Friday, July 15, 2005

லண்டன் மக்களுக்கு தைரியம் சொல்லும் ஒரு தளம்!


லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.அமெரிக்காவின் கூட்டாளியான பிரிட்டனை பழிவாங்கவும் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவின் நண்பர்களுக்கும் ஒரு எச்சரிக்கை தரவுமே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.60 பேர் அளவில்
கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் காயப்பட்டதும் நடந்தது.
தமிழர்கள் என்றவகையில்
தமிழ் யுவதி ஒருவர் இதில் இறந்ததும் இன்னுமொரு தமிழ் இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் ஏற்பட்ட பயப்பீதியினைப் போலவே இப்பொதும் லண்டன் மக்களிடையும் மற்றும் பல நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.பயபீதி காரணமாக பாதாள ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.

இப்படி இருக்கும் நிலையில் "நாங்கள் பயப்படவில்லை" என்னும் பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இத்தளம் பாதிக்கப்பட்ட லண்டன் வாழ் மக்களுக்கு தைரியம் சொல்லுகிறது. உலகெங்கும், பல நாடுகளில் இருந்து பலர் தமது புகைப்படங்களுடன் தைரியமூட்டும் வார்த்தைகளையும் இணைத்து அனுப்பியுள்ளனர்.

நாளுக்கு நாள் பல நாடுகளில் இருந்து பலர் இணந்து வருகின்றனர்.இதுவரையில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இத்தளத்தினை பார்வையிட்டுள்ளனர்.மக்களின் உணர்வுகளை பிரத்திபலிக்கும் இத்தளம் we're not afraid எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்,பேக் போன்றவற்றை விற்பதுடன் விற்றுவரும் பணத்தில் ஒரு பகுதியினை லண்டன் செஞ்சிலுவை சங்கத்தின் குண்டுவெடிப்பு நிதியத்துக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கிறது.

http://www.werenotafraid.com/

லண்டன் வாழ் மக்களுக்கு நீங்கள் கூட இதன் மூலம் தைரியம் சொல்லமுடியும் உங்கள் சொந்த அல்லது நீங்கள் விருப்பும் படத்துடன் மற்றும் நீங்கள் விரும்பும் வாசகங்களுடன்.(காப்புரிமை தொடர்பாகவும்ஒரு கண்ணோட்டம் இடவும்.)ஆனால் சமய ரீதியான மற்றும் அரசியல் ரீதியானவற்றை அனுப்புவதை தவிர்க்குமாறும் தள நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.

Wednesday, July 13, 2005

மற்றவரை முட்டாள் ஆக்க எண்ணினால்?

ற்றவர்களை முட்டாள் ஆக்க எண்ணி பலர் தாமே முட்டாள்கள் ஆகின்றனர்.பலருக்கு இது புரிவதில்லை.அப்படி முட்டாள் ஆக்க எண்ணி தாமே முட்டாள்கள் ஆனவர்கள் பற்றிய ஒரு துணுக்கு இது. படித்ததில் நான் ரசித்தது. நீங்களும் ரசிக்கலாமே.

படு புத்திசாலியான 4 எம்.பி.ஏ படிக்கும் நண்பர்கள்.அவர்கள் ஜாலி யானவர்கள்.மறுநாள் காலை அவர்களுக்கு பரீட்சை என்றநிலையில் முதல் நாள் இரவு நன்றாக குடித்து கும்மாளமிட்டுவிட்டு படுத்துவிட்டார்கள்.மறுநாள்காலை எழும்பி யோசித்தார்கள்.இன்று பரீட்சை ஒன்றுமே படிக்கவில்லை அத்துடன் தலைவலி வேறு.என்ன செய்யலாம் என யோசித்தனர். நாலு பேருக்காக எப்படி தேர்வை தள்ளிப்போடமுடியும் என்று யோசித்தனர்.பின்னர் ஒரு ஜடியா அவர்கள் மனதில் உதிக்க அதை செயற்படுத்தலாம் என முடிவெடுத்தனர்.

கைகால்கள்,உடை எல்லாம் கிரீஸ்,அழுக்கு தடவிக்கொண்டு தலைமுடி எல்லாம் கலைத்துவிட்டு பரீட்சைநடந்து கொண்டிருந்த மண்டபத்துக்குள் நுழைந்தனர்.டீனின் முன்னால் சென்று தாம் நேற்று இரவு நகருக்கு சென்றுவிட்டு காரில் வரும் போது ஆளரவமற்ற ஒரு காட்டுப்பகுதியில் கார் ரயர் பஞ்சராகி நின்றுவிட்டதாகவும் எக்ஸ்ரா வீலில் கூட காற்று இல்லை என்றும் பல முயற்சிகளுக்கு பின்னர் தாம் நடந்தே வந்து இப்போது தான் பரீட்சை மண்டபத்தினை வந்தடைவதாகவும் கூறி தமக்கு மட்டும் பிறிதொரு நாளில் பரீட்சை வைக்கும்படியும் கெஞ்சினார்கள்.சரி என்று ஒப்புக்கொண்ட டீன் மூன்று நாட்களின் பின்னர் உங்கள் நாலு பேருக்கும் பரீட்சைஎன்று சொன்னார். நண்பர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.
நண்பர்கள் விழுந்து விழுந்து படிக்கத்தொடங்கினர்.

3வது நாளும் வந்தது.டீனிடம் சென்றனர்.டீன் சொன்னார்.இது அசாதாரண கோரிக்கை அதனால் பரீட்சையும் அசாதாரணமாகவே இருக்கும் ,நாலு பேருக்கும் வினாத்தாள்பொது ஆனால் நாலு பேரும் தனித்தனி அறைகளில் அமர்ந்து எழுதவேண்டும் என்றார்.

நண்பர்களும் சந்தோஷமாக தனித்தனி அறைகளுக்கு சென்று அமர்ந்து கேள்வித்தாளை புரட்டினர்.கேள்வித்தாளில் முதல் கேள்வி ஒரு எளிய கேள்வி அதுக்கு மதிப்பெண் 5 ஆக இருந்தது. அதை எளிதாக செய்து முடித்துவிட்டனர்.அடுத்த கேள்விக்கு மதிப்பெண்கள் 95 ஆக இருந்தது.கேள்வியினை பார்த்தவர்கள் பேயறைந்தவர்கள் மாதிரி ஆனார்கள். கேள்வி என்ன என்கிறீர்களா? கேள்வி இது தான்?

எந்த ரயர் பஞ்சரானது?

Tuesday, July 12, 2005

இலங்கை வானொலிக்கு ஒரு சபாஷ்!.

தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதி வருகின்றது.
நாளிதழிலும் அப்படி ஒரு பகுதி வருகின்றது. வாசகர்களின்
கருத்துக்களை தாங்கிய கடிதங்களை அப்படியே? வெளியிடுகின்றனர்.அதில்
ஒரு கடிதம் இது.

இருக்கும் வரை இரத்ததானம்.

ஜூலை 14ம் தேதி ரத்த தான தினம். இப்போதெல்லாம் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த வகையில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ரத்தம் அவசியமாகிறது.

நம்மில் ரத்த தானம் செய்வது என்ற பழக்கம் சொல்லும்படி இல்லை. ரத்த தானம் செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் இருப்பதால் ரத்த தானம் செய்ய பலரும் தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை முதலில் மக்களிடமிருந்து போக்க வேண்டும்.

ரத்த தான தினம் வர மூன்று வாரங்களுக்கு முன்பே, இலங்கை பண்பலை வானொலியில் இது பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டனர். "ரத்த தானம் செய்ய முன் வருவோர் எங்கள் வானொலி நிலையம் வந்து அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுச் சென்று பல உயிர்கள் காக்க உதவுங்கள்...' என பெரிதாய் விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஆனால், இங்கோ வானொலியில் பாடல் மட்டுமே கேட்க முடிகிறது. ரத்த தானம் பற்றி முன்பே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வருவதில்லை. ரத்த தான தினத்தன்று மட்டும் ஏதாவது நாலு வார்த்தை சொல்வர்.

ரத்த தானத்தை ஊக்குவிக்க, வானொலி நிலையங்கள் மட்டுமல்லாமல் மற்ற தொலை தொடர்பு சாதனங்களும் முன்வரலாமே!

நன்றி-தினமலர்.

Sunday, July 10, 2005

ரொரண்டோவில் தமிழ் நண்டுகள்!!!!!!

ரொரண்டோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சில விடயங்களை நினைத்தால் எனக்கு ஒரு கதை ஞாபகத்தில் வருது பாருங்கோ.முதலில் கதை, பின்னர் விடயம் சொல்லுறன்.

ஒரு நண்டு வியாபாரி ஒரு ஊரில் இருந்தார் பாருங்கோ.சரி அந்த ஊர் ரொரண்டோ எண்டு வைச்சுக் கொள்ளுங்கோ.அவர் எல்லா நாட்டு நண்டுகளையும் வாங்கி வியாபாரம் பண்ணிறவர்.அவரிட்ட பல நாட்டு நண்டுகள் பல வித சைசில்,ரகத்தில் வரும் பாருங்கோ.அப்படி இருக்கேக்க அவரின் நண்பர் ஒருவர் அவரின் கடைக்கு வந்தார்நண்டுவாங்க. அப்படி வந்தவருக்கு நண்டு வியாபாரி ஸ்பெஷலாக தானேகூட்டிக் கொண்டு போய் நண்டுகளை காட்டினார்.

