Saturday, December 09, 2006

நான் ஒரு தடவை சொன்னா................

எனது மனதில் எழும் கருத்துக்களைப் மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்
வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.
அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்
தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)


இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்
தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று
நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)


மீண்டும் சந்திப்போம்.

சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.

சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்
இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க
நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம் பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.
சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்
பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ் நகரில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படையினரின் தடைகள்! -

(யாழின் மைந்தன்)/தினக்குரல்

யாழ்ப்பாண சமுதாயம் மூன்று சகாப்தமாக"போரின் வலி"யை தாங்கிய சமுதாயமாகவே இன்றும் உயர்ந்து நிற்கின்றது. காலம் முழுவதும் பசி,பட்டினி, சாவு போன்ற கொடுமைகளுக்கு முகம் கொடுத்து, இனத்தின் விடுதலைக்காக தன்னைக்காவு கொடுத்து வருகின்றது. யாழ்ப்பாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் எல்லாம், விடுதலையுணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கு அரசின் அடக்குமுறையால் நாளை என்ன நடக்கும் என்ற நினைவில் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால் தினம் தினம் வரும் செய்திகள் அவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அரசாங்கம், யாழ்ப்பாண மக்களுக்கான பிரதான வழங்கல் பாதையை மூடிவிட்டு அம் மக்களை பட்டினிச்சாவில் தள்ளியுள்ளது. அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்து அவர்களை சொந்த மண்ணிலே சிறை வைத்துள்ளது. உறவைப் பிரிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக ஏங்கி நீண்ட நாட்களாக கண்ணீர் வடிக்கின்றனர். காலை எழுந்தவுடனே பெட்டி படுக்கையுடன் இன்று கப்பல் பயணம் கிட்டுமா, விமானப் பயணத்துக்கு யாரை நாட வேண்டுமென பசி பட்டினியுடன் திரிவது சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. எது வேண்டுமானாலும் தருகின்றோம் எங்களை அனுப்பி விடுங்கள் என கெஞ்சிக் கேட்பது யாருக்கு கேட்கப் போகிறது.

அரசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை, உணவு மருந்து பரிசோதகர்கள் நிச்சயமாக வழங்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் பொருட்களை அரசாங்கத்துக்கு விற்பனை செய்பவர்கள் கொழும்பில் `குளுகுளு' அறைகளில் வாழும் யாழ்ப்பாண வியாபாரிகள் தான் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் காலம் காலமாக நாட்டரிசியை தமது மதிய உணவுக்கு பயன்படுத்தி வந்த கலாசாரம் அவர்களுடையது. தென்னிலங்கையில் ஒரு பிடி நாட்டரிசி கூட கிடைக்கவில்லையென்ற நினைப்பில், தரம் குறைந்த கோறா, சம்பா அரிசியையல்லவா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த அரிசிச் சோற்றை உண்டு பழகாத மக்களுக்கு தினம் தினம் வயிற்றோட்டத்தால் வாடும் நிலையே காணப்படுகின்றது.இதுவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை, தேயிலைத் தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையாக கிலோ முப்பது ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையாகும்.

பாதுகாப்பு பிரிவினருக்கு, பாவிப்பதற்கு மணப்புச் சவர்க்காரம் யாழ்ப்பாண மக்களுக்கு சொறி சிரங்குள்ளவர்கள் என காபோலிக் அமிலம் சேர்த்த லைபோய்தான் என்கிறார்கள். சாக்குக் கணக்கில் "சோயாமீற்" என தரம் குறைந்த உணவுப் பொருளே பங்கீட்டுக்கு என்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில், ஒரு போதும் சூரியா தீப்பெட்டியைத் தவிர வேறு எந்த தீப்பெட்டியையும் வாங்க மாட்டார்கள். காரணம் மற்றைய தீப்பெட்டிகள் பற்றாது என்பது நம்பிக்கை, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட தீப்பெட்டிகளோ இருபது குச்சுகள் கூட பற்றாது. ஆனால் அரசாங்கம் நானாவித பொருட்கள் தாராளமாக அனுப்புவதாக பிரசாரம் செய்கின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் லீற்றர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்ததால், அது கிடைக்குமா என நாய் போல் அலைந்து திரிவது எல்லோர் மனங்களையும் வருத்துவது யாருக்குத் தெரியும்.

குடாநாட்டில் அதிக மக்கள் நடமாடும் ஒரே நகரம் யாழ்ப்பாணம் தான். அதற்கும் முழுமையாக பாதுகாப்புப் பிரிவினர் வேட்டு வைத்து விட்டனர். முதலில் பிரதான வீதிகளில் இடைக்கிடை தடையைப் போட்டு மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர். எந்தவொரு வர்த்தக நிறுவனம் முன்னாலும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை நிறுத்தக் கூடாதென தடை விதித்தனர். உத்தரவை மீறியவர்களை தாக்கினர். இன்றைக்கு நகரமே சோபை இழக்கும் வகையில், திடீர் திடீரென யாழ்ப்பாண பஸ் நிலையத்தை புனரமைப்பதாகக் கூறி பேருந்து தரிப்பிடத்தை கழற்றி விட்டு பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் பண்ணைக்கு மாற்றப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது. இது நகருக்குள் நடமாடும் சகல மக்களுக்கும் ஆபத்து என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறார்கள். நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ மையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம். இது கோடிக்கணக்கான முதலீட்டை வைத்திருக்கும் நகர வர்த்தகர்களை தமது பொருட்களை நகரின் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு வழி செய்துள்ளது. அழுது புலம்புவதைத் தவிர வெள்ளம் வருமுன்னர் அணைகட்டுவது அவசியமானதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப்பாதையைத் திறக்க வேண்டுமென இணைத் தலைமை நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் கூடிய நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இந் நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாண சமுதாயம் முழுமுனைப்போடு செயல்பட்டது மட்டுமல்ல, அவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் பிரிவினர், இவ் வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட இரு மதகுருமாரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் விரோத உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். இம் மதகுருமார் உண்மையில் அப்படி நடந்து கொண்டனரா என விசாரணை நடாத்தி வருகின்றது. துன்பப்படும் மக்களுக்காக நீதியை நிலைநாட்ட மதகுருமார் செயல்படுவது தேச விரோத குற்றம் என யாழ்ப்பாண சமுதாயம் அழுதுபுலம்புகின்றது.
இதேவேளையில் யாழ்ப்பாண மாணவர் சமுதாயம் மீதும் கல்வியாளர்கள் மத்தியிலும் புதிதாக குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தவர்களை தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதை இந் நடவடிக்கை காட்டுகின்றது.அதிபர்கள், குடாநாட்டில் இடம்பெறும் அவலங்களுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு தோன்றி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களையும் தங்கள் வழிகாட்டலில் தான் செய்திகளை பிரசுரிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது உலகமே வெறுக்கும், மியன்மார் இராணுவ ஆட்சி முறைக்கு யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயகத்தை நேசிக்கும் யாழ். மக்கள் கருதுகின்றனர். குடாநாட்டில் விரைவில் "பத்திரிகை தணிக்கை" வரும் என்பதில் சந்தேகமில்லை. குடாநாடு பல தடவைகளில் செய்தித் தணிக்கைகளுக்குள் ஜனநாயகத்தின் குரலாக வெளிவந்த வரலாறு இருந்துதான் வந்துள்ளது.