Friday, September 09, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 2

ப்படி எல்லாம் நான் இங்கு எழுதுவது யாரையும் கிண்டலடிக்கவோ நோகடிக்கவோ அல்ல.ஒரு கோபம் அவ்வளவுதான்.ஒரு சமூகம்
உயிருக்கு அல்லாடிக்கொண்டு இருக்கிறது.வாழ்வுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.அடையாளம் யாவும் அகற்றப்பட்டிடுமோ என்று கதறிக்கொண்டிருக்கிறது.வானில் எங்கும் வல்லூறுகள் வட்டமிடுகின்றன.அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் தமது பென்னாம் பெரிய சிறகை விரித்துப் பறப்பு செய்கின்றன.சிங்கள தேசம் என்னும் பருந்தும் கூடவே பறந்து கொத்துகின்றது.கோழிக்குஞ்சுகள் நாம் காக்கப்படவேண்டும்.வளரவேண்டும்.வாழவேண்டும்.சமாதானம் பற்றி,
அமைதி பற்றி,மனிதஉரிமை பற்றி பேசிப்பேசியே இந்த வல்லூறுகள்
நம்மை சாவுக்கு இரையாக்கிவிடும்.எம்மவரும் ஏதும் அறியாது அல்லது ஏதும் அறியாதுபோல் நடித்து தமது சொந்தக் "காய்ச்சலை" தீர்த்துக்கொள்ள பேனாவை தூக்கிவிடுவர்.

பாரதியாரின் இருவரிகளைஇப்பொழுது நான் இவர்களுக்கு
சமர்ப்பிக்கின்றேன்.

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"

கவிதைகள் சில எம் போரின் தேவையை இழித்துப் பாடி விட்டன.
அவைபற்றி சொல்லப்புகின்,அதிக ஒற்றைகளையும் அதிக நேரத்தினையும் நான் தேடவேண்டிவரும்.அப்படி தேடினாலும் இந்த எழுத்துக்களை அச்சுக்கோர்க்க என்னிடம் எழுதக்கேட்டோர் பஞ்சிப்படுவார்களோ என நினைத்து விடுகிறேன்.கவிதைகளை நாம் தவிர்த்தாலும் உரைநடையில்
கூட நமது போருக்கு எதிரான முக்கியமான பதிவுகளை நாம் காண்கிறோம்.முன்னர் ஒரு காலத்தைய "போராளி" என்று அறியப்பட்ட சி.புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும்(கிட்டத்தட்ட சுயசரிதைக்)குறிப்பு நூலும் ஷோபாசக்தி எழுதிய சில சிறுகதைகளும்,கொரில்லா, ம் என்கின்ற நாவல்களும் இந்த வகையில் சொல்லவேண்டியன. இனி வருவனவற்றினை வாசிக்க முன்னர்
முதலாம் பதிவில் முதலாம் பந்தியினை மீளவாசிக்கக் கடவீர்.

அவ்வாறு வாசித்து முடித்த பின்னால் ஒரு உண்மையை இப்போது ஒப்புக்கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நூல்களும் வேறு சில கவிதைகளும் தங்கள் காய்ச்சலை வெளிப்படுத்த எழுதப்பட்டவைதாம்.அப்படி எழுதுகிறபோது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மானுட
விடுதலைக்கு எதிரான பாடலையே பாடிவிடுகின்றன.அவர்கள் நோக்கமும் அதுதான் என தெள்ளென தெளிவாகின்றது.கோவிந்தன் "புதியதோர் உலகம்"எழுதுகின்றபோது,அது எதிரிக்குசாதகமாக அமைந்து விடுமோஎன் அஞ்சி அஞ்சி எழுதிய போக்கு இத்தகையோரிடம் காணக்கிடைக்கவில்லை.இவர்கள் தம்மை முன்னர் போராளிகளாக அறிவித்துக்கொண்டவர்கள்.சிறு துரும்பாவது போருக்கு போட்டிருக்கிறார்கள்.அனால் வெளியே வந்து,போராட்டத்தினை எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் அதன் உயர் நோக்கம் கருதி இருகரம் நீட்டி வரவேற்கலாம்.இது காய்சலாகவே அமைந்து விடுகின்றது.மேற்குறித்த நூல்கள் பற்றிய விமர்சனத்தை நான் இப்போது முன்வைக்கப்போவதில்லை.இவற்றை கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றும் கருதுகிறேன்.கவனத்தில் எடுக்கவேண்டிய தீய சக்திகள் அவற்றை கவனத்தில் எடுத்தும் விட்டன.ஆகும் வேலையை அந்த சக்திகள் பார்த்துக்கொண்டும் இருக்கின்றன.இந்நூல்கள் பற்றிய சாதகமான விமர்சனங்கள்,தட்டிக்கொடுப்புக்கள்,முன்னெடுப்புக்கள்,
அறிமுகப்படுத்தல்கள்
என்று சகலகாரியங்களையும் இந்த சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன.இவர்கள் ஈழத்தில் ஒரு போர் நிகழவதைக்
கூட கணக்கில் எடுக்காதவர்கள்.ஈழத்து தமிழ்தேசிய விடுதலைப்
போரின் நியாயம் குறித்து ஒரு வரி பேசாதவர்கள்.அவை குறித்து எழுந்த இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள்.ஈழத்தில் கவிதை இந்தவிதமாக வளர்ந்திருக்கிறதே என்பதை கவனத்தில் கொள்ளாதவர்கள்.அவர்களது அங்கீகாரத்துக்காக ஈழத்தில் நாம் ஒன்றும் "பண்ணவில்லை". ஆனாலும் அவர்கள் யார் என்பதை
அடையாளப்படுத்தவே இவற்றைச் சொன்னேன்.

ஆனால் ஈழ விடுதலைக்கு எதிராக ஏதும் படைப்புக்கள் வந்தால் இத் தீயசக்திகள் அவற்றை எடுத்து ஏந்தி,ஏற்றிவைத்து தொழுது போற்றுவர்.எப்படியோ அவர்களின் கண்ணில் அவை பட்டுவிடும்.ஈழத்து இலக்கியம் என்றால் அவர்களுக்கு தெரிபவர்கள் யார் என்று பட்டியல் போட்டாலே அவர்களது கணக்கு புரிந்துவிடும்.அந்தபட்டியல் இரண்டு வகையானதாக இருக்கும்.ஒன்று ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எழுதுபவர்கள்.இரண்டு ஈழவிடுதலைப் போர் குறித்து ஏதும் கதையாதவர்கள் தப்பித்தவறி ஈழம் என்ற சொல்கூட வராது பார்த்துக்கொள்பவர்கள்.

தொடர்ந்து வரும்............
நன்றி.அ.இரவி

சந்திரமுகி "ராரா" பாடல்:- தெலுங்கா? தமிழா?

ங்கு ரொரண்டோவில் ஒலிபரப்பாகும் தமிழோசை வானொலியினை நான் அடிக்கடி கேட்பதுண்டு.இரவு 12.00 முதல் அதிகாலை 6.00மணிவரை இந்த வானொலி நிகழ்சிகள் இடம்இடம்பெறும். நேற்றைய தினம் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் அறிவிப்பில் 12.00 மணிதொடங்கி 1.00 மணிரையிலான நிகழ்சிகள் இளமைத்துடிப்புடன் களை கட்டியிருந்தன.இரவு 1.00 மணிவரை நல்ல பாடல்கள் பலவற்றை நேயர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.நானும்
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.

நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.

Tuesday, September 06, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 1

நான் எழுதி வைத்திருந்த ஒரு கட்டுரையினைவிட பதிக்க எண்ணியிருந்த போதினிலே திரு அ.இரவி அவர்களால் எழுதப்பட்டிருந்த இக் கட்டுரை கண்ணில் பட்டது. நான் எழுதிவைத்திருந்த சில விடயங்களை விட மிக அழகாக எழுதப்பட்டிருந்த இக் கட்டுரையினை இங்கு பதிக்கலாம் என்று எண்ணி இக் கட்டுரையினை இங்கு பதிக்கிறேன்.

என்னுள் எழுந்த அதே கோபம் இக்கட்டுரையாளரிடமும் எழுந்ததன் விளைவே இந்த கட்டுரை யதார்த்தம் புரியாமல் இன்னும் 1987 க்கு முற்பட்ட காலங்களிலேயே நின்றிருக்கும் சில 56,57,46 வயதில் உள்ளோருக்கு இதில் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.வயது,படிப்பு மட்டும் அறிவையோ முதிர்ச்சியையோ தீர்மானிக்காது.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது நோகடிக்கவோ இக்கட்டுரை இங்கு பதிக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

கட்டுரை ஆசிரியர் திரு அ.இரவி அவர்களுக்கு நன்றி

-------------------------------------------------------------------------------------------

"புதியதோர் உலகம்" என்றொரு நாவல் 1985ல் வந்ததது.கோவிந்தன் எழுதியிருந்தார்.கோவிந்தன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(பிளாட்-PLOT) அங்கத்தவராக செயற்பட்டவர்.அந்த அமைப்பில் நிலவிய அராஜகம் ஜனநாயகமின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறியதாக கோவிந்தன் எழுதியிருந்தார்.அவ்வாறு வெளியேறி தலைமறைவாக இருந்த இரண்டு மாத கால இடைவெளியில் இவ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் தொனிப்பொருள் கொண்டது இவ்நாவல் ஆயினும் அந்நாவலின் முன்னுரையில் கோவிந்தன் மேலும் எழுதுகிறார்.

"இந்நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்தும் பிரசாரத்தினை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும்போது கூட இருந்தது.கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது...."

ஒரு எழுத்து போராளி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கோவிந்தனின் கூற்று மெத்தச்சரியான உதாரணம்.விடுதலைப்போரை அவர் நேசித்ததன் அடையாளம் தான் இவ்வாசகங்கள்.அந்தநேசிப்பிலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிறந்ததனால் மிகச் சிறந்த தமிழ்நாவல்களுள் ஒன்றாக புதியதோர் உலகம் நாவலும் அமைகின்றது.

அனால் இப்போதெல்லாம் என்ன நடக்கின்றது?மானுடத்தை,விடுதலையைநேசிக்காதோர்,படைப்பாளிகளாக வரலாறு எழுதுவோராக வந்ததனால் சில விகற்பங்கள் நிகழகின்றன.தமக்கு நேர்ந்த அனுபவங்களை பொதுஅனுபவங்களாக்கி,தம்மை மாத்திரமே மனிதர் எனநினைத்து, தனக்கான சுதந்திரத்தினை மாத்திரமே அவாவி நின்று,மானுடவிடுதலையை விலைகூறுபவர்களாக சில படைப்பாளிகள் மாறி வருகின்றனர்.அதுதான் மண்ணுக்கு,மக்களுக்கு செய்துவிட்ட பாதகச்செயல்.

"எனது மண்ணில்
நிச்சயமற்று போய்விட்ட
எனது இருப்பை உறுதிப்படுத்த
பிறந்தமண்ணின் எல்லையைக்கடந்தேன்"

என்று ஒரு கவிஞர் கருதுகின்றார்.அவரது உயிர்ப்பயம் என்பது அவரால் மாத்திரமே உணரப்படமுடியும்.அது பற்றிஏதும் பேச இயலாது.சரி அவ்வளவற்றுடன் அந்தக் கவிதையை அவர் நிறுத்திவிடவில்லை.மேலும் தொடர்கிறார்.

"இறுதியாக பாதங்களில்
ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று"

அந்தக்கவிஞர் தன் பிறந்த மண்ணின் எல்லையில் தன் மண்ணின் அடையாளத்தினை முற்று முழுதாக களைந்துவிடுகிறார்.இப்போது அவர் அந்த மண்ணுக்கு உரியவர் அல்லர்.இறுதிவரி இப்படி முடிகிறது.

