Tuesday, November 08, 2005

வலதுசாரியாகிவிட்ட வாசுதேவா-ஒரு மடல்!

வாசுதேவ நாணயக்காரவுக்கு!

ஒரு காலத்தில் இடது சாரிகள் சிங்கள அரசியலில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் யதார்த்தத்தை ஒட்டுமொத்தமாகப் புரியாவிட்டாலும் சிறிதளவாவது அவர்கள் புரிந்து விட்டார்கள் போன்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. வலதுசாரிகள் அல்லாமல் இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்குமானால் தமிழ் மக்களது பிரச்சினை விடயத்தில் அணுகுமுறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எண்ணபாடு இருந்தது.

இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒரு காலத்தில் சிங்களவர்களிடையே வாசு நல்லவர், நமது பிரச்சினையின் ஆள நீளத்தைப் புரிந்திருக்கிறார், இவரைப் போன்றவர்கள் தெற்கே கணிசமானளவு புரிந்து கொள்வார்களாயின் நல்ல சூழல் உருவாகும் என தமிழ் மக்கள் அபிப்பிராயப்பட்டதும் உண்டு.

ஆனால், அது இப்போ தப்பாகப் போச்சு. ஏனெனில் வாசு இப்போது இடது சாரியல்ல. இனவாதக் கூட்டுடன் நெருக்கமாகி விட்டார். பேரினவாதக் கயிற்றை விழுங்கி விட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என அன்று கூக்குரலிட்ட வாசுதேவா அல்ல இவர். நாட்டை துண்டாடக் கூடாது. தமிழனுக்கு உரிமையை வழங்கக் கூடாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு நிறுவக் கூடாது. போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும் மங்களவுக்கு எப்படி ஐயா சாமரம் வீசமனசு வந்தது.

வெற்றிலைக்கு நேரே புள்ளடி போடுங்கோ! என தென்னிலங்கை மக்களிடையே துணிந்து கூறுகிறீர்களே! அன்று சொன்னதை ஒருக்கால் ஞாபகமூட்டிப் பாருங்கோ புரியும். போர்க் காலச் சூழலில் படையினர் தமிழ் மக்களை வெட்டிக் குதறி, கொலைசெய்த போது நீங்கள் தமிழ் மக்களது பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறியது இப்போது என்னாச்சு. பேரினவாதம் இடது சாரிகளை ஆக்கிரமித்து விட்டது.

கட்டுக் கட்டாக பணம், கை நிறைந்த சலுகைகள் கொட்டித் தருகிறார்கள். உங்கள் மனதைக் குளுமைப்படுத்துகிறார்கள். அதற்கு பிரதியுபகாரமாக இடதுசாரிக் கொள்கைகள், முற்போக்கான சிந்தனைகள், சிறுபான்மையினம் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் புதைகுழியில் போட்டு மூடிவிட்டு இனவாதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற கூட்டத்துடன் ஒருவராக அங்கத்துவமாகி விட்டீர்கள்.

இனியும் ஏமாறாது எமது இனம். எங்கள் இனத்தின் மீது பரிந்து பேசுபவர்கள் நாளை பேரினவாதிகளுடன் நின்று குழிவெட்டுவார்கள். எமது தமிழினம் இனி எச்சரிக்கையாகவே இருக்கும். வாசு அல்ல வாசு போன்ற வழித் தோன்றல்கள் சிரித்த முகத்துடன் சமத்துவம் பேசினாலும் தமிழினம் ஏற்காது. ஏனெனில் இனி இடது சாரிகளையும் நம்பத் தேவையில்லை. நீங் களே வலது சாரியாகி விட்டீர்கள் என்று கூறி மடலை முடிக்கின்றேன்.

இங்ஙனம் ஈழமகன்
நன்றி ஈழநாதம் செய்திப்பத்திரிகை( மட்டு பதிப்பு)

No comments: