Wednesday, July 13, 2005

மற்றவரை முட்டாள் ஆக்க எண்ணினால்?

ற்றவர்களை முட்டாள் ஆக்க எண்ணி பலர் தாமே முட்டாள்கள் ஆகின்றனர்.பலருக்கு இது புரிவதில்லை.அப்படி முட்டாள் ஆக்க எண்ணி தாமே முட்டாள்கள் ஆனவர்கள் பற்றிய ஒரு துணுக்கு இது. படித்ததில் நான் ரசித்தது. நீங்களும் ரசிக்கலாமே.

படு புத்திசாலியான 4 எம்.பி.ஏ படிக்கும் நண்பர்கள்.அவர்கள் ஜாலி யானவர்கள்.மறுநாள் காலை அவர்களுக்கு பரீட்சை என்றநிலையில் முதல் நாள் இரவு நன்றாக குடித்து கும்மாளமிட்டுவிட்டு படுத்துவிட்டார்கள்.மறுநாள்காலை எழும்பி யோசித்தார்கள்.இன்று பரீட்சை ஒன்றுமே படிக்கவில்லை அத்துடன் தலைவலி வேறு.என்ன செய்யலாம் என யோசித்தனர். நாலு பேருக்காக எப்படி தேர்வை தள்ளிப்போடமுடியும் என்று யோசித்தனர்.பின்னர் ஒரு ஜடியா அவர்கள் மனதில் உதிக்க அதை செயற்படுத்தலாம் என முடிவெடுத்தனர்.

கைகால்கள்,உடை எல்லாம் கிரீஸ்,அழுக்கு தடவிக்கொண்டு தலைமுடி எல்லாம் கலைத்துவிட்டு பரீட்சைநடந்து கொண்டிருந்த மண்டபத்துக்குள் நுழைந்தனர்.டீனின் முன்னால் சென்று தாம் நேற்று இரவு நகருக்கு சென்றுவிட்டு காரில் வரும் போது ஆளரவமற்ற ஒரு காட்டுப்பகுதியில் கார் ரயர் பஞ்சராகி நின்றுவிட்டதாகவும் எக்ஸ்ரா வீலில் கூட காற்று இல்லை என்றும் பல முயற்சிகளுக்கு பின்னர் தாம் நடந்தே வந்து இப்போது தான் பரீட்சை மண்டபத்தினை வந்தடைவதாகவும் கூறி தமக்கு மட்டும் பிறிதொரு நாளில் பரீட்சை வைக்கும்படியும் கெஞ்சினார்கள்.சரி என்று ஒப்புக்கொண்ட டீன் மூன்று நாட்களின் பின்னர் உங்கள் நாலு பேருக்கும் பரீட்சைஎன்று சொன்னார். நண்பர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.
நண்பர்கள் விழுந்து விழுந்து படிக்கத்தொடங்கினர்.

3வது நாளும் வந்தது.டீனிடம் சென்றனர்.டீன் சொன்னார்.இது அசாதாரண கோரிக்கை அதனால் பரீட்சையும் அசாதாரணமாகவே இருக்கும் ,நாலு பேருக்கும் வினாத்தாள்பொது ஆனால் நாலு பேரும் தனித்தனி அறைகளில் அமர்ந்து எழுதவேண்டும் என்றார்.

நண்பர்களும் சந்தோஷமாக தனித்தனி அறைகளுக்கு சென்று அமர்ந்து கேள்வித்தாளை புரட்டினர்.கேள்வித்தாளில் முதல் கேள்வி ஒரு எளிய கேள்வி அதுக்கு மதிப்பெண் 5 ஆக இருந்தது. அதை எளிதாக செய்து முடித்துவிட்டனர்.அடுத்த கேள்விக்கு மதிப்பெண்கள் 95 ஆக இருந்தது.கேள்வியினை பார்த்தவர்கள் பேயறைந்தவர்கள் மாதிரி ஆனார்கள். கேள்வி என்ன என்கிறீர்களா? கேள்வி இது தான்?

எந்த ரயர் பஞ்சரானது?

No comments: