Wednesday, December 15, 2004

மதத்தீவிரவாத பேராபத்து.!

நேற்றைய தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கம் இது. தேவை கருதி அதை இங்கு மீண்டும் பிரசுரித்திருக்கிறேன். நன்றி- தினக்குரல்

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கடந்த சனிக்கிழமை இரவு பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் குழுவினரின் நிகழ்ச்சியின் இறுதியில் இளவயதினர் இருவரைப் பலிகொண்டு பலரைக் காயமடையவைத்த கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்று எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரே பின்னணியில் இருந்ததாக அரசாங்கமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பதற்கான பிரயத்தனமாக பௌத்த பிக்குமார் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவினர் இப்போது கூறுகிறார்கள்.
திருமதி குமாரதுங்க தனது ஜனாதிபதி பதவியின் 10 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் நேர்மையான மார்க்கத்தில் மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்துக்கு தங்களால் வரமுடியாதென்பதை உணர்ந்து விட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவர் தனது குண்டர்களைப் பயன்படுத்தி நாட்டில் அச்சத்தையும் வன்முறைகளையும் மூளவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்று முற்றிலும் கட்சி அரசியல் உணர்வுடனான குற்றச் சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார்.

கிரனேட் தாக்குதல் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் இந்திய அரசாங்கம் இலங்கைப் பொலிஸாரின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
உண்மையிலேயே அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ குதிரைப் பந்தயத் திடல் கிரனேட் தாக்குதல் சம்பவத்துக்கு வழிவகுத்த அரசியல்-மதவாதப் பின்னணிகளை உகந்த முறையில் நோக்குவதற்குத் தயாராயில்லை; மாறாக, அந்தப் பின்னணிகளின் ஆரோக்கியமற்ற தன்மைகளை மூடிமறைத்து தங்களுக்கு அரசியல் ஆதாயத்தைத் தேடும் வக்கிர உணர்வுடனேயே அவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பௌத்த பிக்குமாரின் வெளிப்படையான பிரவேசத்தினால் தோன்றியிருக்கும் தற்போதைய சர்ச்சைகளைவிட மிகவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்கைச் செலுத்தி அரசியலில் மதவாதத்தை முனைப்புடன் முன்னெடுக்கக் கூடியவராக வந்திருக்கக் கூடிய கங்கொடவில சோம தேரரின் முதலாவது நினைவு தினத்தன்று ஷாருக்கான் குழுவினரின் களியாட்ட நிகழ்ச்சி நடத்தப்படக் கூடாது என்ற பௌத்த பிக்குமாரில் ஒரு பிரிவினரின் கோரிக்கையே அன்றைய அசம்பாவிதங்களுக்குக் காரணம்.

இலங்கை அரசியலில் பின்னணியில் இருந்து பிக்குமார் செல்வாக்கைச் செலுத்தி ஆட்சியாளர்களின் நடத்தைப் போக்குகளைத் தீர்மானித்து வந்திருக்கிறார்கள் என்ற போதிலும், அண்மைக் காலமாக அவர்களில் ஒரு சாரார் காண்பிக்க ஆரம்பித்திருக்கும் நேரடி அரசியல் ஈடுபாடு ஏற்கெனவே ஆரோக்கியமற்றதாக இருக்கும் தென் இலங்கை அரசியல் அரங்கில் மேலும் இருள் சூழ்ந்த சிந்தனைப் போக்குகளின் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கப் போகின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

குறிப்பிடத்தக்க சில புறநடைகள் இருந்த போதிலும், இலங்கை அரசியலில் பிக்குமாரின் பாத்திரம் அநேகமாக எதிர் மறையானதாகவே இருந்து வந்திருக்கிறது. கௌதம புத்தரின் சிந்தனைகளையே அவமதிக்கின்ற வகையிலான 'சிங்கள பௌத்தம்" என்ற கருத்தாக்கம் இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம். மஞ்சள் அங்கி அணிந்த ஒரு பிக்கு சிங்கள மக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட ஒரு பிரதமரைச் சுட்டுக் கொன்றதும் இன்னொரு பிக்கு இக் கொலையில் குற்றஞ் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை பெற்றதும் தற்செயலானவையல்ல. சிங்களவர் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு சிங்கள, பௌத்த மத சிந்தனையில் ஒழுக்க நியாய பாரம்பரியம் ஒன்று இல்லை என்பதற்கான சரித்திர நினைவுச் சின்னம் போன்ற சான்றே இச்சம்பவங்கள்.

இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடாகக் கருதப்படும் மஹாவம்சம், மகாநாம என்ற மதகுருவால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. மஹாவம்ச நூலின் பிரதிகள் அனைத்தையும் தீயில் பொசுக்க வேண்டும். ஏனென்றால், சிங்கள பௌத்தர்களின் இன ரீதியான சிந்தனைக்கு அவைதான் பெரிதும் பொறுப்பாயிருக்கின்றன என்று மதிப்புக்குரிய ஒரு சிங்களக் கல்விமான் கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

'கௌதம புத்தர் அரசியல், போர் மற்றும் சமாதானம் ஆகியவை குறித்து மிகவும் தெளிவாகவே போதித்திருக்கிறார். பௌத்த மதம் அதன் போதனைகளில் அகிம்சையையும் சமாதானத்தையும் மக்களுக்கான செய்தியாக வலியுறுத்துகிறது; எந்த வகையான வன்முறையையோ அல்லது உயிர்ச் சேதத்தையோ அது ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. பௌத்த சிந்தனைகளின் படி நீதியான போர் என்று கூட ஒன்று இல்லை" என்று 'புத்தர் போதித்தது என்ன?" என்ற தேரவாத பௌத்தம் குறித்த பிரபல பாடநூலை எழுதிய பேராசிரியர் வல்பொல ராகுல தேரோ கூறியிருக்கிறார்.

ஆனால், இன்று இலங்கையில் அநேகமான பௌத்த பிக்குமார் இந்தப் போதனைக்கு முற்றிலும் மாறாக அல்லவா செயற்படுகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துவதுடன் மஞ்சள் அங்கிகளை களைந்துவிட்டு துப்பாக்கியைக் கையில் ஏந்திப் போர் முனைக்குச் செல்லவும் தயார் என்று பகிரங்கமாக மேடைகளில் முழங்குகிறார்கள். சிறுபான்மையினத்தவர்களின் நியாயபபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசைகளையையும் ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

அண்மைக் கால சமாதான முயற்சிகளுக்கு எதிரான பிரசார இயக்கங்களில் பிக்குமார் முன்னணியில் நின்று செயற்படுகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்கள், மதத்தவர்களுக்கு எதிரான பிரசாரங்களை நிகழ்ச்சித் திட்டங்களாகக் கொண்டே அவர்கள் நேரடி அரசியலிலும் இறங்கியிருக்கிறார்கள்.

அமைதி, சமாதானத்துக்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்ட பிக்குமார் அந்த அரசியல் வாதிகளை விடவும் தீவிரமாக அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். சமாதானத்தின் பெறுமதியை சமுதாயம் விளங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இந்த பிக்குமார் இலங்கையில் விளங்குவதை அடிப்படையாகக் கொண்டே இன்றைய துரதிர்ஸ்டவசமான நிலைவரங்களின் பின்னணிகளை நோக்க வேண்டும்.

பௌத்த மதத் தீவிரவாதம் அரசியலை வழிநடத்துமானால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அல்லது கைப்பற்றிய அரசியல் அதிகாரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகள் அந்தத் தீவிரவாதத்துக்கு இசைவான அனுகுமுறைகளைக் கடைப்பிடிப்பார்களேயானால், இலங்கை அதற்குரித்தான அமைதி மற்றும் பொருளாதார மேம்பாடு சகலவற்றையும் பரிதாபகரமாகப் பறிகொடுத்துஉலகில் தோல்வி கண்ட சமுதாயமாக அந்தகாரத்தில் மூழ்கப் போகிறது.

No comments: