Wednesday, December 21, 2005

இந்தியப்பிரதமருக்கு வேண்டுகோள்

பலாலி விமான தளம்: இந்திய பிரதமருக்கு இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள்!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எதுவித இராணுவ உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். மாவட்ட இந்து ஆலய பரிபாலன சபைகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா படையினரது வலுவை அதிகரிப்பதற்கான தங்களது ஒத்துழைப்பு தமிழின அழிப்புக்கு வழிவகுக்கும்.
சிறிலங்காப் படையினரது பலாலி விமான ஒடுபாதையை விரிவாக்கவும் மேலதிக இராணுவ வளங்களை அளிப்பதற்காகவுமான உடன்படிக்கையை சிறிலங்கா அரசாங்கத்துடன் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டோம்.

இத் தகவலானது இன்னலுறும் தமிழ் மக்களுக்கு பெரும் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சர்வதேச அனுசரணையாளரின் ஒத்துழைப்புடன் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகையால் சிறிலங்கா படைத்தரப்பினரது அடாவடித்தனங்கள் அதிகரிப்பதுதான் அண்மைக்கால நிகழ்வுகளாகும். இதனால் தமிழ்மக்களின் சமாதானத்தின் மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுவிட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கபடமான போக்கு காரணமாக சமாதான முன்னெடுப்புகளும் தடைப்பட்டுவிட்டன.
தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்களது சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான வாழ்வுடன் சம்மந்தப்பட்டது.

எனவே, இத்தகைய
ஜனநாயகத்துக்கான போராட்டம் நியாயமானதும், நீதியானதுமானதாகும். அத்துடன் நீடித்த நிரந்தர சமாதானத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்ததை எவ்வகையிலேனும் ஒடுக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அரசாங்கத்தினால் தலைமை தாங்கப்படுகின்ற சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் முனைப்பாகும்.

சிறிலங்கா புதிய அரச தலைவர் பதவியேற்றதன் பின் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துவருகின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் திணிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதற்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படைத்தரப்பு அடாவடித்தனங்கள் சான்று பகிர்கின்றன.
அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது எதிர்ப்புணர்வு தம்மை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களாக உருவாகி வருகின்றன.
பெண்கள் மீதான முன்முறைகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் மீதான திட்டமிட்ட வகையிலான தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், அதிகரித்துவரும் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள், ஊடகவியாலாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

அத்துடன் அனைத்துலக மனித நேய ஒழுங்குவிதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
சிறிலங்கா அரசாங்கமானது சமாதானம் என்ற முழக்கத்தை முன்வைக்கும் அதே நேரத்தில் தமிழ்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை உருவாக்குவது சிறிலங்கா அரசாங்கத்தினது வஞ்சகப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

இந்த நிலையில் பலாலி விமான ஒடுபாதை விரிவாகத்துக்கான தங்களது ஒத்துழைப்பும், இராணுவ வள உதவிகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைப்பதானது தமிழ் மக்களை கவலையடைய வைக்கின்றது.
இந்தியாவுக்கும் இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கும் உள்ள உறவுகள் பன்நெடுங்காலமானவை.

இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் இங்கு வாழ்கின்ற தமிழ்மக்களின் உரிமைப் போராட்டங்களை புறம்தள்ளப் போவதில்லை என்பதே எமது எதிர்ப்பார்பாகும்.

நாம் இந்தியாவை எமது நேச சக்தியாகவே என்றும் கருதி வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இத்தகைய நட்புறவைச் சிதைத்து தமது பேரினவாத மேலாண்மையை நிலைநிறுத்த முயல்கின்றது. மிகவிரைவிலேயே தமிழின அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் உச்சகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே சிங்கள பௌத்த பேரினவாதம் எம்மீது திணிக்கவுள்ள பேரவலங்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் எவ்வகை ஆதரவோ, ஒத்துழைப்போ வழங்கக் கூடாது.
நாம் இந்திய மக்கள் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உயர் நிலைக்கு கொண்டு செல்ல தாங்கள் உரிய வகையில் செயற்பட்டுஇ தடைப்பட்ட நிரந்தர சமாதானத்திற்கான பாதையை மீண்டும் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

சிறிலங்கா பலாலி விமானத்தள விரிவாக்கத்துக்கான உதவிகளையோ, இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையோ வழங்க வேண்டாம் எனவும், தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.