Saturday, September 24, 2005

ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்த தமிழர்

ந்தியா விடுதலையடைந்து 58 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளை அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி பிறந்த மண்ணில் அடிமைகளாகவும், ஏதிலிகளாகவும் வாழ்ந்த கொடுமையான வரலாற்றை இன்றைய தலைமுறை மறந்திருக்கலாம். பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமல்ல, வாழ்வதற்கும் கூட வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுண்டு விரலசைவுக்கு காத்திருந்த காலம் ஒன்றுண்டு. அடிபட்டு, மிதிபட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சிறைப்பட்டு, எண்ணற்றோர் குருதி சிந்திய கொடுமையான சரித்திரத்தைக் கொண்டது இந்திய மண். மண்ணை, மானத்தை,மனிதத்தை மீட்க நடத்திய பெரும் போரில் உற்றார், உறவினர்களை இழந்து, நண்பர்களை இழந்து ரணங்களோடும், தழும்புகளோடும் தியாகப் பரம்பரைத் தலைமுறையினர் மறைந்து கொண்டிருக்கும் தருணம் இது.

இந்திய துணைக்கண்டமே அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ஆங்காங்கே பீறிட்டெழுந்த விடுதலை உணர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழுந்தது. காந்தியடிகளின் தலைமையை ஏற்று ஒன்றுபட்ட பெரும் போராட்டம், பிரிட்டிஷ் அரசிற்குப் பெரும் தலைவலியாய் அமைந்தது. எத்தனையோ அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தபோதிலும் சுடர்விட்டு ஒளிர்ந்த விடுதலை கனலை அணைக்க இயலவில்லை.
பிறகு எந்த மாகாணத்துக்கும் சற்றும் குறைவின்றி, சொல்லப்போனால் இன்னும் கூடுதலாக, தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர், பெருமை கொள்ளத்தக்கது. கும்பினியாரை எதிர்த்த பூலித்தேவன் தொடங்கி, வரி கேட்டு மிரட்டிய வெள்ளையனை `வந்து பார்' என்று விரட்டிய பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்முவின் முழக்கமே, மதப் பகைமையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைத்த குள்ளநரிகளின் தந்திரத்திற்கு வேட்டு வைத்த வேலூர்க் கோட்டைச் சிப்பாய்க்கலகமும், வட நாட்டில் ஜான்சிராணியா.. இதோ தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியும் வெள்ளைப் படைக்கு முறம் காட்டினாளே! அங்கே தாகூரா.. இங்கே பாரதி முண்டாசு கட்டிக் கொண்டு, தனது சொற்சாட்டைகளால் பிரிட்டிஷ் பேரரசை சுழற்றியடித்தானே! சுதேசியம் பேசிய வடநாட்டுத் தலைவர்களை மிஞ்சி மக்களைப் பங்குதாரராக்கி கப்பல் விட்டுப் பெருமை பெற்றானே வ.உ.சி. செக்கிழுத்து, மூத்திரம் குடித்து தொழு நோயாளியாய் சிறையிலிருந்து வெளியே வந்து, சற்றும் குறையாத கர்வத்துடன் மறைந்தானே சுப்ரமணிய சிவா!உயிர் போகும் நிலையிலும் கொடியின் மானம் காத்து, வரலாற்றில் உயர்ந்து நிற்கிறானே குமரன்! மிதவாதிகளின் போராட்டம் ஒரு புறமிருக்கையில், கலெக்டர் ஆஷ் துரையைக் கொன்று வாஞ்சி மணியாச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறானே வீரன் வாஞ்சிநாதன்!

இம்மண்ணின் விடுதலைக்காக கணக்கற்ற புதல்வர்களை தமிழன்னை வாரிக் கொடுத்திருக்கிறாள். பறங்கிக் கூட்டத்தை விரட்டியடித்து, சுதந்திரக் கொடியேற்ற நாஞ்சில் நாட்டிலிருந்தும் உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம்மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்?

"ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் . இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.

முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.

"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

இரா. சிவக்குமார்/தினமணி

Thursday, September 22, 2005

பசுமை நன்கொடை

மிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் மரம் நடுகையினை ஊக்குவிக்கும் பொருட்டு கிளிநொச்சியில்
நிறுவப்பட்டுள்ள விளம்பரப்பலகையே இது.

படம் உதவி:- தமிழ்நெற்



அத்துடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு திண்டுக்கல்லில் இருந்து
வெளிவரும் "புதியகல்வி" அச்சு இதழ்காரர்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை
நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இணையத்தளம்தான் பசுமை.கொம்.
தமிழில் இதுபோன்ற துறைசார்ந்த இணையத்தளங்களின் தேவை எப்போதுமே உண்டு.அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இயங்கும்
இந்த இணையத்தளம் பாராட்டப்படவேண்டிய விடயமே. இத்தளத்தினை
பார்வையிட இங்கு செல்லவும். எழுத்துருவை பதிவிறக்கினால் தான்
இத்தளத்தினை பார்க்க,படிக்க முடியும்.அல்லது தரவிறக்கம் செய்யாமல் எழுத்துருவை திறந்துவைத்துக்கொண்டும் தளத்தினை பார்க்கலாம்.

