Sunday, January 16, 2005

அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!

அனானுக்குப் போட்ட தடை அம்மாவின் அம்மா காட்டிய நடைமுறையே!

. நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வடபகுதிக்கு வராமலேயே திரும்பச்சென்று விட்டார். ஏன் வரவில்லை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லுகின்றனர்.அனான் வடபகுதிக்குச் செல்வதை சிங்கள பௌத்த மேலாண்மை அனுமதிக்காதென்பது முன்னரே தெரிந்ததுதான்.இதனால்தான் கடைசி நிமிடம்வரை தமிழ்மக்கள் தரப்பில் சுனாமி அனர்த்தத்தால் பெரும் அழிவுகளுக்குள்ளான வடக்கு - கிழக்குப் பகுதிகளையும் நேரில் வந்து பார்த்துப்போகும் படி கோரிக்கை விடுத்துவந்தனர். கொபி அனான் பார்க்க வேண்டிய அனர்த்த அழிவுகளை விட சிங்களபௌத்த ஆதிக்க சக்திகளின் “அனர்த்தங் களை” இன்று உலகம் முழுவதும் அறிந்துகொள்ள முடிந் திருக்கிறது.

இது இப்பொழுது சந்திரிக்கா ஆட்சியில்தான் இலங்கை யில் நடந்திருக்கும் சம்பவமல்ல.1970 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் சர்வதேச நாடாளு மன்ற பிரதிநிதிகளின் மாநாடொன்று நடந்தது.கொழும்பில் பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பிரதிநிதிகள் என்று பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சமயம் இலங்கையில் சந்திரிகாவின் அம்மா சிறிமா பண்டாரநாயகாவின் அரசு ஆட்சியிலிருந்தது. அந்த மாநாட் டில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயும் கலந்து கொண்டார்.

மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசி தமிழர் தாயகத்துக்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் சென்று பார்வையிடவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.இதற்கு வாஜ்பாயும் சம்மதம் தெரிவித்தார். மாநாடு முடிவடைவதற்கு முன் பிரதிநிதிகள்; நாட்டில் விரும்பிய இடங்களுக்குச் சென்று பார்த்தும் பேசுவதற்கும் வழக்கம்போல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வாஜ்பாயும் மற்றும் சிலரும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒழுங்குசெய்யப்பட்டது.கொழும்பிலிருந்து விமானத்தில்
வாஜ்பாய் குழுவினருடன் தமிழ் அரசுக்கட்சியைச் சேர்ந்த வி.என்.நவரத் தினமும் மற்றும் இரண்டொருவரும் யாழ்ப்பாணம் வந்தனர்.
வாஜ்பாய் குழுவைத் தமிழரசுக் கட்சியினரே யாழ்ப் பாணம் அழைத்துவருவதாகவே இந்த ஏற்பாடு அமைந் திருந்தது.வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒரு நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவரை புரட்டக்கோல் என்று அழைப்பார்கள். வாஜ்பாய் குழுவுக்கும் ஒரு புரட்டக்கோல் பொறுப்பாக விமானத்தில் அவர்களுடனேயே வந்தார்.

யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்களுக்கு ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழரசுக் கட்சி எம்.பி.வி.என்.நவரத்தினம் வாஜ்பாயிடம் சொல்லித் தங்களுடன் வருமாறு அழைத்தார்.
இதே விமானத்தில் வந்த அரசின் புரட்டக் கோல் அதற்கெல்லாம் நேரமில்லையென்றும்
தங்களுடனேயே வாஜ்பாய் குழு நிற்க வேண்டுமென்றும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதற்கு இடமில்லையென்றும் தெரிவித்து வாஜ்பாய் குழுவை தம்முடன் வருமாறு கேட்டார்.வாஜ்பாய் எதுவும் சொல்ல முடியவில்லை. இப்பொழுது கொபி அனான் சொன்னதுபோல இவரும் அரசின் விருந்தின ராகவே வந்திருந்தார்.விமான நிலையத்தில் வி.என்.நவரத்தினத்திடமும் தமிழரசுக்கட்சி எம்பிக்களிடமும் வாஜ்பாய் பிரியாவிடை பெற்றார்.

