Tuesday, September 06, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 1

நான் எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையினைவிட பதிக்க எண்ணியிருந்த போதினிலே திரு அ.இரவி அவர்களால் எழுதப்பட்டிருந்த இக் கட்டுரை கண்ணில் பட்டது. நான் எழுதிவைத்திருந்த சில விடயங்களை விட மிக அழகாக எழுதப்பட்டிருந்த இக் கட்டுரையினை இங்கு பதிக்கலாம் என்று எண்ணி இக் கட்டுரையினை இங்கு பதிக்கிறேன்.

என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி

-------------------------------------------------------------------------------------------

"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.

"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."

ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.

அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.

"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"

என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.

"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"

அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.

"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"

இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.

ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்

"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"

என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.

இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.

தொடரும்................

No comments: