Tuesday, February 06, 2007

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.

""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ்ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் புதிய சர்வதேச ""குரலாக'' திருமதி அடேல் விளங்குவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் அது குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் "த டெய்லி டெலிகிராப்' குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் திருமதி அடேல், தமது கணவர் அன்ரன் பாலசிங்கம் வகித்த பதவியை ஏற்றுப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அவரைக் கைது செய்யுமாறு ஸ்ரீ லங்காவின் ராஜதந்திரிகள் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் 57 வயதான திருமதி அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் நீண்டகால தீவிர ஆதரவாளர் என்பதாலும் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையிலும் கணவருடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவம் உள்ளவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருக்குக் குறிப்பிடத்தக்க இடமொன்று உண்டு என்று புலிகளுக்கு நெருங்கிய வட் டாரங்கள் கருதுவதாகவும் "த டெய்லி கிராப்' தெரிவித்துள்ளது.

உதயன்

No comments: