Thursday, September 22, 2005

இது என் படிப்பு

ழநாதன் அவர்கள் "இது என் புராணம்"என்ற தலைப்பில் பதிவு ஒன்று இட்டிருந்தார்.அது வீட்டில் தொடங்கி கந்த புராணத்தில் முடிந்திருந்தது.நல்லதொரு முயற்சி. அப்பொழுது தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது இன்னொரு படிப்புபற்றி.இதுக்கும் கந்த புராணத்துக்கும் சம்பந்தம் இல்லை.அனாலும்இதுவும் ஒரு வகைப்படிப்புதான்.பத்திரிகை படிப்பு.

யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இதை நான் பார்த்திருக்கிறேன்.கடற்கரைகளில்,வாசிகசாலை முன்றலில்,ஆலமரம்,அரசமரத்துக்கு கீழும்அன்றைய காலகட்டத்தில் நான் அரசியல் படித்ததே இந்த பத்திரிகை படிப்புக்கள் மூலம் தான்.எங்கள் வீட்டில் இரண்டு பத்திரிகைகள் வரும்.இருந்தும் என்னை அதிகம் கவர்ந்தது இந்த திண்ணை அல்லது தெருப் படிப்புதான்.என்ன விடயத்தினை சொல்ல வருகின்றேன் என்பது பலருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

எங்கள்.அம்மம்மா வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பலசரக்குகடை ஒண்டு இருந்தது.நாங்கள் சாமான்கள் வாங்குவதும் அந்தக்கடையில்தான்.அந்தக்கடைக்கு பக்கத்து கடை நானறிந்த காலத்தில் இருந்தே பூட்டியே இருந்தது.இரு கடைகளுக்கும் முன்னால் சீமெந்து இடப்பட்டு நீண்ட விறாந்தை ஒன்று இருந்தது.பின்னேரங்களில் பூட்டியிருக்கும் கடைக்கு முன்னால் வயது போன சில பெரிசுகள் கூடியிருப்பர்.அதில் ஒருவர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரைச் சூழ பலர் அமர்ந்திருப்பர்.நடுநாயகமாக அமர்ந்திருப்பவர் கையில் அன்றையசெய்திதாள்கள் இரண்டாவது இருக்கும்.அவர்தான் அங்கு தலைவர் மாதிரி. பின்னேரம் 6.00 மணிக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமா இன்னும் பலர்அங்கு வந்து சேர தொடங்குவார்.இதில் வந்து கூடுபவர்கள் பலர் வறிய கூலித்தொழிலாளிகளாகஇருப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஏறத்தாள எல்லோரும் வந்து அமர்ந்தவுடன்,அங்கு நடுவில் அமர்ந்திருப்பவர் பத்திரிகைகளை எடுத்து உரத்த குரலில் வாசிக்க ஆரம்பிப்பார்.வாசிப்பது என்றால் ,5,6 வரி படிப்பார் பின்பு நிறுத்திவிட்டு செய்திதொடர்பான தனது கருத்துக்களை சொல்வார்.மற்றவர்களும் தமது கருத்துக்களை சொல்வர்.பின்பு செய்திகள் தொடர்ந்து படிக்கப்படும்.இப்படி சூடு ,சுவையான கருத்துக்கள்,விவாதங்கள்சில வேளைகளில் அனல் பறக்கும் வார்த்தைகள் கூட வந்து விழும்.

எனக்கு அரசியல், போராட்டத்தில் ஆர்வத்தினை உண்டாக்கியதே இந்த கூட்டம் தான்.செய்தி படிப்பவர் செய்திகளைப் படித்து விட்டு "அய்யா இப்படி சொல்லியிருக்கிறார்"எண்டு சொல்ல, கேட்பவர்களில் ஒருவர் "அப்ப அம்மா இதுக்கு என்ன செய்யப்போறா"?எண்டு கேட்க,கேட்டுக்கொண்டிருந்தவர் சொல்லுவார் அம்மாவுக்கு தெரியம் அய்யாவை எப்படி மடக்கிறது எண்டு.
இப்படி சொல்ல அவர்கள் பேசிக் கொள்ளும் அய்யா,அம்மா யார் என்று அறியாமல் தலையினை பிய்த்துக் கொள்வேன்..அய்யா என்று யாரைசொல்கிறார்கள்? அம்மா என்று யாரைச் சொல்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்.

( இதற்கும் தமிழ்நாட்டு அம்மா,அய்யாவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லதுதானே அல்லது யாராவது வந்து நீ அகதிதானே. உன்னுடைய வேலையினைப் பார்.
ரொரன்ரோ முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து நிதி திரட்டு என்று
பின்னூட்டம் இடுவார்கள்.அவர்களின் நேரத்தினை சேமிப்பதற்காகவே இந்த வரிகள்.)

எனக்கு அரசியல் தொடர்பாய் சிலவற்றை அறிந்து கொண்டது இங்கு என்று சொன்னேன் தானே.அதே போல( காதை கிட்ட கொண்டு வாங்கோ) சில கெட்ட வார்த்தைகளையும் அறிந்து கொண்டது இங்கிருந்துதான்.
சிறீமா விமானநிலையம்?? திறந்து வைத்த கதை?? கூட இங்கிருந்துதான்
அறிந்துகொண்டேன்.கதை தெரியாதவர்களுக்கு நான் ஒண்டும் செய்ய
இயலாது. கதையை சொன்னால் தமிழ்மணத்தில் இருந்து "என் மனவெளியில்" தூக்கப்பட்டுவிடும்.


சில வேளைகளில் சில செய்திகள் சம்மந்தமாக விவாதங்கள் நடைபெறும் உணர்ச்சிமேலீட்டில் போது கெட்ட வார்த்தைபிரயோகங்களும் இடம் பெறும்.அப்படியான வேளைகளில் நான் அங்கு நிற்பதை கண்டால் "பெரியாக்கள்கதைக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை" என்று சொல்லி என்னை விரட்டிவிடுவார்கள்.மற்றம்படிஎன்னைக் கண்டு கொள்ளாதவர்கள் இப்படிப்பட்ட நேரங்களில் கண்டுகொள்வார்கள்.

பெரும்பாலும் அம்மம்மா என்னை பின்னேரங்களில் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்புவா.அப்பிடி அனுப்பும் நேரங்களில் இந்த பத்திரிகை படித்து ரசிக்கும் கூட்டத்தில் நானும் பார்வையாளனாக் கலந்து கொள்வதுண்டு.சில வேளை கடை முதாலாளியும் விவாதங்களில் பங்கெடுக்க அவர் வரும் வரை நானும் கடை வாசலில் நிண்டு இவைகளைகேட்டுக்கொண்டிருப்பேன்.ஒரு நாள் இப்படி தான் கடைக்கு அனுப்பிய பொடிச்சியை கன நேரமாக காணவில்லை எண்டு போட்டு அம்மம்மா வந்திட்டா நேரே கடைக்கு வந்தவ முதலாளியும் நானுமாக "அரசியல் அரங்கில் " மூழ்கிப்போயிருந்தைக் கண்டு விட்டு முதலாளிக்கு ஏச்சும் எனக்கு "கடைக்கு அனுப்பினால் இஞ்ச வந்து வீண்பராக்கு பாத்துக்கொண்டிருக்கிறாய்"எண்டு தலையில் குட்டும் விழுந்தது.ஆனாலும்
நான் எப்படியாவது பத்திரிகை படிக்கும் இடத்துக்கு வந்துவிடுவேன் என்ன
சாட்டு போக்கு சொல்லி எண்டாலும்.

அனாலும் ஒண்டு பாருங்கோ.அண்டைக்கு பராக்கு பாக்க தொடங்கினது
இண்டைக்கும் பிரச்சனையாக அல்லோ கிடக்குது.
"உங்களோட வந்தால் எனக்கு மானமேபோகுது ,சும்மா பராக்கு பாக்காமல் வாங்கோ பாப்பம்" இது எனது "பிரிய சகியின்" குரல்.
கடை தெருவுக்கு போனால் எனது மனைவி நான் எங்கு "பராக்கு" பார்க்கிறன் என்று தான் பார்ப்பா.ஆனாலும் ஒண்டு தொட்டில் பழக்கத்தை மாத்த ஏலுமோ?


ஈழநாதனின் பதிவைப் பார்த்தவுடன் எனது ஞாபகத்தில் வந்த விடயங்கள் இவை.கிராம வாழ்க்கையின்ஒரு ரசிக்கதக்க,வியக்கதக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.படிப்பறிவு அற்றோர் இப்படி,இதன்வாயிலாக நாட்டுநடப்புக்களைஅறிந்துகொண்டனர்.அன்றைய நாட்களில் யாழப்பாணத்தின் பல கிராமங்களில் கண்ட காட்சியே இது.இன்று இலங்கை வானொலிகளிலும்,தொலைக்காட்சிகளிலும் இடம் பெறும் "பத்திரிகை கண்ணோட்டம்" த்திற்கு இவை தான் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். இன்று காலமாற்றங்கள், இவைகளை அரித்துப்போகவைத்திருக்கலாம்.ஆனாலும் பழக்கங்கள்,வழக்கங்கள் காலவோட்டத்தில் மாறுவது நியதிதானே.கோவணம் கட்டிய எமது மூதாதையர்கள்,வேட்டி கட்டி,பின்பு சட்டை அணிந்து,இப்போது பாண்ட்,சேட்
இப்படி வந்துவிடவில்லையா? மற்றங்களே நிரந்தரம்.ஈழநாதனின் மேட்டருக்கு
க்டைசியில் வந்துவிட்டேன். என்ன ஈழநாதன் திருப்தியா?