"செம்மண்ணும் போயிற்று
எம்மண்ணும் போயிற்று"

இப்போது சொந்த மண்ணையே முற்றாக மறந்து விடுகிறார்.முற்றுப்புள்ளிவைத்தாயிற்று.இப்படி முற்றுப்புள்ளிவைப்பது வலு இலகு.இனி சமையல்,சாப்பாடு,கோயில்,கும்பிடு என்று இலெளகீக வாழ்க்கைக்குள் நுழையவேண்டியதுதான்.அதுவெல்லாம் சரி.மெத்தச் சந்தோஷம்.சாகும் வரை போராடி ஏன் வாழ்வான்? வாழ்வு இடர் தருகிறதா?உதறி எறிந்திட வேண்டியதுதான்.உபத்திரம் இது.

ஆனால் வேறொன்றுதான் சற்று உதைக்கிறது.இந்தக் கவிதை எழுதிய இதே கவிஞர் முன்னர் வேறுபல கவிதைகளையும் எழுதிவிட்டு போய்விட்டார்

"தோழி
எழுந்து வா
இன்னும் இருட்டினில் என்னடி வேலை?"

என்று இருட்டினில் நித்திரைப்பாயில் படுத்திருந்த பலரையும் எழுப்பி பின்னால் வரச்சொல்லியும் கூப்பிட்டுவிட்டார்.இப்போது இந்தக்கவிஞர் "குண்டி மண்ணையும்" தட்டிவிட்டு போனபின்,எழுந்துவந்த அவர்கள் என்ன செய்வதென்றறியாது கலங்குகின்றார்கள்.

இனிச் சற்றுக் காத்திருந்தால் போதும்"மனித உரிமைகளின்" பெயரில் "நியாயவாதி"களின் பெயரில் ஆதிபத்தியநாடுகளும் அதன் அடிவருடிகளும்,விருதும் சொச்சப்பணமும் தேவைப்பட்டால் புலமைப்பரிசிலும் தந்து விலை பேசிவிடுவார்கள்.

தொடரும்................

Sunday, September 04, 2005

மதிமுக--- சன் ரீவி லடாய்!!!

சென்னையில் நேற்று நடைபெற்ற வைகோவின் "சிறையில் விரிந்த மடல்கள்" நூல் வெளியீட்டு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற சன் ரிவி குழுவினரை அனுமதிக்க மதிமுகவினர் மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக மதிமுகவினருக்கும், சன் ரிவி நிருபர்களுக்கும் இடையே பெரும் விவாதம் நடை பெற்றுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பந்தப்பட்ட செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதாக மதிமுக வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது வைகோவும் இதனை அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும், இந்த விஷயத்தில் தான் ஒன்றும் செய் வதற்கு இல்லையென்று அவர் கை விரித்து விட்டதாகவும் கூறப் படுகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய "சிறையில் விரிந்த மடல்கள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன்சிங், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை சன் ரிவிக்கு மதிமுக அனுப்பவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சன் ரிவி நிருபர் ஒருவர் மதிமுக நிர்வாகி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பிதழ் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கு அந்த நிர்வாகி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பற்றிய செய்திகளை சன் ரிவி இருட்டடிப்பு செய்வதால் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை யென்று கூறி யிருக்கிறார். மேலும் சன் ரிவி சார்பில் நிருபர் கள் யாரும் வர தேவையில்லை யென்றும் அவர் கூறியிருக்கிறார்.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் செய்தி சேகரிக்க வேண்டும்.
எனவே அழைப்பிதழ் தாருங்கள் என்று அந்த நிருபர் வலியுறுத்தி கேட்டதாகவும், இது எங்கள் கட்சி நிகழ்ச்சி, நீங்கள் வர தேவை யில்லை என்று அந்த நிர்வாகி திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிகிறது. நிர்வாகியின் பதிலால் சற்றே கோபமடைந்த நிருபர், கட்சி நிகழ்ச்சி என்றால் உங்கள் அலுவலகத்தில் நடத்த வேண்டியது தானே என்று கூறியதாகவும், இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் அதிகபிரசங்கித்தனமாக பேசாதீர்கள் என்றும் அந்த நிர்வாகி கூறியதுடன், தொலைபேசி உரை யாடலை துண்டித்து விட்டதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், சன் ரிவியின் மற்றொரு நிருபரும், கேமராமேனும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து செய்தி சேகரித்து சென்றனர்.

------மாலைசுடர்------------