Sunday, October 30, 2005

சிங்கள ஊடகங்களின் `கொலை'ச் செய்திகள்

சிங்கள நாளேடான `சத்தின' வின் காரண காரிய விளக்கங்கள்.


இலங்கையில் கிழக்கில் இன்று மினி யுத்தம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை என்று கூறலாம்.
கிழக்கில் இன்று சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ தினம் ஒரு படுகொலை நிகழ்ந்த வண்ணமேயுள்ளது.

அந்த வகையில், கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற சம்பவமொன்றில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கருணா தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் கேணல் பானுவும் புலனாய்வு துறைத் தலைவர் கீர்த்தியும் படுகாயமடைந்ததாகவும் படுகாயமடைந்த கீர்த்தி கொழும்பு அப்பலோ மருத்துவமனைக்கு இராணுவ ஹெலிக்கொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியான தலைப்புச் செய்திகளுடன் செய்திகளை பிரசுரித்தன.

சிங்கள ஊடகங்கள் இச்சம்பவத்தினை விடுதலைப் புலிகளுக்கு பாரிய தோல்வியினை ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால் சிங்களத் தேசத்திற்கு பல நன்மைகள் கிட்டிவிட்டதாகவும் என்ற வகையில் தமது செய்திகளை பிரசுரித்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் வெளியான சிங்கள நாளேடுகளில், திவயின பத்திரிகை தமது தலைப்புச் செய்தியாக "கிழக்கு மாகாண தளபதி பாய்ந்தோடி உயிர் தப்பியுள்ளார். கருணா தரப்பினரின் தாக்குதலில் வன்னிப்புலிகளில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு வாகனங்கள் அழிந்துள்ளன." என அதன் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்காதீப பத்திரிகையின் உபதலைப்புச் செய்தியாக "கருணா தரப்பினர் மூலம் பாரிய தாக்குதலொன்று புலிகளின் கிழக்கு தளபதி பானு ஆபத்தான நிலையில், புலிகளில் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்பிம பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "கருணா தரப்பு தாக்குதலில் புலிகளின் இரு தலைவர்கள் உட்பட நால்வர் கொலை. எட்டுப்பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் கிழக்குத் தளபதி பானுவும் இருந்துள்ளார். காயமடைந்த ஒருவரை கொண்டு செல்வதற்கு இராணுவ ஹெலிக்கொப்டரொன்று" என தனது தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தினமின பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "புலிகளின் கிழக்கு தளபதி பானுவின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்". இச்செய்தியில் மேலும் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி நியுஸ் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் "பானு பயணஞ் செய்கையில் தாக்கப்பட்டுள்ளார்." இதன் செய்தியில் வன்னிப் புலிகள் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இத்தாக்குதலை கருணா தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏசியா ட்ரிபுயூன் இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டெய்லி மிரர் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியாக "விபத்துக்குள்ளான எல்.ரி.ரி.ஈ. தளபதிக்கு அரசாங்கம் ஹெலிக்கொப்டர் வழங்கியுள்ளது. "இதன் செய்தியில் குறைந்த பட்சம் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாளிதழ்களான தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி ஆகியன இச்சம்பவத்தினை முன்பக்கச் செய்தியாக பிரசுரித்திருந்தன. அத்தாக்குதலில் எவரும் உயிரிழந்ததாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, கேணல் பானுவின் பேட்டியொன்றை வீரகேசரி பிரசுரித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களை ஒப்பிடுமிடத்து எவ்வாறு செயல்பட்டுள்ளன? என்பது நன்கு புலனாகிறது. சிங்கள ஊடகங்களிலும் ஆங்கில ஊடகங்களிலும் இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டள்ளவர்களின் எண்ணிக்கை வித்தியாசமாகும். இவற்றுள் எந்த எண்ணிக்கையினை நம்புவது? என்ற குழப்பம் வாசகர்கள் மத்தியில் ஏற்படுகிறது. அத்துடன், தமிழ் பத்திரிகைகளில் இத்தாக்குதலில் எவரும் கொலை செய்யப்படவில்லையென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவத்துடன் சிங்கள ,ஆங்கில ஊடகங்களின் செயற்பாட்டினை நோக்குமிடத்து, அவ்ஊடகங்கள் தத்தமது வாசகர்களை ஏமாற்றியுள்ளதுடன் சிங்கள சமூகத்தினருக்கு பொய்யான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அத்துடன், சிங்கள ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இச்சம்பவத்தினை செய்தியாக பிரசுரித்திருந்தன. ஊடகங்கள் இவற்றையல்ல மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பிரஜைகளுக்கு உண்மையினை வழங்குதல் வேண்டும். அத்துடன், எந்தவொரு ஊடகமும் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாதிருப்பதற்கு யார் பொறுப்பேற்றல் வேண்டும்? என்ற கருத்துகளை முன்வைக்காதது இவ் ஊடகங்கள் விட்ட தவறாகும்.