ஒரு இடத்தில் நிறைய நண்டுகள் இருந்தது அவற்றை வியாபாரி நன்றாக பூட்டிவைத்திருந்தார்.அப்போது நண்பர் கேட்டார் "இதெல்லாம் சின்ன நண்டுகளாக இருக்கு பிறகேன் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு"?
அதற்கு வியாபாரி சொன்னார் "உங்களுக்கு தெரியாது. இது எல்லாம் சீன நண்டுகள்.இவை பார்க்க சின்னனாய் தான் இருக்கும்.ஆனால் நிறைய புத்தியுள்ளவை.கூட்டமாக சேர்ந்தால் தப்பி விடும் எண்டு" .அது தான் பூட்டுகள் போட்டு பூட்டிவைத்திருக்கிறேன் என்று.

அடுத்தது அமெரிக்க,மெக்சிகோ நண்டுகள்.அதுக்கும் கடும் பாதுகாப்பு.இப்படியே கொரிய ,ஜப்பான்.,ஜமேக்கா,சிலி இப்படி பல நாட்டு நண்டுகள் எல்லாம் நன்றாக கொள்கலன்களில் பூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்தன.காரணம் கேட்ட நண்பருக்கு வியாபாரி சொன்னார் "எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் தப்பி விடும் எண்டு".

கடைசியாக இன்னொரு பகுதிக்கு வந்தார் நண்டு வியாபாரியும் அவரின் நண்பரும்.ஒரு கொள்கலனில் நிறைய நண்டுகள் இருந்தன எந்தப் பாதுகாப்பும் இல்லாமல். நண்பருக்கோ பெரிய ஆச்சரியம் . எட்டிப் பார்த்தார் நல்ல உருண்டு திரண்ட நண்டுகள். நண்டு வியாபாரிடம் கேட்டார் "என்னப்பா ஆச்சரியமா கிடக்குது.இதை விட சின்ன சின்ன நண்டுகள் எல்லாவற்றையும் கண்ணாடி கொள்கலன்களில் இட்டு நன்றாக பூட்டிவைத்திருக்கிறாய்.அனால் இந்த பெரிய நண்டுகளை கண்ணாடிப் பெட்டிகளில் சுதந்திரமாய் விட்டுவைத்திருக்கிறாய் இவை தப்பி ஓடாதோ"? என்று கேட்டார்.

அதற்கு நண்டு வியாபாரி புன்சிரிப்புடன் சொன்னார்."என்னுடைய 25 வருட கால நண்டு வியாபாரஅனுபவத்தில் சொல்றன். ஒரு காலத்திலும் இந்த நண்டுகள் தப்பி ஓடியதில்லை எப்படி எண்டால் ஒரு நண்டு தப்பி ஓட முயற்சித்தாலும் மற்ற நண்டுகள் கீழே இழுத்தி விழுத்திவிடும்".இப்படிதான் என்றார்.
அப்ப நண்பர் கேட்டார்."ஒரு நண்டு சரி.எல்லா நண்டுகளும் ஒண்டா சேர்ந்து தப்பி ஓடாதோ"? நண்டு வியாபாரி சொன்னார் "ஒண்டா சேருறதோ? ஒரு காலமும் நடக்காது..இந்த நண்டுகளின் இயல்பே இப்படிதான்.நல்ல புத்தியுள்ள நண்டுகள் இவை ,ஆனால் ஒரு காலமும் இவை ஒற்றுமைப்படமாட்டாதவை,ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க கூடியவை, பொறாமை நிறைந்த நண்டுகள்"எண்டு வியாபாரி சொன்னார்.
நண்பருக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை எல்லாம் சரி இவை எந்த நாட்டு நண்டுகள் எண்டு கேட்டார்.

நண்டு வியாபாரி பெருமையுடன் சொன்னார் இவை எல்லாம் இலங்கையிலிருந்து வரும் தமிழ் நண்டுகள் எண்டு.

நண்பர் சொன்னார் இப்படி பட்ட நண்டுகள்தான் எனக்கு வேண்டும் ஏனெனில் இப்படி பட்ட நண்டுகள் தான்அசையாது இருந்து நல்லா உண்டு கொழுத்திருக்கும். எனக்கு அவைதான் வேணும் என்றார் நண்பர்.

இது கதை.
இதை படித்தவர்களுக்கு இதனுடன் தொடர்புடைய பல சம்பவங்கள் ஞாபகம் வரும்.எதற்கும்அடுத்த பந்திக்கு வாங்கோ.

இதை ஏன் சொன்னேன் என்றால் ரொரண்டோ நடப்புக்கள் அப்படி இருக்கின்றன.தமிழ் குரோசரி(மளிகை)கடைகளுக்கு இடையே நடக்கும் வியாபர போரினை நினைத்தால் நண்டு கதைதான் ஞாபகம் வருகிறது.சில மாதங்களுக்கு முன்னர் "வடமெரிக்காவில் பெரிய கடை"என்ற கோசத்துடன் பெரிய விசாலமான இடப்பரப்புடன் ஒரு கடை தொடங்கினார்கள்.தொடங்கினார்களா அன்று முதல் மலிவு விலையில் பல பொருட்கள் கிடைக்குமென்று அறிவிப்புக்கள்.சரி புதுக்கடை ஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும் என்றால் இதற்கு முதல் பெரிய கடையாக இருந்த இன்னுமொரு நிறுவனம் சிலிர்த்தெழுந்து மலிவு விலையில் பொருட்களை வழங்கத் தொடங்கினார்கள். என்ன விசியம் என்று உள்ளால் விசாரிச்சால் புதிய நிறுவன முதலாளி பழைய நிறுவனத்தின் முன்னாள் முக்கிய ஊழியராம்.அதுதான் அந்த நிறுவனத்தைஅப்படி சிலிர்தெழவைத்து போட்டுதாம்.

பழைய நிறுவனம் புதிய நிறுவனத்தினை சந்தையில் இருந்து அகற்றும் நோக்குடன் மிக மலிவு விலையில் பல் பொருட்களை தர தொடங்கஇரண்டு நிறுவனத்துக்கும் போட்டியில் பல விற்பனைப் பொருட்கள் 99 சதத்திற்கு விற்கத்தொடங்கி விட்டார்கள். மலிவு விலையில் பொருட்கள் கிடைக்குது எண்டால் யார் தான் சந்தோஷப்படமாட்டார்கள் ,மக்களுக்கு சந்தோஷம் தான். இதைப் பார்த்து மக்கள் பலர் மேற்படி நிறுவனங்களுக்கு வந்து குவிய தொடங்க, மற்றைய நிறுவனங்களும் விழித்தெழுந்து தாமும் தம் பங்குக்கு மலிவிலை விற்காவிட்டால் தமது வாடிக்கையாளர்கள் கட்சி மாறிவிடும் அபாயம் உள்ளதை உணர்ந்து, தாமும் "மலிவு விலை" போட்டியில்குதிக்க வாடிக்கையளர்கள் பாடுதான் கொண்டாட்டத்தில் உள்ளது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல.இரண்டு வணிக நிறுவனங்களுக்கிடையன போட்டி மாறி இன்று ரொரன்ரோவில் பல பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும்இடையே போட்டி என்ற அளவில் வந்துவிட்டது.இன்றைய நிலையில் பல பெரிய நிறுவனங்கள் கொள்முதல் விலைக்கே சில பொருட்களை விற்பதுடன் பலபொருட்களை முன்பு விற்ற விலையில் பாதி விலைக்கே விற்கின்றனர்.இதில் என்ன வருத்தம் என்றால் பல சிறிய வணிக நிறுவனங்கள்விழிபிதுங்கி நிற்பதுதான். பலர் தமது வணிக நிறுவனங்களை மூடும் நிலைக்கு வந்துவிட்டதையும் காணமுடிகிறது.மொத்தத்தில் பல சிறு வியாபாரிகள் "திவாலாகப்" போகின்றனர்.

இதில் எனது கேள்வி என்றால் வர்த்தகத்தில் போட்டி இருக்கத்தான் வேண்டும்.அப்போது தான் நுகர்வோருக்குதரமான, மலிவான பொருட்கள் கிடைக்கும்.ஆனால் பொறாமை இருக்கவே கூடாது.இங்கு போட்டி மறைந்து இப்போது பொறமைதான் நிகழ்கிறது. இப்போது மக்கள் பேசிக்கொள்கின்றனர் "அப்போ முன்பு எங்களிடம்கொள்ளை லாபம் தானே அடிச்சிருக்கினம்" இது மக்களின் எண்ணம்.

நான் சிந்திப்பது என்னவென்றால் நாளை சிறிய நிறுவனங்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்ட நிலையில்இந்த பெரிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இப்போது தாம் "விடுவதை" பின்பு "பிடிக்க" நினைத்து பொருட்களின்விலைகளை உயர்த்தினால் யாரால் என்ன செய்யமுடியும். மொத்தத்தில் யார் யார் தமது தலையில் மண்அள்ளிப் போட்டிருக்கின்றனர் என்பதை சில காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.அதுவரையில் நுகர்வோர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் மலிவு விலை பொருட்களுக்காக.

சரி.மேலே சொன்ன நண்டுக்கதை இப்போ ஞாபகத்தில் வந்து தொலைக்கிறதோ?