Saturday, August 19, 2006

பேனாவிடம் தோற்றுப் போனவர்கள் துப்பாக்கி.....

பேனாவிடம் தோற்றுப்போனவர்கள் துப்பாக்கிகளுடன் காதல் செய்பவர்கள்.


கோப்பாய் இராஜவீதியில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தின் களஞ்சியம் நேற்றிரவு 10.30 மணியளவில் ஆயுததாரிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டது. மாடிவீடு ஒன்றில் களஞ்சியம் அமைந்துள்ள இடத்துக்கு நான்கு ஆயுததாரிகள் சென்றனர். அப்போது குடாநாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயுததாரிகள் நால்வரும் கறுப்பு நிற ரீ-சேர்ட் அணிந்திருந்தனர். தமது வாய்களை கறுப்புத்துணியினால் கட்டியிருந்தனர்.

களஞ்சியங்களின் இரவுக்காவலுக்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரின் கண்களையும் கைகளையும் பின்னால் கட்டிய ஆயுததாரிகள், அவரைத்தூரத்தே போகுமாறு சைகை காட்டிவிட்டு களஞ்சியத்துக்கு தீ வைத்தனர். சத்தம் போட்டால் சுட்டுவிடுவோம் என்று சொல்லியே பாதுகாப்பு உத்தியோகத்தரைக் கட்டினர். வந்தவர்களில் ஒருவர் யாழப்பாணத் தமிழிலும் மற்றறொருவர் மட்டக்களப்பு தமிழிலும் கதைத்தனர். தீ சுவாலை விட்டெரிந்து சிறிது அணைந்த பின்னர் சுமார் 11:30 மணியளவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, நெருப்பை அணைக்கக்கூடாது எனவும் அணைத்தால் பின்னர் வந்து சுடுவதாகவும் கூறிச் சென்றனர்.

இன்று காலை 9 மணிக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தீ வைப்பு குறித்து முறைப்பாடு செய்தனர். பொலிசார் வந்து பார்த்துவிட்டு நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கூறினர். பொலிசார் களஞ்சியங்களை பார்வையிடச் சென்ற வேளையிலும் தீ எரிந்துகொண்டிருந்தது. இந்த உதயன் களஞ்சியத்தில் பத்திரிகை அச்சிடும்தாள், கணனிகள் மற்றும் எலக்ரோனிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பெறுமதி பல இலட்சம் ரூபாவாகும்.