Saturday, July 23, 2005

ஆடி தமிழின அழிப்பும் இன்றைய தமிழின பலமும்

சிங்கள பேரினவாதிகள் தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம்கட்டி மேற்கொண்ட ஆடி தமிழின அழிப்பு நடந்து இருபத்தி ரெண்டாவது வருடத்தில் நினைவு கூருகின்றோம்.

பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது போன்று இன்று செய்ய முடியாதளவிற்கு தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும்.
தற்போது சமாதான வழிமுறைகளுக்கான கதவடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழின விடுதலைப் போராட்டம் இந்த இருபத்திரெண்டு வருடங்களில் எவ்வாறு வளர்ந்திருக்கிறது என்பதையே இந்தப் பத்தி எடுத்தியம்புகிறது.

தமிழின விடுதலைப் போராட்டம் முனைப்புடன் ஆரம்பமாகி வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் சிங்கள அரசுகள் தமிழினத்தை இறைச்சித் துண்டுகளாகக் கடித்துக் குதறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழினத்தின் வலிமையை சிங்கள அரசுக்கு உணர்த்த வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்ந்த தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்கா படையினர் மீது தாக்குதலை ஆரம்பிக்குமாறு போராளிகளுக்குக் கட்டளையிட்டார்.

1981ம் ஆண்டு ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு படையினர் பலியாகினர். படையினரது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுவே தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராக மேற்கொண்ட முதலாவது தாக்குதலாகும். இதன் பின்னர் 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் பொலிசார் மீதான தாக்குதல் உட்பட பலதாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றன.

1983ம் ஆண்டு வைகாசி 18ம் நாள் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு நிறைவுறுவதற்கு முன்பாக யாழ். நல்லூர் கந்தர் மடத்து தேர்தல் வாக்குச்சாவடியில் காவலுக்கு நின்ற சிறிலங்காப் படையினர் மற்றும் பொலிசார் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர்.

இத்தாக்குதலில் படையினர் ஒருவரும் இரு பொலிசாரும் பலியாகியிருந்தனர். அத்தோடு படையினரின் தானியங்கு சுடுகுழல் துப்பாக்கி ஒன்றும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.இந்த வெற்றிகரமான தாக்குதல் அப்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு இன வெறியை ஊட்டியது.

தமிழினப் போராளிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த ஜே.ஆர், சந்தேகம் கொள்வோரைக் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளும் படியும், சடலங்களை நீதிமன்ற விசாரணையின்றி அடக்கம் செய்வதற்கும் ஆணை பிறப்பித்தார். இந்த ஆணை பிறப்பித்து ஓரிரு நாட்களின் பின்னர் அதாவது ஆடி 23ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் பிரிவு சிங்களப் படையினருக்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு காத்து நின்றது. யாழ். திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதலுக்குக் காத்து நின்றனர்.

14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரு போராளியாக நின்றார். தாக்குதலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட இடத்திற்கு படையினரின் வாகனத் தொடர் வந்ததும் நிலக்கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் 13 படையினர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் திறனை இனங்கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் தமிழினத்தை அழித்து ஒழிப்பதற்கான இன வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

1983ம் ஆண்டு ஆடி 24ம் திகதி நள்ளிரவிலிருந்து சிறிலங்காவின் கொலை வெறிக் கும்பல்களால் கொன்றழிக்கப்பட்டனர். சிறிலங்காவின் சிங்களச் சகோதரர்கள் துரோகமிழைக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த தமிழர்கள் காடையர் கும்பல்களால் வேட்டையாடப்பட்டனர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பது பேரினவாதிகளுக்கு விருப்பம் இல்லாத விடயம். நகை வியாபாரம், வர்த்தக வியாபாரம் என பெரும் வர்த்தகப் புள்ளிகள் கொழும்பில் தமிழர்களாய் இருந்தனர். இது சிங்கள வர்த்தக பிரபல்யங்களுக்குப் பொறாமையையும் விரோத உணர்வையும் ஊட்டின.

