Friday, August 05, 2005

சனி,ஞாயிறு வந்தால் முகத்தில் சிரிப்பு


ந்த வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை இங்கு கனடாவில் விடுமுறை பாருங்கோ .சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று தினங்கள் விடுமுறை.அதை இங்கு லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்.ஏப்பிரல் மாதத்தின் பின்னர் 4,5 மாதங்களிற்கு இந்த லாங்வீக்கெண்ட் வரும்.திங்கட்கிழமை எண்டு இல்லை.வெள்ளிக்கிழமையும் வரும்.ஆனால் பொதுவாக வார இறுதிநாட்களை ஒட்டியே வரும்.கனடாவில் விடுமுறை நாட்களை எண்ணினால் இரண்டு கைகளில் எண்ணலாம்.அப்படி மிகவும் குறைவு. இதனால் எல்லோரும் இப்படியான விடுமுறை தினங்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்திருப்பார்கள்.ஜந்து நாள் வேலை இரண்டு நாள் ஓய்வு இது சரிதான்.அனால் இங்கு 7 தினங்களும் கடுமையாக உழைபவர்களும் இருக்கின்றனர்.இப்படிஉழைப்பவர்கள் பொதுவாக கனடாவிற்கு வந்தேறுகுடிகளாக வந்தவர்களாக இருப்பதை காணலாம்.

எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் புதன் கிழமை எண்டால் சொல்லுவான் அப்பாடா புதன் கிழமை வந்திட்டுது.ஒருமாதிரி இந்த வாரமும் போய்விடும் எண்டு.இனி திங்கட்கிழமை இழுத்து பறித்துக் கொண்டு அலுவலகம் வந்துவிடுவான்.பின்பு புதன்கிழமை வர அதுமாதிரி சொல்லிக் சொல்லிக் கொண்டு ,இப்படியே சொல்லி சொல்லியே 14 வருடங்களாக கனடாவில் இருக்கிறான்.இப்படி பலர் இருக்கின்றனர். சரி நீங்கல் எப்படி எண்டு யாரோ கேக்கிறமாதிரி காதில் விழுது.சும்மா என்னைப்பற்றி எல்லாம் சொல்ல கூடாது.சரி பரவாயில்லசொல்லுறன்.நான் போனவாரமே திங் பண்ணீட்டன் திங்கட்கிழமை விடுமுறை.இந்தவாரம் 04 நாள்தான் வேலை அதனால் இந்த வாரம் ஒரு சோர்ட் வாரம் எண்டு. இது என்னைபோல சிலரின் கவலை

இப்படி சிலருக்கு அலுவலகம் வருவது பிரச்சனை எண்டால் இன்னும் சிலருக்கு சனி,ஞாயிறுகளில் அலுவலகம் இல்லை என்பது கவலை.என்ன கடும் உழைப்பாளியோ எண்டு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கவேற. கடுமையா "அவவுடன்" கடலை போடுற பலருக்கு இழப்புதானே பின்ன.இது இளந்தாரி
மாரின் கவலை.

இதிலே இன்னொரு வகையான ஆக்கள் இருக்கினம் பாருங்கோ.அவைக்கு அலுவலக கணினிக்கு முன்னால் இருந்தால் தான் கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுமாம்.வலைப்பதிவு,பின்னூட்டம் எல்லாம் அலுவலக கணினியில்தானாம்.வீட்டில்கணினி பார்க்க நேரமே இல்லையாம்.அப்படி இருந்தாலும் கற்பனை வராதாம்.இப்படியான் ஆட்களை வேலைக்கு வச்சிருக்கிற முதலாளிமார் இப்படி லீவுகள் வாறபடியால் தான் ஒருமாதிரி தப்பி பிழைக்கினம் பாருங்கோ.
ஆரது அந்தநாலெழுத்து வலைபதிவாளரின் பெயரெல்லாம் சொல்லுறது

கனடாவந்த பிறகுதான் லீவின்ற அருமைதெரியுது.இலங்கையில இருகேக்க வருசத்திலே பாதி நாள்தான் வேலை பாருங்கோ.மீதி நாள் என்ன ஆச்சு எண்டு கேக்கிறியளோ?அது எல்லாம் லீவுகள் பாருங்கோ.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாள் பெளர்ணமி விடுமுறை வரும் பாருங்கோ.சிங்களத்திலை போயா எண்டு சொல்லுவினம். இலங்கையிலே இருக்கேக்க நித்திரையில எழுப்பி கேட்டாலும் எந்தமாதத்தில் என்ன தினத்தில் பெளர்ணமி விடுமுறை
வரும் எண்டு கலண்டரை பாக்காமலே சொல்லுவனாக்கும்.

அதைவிட இந்து,முஸ்லிம்,பெளத்த விடுமுறை எண்டு சொல்லி பல விடுமுறைகள்.இதனால் உலகத்திலே ஆகக்கூடிய விடுமுறைகள் கொண்ட நாடு எண்டு சொன்னால் அது இலங்கை தான் பாருங்கோ.கிட்டடியிலேபாராளுமன்றத்திலே விவாதம் கொண்டுவந்தவை இப்படி விடுமுறையளை குறைக்கிறது சம்பந்தமாக ஒரு விவாதம்.
அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லிப்போட்டினம் லீவுகளை குறைக்கவேண்டாம் எண்டு.அவைக்கு தெரியும் தானே வேலைக்கு வாறதும் ஒண்டுதான் வீட்டில் இருக்கிறதும் ஒண்டு தான் எண்டு.ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் தானே.


இஞ்ச இந்த படத்தை ஒருக்கா பாருங்கோ.சரியாக சனி,ஞாயிற்றுக்கிழமை
கிழ்மைகளில் தான் முகத்தில் சிரிப்பே வருகுது.
இதில் எனதும் உங்களினதும்?? மனச்சாட்சி தெரிகிறதோ?
ஆராருக்கு தொப்பி(முகமூடி) அளவா இருக்கோ அவரவர் போட்டுக்கொள்ளுங்கோ.நான் மேல சொன்ன மாதிரி..முகமுடி அண்ணாச்சி தப்பா எடுக்காதீங்கோ. உங்களை ஒண்டும் சொல்லேல்ல அண்ணாச்சி.

முதலாவது படத்திலை பாத்திங்களோ.
அய்யாமருக்கும் தம்பிமாருக்கும் இடையே
நடக்கிற போட்டியை .என்ன யோசிக்கிறியளோ?
எனக்கென்னவோ இதுவும் சரியாகவே படம் போட்டிருப்பதாக தோன்றுகின்றது.நீங்கள் என்ன சொல்றிங்கள்?

Thursday, August 04, 2005

உண்மையில் எது பிரச்சனை?

ங்கிலாந்தின் ஜ.ஆர்.ஏ அமைப்பானது தனது ஆயுதப்போராட்டத்தினை
கைவிட்ட நிலையில் அதே போலவே இலங்கையிலும் புலிகள் ஆயுதக்களைவினை செய்யவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், ஆயுதங்களை புலிகள் கைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் புலிகள் மீது போதுமானதாக இல்லை என இலங்கையின் நலன் விரும்பியும் இலங்கைக்கு இலவச ஆலோசனை கூறிவரும் "இந்து" பத்திரிகை கவலைப்பட்டு கண்ணீர்விட்டுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையின் இன்றைய ஆசிரிய தலையங்கம் மேற்படி விடையங்கள் தொடர்பாக அலசி நல்லதொரு
பதிலை விடையாக தந்துள்ளது.அதை இங்கு தருகிறேன்.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஆனால் எருமை மாட்டுக்கு?

தினக்குரல் பத்திரிகையின் தலையங்கம்:-

இலங்கையில் சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் போர்நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்துவிடக் கூடாது என்றும் அக்கறை காட்டும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்ற அளவுக்கு விடுதலை புலிகளுடனான விவகாரங்களில் கடும் போக்கைக் கடைப்பிடிக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கிறது என்ற அபிப்பிராயமொன்று தென்னிலங்கையில் வலுவடைகிறது. பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகிக் கொண்டு போவது குறித்து விசனம் தெரிவித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 டோக்கியோ மகாநாட்டுக் கூட்டுத் தலைமை (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே) கடந்த மாத நடுப்பகுதியில் விடுத்திருந்த அறிக்கை அரசாங்கத்தையும் விடுதலை புலிகளையும் சமத்துவமாக நோக்குவதாகக் கூட அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

கொலைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை புலிகள் இயக்கம் அதன் போராளிகளினால் மேற்கொள்ளப்படும் சகல கொலைகளையும் நிறுத்த வேண்டும். போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இணங்க இலங்கை அரசாங்கம் சகல பரா இராணுவக் குழுக்களும் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, வன்செயல்களுக்கு வழிவகுக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுத பாணிகளான விடுதலை புலிகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூட்டுத் தலைமையின் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம் கூறுவது போன்று, போர்நிறுத்த உடன்படிக்கைக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் சம்பவங்களுக்கு விடுதலை புலிகள் மாத்திரம் காரணமல்ல, அரசாங்கமும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச சமூகம் கருதுவதன் பிரதிபலிப்பாகவே அந்த அறிக்கையை நோக்க வேண்டியிருந்தது. அதையடுத்து தன்னைச் சந்தித்த கூட்டுத் தலைமை நாடுகளின் இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க, போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் விடுதலை புலிகளுடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதாக அறிவித்தார். தற்போதைய நிலைவரங்களுக்கு வழிவகுத்த சம்பவங்களில் அரசாங்கத்துக்கு குறிப்பாக, பாதுகாப்பு படைகளுக்கு இருக்கின்ற தொடர்புகளை மறைக்கும் அல்லது மறுதலிக்கும் நோக்குடனேயே திருமதி குமாரதுங்க இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

