Tuesday, May 31, 2005

பிள்ளையார் கோயிலில் திணிக்கப்பட்ட புத்தர் சிலை.

வவுனியா ஓமந்தை பிள்ளையார் கோவில் நிலத்திலும் புத்தர் சிலையை திடீரென சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
மூன்றடி உயரத்தில் இந்த புத்தர் சிலையை கடந்த மார்ச் மாதம் சிங்கள இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

பிள்ளையார் கோவில் குருக்களாக இருந்தவரை சித்திரவதை செய்து அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடித்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அங்கு வாழ்ந்த குருக்களின் நான்கு தலைமுறையினர் இந்த பிள்ளையார் ஆலயம் அருகிலேயே வசித்து வந்ததாக சுட்டிக்காட்டும் அம்மக்கள், அப்பகுதி மக்கள் அனைவரையும் கட்டாயப் புகைப்படம் எடுத்துள்ள சிங்கள இராணுவம், புத்தர் சிலைக்கு எதிராக எதுவிதப் போரட்டத்தையும் நடத்தக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

இராணுவத்தினர் அங்கு இருப்பதால் பொதுமக்கள் அச்சிலை அருகே செல்ல அச்சமடைந்த நிலையில் இருக்கின்றனர். தற்போது திணிக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைக்கு அருகில் பல நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய வைரவர் சிலை இருப்பதை சுட்டிக்காட்டும் உள்ளுர்வாசி ஒருவர், அக்கோவிலில் இருந்த பழமையான பளிங்கு கற்களைக் கொண்டே திடீர் புத்தர் சிலை அமைத்துள்ளதாகவும் போதி மரம் ஒன்றையும் கூட அருகாமையில் நட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓமந்தை மகா வித்தியாலத்திற்கு எதிரே முகாமிட்டுள்ள சிங்கள இராணுவத்தினர் வெசாக் பண்டிகை நாளின் போது இங்கே பழமையான புத்த ஆலயம் இருப்பதாக சிங்கள மொழியில் எழுதி வைத்துள்ளனர்.
பல தலைமுறையினராக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் இதுவரையில் அப்படியானதொரு ஆலயம் தமது பகுதியில் இருந்ததே இல்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரால்தான் இது உருவாக்கப்பட்டது என்றும் அப்பிரதேசவாதிகள் கூறுகின்றனர்.

இது குறித்து வன்னி அரச அதிபர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓமந்தையைச் சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோரிடம் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
திடீர் புத்த ஆலயம் குறித்து கருத்து தெரிவித்த வன்னி ஆனந்தன், இதுவரையில் தான் புத்த ஆலயம் இருந்தது என்பதாக நான் கேள்விப்படவில்லை என்றும் இது குறித்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு சிக்கலுக்குத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1997 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இப்பகுதி மக்கள் இடப்பெயர்வுக்குள்ளாயினர். 2003 ஆம் ஆண்டு ஜூன் முதல் இப்பகுதிக்கு மக்கள் திரும்பத் தொடங்கினர்.
அப்போது இந்த திடீர் புத்தர் ஆலயம் உருவாக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2004 ஆம் ஆண்டு இந்த புத்தர் சிலையை மக்கள் அகற்ற முற்பட்டபோது சிங்கள இராணுவத்தினர் கடுமையாக அச்சுறுத்தி உள்ளனர்.

தற்போது திருமலை விவகாரத்தைத் தொடர்ந்து இந்த புத்தர் சிலை சிக்கலையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தகவல்- புதினம்.

No comments: