Sunday, May 21, 2006

"உலகத் தமிழர் தலைவரும் ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பும்"

லங்கையில் அமைதி திரும்பி தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும். அதற்குரிய சகல விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது தடவையாகப் பதவியேற்றிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளதுடன், சமாதானத்தை ஏற்படுத்தத் தேவையேற்படின் தலையிடுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து முழு விபரத்தையும் அறிந்த பின்பு மத்திய அரசு தலையிடவேண்டிய தேவையிருந்தால் அது குறித்து வலியுறுத்துவோம் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதேதினம் இலங்கையின் வட,கிழக்கிலிருந்து 102 மக்கள் ஒரே தினத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்த வருட ஆரம்பத்திலிருந்து வட, கிழக்குப் பகுதியிலிருந்து 1019 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 20 வருடகாலமாக பாக்கு நீரிணையைப் பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் கடந்துசென்று தமிழ்நாட்டில் தஞ்சமடையும் வட, கிழக்குத் தமிழர்களின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டியிருந்தது. தற்போதும் 60 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய (யூ.என்.எச்.சி.ஆர்.) புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளியன்று வந்த 102 அகதிகளும் தமிழர் தாயகமான வட,கிழக்கில் மிகவும் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமையாலேயே படகுகள் மூலம் தமிழகத்தை நாடி வந்திருப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் ஜெனிபர் பகோனிஸ் ஜெனீவாவில் கூறியிருக்கிறார்.

`அகதிகளின் பயணம் அதிகரித்துவருகிறது. நிலைமையை நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்' என்றும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இலங்கை நிலைவரத்தை முழுமையாக அறிந்துகொள்ளவில்லையென தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் மத்தியில் அவதியுறும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவு ஆறுதலளிக்கும் வார்த்தையாகத்தானும் இல்லை.

`உலகில் எந்த மூலையில் வாழுகின்ற தமிழனும் துன்பப்படும்போது அவனுக்காக குரல் கொடுப்பேன்' என்று கலைஞர் வெளியிட்டுவந்த கருத்துகளை வெறும் அறிக்கைகள் என்று கருதாமல் தன் உள்ளுணர்வை வார்த்தைகளால் வடித்திருக்கிறாரே என்று பரவசப்பட்ட, தற்போதும் பரவசப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களும் உள்ளனர்.

இப்போது கலைஞருக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் 6 கோடி தமிழர்களின் தலைவராக மட்டுமன்றி இந்திய மத்திய அரசாங்கத்திலும் கலைஞரின் `அதிகாரபலம்' கணிசமான அளவில் உள்ளது. இந்த அதிகாரபலத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் இலங்கைத் தமிழர்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலமைச்சராக பதவியேற்றபின்பு முதற்தடவையாக கலைஞர் இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது கலைஞர் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு கூட்டுச்சம்மேளன முறைமையிலான தீர்வே சிறந்தது என்று கலைஞர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். வட,கிழக்கில் தமிழர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்திருந்ததாலேயே இந்தக் கூட்டுச்சம்மேளன முறைமையிலான அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தற்போ
து நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு சமஷ்டி முறையிலானது (Federal) என்று கூறப்பட்டாலும் அதனை முழுமையற்ற சமஷ்டி முறைமை (Quasi Federalism) என்ற அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பாரதத்தில் தற்போதைய அரசியலமைப்பு முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வைக் கொண்டதே கூட்டுச்சம்மேளன (Confederation) முறைமையாகும். இந்த முறைமையிலான தீர்வே வட,கிழக்கு தமிழர்களின் நெருக்கடிக்குத் தீர்வு தரும் என்று மனதார விரும்பும் கலைஞர் கருணாநிதி அதனை ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

ஒற்றையாட்சி முறைமைக்குள் தீர்வுகாண முடியாதென்பதை தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் தலைமைத்துவங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சமஷ்டி முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது மீண்டும் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தான் யாவும் என்று அதிகாரபீடம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வட,கிழக்கில் மோதல்கள் மோசமாக வெடித்துள்ளதுடன், தமிழகத்திற்கான `படகு அகதிகள்' படையெடுப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலைஞர் வெறுமனே வார்த்தைகளால் மட்டும் `இலங்கையில் தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும்' என்று கூறுவதுடன் நிறுத்திவிடாமல் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தனது செல்வாக்கு, அதிகார வரம்பெல்லைக்குள்ளேயே மேற்கொள்ள முடியுமென்பதே இலங்கையிலுள்ள குறிப்பாக வட, கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உலகத் தமிழரின் தலைவரெனக் கருதப்படுபவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும்.

நன்றி- தினக்குரல்

4 comments:

ஈழபாரதி said...

எதிர்பார்ப்புகள் நிறைவேற பிரார்திப்போம். பதிவுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி said...

//`இலங்கையில் தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும்' என்று கூறுவதுடன் நிறுத்திவிடாமல் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தனது செல்வாக்கு, அதிகார வரம்பெல்லைக்குள்ளேயே மேற்கொள்ள முடியுமென்பதே இலங்கையிலுள்ள குறிப்பாக வட, கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உலகத் தமிழரின் தலைவரெனக் கருதப்படுபவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும்.//

செய்வாரா கலைஞர்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

karikaalan said...

கருத்துக்கு நன்றி ஈழபாரதி.

தனது வாழ்வின் கடைசிப்பகுதியில்
தமிழக முதலமைச்சராகியிருக்கும்
கலைஞர் அவர்களுக்கு இந்தசந்தர்ப்பதினை விட்டால் இனியொரு சந்தர்ப்பம் வராது ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்கு பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?

கரிகாலன் said...

கருத்துக்கு நன்றி வெற்றி