Friday, July 22, 2005

பயணங்கள்! பஸ் பயணங்கள்!

மிழ்நாட்டில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு கலை .தமிழ் நாட்டில் வாகனம் ஓட்டிபழகியவர்கள் உலகில் எங்கும் வாகனம் ஓட்டலாம் என்று அடித்து சொல்லலாம்.


யப்பா மக்கள் கூட்டம்,மாக்கள் கூட்டம் ,வாகன நெருக்கடி இப்படி இவை எல்லாவற்றையும் விலத்தி வண்டி ஓட்டும் லாவகம் இருக்கிறதே.அதுவும் பளபளக்கும் தனியார் பேருந்துகள், சினிமாப்பாடல்கள் பேரிரைச்சலோடு ஒலிக்க ஓடும் ஓட்டம் இருக்கிறதே அதை சொல்லில் எழுதமுடியாது.அதில் ஏறி தப்பித்தவறி முன் சீட்டில் இருந்துவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட கடவுள் நம்பிக்கை வந்துவிடும்.அந்தளவு வேகம்,வேகம், வேகம். அதுதான் அவர்களின் மந்திரம்.
நான் சென்னைக்கு போவது என்றால் வழமையாக எயர் பஸ்களில் தான் போவேன்.நான்இப்படி நீண்ட தூர பஸ்களில் போவது எண்டால் ஓட்டுனருக்கு இடதுபுறமாக உள்ள சீட்களில் தான் இருப்பேன்.ஏனெனில் அந்த பக்கம் அபாயம் குறைவு என்று. அன்று ஒருநாள் திடீரென்று சென்னை போகும் நிலை ரிக்கற் பதிவு செய்ய சென்றால் ஒரு இடமும் பதிவு செய்யமுடியவில்லை.வரும் நாட்களில் ஏதோ விசேஷம் என்றபடியால் அப்படி ஒரு நிலை .ஒரு இடத்தில் ஒரு இடம் கிடைத்தது .சரி அவசரத்துக்கு பரவாயில்லைஎன்று பதிவு செய்தேன் .இரவு பஸ் ஏறி எனது இருக்கையிலும் அமர்ந்துவிட்டேன்.



பஸ் ஓடத்தொடங்கி விட்டது.நான் அமர்ந்திருந்தது இடது புறத்தில் முன் இருக்கை.அதாவது வாசலுக்குஅருகில்.கொஞ்சநேரம் வீடியோவில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.பின்பு படமும் முடிய உறங்க தயாரானேன்.கண்ணை மூடினால் நித்திரை வருது இல்லை.எதிரே வரும் வாகன வெளிச்சம்.அவற்றின் ஹாரன் ஒலி,ஒன்றை ஒன்று விலத்தும் போது ஏற்படும் சத்தம் இதனால் நித்திரையே வராமல் போட்டுது.அது ஏனோ தெரியவில்லையே.எதிரே இன்னுமொரு வாகனத்தினை முந்திக் கொண்டு வந்து குறுகிய இடைவெளியில் பஸ்சினையும் முந்துகின்றனர்.சில வேளை பார்க்க பயங்கரமாக இருக்கும்.இனி வாகன ஹெட் லைட் வெளிச்சம் பெரும்பாலான வாகனங்கள் எதிரேவரும் வாகனங்களுக்காக தமது ஹெட் லைட்டினை "டிம்" பண்ணியே கொடுக்க மாட்டார்கள்.இப்படி ஒரு வாகனம் கடந்து போனால் அந்த வாகனம் கடந்து போன கொஞ்ச நேரத்துக்கு ஓட்டுநருக்கு ஒரே இருட்டாகதான் தெரியும்.எதிரே பாதசாரி யாராவது நடந்து வந்தால் நிலை என்ன? யோசிக்கவே பயங்கரமாக இருக்கும்.


இதை விட சென்னை போகும் வழியில் சில கிராமங்களை கடக்கும் போது பார்த்தால் மெயின்ரோட்டின் மேலேயே நெற்கதிர்களை மற்றும் சில தோட்டத்தில், வயலில் விளையும் கதிர்களை போட்டிருப்பார்கள்.கைகளினால் பிரிக்கும் வேலையினை குறைப்பதற்காக.அதாவது சாலையில் போகும் வாகனங்கள் அதன் மேலக போகும்போது நெல் மணிகள் ,வைக்கோல் ஒரு புறமாக பிரியும் என்பதற்காக.நாலு சக்கர வாகனங்கள் பரவாயில்லை.இரு சக்கரவாகனங்களில் நிலையினை யோசித்துப் பாருங்கள்.மிதமான வேகத்தில் வந்தால் கூட வண்டி சறுக்கும் அபாயம் உண்டு. சரி அதை விடுங்கள்.

தனியார் சொகுசு வண்டிகளில் போனால் சொகுசும் கிடைக்கும் ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும். எப்படி எண்டால் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.விழுப்புரம் வரை ஒரு ஓட்டுனர் பஸ்சினை ஓட்டுவார்.அதன் பின்னர் மற்ற ஓட்டுனர் பஸ்சினை ஓட்ட முன்னையவர் உறங்குவார்.இது பஸ் முதலாளிகள் ஓட்டுனர்கள் மீது பாசத்தினால்செய்த ஏற்பாடு அல்ல தமது பஸ்சின் மீது கொண்ட பற்றுதலினால் செய்த ஏற்பாடு. ஏனெனில் ஒரு சொகுசுவண்டியின் விலை 25 இலட்சம்(இந்திய) அளவில் வரும் என்று கேள்வி.


இது இப்படி எண்டால் அரசு வண்டிகளில் நிலை? அங்கு ஒரு ஓட்டுனரே 7,8 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஓட்டுவார்.அப்பஅவருக்கு ஓய்வு எண்டு அப்பாவி மாதிரி கேட்க கூடாது.பயணிகள் சாப்பிடுவதற்கும் ரீகுடிப்பதற்கும் பஸ் நிறுத்தப்படும் நேரங்களில் பஸ் ஓட்டுனர் அப்படியே "ஸ்டேரிங்கில்"படுத்து ஒரு குட்டித்துக்கம் போடுவார்.சிலவேளைகளில் விபத்துக்கள் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பஸ் நிறுத்தப்படும் குறுகிய நேரத்தில் கூட ஓட்டுனர் சிறு தூக்கம் போட்டு எழுந்திருப்பதை காணும் போது ஓட்டுனர்கள் மீது பரிதாபப்படுவதுடன் அடி வயிற்றில் கிலியும் வந்திருக்கிறது.அப்படியான ஓட்டுனர்கள் ஓடும் பஸ்சில் நானும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில்.


இருந்தாலும் தமிழ்நாட்டு பஸ்களின் மேல எனக்கு அலாதி பிரியம் உண்டு ஏனெனில் பஸ்சின் பெயர் முதல் கொண்டுபஸ்சின் நிறம், பஸ்சினுள் மற்றும் பின் கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்படி பல.(ஆட்டோக்களில்கூட இப்படி பல சுவாரசியமான வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.பல ஆட்டோக்களில் இந்த வசனம் பார்த்திருக்கிறேன். "சீறும்பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே"ஆட்டோறைவர்கள் பலர் காதலில் தோல்வி உற்றவர் போலும்.)


"பறக்கும் மோகினி","மின்னல் பாவை","பறக்கும் மின்னல்"இவை எல்லாம் என்ன என்கிறீர்களா?சில பஸ்சின் பெயர்கள்தான்.பல வித நிறங்களில் பல்வேறு வடிவங்களில் பார்க்க அழகாக இருப்பதுடன் டி.வி.டி. மற்றும் சி.டி வசதிகளுடன் சில பஸ்களில் கமெராகூட படிக்கட்டுகளில் இறங்குபவரை பார்க்க பொருத்தப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.இவை எல்லாம் தனியார் பேருந்துகள் தான்.அரசு பேருந்துகள் பற்றி நான் சொல்ல போவதில்லை.நெடுந்தூர விரைவு பேரூந்துகளை தவிர மற்றவை எப்படி இருக்கும் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை.இருந்தாலும் அண்மையகாலங்களில் அரசு பேரூந்துகளும் சிறப்பாக வடிவமைத்து சேவையில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.இதைவிட கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது என்று நினைக்கிறேன் கிராமங்களில் ஓடுவதற்கு என அழகான மஞ்சள் "மினி பஸ்கள்" கொண்டுவரப்பட்டது.


சரி இதை இப்படியே விட்டு விட்டு இன்னொரு விடயத்துக்கு வருவோம்.இதில் எனக்கு பலத்த சந்தேகம்?

அது என்ன எண்டால் நீங்கள் வாகனம் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள் எண்டு வச்சுக் கொள்ளுங்கோ.முன்னே ஒரு வாகனம்போய்க்கொண்டிருக்கிறது..முன்னே செல்லும் அந்த வாகனத்தினை முந்த ஹாரன் அடிக்கின்றீர்கள் அல்லது விளக்குகளால் சைகை செய்கின்றீர்கள். உடனே முன்னே செல்லும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரியவிடுகின்றது.நீங்கள் அந்த வாகனத்தினை முந்திக் கொண்டு போகின்றீர்கள். அதாவது முன்னே போகும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரிய விடுவது நீங்கள் அவரை முந்திக் கொண்டு போக அவர் அனுமதி தருகிறார் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது பலரால் பின்பற்றப்படுகிறது.


நான் தமிழ்நாட்டுக்கு போன புதிதில் ஒரு நீண்ட தூரப்பயணத்தின் போதே இதை அவதானித்தேன். நாங்கள்சென்று கொண்டிருந்த சுமோ வண்டியின் ஓட்டுனர் முன்னே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தினை முந்த ஹாரன் கொடுத்து சிறிது நேரத்தின் பின்னர் அந்த வாகனத்தின் வலது பக்க சிக்னல் விட்டுவிட்டு எரிந்தது.
உடனேஎமது வண்டி ஓட்டுனர் அந்த வாகனத்தினை முந்த முயற்சித்த போது அவரின் அருகினில் இருந்த நான்அவரை தடுத்தேன்.அவர் வலது பக்க சிக்னல் போட்டிருக்கிறார்.நீங்கள் அவரை முந்த முயற்சிக்காதீர்கள் என்று சொன்னபோது எமது சுமோ ஓட்டுனர் சொன்னார். நாம் அவரை முந்த அனுமதி தருமுகமாகத்தான் அவர் வலது பக்க சிக்கனல் விளக்கினை ஒளிரவிட்டுள்ளார் என்று சொல்லிய படியே அந்த வாகனத்தினை முந்திச்சென்றார். ஓட்டுனரிடம் இது என்னப்பா புது முறையாக இருக்கே என்று கேட்டதுக்கு அவர் புன்சிரிப்பையே எனக்குபதிலாக தந்தார்.மேலும் துருவி கேட்டதுக்கு சொன்னார்.சரியோ பிழையோ இங்கு இதுதான் நடைமுறை என்று.


இது ஒரு பிழையான நடைமுறை என்று நான் நினைக்கிறேன். உண்மையான நடைமுறை இடது பக்க சிக்னல் விளக்கை எரிய விடுவதுதான்அதாவது நான் இடது பக்கம் ஒதுங்கி வழிவிடுகிறேன் அல்லது இடது பக்கம் திரும்புகிறேன்.நீ வலது பக்கத்தால்முந்தி செல்லலாம். இதுதான்உண்மையான நடைமுறையாக இருக்கமுடியும்.

எப்படி ஒரு பிழையான நடைமுறை பழக்கத்தில் அல்லது புழக்கத்தில் வந்தது?
தமிழ்நாட்டில் மட்டும் இப்படியா?அல்லது இந்தியாமுழுவதும் இப்படியா என்பது எனக்கு தெரியவில்லை?தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் மற்ற மாநிலவாசிகள் தமிழ்நாட்டில் எப்படி வண்டி ஓட்டுவர்? யார் இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவான்?எப்படி அல்லது எவ்வாறு இது பழக்கத்துக்கு வந்தது?

சில வருடங்களுக்குமுன்னர் தமிழ்நாட்டில் நேரில் பார்த்தை இங்கு நான் சொன்னேன்.இப்போதும் அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன்.இதில் வேறு ஏதும் காரணங்கள் உண்டா தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே.


என்னஇருந்தாலும் நீண்டதூர பஸ் பயணம் என்பதுஒரு இனிமையான அனுபவம். குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கும் கூட .அதில் யன்னல் ஓர இருக்கை கிடைத்து விட்டால் சொல்லவேண்டியதில்லை.பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிவிடுகின்றனர்.பிடித்த பாடலை முணுமுணுத்தபடி முகத்தில் எதிர் காற்று அடிக்கசெல்லும் சுகம் இருக்கிறதே அப்பப்பா.அதிலும் மனதுக்கு பிடித்தவளும் அருகினில் அல்லது பஸ்சினுள் இருந்தால்.?.அங்கு காற்றையும் கண்களையும் தவிர மற்றவை எவற்றுக்கும் வேலை இல்லை


என் கண்மணி என் காதலி எனைப் பார்த்ததும் ஓராயிரம்கதை பேசுதே உன் கண்கள் ..................


6 comments:

Anonymous said...

இந்த பாடலை முழுதும் தெரிந்தவர்கள் யாராவது தந்தால் சந்தோஷப்படுவேன்.
இளையராஜாவின் இசையினில் வந்த
சிறந்தபாடல்களில் ஒன்று.இடையிடையே
பஸ் நடத்துனரின் குரல் கூட ஒலிக்கும்.
எனது சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
இப்போது கேட்கவிரும்பினாலும் கேட்கமுடியாமல் இருக்கின்றபாடல்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

I dont have the lyrics.

But, you can listen to the song here.

http://www.musicindiaonline.com/p/x/uqXg8eh9UdNvwrOupt7D/

If you have difficulties.

Tamil -> ilaiyaraja -> 1978 -> chittukuruvi(movie name)

It's one of my favourite songs too.

nice writeup on buses. I like to travel just behind the bus driver. It's always been interesting to watch how he handles things. Much better than staring into the night sky. :)

-Mathy

Anonymous said...

நன்றி மதி.
பாடல் விபரம் தந்ததுக்கும் உங்கள் கருத்துக்கள் சொன்னதுக்கும். எனக்கும்
பஸ் பிரயாணம் பிடித்த ஒன்று.அது
நிறைய கற்பனைகளை,சிந்தனைகளை தரும் .அத்துடன் பல ரகமான மனிதர்களை சந்திக்கும் இடம் கூட.
நன்றிகள்.

Anonymous said...

அந்த பாட்டு இறக்க வேண்டும் என்றால் இங்கு போய்

http://www.baranee.net/En%20Kanmani.mp3

இறக்கிக்கொள்ளுங்கள்.

Anonymous said...

நன்றி பரணி.
கண்டிப்பாக இறக்கிக் கொள்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

முதன் முதலில் கொழும்பில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். நல்ல வேகம் தான். அதில் முன்சென்ற வாகனத்தின் இடப்பக்கத்தால் முந்திச் சென்ற போது ஈரல் கருகியது. அதுவரை அப்படி எந்த வாகனத்திலும் முந்திச்சென்றுப் பழக்கமில்லை. இப்போது எல்லாம் பழகிவிட்டது.