Friday, September 09, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 2

ப்படி எல்லாம் நான் இங்கு எழுதுவது யாரையும் கிண்டலடிக்கவோ நோகடிக்கவோ அல்ல.ஒரு கோபம் அவ்வளவுதான்.ஒரு சமூகம்
உயிருக்கு அல்லாடிக்கொண்டு இருக்கிறது.வாழ்வுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.அடையாளம் யாவும் அகற்றப்பட்டிடுமோ என்று கதறிக்கொண்டிருக்கிறது.வானில் எங்கும் வல்லூறுகள் வட்டமிடுகின்றன.அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் தமது பென்னாம் பெரிய சிறகை விரித்துப் பறப்பு செய்கின்றன.சிங்கள தேசம் என்னும் பருந்தும் கூடவே பறந்து கொத்துகின்றது.கோழிக்குஞ்சுகள் நாம் காக்கப்படவேண்டும்.வளரவேண்டும்.வாழவேண்டும்.சமாதானம் பற்றி,
அமைதி பற்றி,மனிதஉரிமை பற்றி பேசிப்பேசியே இந்த வல்லூறுகள்
நம்மை சாவுக்கு இரையாக்கிவிடும்.எம்மவரும் ஏதும் அறியாது அல்லது ஏதும் அறியாதுபோல் நடித்து தமது சொந்தக் "காய்ச்சலை" தீர்த்துக்கொள்ள பேனாவை தூக்கிவிடுவர்.

பாரதியாரின் இருவரிகளைஇப்பொழுது நான் இவர்களுக்கு
சமர்ப்பிக்கின்றேன்.

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"

கவிதைகள் சில எம் போரின் தேவையை இழித்துப் பாடி விட்டன.
அவைபற்றி சொல்லப்புகின்,அதிக ஒற்றைகளையும் அதிக நேரத்தினையும் நான் தேடவேண்டிவரும்.அப்படி தேடினாலும் இந்த எழுத்துக்களை அச்சுக்கோர்க்க என்னிடம் எழுதக்கேட்டோர் பஞ்சிப்படுவார்களோ என நினைத்து விடுகிறேன்.கவிதைகளை நாம் தவிர்த்தாலும் உரைநடையில்
கூட நமது போருக்கு எதிரான முக்கியமான பதிவுகளை நாம் காண்கிறோம்.முன்னர் ஒரு காலத்தைய "போராளி" என்று அறியப்பட்ட சி.புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும்(கிட்டத்தட்ட சுயசரிதைக்)குறிப்பு நூலும் ஷோபாசக்தி எழுதிய சில சிறுகதைகளும்,கொரில்லா, ம் என்கின்ற நாவல்களும் இந்த வகையில் சொல்லவேண்டியன. இனி வருவனவற்றினை வாசிக்க முன்னர்
முதலாம் பதிவில் முதலாம் பந்தியினை மீளவாசிக்கக் கடவீர்.

அவ்வாறு வாசித்து முடித்த பின்னால் ஒரு உண்மையை இப்போது ஒப்புக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நூல்களும் வேறு சில கவிதைகளும் தங்கள் காய்ச்சலை வெளிப்படுத்த எழுதப்பட்டவைதாம்.அப்படி எழுதுகிறபோது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மானுட
விடுதலைக்கு எதிரான பாடலையே பாடிவிடுகின்றன.அவர்கள் நோக்கமும் அதுதான் என தெள்ளென தெளிவாகின்றது.கோவிந்தன் "புதியதோர் உலகம்"எழுதுகின்றபோது,அது எதிரிக்குசாதகமாக அமைந்து விடுமோஎன் அஞ்சி அஞ்சி எழுதிய போக்கு இத்தகையோரிடம் காணக்கிடைக்கவில்லை.இவர்கள் தம்மை முன்னர் போராளிகளாக அறிவித்துக்கொண்டவர்கள்.சிறு துரும்பாவது போருக்கு போட்டிருக்கிறார்கள்.அனால் வெளியே வந்து,போராட்டத்தினை எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் அதன் உயர் நோக்கம் கருதி இருகரம் நீட்டி வரவேற்கலாம்.இது காய்சலாகவே அமைந்து விடுகின்றது.மேற்குறித்த நூல்கள் பற்றிய விமர்சனத்தை நான் இப்போது முன்வைக்கப்போவதில்லை.இவற்றை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் கருதுகிறேன்.கவனத்தில் எடுக்கவேண்டிய தீய சக்திகள் அவற்றை கவனத்தில் எடுத்தும் விட்டன.ஆகும் வேலையை அந்த சக்திகள் பார்த்துக்கொண்டும் இருக்கின்றன.இந்நூல்கள் பற்றிய சாதகமான விமர்சனங்கள்,தட்டிக்கொடுப்புக்கள்,முன்னெடுப்புக்கள்,
அறிமுகப்படுத்தல்கள்
என்று சகலகாரியங்களையும் இந்த சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன.இவர்கள் ஈழத்தில் ஒரு போர் நிகழவதைக்
கூட கணக்கில் எடுக்காதவர்கள்.ஈழத்து தமிழ்தேசிய விடுதலைப்
போரின் நியாயம் குறித்து ஒரு வரி பேசாதவர்கள்.அவை குறித்து எழுந்த இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.ஈழத்தில் கவிதை இந்தவிதமாக வளர்ந்திருக்கிறதே என்பதை கவனத்தில் கொள்ளாதவர்கள்.அவர்களது அங்கீகாரத்துக்காக ஈழத்தில் நாம் ஒன்றும் "பண்ணவில்லை". ஆனாலும் அவர்கள் யார் என்பதை
அடையாளப்படுத்தவே இவற்றைச் சொன்னேன்.

ஆனால் ஈழ விடுதலைக்கு எதிராக ஏதும் படைப்புக்கள் வந்தால் இத் தீயசக்திகள் அவற்றை எடுத்து ஏந்தி,ஏற்றிவைத்து தொழுது போற்றுவர்.எப்படியோ அவர்களின் கண்ணில் அவை பட்டுவிடும்.ஈழத்து இலக்கியம் என்றால் அவர்களுக்கு தெரிபவர்கள் யார் என்று பட்டியல் போட்டாலே அவர்களது கணக்கு புரிந்துவிடும்.அந்தபட்டியல் இரண்டு வகையானதாக இருக்கும்.ஒன்று ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எழுதுபவர்கள்.இரண்டு ஈழவிடுதலைப் போர் குறித்து ஏதும் கதையாதவர்கள் தப்பித்தவறி ஈழம் என்ற சொல்கூட வராது பார்த்துக்கொள்பவர்கள்.

தொடர்ந்து வரும்............
நன்றி.அ.இரவி

1 comment:

Anonymous said...

THIS SI THE BEST POST I EVER SEE IN MY LIFE

I HOPE ALL THE TAMIL THUROKEEGAL SEE THIS POST

GOOD WORK