Sunday, December 19, 2004

மீண்டும் யாழ்பாணத்திலிருந்து "சிரித்திரன்"

சிறு வயதில் என்னை ஆனந்தவிகடன் எப்படி நகைச்சுவையால் மகிழ்வித்ததோ அதற்கு சற்றும் குறையாமல் மண் வாசனையுடன் மகிழ்வித்தது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த"சிரித்திரன்" இதழ் .

திரு எஸ்.சிவஞானசுந்தரத்தினால் வெளியிடப்பட்ட அந்த நூலில் இடம்பெற்ற கருத்தோவியங்கள் காலத்தால் மறக்கமுடியாதவை. சிரிக்க வைத்ததுடன் மக்களை சிந்த்திக்கவும் வைத்தவை. கார்ட்டூன் என்பதை கேலிச்சித்திரம் என்று தமிழ்நாட்டிலிருந்து வரும் இதழ்கள் பயன்படுத்திய காலங்களில் கருத்தோவியம் என்று அதற்குரிய சரியான சொல்லை அறிமுகப்படுத்தியதுடன் இன்றும் ஈழத்தில் கருத்தோவியம் என்ற சொல் புழங்கி வருவதற்கும் காரணி திரு.எஸ்.சிவஞானசுந்தரம் ஆவார்.

மண்வாசனையுடன் வந்த அவரின் படைப்புக்களான சவாரித்தம்பர் என்ற கருத்தோவிய கதாபாத்திரம்,மற்றும் சின்னக்குட்டி,மைனர் மச்சான், மிஸ்டர் அண்ட் மிஸிஸ் டாமோதரம், மகுடியார் ,மெயில் வாகனத்தார்,ஷீமான் செல்லக்கிளி, வேலரும் மயிலரும் இன்றும் பல ஈழத்தவரின் மனத்தில் நிலைத்து நிற்பவை.

இதில் மைனர் மச்சான் பாத்திரமானது அந்த கால படித்தவேலையற்ற ஈழத்து இளைஞனை பிரதிபலித்த ஒருபடைப்பாகும். வேலைதேடும் ,அதில் தோல்விகளையே சந்தித்த ஒருவர்.காதலுக்கு தூண்டில் போடும் அவருக்குகாதலிலும் வெற்றிகிட்டாது.இடையிடை மது பாவித்து விட்டு புலம்பும் அவருக்கு அந்த்த காலத்தில்பிரபலமான பெல்பொட்டம் பாண்டும் ,காலர் பெரிதான உடலை இறுக்கும் சேட்டும் ,நீண்ட தலை முடியும் வரைந்திருப்பார் திரு சுந்தர்.

"செய்யும் தொழிலே தெய்வம் சிரிப்பே சீவியம்" என்னும் வாசகங்களுடன் வெளிவந்த சிரித்திரன் சஞ்சிகைசுந்தரின் மறைவின் பின்னர் வெளிவரவில்லை. தற்போது சில வருட காலத்தின் பின்னர் மீண்டும் சிரித்திரன் சஞ்சிகையானது வெளிவர இருக்கிறது எனும் ஒரு நற்செய்தியை அறியமுடிந்தது. மீண்டும் ஈழத்தவரின் கரங்களில் தவழும் சிரித்திரன் இதழானது முன்னைப் போலவே தரத்திலும்,சமூக முன்னேற்றத்திலும் அக்கறையாக இருக்கும் என நம்பலாம்.