இது என் படிப்பு

ழநாதன் அவர்கள் "இது என் புராணம்"என்ற தலைப்பில் பதிவு ஒன்று இட்டிருந்தார்.அது வீட்டில் தொடங்கி கந்த புராணத்தில் முடிந்திருந்தது.நல்லதொரு முயற்சி. அப்பொழுது தான் எனக்கும் ஞாபகத்தில் வந்தது இன்னொரு படிப்புபற்றி.இதுக்கும் கந்த புராணத்துக்கும் சம்பந்தம் இல்லை.அனாலும்இதுவும் ஒரு வகைப்படிப்புதான்.பத்திரிகை படிப்பு.

யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இதை நான் பார்த்திருக்கிறேன்.கடற்கரைகளில்,வாசிகசாலை முன்றலில்,ஆலமரம்,அரசமரத்துக்கு கீழும்அன்றைய காலகட்டத்தில் நான் அரசியல் படித்ததே இந்த பத்திரிகை படிப்புக்கள் மூலம் தான்.எங்கள் வீட்டில் இரண்டு பத்திரிகைகள் வரும்.இருந்தும் என்னை அதிகம் கவர்ந்தது இந்த திண்ணை அல்லது தெருப் படிப்புதான்.என்ன விடயத்தினை சொல்ல வருகின்றேன் என்பது பலருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

எங்கள்.அம்மம்மா வீட்டிற்கு பக்கத்தில் ஒரு பலசரக்குகடை ஒண்டு இருந்தது.நாங்கள் சாமான்கள் வாங்குவதும் அந்தக்கடையில்தான்.அந்தக்கடைக்கு பக்கத்து கடை நானறிந்த காலத்தில் இருந்தே பூட்டியே இருந்தது.இரு கடைகளுக்கும் முன்னால் சீமெந்து இடப்பட்டு நீண்ட விறாந்தை ஒன்று இருந்தது.பின்னேரங்களில் பூட்டியிருக்கும் கடைக்கு முன்னால் வயது போன சில பெரிசுகள் கூடியிருப்பர்.அதில் ஒருவர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரைச் சூழ பலர் அமர்ந்திருப்பர்.நடுநாயகமாக அமர்ந்திருப்பவர் கையில் அன்றையசெய்திதாள்கள் இரண்டாவது இருக்கும்.அவர்தான் அங்கு தலைவர் மாதிரி. பின்னேரம் 6.00 மணிக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமா இன்னும் பலர்அங்கு வந்து சேர தொடங்குவார்.இதில் வந்து கூடுபவர்கள் பலர் வறிய கூலித்தொழிலாளிகளாகஇருப்பதையும் கண்டிருக்கிறேன்.

ஏறத்தாள எல்லோரும் வந்து அமர்ந்தவுடன்,அங்கு நடுவில் அமர்ந்திருப்பவர் பத்திரிகைகளை எடுத்து உரத்த குரலில் வாசிக்க ஆரம்பிப்பார்.வாசிப்பது என்றால் ,5,6 வரி படிப்பார் பின்பு நிறுத்திவிட்டு செய்திதொடர்பான தனது கருத்துக்களை சொல்வார்.மற்றவர்களும் தமது கருத்துக்களை சொல்வர்.பின்பு செய்திகள் தொடர்ந்து படிக்கப்படும்.இப்படி சூடு ,சுவையான கருத்துக்கள்,விவாதங்கள்சில வேளைகளில் அனல் பறக்கும் வார்த்தைகள் கூட வந்து விழும்.

எனக்கு அரசியல், போராட்டத்தில் ஆர்வத்தினை உண்டாக்கியதே இந்த கூட்டம் தான்.செய்தி படிப்பவர் செய்திகளைப் படித்து விட்டு "அய்யா இப்படி சொல்லியிருக்கிறார்"எண்டு சொல்ல, கேட்பவர்களில் ஒருவர் "அப்ப அம்மா இதுக்கு என்ன செய்யப்போறா"?எண்டு கேட்க,கேட்டுக்கொண்டிருந்தவர் சொல்லுவார் அம்மாவுக்கு தெரியம் அய்யாவை எப்படி மடக்கிறது எண்டு.
இப்படி சொல்ல அவர்கள் பேசிக் கொள்ளும் அய்யா,அம்மா யார் என்று அறியாமல் தலையினை பிய்த்துக் கொள்வேன்..அய்யா என்று யாரைசொல்கிறார்கள்? அம்மா என்று யாரைச் சொல்கிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்.