இதேபோல், கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் கொலை செய்யப்பட்ட பொழுது, 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிரசுரமான திவயின பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "பாம்பின் விசம்" என்ற தலைப்பில் அவர் தனது பத்தியில் இவ்வாறான நபர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டிருந்தார். இன்றும் அப்பத்திரிகை உட்பட ஏனைய பத்திரிகைகளும் மறைமுகமாக, குறிப்பாக இச்சம்பவத்தின் போதும் தமது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

அதேவேளை, கருணா தரப்பினர் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகை தெரிவித்துள்ளது. அப்பத்திரிகைக்கு கருணா தரப்பினருடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக காணப்படும் பல கட்டுரைகள் கடந்த காலங்களில் பிரசுரமாகின. அதனால் இச்செய்தியினை ஒரே தடவையில் வாந்தி என்று கூறி எறிந்து விடுதல் பொருத்தமற்றது. கருணா தரப்பினர் அச்செய்தி பொய்யென தமது இணையத்தளத்தில் ஊடாகவேனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அவற்றுக்கிடையில், கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பில் கருணா தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலின்போது 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அத்தாக்குதலை கருணா தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் கருணாவின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறிப்பிடத்தக்க அளவு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலைமையே உருவாகும்.
இன்று கிழக்கில் இயங்கும் தமிழ் துரோக துணைப்படைகளின் ஆதரவுடன் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நிழல் யுத்தம் இப்பொழுது படிப்படியாக யாழ்ப்பாணத்தையும் நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதனை அண்மைக்காலம் முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களிலிருந்தும் சிங்கள ஊடகங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளிலிருந்தும் நன்கு காணக்கூடியதாகவுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (23.10.2005) பிரசுரமான "சத்தின" பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் "யாழ் .வைத்தியசாலையில் 22 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், புலி உறுப்பினர்களைச் சேர்ந்த இரு வைத்தியர்களின் திட்டமொன்று" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் யாழ். வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட இருப்பத்தியிரண்டு (22) இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பாக இப்பொழுது பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மற்றும் வேறு நோய்களின் போது யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இராணுவ வீரர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக உயிரிழப்பதுடன் அந்த இராணுவ நோயாளர்களுக்கு உரிய முறையில் உரிய சிகிச்சை கிடைக்காமையினாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணம் யாழ். வைத்தியசாலையில் பணிபுரியும் இரு தமிழ் வைத்தியர்களின் வைத்திய தொழிலிற்கே பொருந்தாத மனிதாபிமானமற்ற செயற்பாடுகளே எனத் தெரிய வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடையும் இராணுவத்தினருக்கு உரிய சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்காதிருப்பதற்கு இவ்விரு வைத்தியர்களும் செயற்படுவதுடன் அதற்கு ஏனைய ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதற்கேற்ப இராணுவ வீரர்களின் நோய் உச்ச நிலையினை அடைந்து, பின்னர் அவர்கள் உயிரிழக்க வழி செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்விரு வைத்தியர்களும் சில காலம் புலிகள் அமைப்பின் வைத்திய பிரிவில் இருந்தவர்களெனவும் பின்னர் யாழ். வைத்தியசாலையில் சேவைக்கு இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விருவரும் கமலன் பாலச்சந்திரன் மற்றும் பத்மநாதன் சிவராசன் என இனங்காணப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப யாழ்ப்பாணத்தில் விபத்துகளுக்கு மற்றும் நோய்களுக்கு இரையாகும் முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்படுவதனால், மரணம் சம்பவிக்கப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவல்கள் மூலம் தெரிய வந்தள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பாக யாழ் வைத்தியசாலை பதில் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்; இச்செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியொன்றாகும். கடைசியாக இற்றைக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பே மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். (மேஜர் சுசந்த மெண்டிஸின் படுகொலை) என அவர் தெரிவித்தார்.

இப்பத்திரிகை எந்நோக்கத்திற்காக இச்செய்தியினை பிரசுரித்தது? எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறான செய்திகள் கிழக்கில் போன்று வடக்கிலும் தொடரப்பட்டால் நிலைமை எங்கு? எதில்? எவ்வாறு முடிவடையும்? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எஸ்.நயனகணேசன்/தினக்குரல்.

1 comment:

ஈழபாரதி said...

கருந்தான கட்டுரை வாழ்த்துக்கள் மேலும் தொடர.