நான் அடுத்தமுறை தனிப்பட்ட முறையில் யாழ்ப்பாணம் வருவேன். அப்பொழுது தமிழ்மக்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் பார்ப்பேன். அவர்களுடன் பேசுவேன் என்று சொல்லி விடைபெற்று புரட்டக்கோலுடன் சென்றார்.
வாஜ்பாய் அதன்பின் தனிப்பட்ட முறையிலும் வரவில்லை. பிரதம மந்திரியாக பதவியேற்ற பின் உத்தியோக ரீதியிலும் யாழ்ப்பாணம் வரவில்லை! யாழ்ப்பாணமே அவருக்கு நினைவிருக்காது.வாஜ்பாய் வந்த காலத்தில் இங்கு விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. போர்க்களமும் இருந்ததில்லை. இந்தியா வின் காந்தி காட்டிய வழியில் அகிம்சையைப் பின்பற்றிய செல்வநாயகம் தலைமையில் ஜனநாயக வழியில் சென்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி;தான். தமிழர் தாயகத்தில் மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டி ருந்தது.

அன்றைக்கு அம்மாவின் ஆட்சியிலேயே வாஜ்பாய் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களைப் பார்த்துப்போகவும் பேசவும் தேநீர் விருந்தில் தமிழர்களின் விருந்தோம்பலை ஏற்கவும் இடமிருக்கவில்லையென்றால் இன்று சுனாமி அனர்த்தத்தின் பின் மகள் சந்திரிகா அனுமதிப்பாரா?

இதுமட்டுமல்ல 1950 ஆம் ஆண்டுகளில் தொண்டமானாறிலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு நவரத்தினசாமி என்ற நீச்சல் வீரன் முதல் தடவையாக நீந்திச் சென்று உலக சாதனை படைத்தார்.இந்தச் சாதனையைப் பெரும் தயக்கத்துடன் பலநாட்கள் கழித்து இலங்கையில் அன்று ஆட்சியிலிருந்த சேர்.ஜோன் கொத்தலாவலையின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பாராட்டுத் தெரிவித்தது.இதன்பின் பிரதமர் சேர்.ஜோனின் வாசஸ் தலத்தில் நடந்த ஒரு வைபவத்தில் நீச்சல் வீரன் நவரத்தினசாமியை பிரதமர் வரவேற்றுப் பாராட்டுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். நீச்சல் வீரனும் அங்கு சென்றிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நவரத்தினசாமியைக் கைகுலுக்கிப் பாராட்டுவதை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கவே மறுத்து விட்டார்கள்.

இது தான் சிங்கள பௌத்த மேலாண்மை வாதிகள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் இதைத்தான் அவர்கள் இன மத மொழி பாகுபாடற்ற ஒரு மைப்பாடு என்று சொல்லுகிறார்கள்.இன்றும் இலங்கை மக்கள் மத்தியில் சுனாமி பேரலைகள் பேதங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாகச் சொல்லி உலகையே ஏமாற்றுகிறார்கள்.அவர்களுக்கென்று ஒரு நாடு இருக்கிறது. அவர்களுக்கான மொழி அரச மொழியாக இருக்கிறது. அவர்கள் சொல்வதை உலகமும் நம்பும்.சிங்கள பௌத்த மேலாண்மைவாத ஊடகங்கள் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிட்டதாகவே நடந்து கொள்கின்றன.

கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலிருந்த சந்திரிகா அரசுக்கு சுனாமி பேரலைகள் உதவி என்ற பெயரில் அள்ளிக்கொடுக்கும் கொடை வள்ளலாகவுமிருக்கின்றது. ஜே.வி.பியின் விமல் வீரவன்ச இதுதான் புலிகளைப் பேச்சுக்கு இழுக்கவேண்டிய தருணம் என்று அலோசனை சொல்கிறார்.அஸ்கிரிய பீடாதிபதியும் அனுஸானம் வழங்குகிறார். எல்லாமே இலவசமாக வந்து கொட்டும்போது சுனாமியின் பேரழிவில் மாண்டவர்களைப் பற்றியோ உறவுகளைப் பலிகொடுத்து பதறி நிற்கும் மக்களைப் பற்றியோ இவர்க ளுக்கென்ன கவலை?

நாங்கள் மட்டுமென்ன? இழந்த தமிழீழ அரசை மீண்டும் அமைப்பதற்கு 1977 இல் தமிழ் மக்களிடம் ஆணைகேட்டுப் பெற்று. நாடாளுமன்றத்தில் ஆறாண்டுகள் பதவி வகித் தோம். கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றதால் வெற்றி பெற்றவர்கள் நியாயமான முறையில் வெற்றிபெறவில்லையென்று நீதி மன்றக் கதவைத் தட்டி தடுத்துநிற்கிறோம். ஆனாலும் எனக் குப் பதவி ஆசை இல்லையென்று இன்றும் சங்கூதிக்கொண்டு சகுனிவேலை செய்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கும்போது மற்றவர்களைச் சொல்லி என்னபயன்?

நன்றி:- ஈழநாடு