( இதற்கும் தமிழ்நாட்டு அம்மா,அய்யாவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை.முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லதுதானே அல்லது யாராவது வந்து நீ அகதிதானே. உன்னுடைய வேலையினைப் பார்.
ரொரன்ரோ முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுத்து நிதி திரட்டு என்று
பின்னூட்டம் இடுவார்கள்.அவர்களின் நேரத்தினை சேமிப்பதற்காகவே இந்த வரிகள்.)

எனக்கு அரசியல் தொடர்பாய் சிலவற்றை அறிந்து கொண்டது இங்கு என்று சொன்னேன் தானே.அதே போல( காதை கிட்ட கொண்டு வாங்கோ) சில கெட்ட வார்த்தைகளையும் அறிந்து கொண்டது இங்கிருந்துதான்.
சிறீமா விமானநிலையம்?? திறந்து வைத்த கதை?? கூட இங்கிருந்துதான்
அறிந்துகொண்டேன்.கதை தெரியாதவர்களுக்கு நான் ஒண்டும் செய்ய
இயலாது. கதையை சொன்னால் தமிழ்மணத்தில் இருந்து "என் மனவெளியில்" தூக்கப்பட்டுவிடும்.


சில வேளைகளில் சில செய்திகள் சம்மந்தமாக விவாதங்கள் நடைபெறும் உணர்ச்சிமேலீட்டில் போது கெட்ட வார்த்தைபிரயோகங்களும் இடம் பெறும்.அப்படியான வேளைகளில் நான் அங்கு நிற்பதை கண்டால் "பெரியாக்கள்கதைக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை" என்று சொல்லி என்னை விரட்டிவிடுவார்கள்.மற்றம்படிஎன்னைக் கண்டு கொள்ளாதவர்கள் இப்படிப்பட்ட நேரங்களில் கண்டுகொள்வார்கள்.

பெரும்பாலும் அம்மம்மா என்னை பின்னேரங்களில் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்புவா.அப்பிடி அனுப்பும் நேரங்களில் இந்த பத்திரிகை படித்து ரசிக்கும் கூட்டத்தில் நானும் பார்வையாளனாக் கலந்து கொள்வதுண்டு.சில வேளை கடை முதாலாளியும் விவாதங்களில் பங்கெடுக்க அவர் வரும் வரை நானும் கடை வாசலில் நிண்டு இவைகளைகேட்டுக்கொண்டிருப்பேன்.ஒரு நாள் இப்படி தான் கடைக்கு அனுப்பிய பொடிச்சியை கன நேரமாக காணவில்லை எண்டு போட்டு அம்மம்மா வந்திட்டா நேரே கடைக்கு வந்தவ முதலாளியும் நானுமாக "அரசியல் அரங்கில் " மூழ்கிப்போயிருந்தைக் கண்டு விட்டு முதலாளிக்கு ஏச்சும் எனக்கு "கடைக்கு அனுப்பினால் இஞ்ச வந்து வீண்பராக்கு பாத்துக்கொண்டிருக்கிறாய்"எண்டு தலையில் குட்டும் விழுந்தது.ஆனாலும்
நான் எப்படியாவது பத்திரிகை படிக்கும் இடத்துக்கு வந்துவிடுவேன் என்ன
சாட்டு போக்கு சொல்லி எண்டாலும்.

அனாலும் ஒண்டு பாருங்கோ.அண்டைக்கு பராக்கு பாக்க தொடங்கினது
இண்டைக்கும் பிரச்சனையாக அல்லோ கிடக்குது.
"உங்களோட வந்தால் எனக்கு மானமேபோகுது ,சும்மா பராக்கு பாக்காமல் வாங்கோ பாப்பம்" இது எனது "பிரிய சகியின்" குரல்.
கடை தெருவுக்கு போனால் எனது மனைவி நான் எங்கு "பராக்கு" பார்க்கிறன் என்று தான் பார்ப்பா.ஆனாலும் ஒண்டு தொட்டில் பழக்கத்தை மாத்த ஏலுமோ?


ஈழநாதனின் பதிவைப் பார்த்தவுடன் எனது ஞாபகத்தில் வந்த விடயங்கள் இவை.கிராம வாழ்க்கையின்ஒரு ரசிக்கதக்க,வியக்கதக்க அம்சங்களில் இதுவும் ஒன்று.படிப்பறிவு அற்றோர் இப்படி,இதன்வாயிலாக நாட்டுநடப்புக்களைஅறிந்துகொண்டனர்.அன்றைய நாட்களில் யாழப்பாணத்தின் பல கிராமங்களில் கண்ட காட்சியே இது.இன்று இலங்கை வானொலிகளிலும்,தொலைக்காட்சிகளிலும் இடம் பெறும் "பத்திரிகை கண்ணோட்டம்" த்திற்கு இவை தான் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். இன்று காலமாற்றங்கள், இவைகளை அரித்துப்போகவைத்திருக்கலாம்.ஆனாலும் பழக்கங்கள்,வழக்கங்கள் காலவோட்டத்தில் மாறுவது நியதிதானே.கோவணம் கட்டிய எமது மூதாதையர்கள்,வேட்டி கட்டி,பின்பு சட்டை அணிந்து,இப்போது பாண்ட்,சேட்
இப்படி வந்துவிடவில்லையா? மற்றங்களே நிரந்தரம்.ஈழநாதனின் மேட்டருக்கு
க்டைசியில் வந்துவிட்டேன். என்ன ஈழநாதன் திருப்தியா?

(ஆனாலும் தமிழைப்பற்றி கதைத்தால் உணர்ச்சி வசப்பட்டு வேட்டி சட்டையுடன் முடிச்சு போடுகிறார்கள். தமிழைப்பற்றி கதைப்பதானால் கோவணம் அணிந்துதான் கதைக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே அந்த மட்டில் சந்தோசம்.)

யாழப்பாணத்தில் சுருட்டு சுற்றும் சுருட்டு கொட்டில்களிலும் இப்படி செய்திகள் வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால்நான் பார்த்ததில்லை.விடயம் தெரிந்த யாராவது அதைப்பற்றி எழுதலாமே.

வயது போனவர்களுக்குதான் இதைபற்றி தெரியும்.ஈழநாதன்,வசந்தன் கொஞ்சம்
கவனீங்கோ அப்பா.ஏன் கொழுவி,சயந்தன் ,குழைக்காடன்,வன்னியன் கூட எழுதலாம்.
. ஹீ... ஹீ

Monday, September 19, 2005

SriLanka - Witness to History -நூல் விமர்சனம்.

'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்ற ஆங்கில நூலைப் பார்த்தபோது பல எண்ணங்கள் மனதிலே வந்தன.

எழுபதுகளிலே, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கில வார இதழான Saturday Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்து வாசகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்ற " Saturday Review சிவநாயகம்" என்று அன்போடு அழைக்கப்பட்ட முதுபெரும் பத்திரிகையாளர் ஒருவரால் இது எழுதப்பட்டுள்ளது.

எமது இனப்பிரச்சனை உருவாகிய ஆரம்ப காலங்களிலே வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்களும், உள்ளுரிலே வாழ்ந்த தமிழ் மக்களும், வாரம்தோறும் வெளிவந்த "Saturday Review" பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. அழகிய ஆங்கிலத்தில் உண்மையைச் சுவையாக எழுதும் ஆற்றல் படைத்தவர் சிவநாயகம். அவருடைய பேனா, அரசியலின் ஆழங்களை அநாயாசமாக, அழகிய சொற்சித்திரங்களாக வடித்துத் தந்தது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, சிங்களப் பத்திரிகையாளர்கள், பிறநாட்டு பத்திரிகையாளர்களின் மதிப்பையும் பெற்று உயர்ந்தவர். Saturday Review என்னும் பத்திரிகைச் செயலகத்தை தேடி யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கத் தூதுவர் முதல் பிறநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளரும் ஒரு காலத்தில் செல்வதற்கான நிலையை உண்டாக்கியவர் திரு சிவநாயகம்.

அவர் இன்று தமது எழுபத்தி ஐந்தாவது வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் 'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி". கிட்டத்தட்ட 57 வருடகால ஈழத்தமிழினத்தின் வரலாற்றை (இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல்) அவர் மிகவும் துல்லியமாக இந்நூலில் பதிய வைக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இனவிடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிப்பதைச் சரித்திர வாயிலாகப் பார்க்கலாம். நோர்வே, சுவீடன், ஐயர்லாந்து போன்றவை தமது தனித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் தனியாக பிரிந்து போயின. இந்த வரிசையிலேயே தமிழினத்தின் விடுதலையையும் திரு சிவநாயகம் இந்நூலில் ஆராய்கிறார்.

வரலாற்றாசிரியர் ஒருவர் தேதி வாரியாக, செய்திகளைப் பதியும்பொழுது, அவற்றின் தொகுதி, அவை கூறும் பாதிப்பு, காரணமாக வாசிப்பவர்களின் மனதிலே பாரத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும் தன்மை ஒன்று உள்ளது. ஆனாலும் வரலாற்றையும் சுவையாகக் கூறமுடியும் என்பதற்கு திரு சிவநாயகம் அவர்களின் எழுத்து சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

