Friday, August 11, 2006

"ஆனந்தவிகடன் தலையங்கம்"

மிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை அனுப்பிய இந்திய மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஆனந்த விகடன்" வார ஏடு தலையங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடன் தலையங்கம் வருமாறு:

சிங்கள போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் அளித்து வந்த பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி, அவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் காட்டிய பலமான எதிர்ப்பின் விளைவே இந்த இடமாறுதல்.
இலங்கை மண்ணில் மோதல்கள் நிகழும் இந்த நேரத்தில்... அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான உணர்வுகள் அலையடிக்கும் இந்த நேரத்தில்... தமிழ் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படியொரு பயிற்சி முகாமுக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு இவர்கள் உதவ மாட்டார்கள். கூட்டங்களில் அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களை அமைதிப்படுத்தவும்தான் இந்தப் பயிற்சி என்று மத்திய அரசு சொல்வது எடுபடாத சமாதானம்!

நல்லது நடக்கும்போதெல்லாம், மத்திய அரசிடம் வலியுறுத்தி இதை நாங்கள்தான் செய்ய வைத்தோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நடந்திருக்கும் இந்த நெருடலான சம்பவத்துக்குச் சொன்ன பதில்... எதிர்ப்புகள் எழுந்திருப்பதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசுக்கு இங்குள்ள உணர்வுகளைத் தெரிவித்து, பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டோம் என்பதே!

இந்தச் சூழ்நிலையில் இப்படியொரு பயிற்சி முகாம் தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றால், எங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமலே மத்திய அரசு இதை நடத்தியது மிகப் பெரிய தவறு என்று மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

மாநில உரிமைகள் பற்றிக் கால காலமாகக் குரல் கொடுப்பவர்கள், இப்போது அதைச் செய்யவில்லையே, ஏன்? என்று ஆனந்த விகடன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

G.Ragavan said...

மிகச் சரியான தலையங்கம்.

வெற்றி said...

//இந்தச் சூழ்நிலையில் இப்படியொரு பயிற்சி முகாம் தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றால், எங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமலே மத்திய அரசு இதை நடத்தியது மிகப் பெரிய தவறு என்று மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

மாநில உரிமைகள் பற்றிக் கால காலமாகக் குரல் கொடுப்பவர்கள், இப்போது அதைச் செய்யவில்லையே, ஏன்? //

நியாயமான கேள்வி. கலைஞரைப் பொறுத்த வரையில் அவர் ஆட்சியில் இல்லாத போது அவருக்கு தமிழுணர்வு, தன்மான உணர்ச்சி, மாநில உரிமைகள் எல்லாம் அதிகமாக இருக்கும். அவர் ஆட்சிக் கட்டிலில் ஏறினால் மேற் சொன்ன உணர்வுகள் எல்லாம் எங்கோ ஓடி மறைந்து விடும். அவரின் கடந்த கால நடைமுறைகளைப் பார்த்தால் இது நன்கு புரியும். பதவிக்காக எதையும் செய்யும் சாதாரண அரசியல்வாதி தான் கருனாநிதி.