தமிழனின் கொழும்பு பொருளாதாரத்தை வீழ்த்தி ஓட்டாண்டிகளாக்கி விடுவதே இதன் நோக்கம் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்ட துண்டமாக வெட்டி வீதியில் எறியப்பட்டனர். வீதிகளில் டயர்கள் இடப்பட்டு எரிக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் காமுகர்களால் குதறி எறியப்பட்டனர்.

கொழும்பு நகரில் தமிழினம் ஒப்பாரி வைத்து அழுதது. பயணம் செய்த பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறை கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் பரவின. கண்டி, காலி, பதுளை, மலையகம், திருமலை எனத் தமிழ் மக்கள் இன அழிப்பு வேள்வியில் சிக்குண்டனர்.

இதேவேளை பயங்கரவாதிகள் என நாமம் சூட்டிப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 35 பேர் ஆடி 25ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலை நடந்த பிற்பாடுகூட கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு ஜே.ஆர்.அரசு தவறிவிட்டது. ஆடி 27ம் திகதியும் 19 தமிழ் இளைஞர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் இன அழிப்பில் இரையாகி விட்டனர். இந்தச் சம்பவங்கள் ஒருபுறம் நிகழ மறுபுறம் தமிழினம் தமக்கான தாயக விடுதலை உணர்வின் சிகரத்திற்குச் செல்ல முடிந்தது.

தமிழ் மக்களுக்கு தனிநாடு அவசியம் என்பதையும், அதற்காக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தாயக விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உணர்வு தமிழ் இளைஞர்களிடையே ஊற்றெடுத்தது. தமிழினமே இலட்சியமென நேசித்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தலைவன் பின்னால் அணி திரண்டனர். அர்ப்பணிப்பு, தியாகம், கொண்ட போராளிகள் இணைவும், பலமும் விடுதலைப் போராட்டத்திற்கு வலிமையை ஈட்டிக் கொடுத்தது.

சிங்கள அரசுகள் தமிழினத்திற்கென்று எவ்வித பிரச்சினைகளுமில்லை.
பயங்கரவாதிகளே பிரச்சினையை உருவாக்குகின்றனர் என்ற பொய்யான கருத்துக்களை சர்வதேச நாடுகளிடையே முன்வைத்து ஆயுதங்களையும், இராணுவயுத்திக ளையும் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தனர். உலக நாடுகளில் ஈழத் தமிழினத்தின் பிரச்சினை பெரிதாகத் தோற்றம்பெறவில்லை. ஏனெனில் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினை உட்பட பல மேற்குலக நாடுகளில் தோன்றிய சம்பவங்களில் தான் சர்வதேச சமூகம் அக்கறை காட்டியது. சிங்களப் படைகள் வீதிகளில்; தமிழ் இளைஞர்களை சுட்டு, டயரிட்டு எரித்த போது விமானங்கள் குண்டுமழை பொழிந்து தமிழினத்தின் குடிமனைகளை அழித்த போது, மனித உடலங்கள் சிதறுண்டு கிடந்தபோது, தமிழினம் ஒப்பாரி வைத்து அழுத போது, எல்லாம் இந்த சர்வதேச சமூகம் தலையிடவோ, கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்தவோ முடியவில்லை.

எனினும் தமிழினத்தின் பாதுகாப்பினை விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தியதுடன் சிங்கள தேசம் தமிழினத்தை அழித்து ஒட்டு மொத்த தேசத்தில் சிங்களக் கொடியை ஏற்றமுடியாது. அதனை ஏற்கும் நிலையில் தமிழினம் இல்லை என்ற சூழ்நிலையில் தான் சர்வதேசத்தின் பார்வை கூர்மையடைந்தது.

தமிழினத்தின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் தான் என்பது இப்போது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத வழி முறைகள் மூலம் பலமிழக்கச் செய்யவோ, அல்லது அழித்து விடவோ முடியாது என்பதை இப்போது சர்வதேசம் உணர்ந்து விட்டது.
அதிலே சமாதான வழிமுறைகளைக் கையாளுமாறு வேண்டுகைவிடுத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் மிகச்சிறியதொரு அணியாகவிருந்த விடுதலைப் புலிகள் தற்போது பலம் பெற்று விட்டனர். கெரில்லா அணியாக தமது தாக்குதலை ஆரம்பித்து இன்று மரபு ரீதியான படையணிகளைக் கொண்ட இராணுவக் கட்டமைப்பாக விடுதலைப் புலிகள் உள்ளனர்.
அதேவேளை ஒரு நாடு எத்தகைய படை வலிமையைக் கொண்டிருக்குமோ, அதே படைத்துறைகளை விடுதலைப் புலிகள் கொண்டிருப்பது தமிழினம் பெருமிதமடையும் விடயம் அல்லவா! தரைப்படை, கடற்புலிகள், வான்படை ஆகிய முப்படைகளை விட உலகின் எந்தவொரு நாடும் கொண்டிராத உயிராயுப் படை (கரும்புலிகள்)யையும் தமிழினம் கொண்டிருப்பது தமிழனின் வீரத்தின் திறனை இமய மலை போல் தொட்டு நிற்கின்றது.

இத்தனை படைகளையும் கொண்டிருப்பது மட்டுமன்றி சட்டம், நீதி நிருவாகங்களும் செம்மையாக விடுதலையை நேசிக்கின்ற தமிழ் மக்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது கொண்டிருக்கும் பற்றுறுதியையும், நம்பிக்கையும் தேச விடுதலை உணர்வும் விடுதலைப் போராட்டத்தை ஆளப்படுத்தி நிற்கின்றது.

இந்த நிலையில் இன்னுமொரு ஆடிக்கலவரம் எழுமா? என்றால் இல்லை என்று கூறுவதை விட 1983ம் ஆண்டு வெட்டிக் குதறியது போன்று இனி தமிழினத்தை வேட்டையாட முடியாது. ஏனெனில் அன்று தமிழினம் பலமாக இருக்கவில்லை. அதனால்தான் பந்தாடிச் சென்றார்கள். இன்று பலம் பெற்று விட்டோம். நினைத்த மாதிரி அழித்தொழிக்க முடியாது. அவ்வாறு துணிவார்களானால் அதற்கான பாடம் புகட்டப்படும். இதனை இப்போது சிங்கள தேசம் நன்றாக உணர்ந்து விட்டது.

பின்னரும் கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை தோல்வியைத் தழுவியது. இவை தவிர ஆடிக் கலவரம் தமிழனம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முதல் நாள் ஆடி 24ம் திகதி 2001ம் ஆண்டில் அத்திகதியில் விடுதலைப் புலிகள் எதிரிக்குப் பலமான பாடம் புகட்டி வீரவரலாறும் படைத்துள்ளனர்.

அதுதான் கட்டுநாயக்கா வான்தளம். விடுதலைப் போராளிகளால் வெற்றிகரமாகத் தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 28 வான் கலங்கள் அழிக்கப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு நட்டமேற்பட்டது. சிறிலங்கா அரசின் பிரதான பலமாக இருந்த வான்படைப் பலம் அழிக்கப்பட்டமை அரசுக்குப் பெரியதொரு பலவீனமே என்பதும் இங்கு சுட்டிக் காட் ப்பட வேண்டிய விடயம். எனவே தமிழினமும், தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஆடிக் கலவரத்துடன் ஒப்பிடுகையில் இன்று பன்மடங்கு பலமும், உரமும் பெற்று விட்டது என்பதே உண்மை.

மேலதிக தகவல்களுக்கு:- http://www.tamilcanadian.com/eelam/massacres/83/

நன்றி----பிரவீனா, ஈழநாதம் மட்டக்களப்பு

3 comments:

வன்னியன் said...

இன்னும் இந்தக் "கலவரம்" என்ற சொல்லை எப்போது தான் விடப்போகிறார்களோ தெரியேல.

NONO said...

தகவலுக்கு நன்றி!!! சிறந்த பதிவு!!!

Anonymous said...

நன்றி வன்னியன்,நோநோ

கலவரம் எனும் பதம் தவறானது என்பதே எனது எண்ணமும் கூட
நடந்தது தமிழர்மீதான தாக்குதல்கள்
எனவே தமிழர்கள் மீதான வன்முறை
என்பதே சரியாக இருக்கும்.