இதற்குப் பிறகு இரு வாரங்கள் கடந்த நிலையில், போர்நிறுத்த உடன்படிக்கை எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களில் ஒருவித தணிவை ஏற்படுத்தக் கூடியதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முயற்சிகள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், போர்நிறுத்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் எந்தளவுக்கு பயனுறுதியுடைய ஊடாட்டத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கூறக் கூடியதாக இல்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே, விடுதலைப் புலிகள் மீது நெருக்குதல்களைக் கொடுக்காமல் நெகிழ்வுத் தன்மையுடன் சர்வதேச சமூகம் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படும் கருத்துகளை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஐரிஷ் குடியரசு இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) அறிவித்ததையடுத்து இலங்கையில் விடுதலை புலிகளும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியின் சுயசரிதம் நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பை வெகுவாகப் பாராட்டிய வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், இலங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதமை குறித்து கவலை தெரிவித்திருத்தார். `தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மற்றும் எமது விவகாரத்தில் பங்கொன்றை ஆற்றும் சர்வதேச சமூகம் உட்பட இலங்கை நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆயுதங்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைப்பது அல்லது ஆயுதக் களைவு தொடர்பில் குறிப்பிடுவதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்றே ஐ.ஆர்.ஏ.யின் அறிவிப்பு குறித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆசிரிய தலையங்கம் தீட்டிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான சென்னை `இந்து' வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று விடுதலை புலிகள் மீது போதுமான சர்வதேச நெருக்குதல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு முழுமையான ஒரு சிவில் அமைப்பாக மாறும்வரை இலங்கை நெருக்கடிக்கு இறுதித் தீர்வைக் காண முடியாது என்று கதிர்காமர் கூறிய அதேதொனியில்
`இந்து'வும் விடுதலைப் புலிகள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை, நிலையான சமாதானத்தைக் காண்பதற்கான இலங்கையின் பிரயத்தனங்கள் பயனளிக்காத நிலையே நீடிக்கும் என்று அந்த ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்திருக்கிறது. சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் மீது போதிய நெருக்குதலைக் கொடுக்கவில்லை என்பதே இந்துவின் விசனம்.


உண்மையில், விடுதலைப் புலிகள் மீது சர்வதேச சமூகம் போதியளவு நெருக்குதல்களைப் பிரயோகிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அதன் விளைவாக அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கின் கணிசமான பிரதேசங்கள் வந்ததையும் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கும் நோக்குடனானதே. ஆனால், அவர்களின் இராணுவக் கட்டமைப்பு அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாகத் தீர்க்கப்படாத ஒரு அரசியல் நெருக்கடியின் தவிர்க்கமுடியாத உருவாக்கம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இலங்கை இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்திய விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டமல்ல உண்மையான பிரச்சினை, அந்தப் போராட்டத்துக்கான நிர்ப்பந்தத்தை தோற்றுவித்த கொழும்பு அரசாங்கங்களின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையே யாகும்.

Wednesday, August 03, 2005

ரொரண்டோவில் பாரிய விமான விபத்து.

இன்று மாலை 4.30 மணிக்கு
279 பயணிகளுடன் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச வானூர்தித் தளத்தில் தரையிறங்க முற்பட்ட ஏயர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயர் பஸ் 340 ரக வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது வானூர்தியில் பெரியளவில் தீப்பிடித்தபோதும் பயணிகள் எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியத்தில் இருந்து கடும் காற்றும் இடிமுழக்கத்துடன் கூடிய மழையும் பெய்து கொண்டிருந்தது ரொரண்டோவில். அப்படி இருந்த நிலையில் தரையிறங்கமுற்பட்ட இந்த விமானம் இடிமின்னல் காரணமாக
விபத்துக்கு உள்ளாகியது.

401 அதிவிரைவு நெடுஞ்சாலை வழியே சென்றவர்கள் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை காணமுடிந்ததாக கூறினார்கள்.
நல்லவேளையாக விமானப்பயணிகளுக்கோ அல்லது நெடுஞ்சாலை வழியே
சென்றவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.விமானப்பயணிகளுக்கு காயம்
மட்டும்தான்.

விமான நிலையம் இவ் நெடுஞ்சாலைக்கு அண்மையிலேயே இருப்பது
குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு:-

www.ctv.ca

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1937&Itemid=43