(ஆனாலும் தமிழைப்பற்றி கதைத்தால் உணர்ச்சி வசப்பட்டு வேட்டி சட்டையுடன் முடிச்சு போடுகிறார்கள். தமிழைப்பற்றி கதைப்பதானால் கோவணம் அணிந்துதான் கதைக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே அந்த மட்டில் சந்தோசம்.)

யாழப்பாணத்தில் சுருட்டு சுற்றும் சுருட்டு கொட்டில்களிலும் இப்படி செய்திகள் வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால்நான் பார்த்ததில்லை.விடயம் தெரிந்த யாராவது அதைப்பற்றி எழுதலாமே.

வயது போனவர்களுக்குதான் இதைபற்றி தெரியும்.ஈழநாதன்,வசந்தன் கொஞ்சம்
கவனீங்கோ அப்பா.ஏன் கொழுவி,சயந்தன் ,குழைக்காடன்,வன்னியன் கூட எழுதலாம்.
. ஹீ... ஹீ

7 comments:

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இப்படியான சமா வைப்புக்கள் நாளந்தம் பார்த்து பழக்கமில்லை. ஆனால் மரண சடங்குகளிலும்,அந்தியேட்டிவீடுகளிலும் அன்றாட அரசியல் பற்றி கதைப்பதை பார்த்திருக்கிறேன்.
சுருட்டு சுற்றும் இடத்துக்கு நானும் போனதில்லை.

இளங்கோ-டிசே said...

கரிகாலன் நன்றாகவிருக்கிறது பதிவு.
....
//சுருட்டு சுற்றும் சுருட்டு கொட்டில்களிலும் இப்படி செய்திகள் வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால்நான் பார்த்ததில்லை.விடயம் தெரிந்த யாராவது அதைப்பற்றி எழுதலாமே.//
மதியிடமும் கேட்டுப்பார்க்கலாம். அவர், தான் முந்தி சின்ன வயசில் இருக்கும்போது சுருட்டுப்பிடித்தவர் என்று ஒரு பதிவில் பின்னூட்டம் போட்டிருந்தவர். ஆனால் இந்தப் பதிவைப் பார்த்தவுடன், பத்திரிக்கைகள் வாசித்து தனது அறிவைப் பெருக்கத்தான் தான் சுருட்டுப்பிடிக்கத் தொடங்கினான் என்று புதுக்கதை சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கரிகாலன்,

இம்மாதிரி எங்களூர்ப்பக்கம் இருந்ததாவென்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

உங்களின் பதிவில் ஓரிடத்தில் உங்களின் அம்மம்மா 'பொடிச்சிக்கு' என்று சொல்லித் திட்டியதாக எழுதியிருக்கிறீர்களே. என்ன விசயம்???

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கரிகாலன்,

எனக்குப்பக்கத்திலை ஒளிச்சிருந்து சுருட்டுப்பிடிச்ச ஆக்கள் அப்பிடிச்சொல்லேல்லையெண்டா நானும் சொல்லேல்ல. ;)

-மதி

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//உங்களின் பதிவில் ஓரிடத்தில் உங்களின் அம்மம்மா 'பொடிச்சிக்கு' என்று சொல்லித் திட்டியதாக எழுதியிருக்கிறீர்களே. என்ன விசயம்???//

நான் கேட்க வர, மதி கேட்டிட்டா! :O)

இதெல்லாம் எந்த வருசம் நீங்க கதைக்கிற இந்த "செய்தியரங்கம்"?

Anonymous said...

குழைக்காட்டான்,டீ,சே,மதி,மழை ஷ்ரேயா,கொழுவி??எல்லோருக்கும்
நன்றிகள்.

மொத்தத்தில்"பூனைக்குட்டி"வெளியில் வந்துவிட்டது இருவரின் வாயில் இருந்தும்.

வடமராட்சியின் பல இடங்களில்
இதைப் பார்த்திருக்கிறேன்.மாலை வேளைகளில் கடைகளுக்கு முன்னால்,வாசிகசாலைகளுக்கு முன்னால்,
கடற்கரையில் இப்படி பல இடங்கள் கண்டிருக்கிறேன்.நான் கதைக்கும் காலம்
1982 தொடங்கி 1987ம் ஆண்டுவரையான
பகுதியில்.
இதை எழுதும் போது வடமராட்சி பனம்
கள்ளு நினைவினில் வந்ததா?
எனக்கு நாக்கு சிலிப்பாகி போட்டுது.
மற்றம் படி நான் நலமாகவே இருக்கிறேன்.நீங்கள் சந்தேகிக்கும் படி அல்லாமல்.