Friday, July 16, 2004

தமிழ்நாட்டில் ஒர் அவலம்.

இன்று மதியம் விகடன்,தினமலர் இணயத் தளத்தில் வந்திருக்கும் செய்தி மனதினை என்னவோ செய்கிறது.கும்பகோணத்தில் ஒரு பாடசாலையில் தீப்பிடித்ததில் 85 இளம் துளிர்கள் (5,6 வயது பாலகர்கள்) தீயிலே கருகி மடிந்திருக்கின்றனர்.100 பேர் அளவில் தீக்காயமடைந்திருக்கின்றனர்.  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மாலை வீடு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெற்றோர் மனதில் இடி விழுந்திருக்கிறது.எப்படி இது நடந்தது என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஆனால் கண்டிப்பாக விதிமுறைகளுக்கு மாறாகவே இப் பள்ளி நடத்தப்பட்டிருக்கவேண்டும். குறிப்பிட்ட தொகை மாணவர்கள் இருக்கும் கட்டடத்தில் குறிப்பிட்ட வெளியேறும் வாசல்கள் ,தீ ஏற்பட்டால் வெளியேறும் அவசரகால வழிகள், போன்றன அமைக்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே? கண்டிப்பாக இப் பள்ளிக்கு விதி முறைகளுக்கு மாறாகவே அனுமதி வழங்கப்பட்டிருப்பது நாலு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் இருந்தே தெரிகிறது. தமிழ் நாட்டில் பள்ளிகள் கல்லூரிகள் நடத்துவது வியாபாரம் அல்லது ஒரு ஒரு தொழில் என்றாகிப்போன நிலையில் சேவையை விட இலாபம் குறியாகிவிட்டநிலையில் இப்படி நிகழ்வுகள் நேர்வது தவிர்க்கவியலாது. எல்லா கல்லூரிகள்,பள்ளிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டிய விதிமுறைகள், மாணவருக்கான வசதிகள் "பத்திரங்களில்" மட்டுமே இருக்கும். அதிகாரிகளின் வாயினை பணம் அடைக்கும். சில காலங்களிற்கு முன்னர் தான் இதே போல ஒரு சம்பவம் திருச்சி,சிறீரங்கத்தில் நடந்து மணமகன் உட்பட பலர் இறந்தது நடந்தது. இப்போது இச் சம்பவம். இனி போட்டி போட்டுக்கொண்டு அரசியல்வாதிகள் பார்வை இடுவார்கள். பண உதவி செய்வார்கள்.அவர்களுக்கு வோட்டு குறிக்கோள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் அவர்களுக்கு பத்திரிகை விற்பனை குறிக்கோள். இனி கீழ் நிலை அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள் மேல் நிலை அதிகாரிகளால், குறிக்கோள் குற்றத்தினை யார் தலையிலாவதுபோடவேண்டும் . பண உதவி ஒன்றும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உயிரினை மீட்டுகொண்டுவரப்போவதில்லை.காயமடைந்த மழலைகளிற்கு சிறந்த சிகிச்சை வசதிகள் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்.இப்படி ஒரு சம்பவம் இன்னொரு இடத்தில் நடைபெறாமல் பார்ப்பதே அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கடமையாக இருக்கவேண்டும்.அனால் அவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்காது ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் படிப்பது இப்படிப்பட்ட பள்ளிகளில் அல்லவே. மொத்ததில் இச் சம்பவம் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பின்னர் எல்லோரும் மறந்து விடுவார்கள்.இன்னொரு இப்படியான சம்பவம் நடைபெறும் வரை. உலக அரங்கிலே தமிழகத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இச் சம்பவம் இருக்கும் என்று கூறலாம். குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Wednesday, July 14, 2004

கனேடிய தேசிய நீரோட்டத்தில் இணையும் தமிழரின் வானொலி

நேற்றுமுன் தினம் மதியம் காரில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன்.காரில் தமிழ் வானொலி
நிகழ்சிகள் ஒலித்துக்கொண்டிருந்தது.நான் பொதுவாக கனேடிய தமிழ் வானொலியைத்தான் கேட்பது வழமை
காரில் கனேடியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.கீதவாணி ,கனேடிய தமிழ் வானொலி என்று மூன்று 24
மணி வானொலிகளை
கேட்கக்கூடியதாக வசதி செய்திருக்கிறேன் 100 டொலர் செலவில்.கேட்டுக்கொண்டிருந்த போதுதான் ஞாபகம் வந்தது
கனேடிய பல்கலாச்சார வானொலி(CMR) தனது
ஒலிபரப்பினை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பது.
சரி பரிசோதனை ஒலிபரப்பு எதாவது செய்யலாம் என்ற எதிர்பார்புடன் 101.3 FM க்கு சென்றேன்.என் காதுகளை
யே நம்பமுடியவில்லை " தீண்டாய் மெய்தீண்டாய்" பாடல் ஸ்ரீறியோ ஒலிநயத்துடன் கார் முழுவதையும் நிறைத்தது.
இடையிடையே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பரீட்சார்த்த ஒலிபரப்பு என்ற அறிவித்தல்.
ரொராண்டோ வான்வெளி எங்கும் தமிழ் முழக்கம்.எனது சந்தோசத்திற்கு அளவில்லை. கண்டிப்பாக நீங்கள்
கேட்பீர்கள் ஏற்கனவே 3 வானொலிகள் இருக்கும் போது இன்னொரு வானொலி தொடங்கியதுக்கு
கரிகாலன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறானே ஒரு வேளை கனடாவில் இப்போது சம்மர் என்பதால்
வெப்பம் கூடி கரிகாலனுக்கு எதாவது ஆகிவிட்டதோ என்று. சந்தோஷத்திற்கு காரணம் அறிய தொடர்ந்து படியுங்கள்

நான் முன்பு சொன்னது கூட ஒரு வகையில் பிழைதான். ரொரண்டோவில் இப்போது ஜந்து 24மணித்தியாலம்
ஒலிக்கும் வானொலிகள் இயங்கி வருகின்றன.அதைவிட இப்போது கனேடிய பல்கலாச்சார வானொலி ஆக
மொத்தம் 06 வானொலிகள்.சரி அந்த 05 வானொலிகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

கனேடியதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (CTBC)
கீதவாணி
கனேடிய தமிழ் வானொலி(CTR)
சர்வதேச தமிழ் வானொலி-கனடா(ITR)
தமிழோசை வானொலி

சர்வதேச தமிழ் வானொலி-கனடா(ITR),தமிழோசை வானொலி இவை இரண்டும் அண்மையிலேயே
தமது ஒலிபரப்பினை ரொரண்டோவில் ஆரம்பித்திருக்கின்றன.இந்த ஐந்து வானொலிகளையும் சாதாரண வானொலி பெட்டிகளில்
களில் கேட்கமுடியாது.என்ன வானொலி என்கிறான், சாதாரண வானொலிப் பெட்டிகளில் கேட்கமுடியாது என்கிறான்
நாம் முன்னரே ஊகித்தது சரிதான் என்கிறிர்களா? கொஞ்சம் பொறுங்கள்.மேற்படி வானொலி ஒலிபரப்புக்கள்
சிறப்பு பண்பலையில்(SCMO) ஒலிபரப்பப்படுவதால் விசேடமாக தயாரிக்கப்பட்ட வானொலி பெட்டிகளில்
மட்டுமே கேட்கமுடியும்.சாதாரணமாக வீட்டில் உள்ள வானொலிகளிலோ அல்லது காரில் உள்ள வானொலிகளிலோ கேட்கமுடியாது.
அப்படி கேட்க வேண்டுமானால் சில விசேட உபகரணங்களை அவற்றில் பொருத்தவேண்டும்.ஆனால் 101.3 FM இல் ஒலிபரப்பாகும் கனேடிய பல்கலாச்சார வானொலி(CMR) சாதாரணமாக
நாம் உபயோகிக்கும் எந்த வானொலிகளிலும் கேட்க முடியும். இப்போது புரிகிறதா எனது மகிழ்ச்சிக்கு
காரணம்.

மறு பதிவில் தொடர்வேன்


Tuesday, July 13, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும்........

சக்கரை வியாதியினால் துன்பப்படுகிறீர்களா?
ஆஸ்மா,இரத்தக்கொதிப்பினால் அவதிப்படுகிறிர்களா?
கை,கால் ,இடுப்பு வலிகளால் அவதியா?இல்லற வாழ்வில் திருப்தி இல்லையா?
குறிப்பிட்ட மருந்தை பாவியுங்கள் அல்லது வைத்தியரைச் சந்தியுங்கள்!
கடந்தவாரம் ரொரண்டோவில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் எல்லாம்மேற்படிவாசகங்கள்
இடம்பெற்றமுழுப்பக்க விளம்பரங்கள்,வானொலிகளில் எல்லாம் இதே விளம்பரங்கள்,
தீராத கொடிய புற்று நோயைக் கூடதனது மருந்து தீர்த்து வைக்கும் என்றும், இன்ன திகதி இன்னஇடத்தில்
சந்திக்கலாம் என்றும் வானொலிப் பேட்டிகள்.தமிழ் நாட்டில் இருந்து கனடாவுக்கு மூன்றாவது தடவையாக
வருகை தந்திருக்கும் ஒரு மூலிகை வைத்தியரின்பேட்டிதான் அது.எனக்கு இந்தியாவில் இருக்கும்
"சுற்றுப்பயணப் புகழ்" மூலிகை வைத்தியர்களின் ஞாபகம் தான் வந்தது.
சரி என்னதான் நடந்தது என்கிறீர்களா?
அந்த வைத்தியரிடம் நிறைய கூட்டம் போனது என்று கேள்வி.நல்ல பிரயோசனமான சுற்றுப்பயணம்.
வைத்தியருக்கு தான், டொலரில் அல்லவா பணம் கொண்டு சென்றிருக்கிறார்.அது தீர, இருக்கவே இருக்கிறது
4வது சுற்றுப் பயணம் .ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள்கவலைப்பட வேண்டியதில்லை.

எத்தனை பெரிய மனம் உனக்கு ?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு!
எல்லோரும் மனிதரே என்பது
உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்!
உன்னை எட்டி உதைத்தாலும் அவன்
மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்!
உன் கதையை முடித்தாலும் அவன்
மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்!
உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன்!
உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!


தாக்க வந்தாலும் அவன் மனிதன்!
உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!

ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன்!
தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

****கவிஞர் காசி ஆனந்தன்*****