83 ஆம் ஆண்டுமுதல் தமது பத்திரிகையில் சிங்கள அரசைத் தாக்கி எழுதிய காரணத்தால் இரவோடிரவாக நாட்டை விட்டுக் கடல் வழியே இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் புகுந்தவர், அங்கேயிருந்த அரசின் ஆதரவுடன் Tamil Nation என்னும் பத்திரிகையை ஆரம்பித்து எமது விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்தார். ஆனால் அரசியல் பழிவாங்கல் காரணமாக வேலூர்ச் சிறையில் மூன்று வருட காலம் அல்லல்பட்டு இந்திய அரசால் நாடு கடத்தப்பட்டு பிரான்சில் தஞ்சம் புகுந்து அகதியாகப் பல இன்னல்களைச் சந்தித்தார். எனினும் மேல்நாட்டு நூல் நிலைய வசதிகளின் பயனாக, அரசியல் ஆவணங்களைப் பெற்று உண்மையான சரித்திரச் சான்றுகள் நிறைந்த இந்நூலை அவரால் எழுத முடிந்துள்ளது. புற்று நோயாளியான இவர், தமது முதுமைக் காலத்தை பிறந்த மண்ணிலே கழிப்பதற்காக இன்று நாடு திரும்பியிருக்கிறார்.

'சிறிலங்கா - வரலாற்றின் சாட்சி" என்னும் இந்நூலில் தானே ஒரு சாட்சியாக நின்று எழுதுவது போல எழுதுகிறார் - அரசியலும் இவர் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், இந்நூல் சுயசரிதை போலவும் சரித்திர நூல் போலவும் விளங்குவது தவிர்க்க முடியாதது.

1956 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தொடரூந்து மூலம் கொழும்பு நோக்கி வரும் இவர் நடுவழியிலே சிங்களக் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு, தொடரூந்திலிருந்து வெளியே தள்ளி விடப்பட்ட கதையோடு நூலை ஆரம்பிக்கிறார். இவர் மாத்திரமல்ல வேறு பல தமிழர்களும் தன்னோடு அடி வாங்கியதையும் பார்த்தபோதுதான், தனது பிறந்த மண்ணிலே வாழமுடியாத காரணம், தான் தமிழனாகப் பிறந்த குற்றம் ஒன்றே என்பதை உணர்ந்ததாகவும் எழுதுகிறார். அன்று அவர் ஓர் இளைஞன். அப்பொழுது ஏற்பட்ட இந்த வடு அவரை ஒரு தார்மீக எழுத்தாளனாக உருவாக்கியது என்பதை இந்நூல் மூலம் அறிகிறோம். டெய்லி நியூஸ், டெய்லி மிரர் பத்திரிகைகளிலே அவர் தொடர்ந்து செயலாற்றிய போதும், Saturday Review இன் பின்னரே இன விடுதலையைப் பற்றி எழுதும் வலுமிக்க எழுத்தாளராக மாறுகிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தபோது மகாத்மா காந்தியை இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக தென்னாபிரிக்க வெள்ளையர் ரயிலிலிருந்து வெளியே இழுத்துத் தள்ளிய நிகழ்வும், காந்திஜியின் வாழ்வில் அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பாரிய மாற்றமும் நினைவில் வந்தது. இன விடுதலைக்காகச் சிறை சென்ற நெல்சன் மண்டேலா, இனத்துக்காகப் போராடி உயிரிழந்த சேகுவேரா போன்றவர்களின் வரிசையிலே திரு சிவநாயகத்தின் எழுத்துக்களையும் சேர்த்துப் பார்க்க முடிகிறது. இவரின் ஆயுதம் பேனா ஒன்றே. இந்தப் பலம் பொருந்திய ஆயுதத்தை அவர் கையாளும் முறையை இந்நூலிலே பார்த்து அதிசயப்படுகிறோம்.

இந்நூலின் பிரதான அம்சம் எமது இளைஞர்களின் இன விடுதலைக்கான தார்மீகப் போராட்டம் - அவர்களின் தியாகம். புலிப்படை வீரரின் தியாக உணர்வு அவரின் எழுத்தில் புதியதோர் உத்வேகம் பெறுகிறது. ஆழமாக எமது உணர்வைத் தாக்கி, எம்மை மெல்ல மெல்ல உலுக்கி விடுகிறது இவருடைய எழுத்துத் திறன். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாம்" என்பதை அவரின் எழுத்தின் சத்தியத்தில் தரிசிக்கிறோம்;. பெரும்பான்மையினரின் தந்திரங்கள், படைபலத்திற்கு முன் எமது மூத்த அரசியல்வாதிகளின் சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியை, இயலாமையை, உணர்ந்து செயல்பட்ட இளைஞர்களின் எழுச்சியை, நியாயப்படுத்துவதன் மூலம், தேதி வாரியாக, போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இவர் பதிய வைத்துள்ள முறையில் இது சிறந்ததோர் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

இந்தியாவிலே வாழ்ந்த காலத்திலே, அவருடைய அனுபவப் பதிவுகள், இன்றைய நிலையில் பின்னோக்கிப் பார்க்கும் போது பல செய்திகளை விளக்கி நிற்கிறது. தமிழ் மக்கள் இந்தியாவைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் எப்பொழுதும் நினைத்திருந்தமையையும், பின்னர் ஏமாற்றமடைந்ததையும் வேதனையோடு பதிகிறார். தமிழரின் இன்றைய நிலைக்கு இது ஒரு முக்கிய காரணம் என்கிறார். இந்தியாவின் பிரித்தாளும் தந்திரோபாயத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராட்டம், ஒரு இக்கட்டான சூழலில் இன்று இருப்பதையும் வல்லரசுகள் சிறிய இனங்களைப் பகடைக் காய்களாகக் கருதுவதையும் அரசியலாளரான இவரின் எழுத்தில் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலே தன்னைச் சிறையிலே அடைத்த போது, அங்கே காரணமில்லாமல் பல இலங்கையர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைப் பற்றி இந்த மனிதாபிமானி வேதனையுடன் எழுதுகிறார். சிறைவாசத்தின் போது அவர் அனுபவித்த துன்பம் வாசிப்பவர்களின் மனதை உலுக்கி விடுகிறது. சிறையிலிருந்து தன்னை விடுவிக்கவும், பின்னர் தனக்கு அரசியல் தஞ்சம் பெற்றுத் தரவும், தன்னுடைய எழுத்துப் பணிக்குப் பல வழிகளிலும் உதவி அளித்த புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நன்றியுடன் இந்நூலில் நினைவுகூர்கிறார்.

யாழ்ப்பாணத்தில் IPKF இனரின் செயல்களைக் கண்டித்து எழுதுகையில், அவர்களின் தளபதிகள் சிலர் புலிப்படைத் தளபதிகள் மீது வைத்திருந்த பெருமதிப்பையும் இந்நூலில் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. அரசியல் காரணங்களால், இனவிடுதலை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை ஆராயும் வகையில் போராட்ட வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத பலருக்கும் இவரது விளக்கம்; தெளிவை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்த கதை பற்றி எழுதும்போது ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழித்தால் அந்த இனத்தையே அழித்துவிடலாமென்று மனப்பால் குடித்தவர்களின் அறியாமையை எள்ளி நகையாடும் அவருடைய எழுத்து பல உண்மைகளை உணர்த்துகிறது. நூல் நிலையத்தின் நடு மாடியிலே புராதன ஏட்டுச் சுவடிகளும் அரிய ஆவணங்களுமிருந்தன என்றும் அவற்றிற்கே முதலில் இனவாதிகள் தீயிட்டனர் என்ற செய்தியை எழுதுகையில், ஏனைய நூல்களைக் காப்பாற்ற முடிந்தாலும், இவற்றை அழிக்க வேண்டும் என்பதே துவேச மனப்பான்மை கொண்டவர்களின் நோக்கம் என்ற உண்மையை உணர வைக்கிறார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழர்களான சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர்கள், இலங்கைக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் என்றும், ஆனாலும் அதே சிங்கள மக்களின் துரோகத்தைத் தமிழ் மக்கள் காலம் கடந்து உணர்ந்ததையும் காட்டும் சிவநாயகம் அவர்கள், பிரிட்டிசாரிடம் திரு ஜின்னா பாகிஸ்தானைப் பெற்றது போல தமிழ் மக்களும் சுதந்திரம் பெற்ற பொழுதே தமது உரிமைகளைப் பெற்றிருந்தால் இன்று இந்நிலை வந்திருக்காது என்று வருந்துகிறார். 'நம்பிக் கெட்டவர்கள்" தமிழர் என்ற வருத்தத்தைப் பதிவு செய்கையில், அனிதா பிரதாப் என்னும் இந்தியப் பத்திரிகையாளருக்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகத்தையும் இங்கே பதிவு செய்கிறார்.

'திரு ஜயவர்த்தனா ஒரு நல்ல பௌத்தராக இருந்திருந்தால், நான் இப்படி துப்பாக்கியோடு திரிய வேண்டியதில்லை" என்பதே தலைவரின் வாசகம்.
இவருடைய எழுத்தைப் பெரிதும் மதிக்கும் சிங்கள அறிஞர், திரு ஏட்றியன் விஜயமான (Adrianne Wijeyamanne) இந்த நூலுக்கு சிறந்ததோர் முன்னுரையை வழங்கி, எமது இன விடுதலையின் நியாயப்பாட்டை வலியுறுத்துவது நூலின் மதிப்பை உயர்த்திவிடுகிறது.

அன்றைய யாழ்ப்பாண வாழ்க்கையைச் சுவைபட எழுதும். சிவநாயகம் அவர்கள் தான் பிறந்து வளர்ந்த கொக்குவில் கிராமம் பற்றிய அழகிய சொற் சித்திரம் ஒன்றை இங்கே பதிய வைத்திருப்பது இந்நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

'கொக்குவில், யாழ்ப்பாண நகர எல்லையில் அமைந்திருக்கிறது. அது கிராமமுமில்லை நகரமுமில்லை. சிறு சிறு ஒழுங்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் போய் முடியும். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைகளுக்குள்ளால் சுற்றலாம். நினைத்தவுடன் யாழ்ப்பாண நகரத்திற்குப் போய் வந்து விடலாம். பின்னர் இந்தக் கிராமப் பண்பாட்டுக்குள் வந்து அமைதியாக இருக்கலாம்" என்று வர்ணிக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயுள்ள எந்த ஒரு கிராமத்திற்கும் இவை பொருந்தும் என்றாலும், அவர் எழுதியுள்ள முறையில் அவருடைய கொக்குவிலைப் போன்ற அழகிய கிராமமே இல்லை என்பது அவருடைய ஊர்ப்பற்றையே காட்டுகிறது. இந்தப் பற்றே அவரின் இனப்பற்றாகவும் பின்னர் மலர்கிறது. கொக்குவிலிலே ஒரு பல்லினக் கலாச்சாரம் இருந்தது என்று எம்மை ஆச்சரியத்திலே ஆழ்த்துகிறார். வீடு வீடாகச் சென்று, சீனத்துப் பட்டு விற்ற சீன தேசத்து வியாபாரி, தலையிலே பெட்டியைச் சுமந்தபடி விசுக்கோத்து, சீனிப் பணிஸ், கேக் விற்ற சிங்கள பாண் வியாபாரி, பள்ளிகளிலே கர்நாடக இசை, ஆங்கிலம் கற்பித்த தென்னிந்திய தமிழ், மலையாளப் பட்டதாரிகள், சிங்களம் கற்பித்த பௌத்த பிக்கு என்று பலரைப் பற்றி எழுதுகிறார். இந்தப் பிக்கு தமிழை விரும்பிக் கற்று சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் பின்னர் சிங்களத்தில் மொழிபெயர்த்து எழுதிய செய்தியையும் அறிகிறோம். தமிழறிஞர் தனிநாயக அடிகளார், இப் பௌத்த அறிஞரரன தம்மரத்ன தேரரை முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு அழைத்துக் கௌரவித்த போது அவர் 'சிங்கள எழுத்துக்களில் தமிழ் மொழியின் பாதிப்பு" என்னும் பொருள் பற்றி உரையாற்றியவர் என்று அறிய வியப்பாக இருந்தது.

கொக்குவிலை ஒர் உலகக் கிராமம் Global Village போல உருவாக்கி விடுவது அவரின் எழுத்தின் சிறப்பு. பல்லினக் கலாச்சாரம் என்ற கருத்து இந்நாட்களில் ஏதோவொரு புதிய கருத்துப் போலத் தோன்றினாலும், அன்றே எம்மவர் இவற்றை இயல்பாக ஏற்று பண்புடன் வாழ்ந்ததை பெருமையோடு குறிப்பிடும் வகையில் அவரது இனப்பற்று தெரிகிறது. மேலும் இவருடைய முன்னோரான முதலியார் இராசநாயகம் அவர்கள் ஈழத் தமிழரின் பெருமையை விளக்கும் "பண்டைய யாழ்ப்பாணம்"Ancient Jaffna என்னும் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார் என்பதையும் இந்நூல் மூலம் அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்விடத்தில், சிவநாயகம் அவர்கள் இந்நூலில் குறிப்பிடும் ஒரு கதையைப் பற்றிக் கூறி இவ்விமர்சனத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
அமெரிக்க எழுத்தாளரான ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் The Old Man and the Sea (கிழவனும் கடலும்) என்ற ஒரு நாவலை எழுதியுள்ளார்.

ஒரு கிழவனுக்கு கடலிலே மீன் பிடிக்கும்பொழுது தூண்டிலிலே பெரிய மீன் ஒன்று சிக்கியது. அவனுக்கு அதனைக் கரைக்குக் இழுத்துவரும் சக்தி இருக்காததால், அதனை ஒரு சிறுவனின் உதவியோடு கரை சேர்க்கிறான். ஆனால் கரைக்கு வந்தபின் பார்த்தால், மீனைக், காணவில்லை - அங்கே மீனின் எலும்புக்கூடு மாத்திரமே இருந்தது. வலிய சுறா மீன்கள் மீனின் சதையை உண்டுவிட்டன. இந்த நூலை எழுதும்போதெல்லாம் இந்தக் கதை தனது மனதில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்ததாக சிவநாயகம் அவர்கள் எழுதுவதை வாசிக்க வேதனையாக இருந்தாலும், கதையில் வந்த முதியவரைப் போலல்லாமல், அவர், தனது முதுமையிலும், நோய் வாய்ப்பட்ட நிலையிலும், மனவலிமை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு, ஒரு சிறந்த பொக்கிசத்தைத் தமிழ் மக்களுக்கு, உலக வரலாற்றுக்கே தந்துவிட்டார் என்று நாம் பெருமைப்படலாம். அவருடைய ஆங்கில சொற்பிரயோகத்தின் வன்மை, அதனூடு இழையோடும் நகைச்சுவை, அரசியல் உண்மைகளை மனதில் பதியவைக்கும் திறமை ஆகியன இவ்வரலாற்று நூலை ஏனைய வரலாற்று நூல்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதால் இன்றைய எமது இளம் தமிழ்ச் சந்ததியினருக்கு இந்நூல் ஒரு சிறந்த கொடை என்பதில் சந்தேகமில்லை.

"Que Sera Sera
Whatever will be,will be,
நடப்பதுதான் நடக்கும்"

என்னும் பாடல் வரிகளோடு நூலை நிறைவு செய்யும் சிவநாயகம் அவர்கள் - தனது வாழ்வு 'பாம்பும் ஏணிப்படியும்" (Snake & The Ladder) போன்றது என்றும், ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்று தன்னை வழிநடத்தியது என்றுதான் சொல்லலாம் என தனது கதையை முடிக்கும்போது

'எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதிச் மேற் செல்லுமே"

என்ற உமர் கய்யாமின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பராசக்தி சுந்தரலிங்கம் (அவுஸ்திரேலியா)/ தமிழ்நாதம்

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 3

ரி அவர்களை விடுவோம். நாம் என்ன செய்கிறோம். எங்கள் உள்ளே எழுந்த காய்ச்சல் அடக்க மானுடத்துக்கு எதிராக பாடுகிறோம்.விடுதலைக்கு எதிராக வீறுகொள்கிறோம்.அப்போது தமிழ் இளைஞர் பேரவைக்கு தலைவராக இருந்த சி.புஷ்பராஜா எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும் நூல் எழும் தேவை ஏன் வந்தது? தன்னை மையப்படுத்திய அக்காலத்தைய தமிழீழ விடுதலைப் போர் பற்றி எழுதுகிறார்.தானே மணமகன்,தானே பிணம் என்கின்ற உளவியல் சிக்கல் அந்த நூலில் ஊடுபாவாக ஓடியது. அதே காலத்தில் போராளியாக இயங்கிய ஒரு சிலரிடம் நான் கதையாடியபோது "இது மிக போக்கிலிதனமான ஒரு புத்தகம்"என்று ஒருவர் சொன்னார். இப்போது அது குறித்து விரிவாக எழுதுவது என் நோக்கம் அல்ல.பொதுப் பார்வையிலும்,பொதுப்புத்தியிலும்,விமர்சனபூர்வமாகவும் ஒருநூல் வரவேண்டியதும் அவசியம்.

ஷோபாசக்தியின் "கொரில்லா","ம்" ஆகிய புதினங்களும் சில சிறுகதைகளும் ஈழ விடுதலைப் போர் மீது சேற்றை அள்ளிவீசும் செயலாகவே எனக்குப்படுகிறது."தேசத்துரோகி" என்றொரு சிறுகதை. அக்கதையில் அப்பாவித் தமிழர் அவலமாக கொல்லப்பட்ட துன்பவரி வந்ததுதான்.அனால் அதையும் விட துருத்திக்கொண்டு நின்றது வேறொரு செய்தி 'மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் வீரமும் தோய்ந்த குரலில்' அப்பாவி தமிழர்களை மிதிவெடிக்குள் விரட்டிக்கொன்ற ரணில் விக்கிரமசிங்க என்னும் முன்னைய சிறீலங்கா பிரதமரை தமிழீழவிடுதலைப் புலிகள் நம்புகின்றார்கள் என்பதே!இது அரசியல் ஆய்வாகவோ அல்லது இராணுவ ஆய்வாகவோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அச் செய்தி பார்வைக்குரியதே! ஆனால் ஒரு சிறுகதையில் அது சொல்லப்பட்டிருக்கும் மறைமையானது வலிந்து தாக்கும் முறையாகும்.ஒன்றைச் சொல்லலாம்.நமது தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் நமது தலைமையும் விலை போகக்கூடிய ஒன்றோ அல்லது ஏமாறக்கூடிய ஒன்றோ அல்ல. ஷோபாசக்திக்கு அந்தக்கவலை வேண்டாம்.

இப்படி ஒரு சிலரின் செய்கை இப்போது,இந்த விடுதலைப் போரில் மாத்திரம் நிகழ்வது அல்ல.எப்போதும்,எந்த விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலும்,இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எம் கடன் என்னவெனில் இப்படியானவர்களை இனம் காண்பதும்,இவர்களை உலகுக்கு அறிவிப்பதுமாகும்.அவ்வளவே!

அ.இரவி அவர்களால் எழுதப்பட்டு முழுமையான கட்டுரையாக வெளிவந்ததை இங்கு பகுதிகளாக்கி தந்தேன்.(எனது நேரம்,வசதி கருதி)