Monday, May 09, 2005

கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள்

இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள்.

கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்டத்தட்ட15 தமிழ் கோவில்கள்,2000 வணிக நிறுவனங்கள் மற்றும் சுமார் 5000 பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்,அரச அதிகாரிகள்,வைத்தியர்கள்,உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் வலிமை, இப்படி தமிழர்கள் தமது இருப்பை இந்த புலம்பெயர்ந்த மண்ணில் நிரூபித்து இருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் ரொரன்ரோஸ்ரார் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் புதிய குடிவரவாளர்களால் கனடாவுக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதிய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.சீனர்களும் இந்த சிறீலங்கன் தமிழர்களும் கனடாவின் வெளிவிவகார கொள்கைகளில் (சீனா,இலங்கை விடையங்களில்) செல்வாக்கு செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று.

அப்போது தான் எனக்கு ஒன்று ஞாபகத்தில் வந்தது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு முறை சொல்லியிருந்தார்."தமிழர்கள் சிறுபான்மையினர்தான்.ஆனால் உலகிலேயே சக்தி வாய்ந்த சிறுபான்மையினர் இந்த தமிழர்கள் தான்" என்று. அப்போது எனக்கு புரியவில்லை ஜெயவர்தனா ஏன் இப்படி சொல்லியிருந்தார் என்று. ஆனால் இப்போதைய உலக நடப்புக்களைக் கொண்டு என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, சிறுபான்மை தமிழர்களைக் கண்டு ஏன் ஜெயவர்தனா அப்படி பயந்தார் என்று.

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.

No comments: