Sunday, November 27, 2005

தேர்தல் பகிஷ்கரிப்பு!

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலை குழப்பிவிட்டுள்ள தேர்தல் பகிஷ்கரிப்பு

* தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இனவாதக் கோஷத்தை சற்று அடக்கி
வாசிக்க நிர்ப்பந்திக்கப்படும் ஆளும் தரப்புக் கட்சிகள்!



ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழ்த் தேசம் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, சிறிய பெரும்பான்மையினால் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அணியினர் இனவாத அரசியலை முன்வைத்த அணியினராக இருந்தமையினால், தமிழ்த் தேசத்தின் பகிஷ்கரிப்பு காரணமாகத்தான் வெற்றியடைந்தோமென வெளியில் கூறுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.

ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தங்கள் இனவாதக் கோஷங்களைச் சற்று அடக்கியே வாசிக்கின்றார்கள் ஜே.வி.பி.யினர்.முழுமையாகவே மௌனமடைந்துவிட்டனர் போலவே தெரிகின்றது. புலிகள்-ஐ.தே.க. கூட்டுப் பற்றிக் கற்பனைக் கதைகளையெல்லாம் சிருஷ்டித்தவர்கள் இன்று வாயே திறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மறு பக்கத்தில் வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையொப்பமிட்டுத் தருமென நினைத்து ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க அணியினர், கோபம் உச்சந்தலைக்கேறிய நிலையில் ஏதோவெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தனித்துப் போட்டியிடவில்லை. அவருக்குப் பின்னால் சர்வதேச ஆதிக்கச் சக்திகள் அனைத்தும் நின்றன. இந்திய-அமெரிக்க உறவின் காரணமாக இந்தியாவும் இறுதி நேரத்தில் ரணிலுக்குப் பின்னால் நின்றதாகவே செய்திகள் வந்தன.

கத்தோலிக்க மதபீடம் உட்பட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் பின்னால் நின்றன. இவையனைத்தும் தமிழ்த் தரப்பிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தும் தமிழ்த் தேசம் தனது கொள்கை வழிநின்று மாறவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பகிஷ்கரித்தன. விடுவிக்கப்படாத பிரதேசங்களில் பல்வேறு அழுத்தங்களிலிருந்தும் கூட பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர். கிழக்கில் பகிஷ்கரிப்புப் பிரசாரம் குறைவாகவிருந்தது. அதேவேளை, அழுத்தங்கள் வலிமையாகவிருந்தன. ஆனாலும், பெரும்பான்மையோர் பகிஷ்கரித்தனர்.

தமிழ்த் தேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் வெளியழுத்தங்கள் காரணமாகவும், தமிழ்த் தேசப் போராட்டத்தினை அவர்கள் பார்க்கும் பார்வைக் கோளாறு காரணமாகவும் பகிஷ்கரிப்பினைக் கைவிடுமாறு கோரியிருந்தனர்.ஆனால், பகிஷ்கரிப்புப் போராட்டம் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பிரசாரம் செய்ய முயலவில்லை. இதனால், குடாநாட்டில் வாழும் கத்தோலிக்க மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், மன்னாரில் சிறியளவில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

கத்தோலிக்க ஆயர்களின் இந்தக் கருத்து பற்றி ஒரு சைவ முக்கியஸ்தர் என்னுடன் தொலைபேசியில் ஒரு மணி நேரமாக வாதாடினார். அன்று தொடக்கம் இன்று வரை தமிழ்த் தலைமைகள் உட்பட தமிழ்த் தேசிய சக்திகள் கத்தோலிக்க ஆயர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தயங்குகின்றனரென்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அவர்கள் செய்தால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், சைவப் பிரமுகரொருவர் இவ்வாறு செய்தால் எல்லோரும் திரண்டு தாக்க வந்துவிடுவார்களென்ற வகையில் அவரது கருத்துக்கள் சென்றன. தேசிய இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் சைவ-கிறிஸ்தவ முரண்பாடுகள் பற்றியே வாதம் சென்றதால் ஒரு கட்டத்தில் நான் தொலைபேசி உரையாடலைத் துண்டித்துவிட்டேன்.

கத்தோலிக்க ஆயர்கள் இந்த விடயங்களைப்பற்றிக் கவனத்திலெடுக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன்.

கத்தோலிக்க ஆயர்களென்றாலும் சரி, சைவ மதப் பெரியார்களென்றாலும் சரி தமிழ்த் தேசம் சம்பந்தமான விடயங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமானது. கிழக்கிலேற்பட்ட பிரதேசப் பிரச்சினைகள் போல மத முரண்பாடுகளை அவர்கள் தோற்றுவித்துவிடக் கூடாது. இந்த அக முரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நலனுக்குச் கீழ்ப்படுத்தி நட்பு முறையில் தீர்த்துக் கொள்வதற்கான மார்க்கங்களை அவர்கள் கண்டாக வேண்டும்.பிரதேச முரண்பாட்டின் விளைநிலமாக மட்டக்களப்பும்,மத முரண்பாட்டின் விளைநிலமாக மன்னாரும், சாதி முரண்பாட்டின் விளைநிலமாக குடாநாடும் இன்று இருக்கின்றன. இவ்வக முரண்பாடுகள் தமிழ்த் தேசத்தை, அதன் இருப்பினையழிக்கும் வெடி குண்டுகள். தமிழ்த் தேசிய சக்திகள் இவ்வெடி குண்டுகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை பற்றிச் சிறிதும் அக்கறையற்று இவற்றினை மட்டும் தூக்கிப் பிடிப்பவர்கள் இன்றும் நம் மத்தியிலிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் இம் முரண்பாடுகளெதுவும் இல்லையென நாம் பூசி மெழுகவும் கூடாது. கோட்பாட்டு ரீதியாக இம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அடித்தளங்களை நாம் கண்டாக வேண்டும். அதிகாரம் வந்ததன் பின்னர் இவற்றிற்கிடையேயுள்ள சமமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு முன்வரலாம்.தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சக்திகள் தமிழ்த் தேசத்தின் இராணுவ வலிமை பற்றித் தற்போது அதிகம் ஆய்வு செய்வதில்லை.தமிழ்ச் சமூகவமைப்புப் பற்றியும், அங்கு வலிமையாகவிருக்கின்ற அக முரண்பாடுகள் பற்றியுமே ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்திலுள்ள இடைவெளிகளைக் கண்டு அதற்கூடாக நுழைந்து தமிழ்த் தேசிய அரசியல் மையத்தை அழிக்கப் பார்க்கின்றனர். அக முரண்பாடுகள் பற்றிய குரல்களனைத்தும் யாழ்-சைவ-வேளாளப் பிரிவினரையே நோக்கியிருப்பதால், இது விடயத்தில் முன்கையெடுத்துச் செயற்படும் பொறுப்பு இவர்களுக்கேயுண்டு. தமிழ்த் தேசிய அரசியற் தலைமையினால் மட்டுமே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பகிஷ்கரிப்புப் பற்றிய ஆயர்களின் கருத்துக்கள், நான் முன்னைய கட்டுரையில் கூறியது போல இலங்கைத் தேசியத்திலிருந்து விடயங்களைப் பார்த்ததனால் ஏற்பட்டவொன்றுதான். இலங்கைத் தேசியத்திற்குள் நின்று விடயங்களைப் பார்ப்பதென்பது ஐம்பதுகளிலும், அறுபதுகளின் ஆரம்பத்திலும் முன்வைக்கப்பட்ட அரசியல். அது காலாவதியாகி நீண்ட காலமாகிவிட்டது. இன்று தமிழ்த் தேசம் இலங்கைத் தேசியத்திற்கு வெளியே நின்றுதான் விடயங்களைப் பார்க்கின்றது.

தமிழ் மக்கள் தற்போது தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை.மாறாக, தமிழர்களாக மட்டுமே பார்க்கின்றனர். சமஷ்டி கூட தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையல்ல. அது சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கேற்ற சமஷ்டி முறையினைச் சிபார்சு செய்தால், அதனைப் பரிசீலிக்கலாமென்ற நிலையில்தான் தமிழ்த் தேசம் இருக்கின்றது. அதன் பின்னர்தான் நாம் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் இருப்பது பற்றி யோசிக்கலாம். தற்போது எம்மால் தமிழர்களாக மட்டுமேயிருக்க முடியும்.

நாம் தமிழர்களாக மட்டும் இருப்பதற்காக இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து ஒவ்வொன்றாகக் கழன்று வருகின்றோம். தனியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்,தனியான நிர்வாகத்துறை, தனியான நீதித்துறை, தனியான காவல்துறை, தனியான முப்படைகளென்பன இலங்கையரென்ற அடையாளத்திலிருந்து கழன்று வந்த அம்சங்கள்தான்.

ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பையும் இக்கழன்று வரும் அம்சங்களிலொன்றாகவே பார்க்க வேண்டும். பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் கோட்பாட்டுப் பின்னணி இதுதான்.

தமிழர்கள் இலங்கையரென்ற அடையாளத்திற்கு மீளவும் செல்வது சிங்கள தேசத்தின் பணியேயொழிய எமது பணியல்ல. நாம் அதற்காக உழைத்துக் களைத்துத் தான் தமிழர்களாக மட்டுமிருக்க முடிவெடுத்திருக்கின்றோம். எனவே, சிங்கள தேசம் செய்ய வேண்டிய பணியினை தமிழ்த் தேசம் தன் தலையில் சுமந்துகொண்டு திரியக்கூடாது. ஆயர்கள் அந்தச் சுமையினைத் தாங்கள் சுமக்க முற்படுகின்றனர். ஏதாவது தகுந்த உத்தரவாதங்களுடன் சுமக்க முற்பட்டாலும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், எந்தவித உத்தரவாதங்களுமில்லாமல் சுமக்க முற்படுகின்றனர். இந்தப் போக்கு ஆயர்களிடம் மட்டுமிருக்கின்றதெனக் கூறிவிட முடியாது. வேறு பல, கொழும்பு நலனைத் தளமாகக் கொண்ட தமிழர்களிடமும் ஐ.தே.கட்சி தொடர்பாகப் பிரமையிலுள்ளவர்களிடமும் இருக்கின்றது. பகிஷ்கரிப்புப் போராட்டம் இது பற்றிய பாடத்தினைத் தமிழ்த் தேசத்திற்குத் தந்திருக்கின்றதென்றே நினைக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளரும் அவரைச் சுற்றியுள்ள உள்நாட்டு,சர்வதேசக் கூட்டமும், அவர் ஜனாதிபதியாக வருவதை விரும்பிய அரசு சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் மக்கள் வாக்களிப்பதை தடைசெய்துவிட்டனரெனக் கூக்குரலிடுகின்றனர். முன்னைய தேர்தலில் கள்ள வாக்குப் போடப்பட்டதெனக் கூறினர். இத் தேர்தலில் வன்முறை மூலம் வாக்களிப்பதைத் தடுத்துள்ளனரெனக் கூறுகின்றனர். மக்கள் ஒரு போராட்டத்தினை நடாத்தும்போது உதிரிகள் அதனைக் குழப்ப முற்பட்டால், குறைந்தளவிலான வன்முறையைப் பயன்படுத்துவது உலகப் போராட்டங்களில் வழக்கம். அவ்வாறான சில வன்முறைகள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த வன்முறையைத் தூக்கிப் பிடிப்பதால் போராட்டத்தின் அரசியல் மறைந்துவிடுமென எவரும் நினைத்துவிடக் கூடாது.

இந்தக் கூக்குரலில் அதிகமீடுபடும் கூட்டம் ரணிலுக்குப் பின்னால் நின்ற ஐரோப்பிய அமெரிக்க முகாம்தான். அந்தக் கூட்டம் ரணிலுக்கல்ல, தமக்களிக்கப்பட்ட சவாலாகவே இப்பகிஷ்கரிப்பினைக் கருதுகின்றது. வெற்றுக் காசோலையில் தமிழ்த் தேசம் கையெழுத்திட்டுத் தருமெனக் கனவு கண்டது ரணில் மட்டுமல்ல, இவர்களும்தான். தங்களுடைய அழுத்தங்களுக்கெல்லாம் ஒரு தேசமும், அதன் போராட்டமும் பணிந்துவிடுமென நினைத்தவர்கள் கோபம் உச்ச நிலைக்கேறிய நிலையில் புலம்பத் தொடங்கியுள்ளனர். எந்தத் தேசமும் இந்தச் சக்திகளுக்காகத் தன்னுடைய போராட்டத்தினைக் கைவிட்டது கிடையாது. வேண்டுமானால்,தற்காலிகமாகத் தோல்விகளைத் தழுவியிருக்கலாம். நிரந்தரத் தோல்வியை எந்தத் தேசமும் அடைந்துவிட முடியாது.

இந்தச் சக்திகளுக்குத் தமிழ்த் தேசம் "எம்மால் எதையும் செய்ய முடியும்" என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது. எங்களை ஒடுக்க நினைத்தால், நீங்கள் இங்கு வர முடியாதென்பதைக் காட்டியிருக்கின்றது. இந்தியாவும் முதலில் இவ்வாறு நினைத்துத் தமிழ்த் தேசத்தை ஒடுக்கப் பார்த்தது. இன்று இனப்பிரச்சினைக்குள், தான் நுழைய வழியில்லாமல் வழிதேடிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசத்தை ஒடுக்க நினைத்த இந்தியா இன்று முழு இலங்கையையுமே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று அதே நிலைக்கு ஐரோப்பிய முகாம் தள்ளப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில் தமிழ்த் தேசம் பகிஷ்கரிப்பென்ற பெயரில் எறிந்தது சிறிய கல்தான்.ஆனால், அக்கல் சர்வதேசச் சக்திகள் உட்பட ஸ்ரீலங்காவின் அனைத்து அணிகளின் நிகழ்ச்சி நிரல்களையும் குழப்பி விட்டிருக்கின்றது.
மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமேற்பட்டிருக்கின்றது. அது பண்டாரநாயக்க குடும்ப அணியாகவும், மகிந்த அணியாகவும் பிளவுபட்டிருக்கின்றது. அனுராவுக்கு முன்னர் கூறியதுபோல பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு ஒரு போட்டியாளராக இருக்கக் கூடாதென்பதற்காகவும் பாரம்பரிய இனவாதியான இரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதமராக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி. யினர் மிகவும் ஆடிப்போயுள்ளனர்.தாங்கள் வீணாகச் சிரமமெடுத்து உழைத்திருக்கின்றோமென அவர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். சர்வதேசச் சக்திகள் ஐ.தே.கட்சியுடனிணைந்து சமாதானச் செயற்பாட்டினை முன்னெடுங்களென மகிந்தவிற்கு அழுத்தங் கொடுத்து வருவதால் ஜே.வி.பி.யினர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் புலி ஐ.தே.க. கூட்டு என்ற பிரசாரம் நான் முன்னர் கூறியது போல கண்ணுக்கு முன்னாலேயே பிசுபிசுத்துப் போயிருக்கின்றது. இனிமேல் அவர்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலைக் கட்டியெழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களை ஒதுக்க முற்படுவார்களென்பது அவர்களுக்குத் தற்போது கொஞ்சங் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.

சர்வதேசச் சக்திகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது தடுமாறுகின்றனர். சமாதானப் பொறிக்குள் தமிழ்த் தரப்பினை மாட்டி பலவீனப்படுத்துவதுதான் அவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரல். பகிஷ்கரிப்பு அந்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுப்பை முழுமையாகக் குழப்பியுள்ளது. இன்று மகிந்தவினைப் பயன்படுத்தி அதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அந்தச் செயற்பாடு இலகுவானதாகவிருக்கப் போவதில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தேசம் தனது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான காலம் கனிந்து வருகின்றதென்றே நினைக்கின்றேன்.

நன்றி:- சுப்பிரமணியம்,தினக்குரல்