Wednesday, August 24, 2005

கதிர்காமர் கொலையின் பின்னரான நிலைவரங்கள்

கதிர்காமர் கொலையின் பின்னரான அரசியல் கள நிலைவரங்கள்
ஸ்ரீலங்காவின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டு மரணச் சடங்கும் ஒருவாறு முடிந்து விட்டது. தமிழ் கிறிஸ்தவ அடையாளத்துடன் பிறந்து, ஆங்கிலக் கிறிஸ்தவ அடையாளத்துடன் வளர்ந்து, சிங்கள பௌத்த அடையாளத்துடன் அவர் மறைந்திருக்கின்றார். சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்திருந்த சிங்கள தேசத்தின் கௌரவத்தை மீட்டெடுத்து நிலைநாட்டியவர் என்ற வகையில் சிங்கள தேசம் அதற்கான நன்றிக் கடனை மரணச் சடங்கினை சிங்கள தேசச் சடங்காக கொண்டாடியதன் மூலம் நிறைவாகவே செய்து முடித்திருக்கின்றது.

அத்துடன், சிங்கள தேசத்தினால் ஒரு தமிழர் கௌரவிக்கப்பட வேண்டுமாயின் அவர் ஒரு சிங்கள பௌத்தராக மாறுதல் வேண்டும் என்ற செய்தியையும் அடையாளம் காட்டியிருக்கின்றது.

இவற்றினை விட இவரது மரணம் சிங்கள தேசத்திற்கு `பிண அரசியல்' ஒன்றினை நடாத்தும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. வாய்ப்புகள் பறிக்கப்பட்டவர்கள் மீண்டும் களத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். பொதுக்கட்டமைப்பின் பிறப்புடன் நிர்ப்பந்தமாக விலக்கப்பட்ட பேரினவாத நிகழ்ச்சி நிரல் மீண்டும் மைய அரசியலில் மேலாதிக்கத்தை பெற்றிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பேரினவாதத்துடன் கூட்டுச் சேர்வதற்கு விரும்பியும் தடைகளைக் கண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தடைகளை எதிர்ப்பின்றித் தாண்டும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கின்றது.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து நிர்ப்பந்தம் காரணமாக வெளியே வந்த ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் பேரினவாதத்தின் கைதியாக நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்திருக்கின்றார்.

மரணம் நிகழ்ந்த ஆரம்பத்தில் பிரதமரோ, ஜனாதிபதியோ பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லத் துணியவில்லை. யுத்த நிறுத்தம் குழம்பிவிடுமோ என்ற அச்சம் தான் அதற்குக் காரணம். ஜனாதிபதி வெளியிட்ட முதலாவது அறிக்கையில் புலிகளின் பெயரைக் கூறாமல்தான் கொலைக்கான கண்டனத்தை தெரிவித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட பொலிஸாரின் அறிக்கை புலிகளைக் குற்றம் சாட்டுவதாக மட்டும் கூறியிருந்தார்.

ஜே.வி.பி. மரணச் சடங்கு நிகழ்ச்சிக்குள் நுழைந்த பின்னர் தான் எல்லாமே தலை கீழாக மாறின. ஜே.வி.பி. இம்மரணத்தை புலிகளுக்கு எதிரான அரசியலுக்கு பயன்படுத்த முன் வந்தது. அதற்கான நிகழ்ச்சி நிரலும் போடப்பட்டது. அடுத்தடுத்து நான்கு காரியங்கள் அரங்கேற்றப்பட்டன. முதல் கட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் இணைத்த மாநாடு கூட்டப்பட்டது.
அம்மாநாட்டில் புலிகளே இக்கொலையைச் செய்தார்கள் என பகிரங்கப்படுத்தும்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். சர்வதேச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இக்கொலையினைப் பார்க்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. அதேவேளை, புலிகளைப் பெயர் குறித்து கண்டிக்காதது தொடர்பாக ஜனாதிபதி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக ஜனாதிபதி இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

இதன் பின்னர் தான் ஜனாதிபதி உண்மை நிலையினை தரிசிக்கத் தொடங்கினார். சிங்கள தேசத்திடம் இருந்து தன்னை அந்நியப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்று அரங்கேறுவதை அடையாளம் கண்டார். இதிலிருந்து தப்புவது என்றால் தானும் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டு, பொதுக் கட்டமைப்பு நிர்ப்பந்தம் காரணமாக தான் கழற்றி எறிந்த பேரினவாத கவசத்தை மீண்டும் எடுத்து போர்த்துக் கொண்டார். இந்தப் போர்ப்புடன் இரண்டாவது கட்டம் அரங்கேறத் தொடங்கியது.

இரண்டாவது கட்டத்தில் ஜனாதிபதி நாட்டுமக்களுக்காக தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். புலிகளை எவ்வளவு தூரம் வெழுத்து வாங்க முடியுமோ அவ்வளவிற்கு வெழுத்து வாங்கினார். புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என உறுதிபடக் கூறினார். அதன் மூலம் பேரினவாத அரசியலை நடாத்த ஜே.வி.பி.க்கு மட்டும் தெரியும் என நினைக்கக்கூடாது. தனக்கு அவர்களை விட நிறையத் தெரியும் என்பதை ஜே.வி.பி. யின் காதுகளில் உறைக்கக் கூறினார். அவரது செயற்பாடு எனக்கு பிரேமதாஸா காலத்தை நினைவுபடுத்தியது. அக்காலத்தில் ஜே.வி.பி.யினை விட இந்திய எதிர்ப்பினை உரக்கக் கூறி ஜே.வி.பி. யை திக்குமுக்காடச் செய்தார் பிரேமதாஸா. இந்த புலி எதிர்ப்பு உரைக்கு மத்தியிலும் மறைமுகமாக ஜே.வி.பி.யினைத் தாக்குவதையும் ஜனாதிபதி கைவிடவில்லை.

மூன்றாவது கட்டம், மரணச் சடங்கில் அரங்கேற்றப்பட்டது. அங்கு வழமையான மரபிற்கு மாறாக, அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் உரையாற்றினார். கொலைக்கு புலிகளை குற்றம் சாட்டியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு தங்களோடு கைகோர்த்து வரும்படி சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டார். அவ்வுரை ஜே.வி.பி. எழுதிக் கொடுக்க பிரதமர் வாசிப்பது போல இருந்தது. உரைமுழுவதும் ஜே.வி.பி.யின் நாற்றம் அடித்தது. இவ்வளவு காலமும் பிரதமர் பேரினவாதத்தின் பக்கம் இருந்தாலும் வெளித்தோற்றத்தில் ஒரு நடுநிலையானவராகவே காட்சியளித்தார். இந்த உரையோடு அவரது வெளித்தோற்றம் கழன்றுவிட உண்மைத் தோற்றம் வெளியில் வர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் ஜே.வி.பி. தம்பிமார் தம்மோடு நிற்கின்றனர் என்ற குஷிதான் காரணம். கதிர்காமரின் கொலை தனக்கு அதிர்ஷ்டத்தை தந்ததாக நினைத்து புளகாங்கிதமடைந்து காற்றில் பறந்தார். பிரதமர் பதவிக்காக கதிர்காமர் வில்லனாக நின்றதையும், ஜே.வி.பி. தம்பிமார் அவருக்கு பக்கபலமாக நின்றதையும், அவர்களை வெல்வதற்கு பௌத்த பரிவாரங்களை தான் திரட்ட நேர்ந்ததையும் ஒரு கணம் மறந்தார்.

நான்காவது கட்டத்தில், மரண நிகழ்விற்கு வந்த வெளிநாட்டுப் பிரமுகர்கள், மரணச் சடங்கிற்கு வராமல் தூதுவராலயங்களில் முடங்கிக் கிடந்த இராஜதந்திரிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பயங்கரவாதம் பற்றிய பெரிய வகுப்பொன்று எடுக்கப்பட்டது. கௌசல்யன் படுகொலை, சிவராம் படுகொலையெல்லாம் பயங்கரவாதமல்ல என விளக்கப்பட்டு கதிர்காமரின் கொலையே மாபெரும் பயங்கரவாதம் என எடுத்துரைக்கப்பட்டது. இராஜதந்திரிகள் எல்லாம் தங்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இவ்வாறு நான்கு வகையான அரங்கேற்றங்கள் எல்லாம் சர்வதேச சக்திகளுக்காக செய்தும் அவை ஒன்றும் அவர்களின் காதில் விழவில்லை. அமெரிக்க ஜனாதிபதி புஷ் தொடக்கம் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் வரை கூறிய வார்த்தை ஒன்றே ஒன்றுதான்.

"கதிர்காமரின் கொலையைப் படிப்பினையாகக் கொண்டு யுத்த நிறுத்தத்தை வலுப்படுத்துங்கள். சமாதானத்தை முன்னெடுங்கள்"

அவர்களைப் பொறுத்தவரை கதிர்காமரின் கொலையை ஒரு தனி நிகழ்வாகப் பார்க்கவில்லை. மாறாக, தொடர் நிகழ்வின் விளைவாகத்தான் பார்த்தனர். அண்மைக் காலமாக அரங்கேறும் தொடர் நிகழ்வு தொடர்ந்தால் இவ்வாறான விளைவுகள் தான் ஏற்படும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது. எனவே, விளைவுக்கு வைத்தியம் செய்வதனை விடுத்து, தொடர் நிகழ்வுக்கு வைத்தியம் செய்வதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர்.

அந்தத் தொடர் நிகழ்வு என்பது இரு தரப்பினரிடையேயும் நடந்து கொண்டிருக்கும் நிழல் யுத்தம் தான். நிழல் யுத்தங்கள் தொடர்ந்தால் சாதாரணமான மனிதர்கள் மட்டுமல்ல மகா மனிதர்களும் மரணமடையக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்பது நிழல் யுத்தத்தின் விதி. இதனால் தான் சிவராம் மட்டுமல்ல, கதிர்காமரும் மரணமடைந்தார். இந்த விதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதிக்கும் தெரியாவிட்டாலும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகவே தெரிந்தது.

இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தியா தொடர்ச்சியான புலிக்காய்ச்சலில் இருக்கின்றது. அந்த புலிக்காய்ச்சல் தணியுமட்டும் சர்வதேச விழுமியச் செயற்பாட்டிற்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியர்கள் போரை இந்தியா வரை விஸ்தரித்தவர்கள். அதனால் ராஜிவ்காந்தியைப் பறிகொடுத்தவர்கள். எனவே, பீடித்த புலிக்காய்ச்சல் விரைவில் விட்டுப் போகும் எனக் கூறிவிட முடியாது. இந்தப் புலிக்காய்ச்சல் விடும்வரை பேரினவாதத்துடனான அவர்களது கைகோர்ப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த நிழல் யுத்தம் என்பது தமிழ்த்தேசம் தொடங்கிய யுத்தமல்ல - தமிழ்த்தேசம் மீது சிங்கள அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட யுத்தம். இதுவும் சர்வதேச சக்திகளுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சக்திகளின் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு இதுவரை காலமும் தமிழ்த்தேசம் ஒத்துழைத்து வந்ததே தவிர, சிங்கள தேசம் ஒத்துழைக்கவில்லை என்பதும் சர்வதேச சக்திகளுக்கு அனுபவ ரீதியாகத் தெரியும். அதுவும் ஒரு உச்ச நிலை அனுபவத்தை பொதுக் கட்டமைப்பு விவகாரம் அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தது. எனவே, தங்களோடு ஒத்துழைக்கின்ற தமிழ்த் தேசத்தோடும் அதன் பிரதி நிதிகளோடும் ஒரு மோதல் நிலையினைப் பின்பற்ற சர்வதேச சக்திகள் விரும்பவில்லை. கதிர்காமர் கொலை தொடர்பாக ஒரு வேறுபட்ட அணுகுமுறைக்கு இவையே காரணம்.

இப்போது மீண்டும் எழுகின்ற கேள்வி கொலையை யார் செய்தார்கள்?

அண்மைக்காலமாக கதிர்காமர் பல்வேறு தரப்பட்டவர்களினாலும் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

சர்வதேச சக்திகள் நகர்த்த இருக்கும் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு பெருந்தடையாக இருக்கின்றார் என்பதற்காக அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

ஐ.தே.க.வின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு சவாலாக இருக்கின்றார் என்பதனால் அக்கட்சியினால் விரும்பப்பட்ட ஒருவராக இருக்கவில்லை.

தான் நகர்த்த இருக்கின்ற பொதுக் கட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்றமையால் ஜனாதிபதியால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

கதிர்காமரின் கதிரையில் தொடர்ச்சியாக கண் வைத்திருப்பதனால் ஜயந்த தனபாலவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

பதவி நிலையில் தான் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற போதும், தன்னுடன் போட்டி போடக் கூடிய கவர்ச்சி நிலையில் இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷவினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளுக்கு எதிரானவராக இரு
ந்ததனால் புலிகளினால் விரும்பப்பட்டவராக இருக்கவில்லை.

அவரை விரும்பியது ஜே.வி.பி. யினரும் இந்தியாவும் தான்.

இவ்வாறு பலரால் விரும்பப்படாத ஒருவராக இருக்கும் போது கொலைக்கு ஒரு தரப்புத்தான் காரணம் என எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?

உயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் கூட்டு முயற்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கும். அப்படியானால் இதில் புலிகளின் பங்கு பற்றிய ஊகம் 1/5 ஆக மட்டுமே இருக்க முடியும். சிலவேளை விஷேட பங்கு புலிகளுக்கு இருந்திருக்கக் கூடும் என தர்க்கிக்கலாம்.

புலிகள் தான் இதில் விஷேட பாத்திரத்தை ஆற்றியிருப்பார்களானால், அவர்கள் மூன்று தெளிவான செய்திகளை சிங்கள தேசத்திற்கு கூறியிருக்கின்றார்கள்.

முதலாவது, கிழக்கினை உங்களால் குழப்ப முடியுமாயின் தெற்கினை எம்மால் குழப்ப முடியும்.

இரண்டாவது, நாங்கள் எப்போதும் போருக்குத் தயார்.

மூன்றாவது, எமது தலைவர்களை கொலை செய்துவிட்டு உங்களது தலைவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

உண்மையில் நிழல் யுத்தத்தின் வளர்ச்சியான தர்க்கமும் இதுவாகத் தான் இருக்கும்.

தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்து விட்டது என மஹிந்த ராஜபக்ஷ காற்றில் பறக்கலாம்.
பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிய ஸ்ரீலங்காவின் மைய அரசியலை பேரினவாத நிகழ்ச்சி நிரலிற்குள் கொண்டு வந்து விட்டோம் என ஜே.வி.பி. யினர் எக்காளம் போட்டு சிரிக்கலாம்.
ஆனால், யதார்த்த நிலையில் சிங்கள தேசம் தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவிக் கொண்டிருக்கின்றது.

இதுதான் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்!

பிற தேசங்களை ஒடுக்கும் எந்தத் தேசமும் தோல்விகளைத் தழுவும் என்பதே இயக்க விதி! சிங்கள தேசம் மட்டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்.

நன்றி:- தினக்குரல்,கொழும்பு