தனது பேச்சு முழுவதிலுமே இலங்கை அரசுக்கும் அரசுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய கட்சிகளுக்குமே தனது செய்தியை எடுத்துணர்த்துகிறார்.

தமிழகத்தில் திராவிட இயக்கம் வலுவிழந்த சூழலில், தமிழக அரசியல் சமூ கத்துக்கும் இலங்கையில் உள்ள தமிழ் இயக்கத்துக்கும் இடையேயான தொடர்பின் தற்போதைய நிலை குறித்த ராமின் கருத்துக்கள் வெறுமனே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடா? அல்லது திராவிட இயக்கங்களை அவற்றின் அடிப்படை உணர்வுப் போக்குகளில் இருந்து வலுவிழக்கச் செய்து விட்டதில் தமிழகப் பிராமணியத்தின் வெற்றி எக்காளமா? தமிழகத்தில் தமிழுணர்வு இல்லை என்பதை சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுக்கு சொல்லி வைக்கிறார் ராம். இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்துபேசுபவர்கள் தமிழகத்தில் சக்திமிக்கவர்களாக இல்லை என்பதை ராம் கொழும்பில் பிரகடனம் செய்கிறார்.

தனது உரையில் ஒரு கட்டத்தில் ராம், இந்திய அரசுக்கு காஸ்மீர் விவகாரத்தில் எவ்வாறு விட்டுக் கொடுக்க முடியாதோ இதேபோன்றே இலங்கையின் வடக்கு, கிழக்கு விவகாரத்திலும் இலங்கை அரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்ற வகையிலான கருத்தை அழுத்தியுரைக்க முயற்சித்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றையெல்லாம் சொல்லும் ராம், உலகத் தலைவர்களின் தலைவன் என்று தனக்கு முடி சூடிக் கொள்ள ஆசைப்படும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியின் நல்ல நண்பர். ராமின் கொழும்பு உரை குறித்து தமிழ்நாடு எந்த விதமான பிரதிபலிப்பைக் காட்டப் போகிறது? வைகோ, ராமதாஸ் என்ன சொல்லப்போகிறார்கள்?உண்மையிலேயே ராம், இந்தியாவுக்காகப் பேசுகின்றதைப் போலக் காட்டிக்கொண்டு, இலங்கை அரசுக்கும், அரசுக்கு வரக்கூ டிய கட்சிகளுக்கும் அறிவுரை கூறுவதைப் போன்று காட்டிக் கொண்டு, இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை அமுக்கும் நோக்கிலேய தனது குரலை ஒலிக்கிறார்.
இத்தனைக்கும் இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.


கடந்த ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பொன். கந்தையா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்திய போது 'ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மையினங்களுக்கு குறிப்பாக தமிழ்பேசும் மக்களுக்கு கூடுதல்பட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு" என்று குறிப்பிட்டார். ராமின் உரையை நோக்கும்போது, அவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரா என்று கேள்வி எழுகிறது.

இலங்கை விவகாரத்தில் பத்திரிகைத்துறைக்கு அப்பால் எத்தனையோ, மைல்களைக் கடந்து சென்று இலங்கை அரசியல் அதிகாரவர்க்கத்தின் உற்ற நண்பனாகச் செயற்படும் ராம் யாருடைய குரல் -இந்திய அரசின் குரலா? இந்துப் பத்திரிகையின் குரலா? திராவிட இயக்கத்தைச் சீரழித்து விட்டதால் பெருமிதம் கொள்ளும் தமிழகப் பிராமணியத்தின் குரலா? அல்லது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் குழுவின் குரலா?

நன்றி:- தினக்குரல்

No comments: