Wednesday, June 21, 2006

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி!

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி மல்யுத்த களமாகியது சபா மண்டபம்

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை

கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி

கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.

ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை

ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.
அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?

ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?

விவாதம் கோரிய கரு ஜயசூரிய

இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் M.P மீது தாக்குதல்

இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.

இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.

அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.


ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்

இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.


தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன் M.P

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்

அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.


களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ

இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.

பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்

எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.

கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.
மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.

சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்

சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.

சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.

சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித

இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.

அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.

மீண்டும் சபை கூடியது


நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.