Tuesday, October 30, 2007

போரியல் தீவிரப் போக்கால் மோசமடையும் பொருளாதாரம்

நுராதபுரம் விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலி அணி நடத்திய அதிரடிப் பாய்ச்சலினால் அதிர்ந்துபோயிருந்த தென்னிலங்கையை, திடீரென வந்த பால்மா விலை அதிகரிப்புப் பற்றிய அறிவிப்பு மேலும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
போரியல் வெறிப் போக்கால் நாட்டின் பொருளாதாரத்தை மண்ணாக்கி வருகின்றது இந்த அரசுத் தலைமை. அதன் விபரீத விளைவுகளுக்கு முகம்கொடுத்து, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நெருக்குவாரத்துக்குள் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் பொதுமக்கள்.
ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை ஒரேயடியாக இருநூறு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த வாரம் அரசின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கு முன்னரே விலை அதிகரிப்பு அறிவிப்புகள் தம்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.

இனி, வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் புதிய வரி விதிப்புகள், விலை அதிகரிப்புகள் தாராளமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருபுறம் யுத்தத்துக்காகப் பெரும் தொகை நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது. மறுபுறம் அதே யுத்தம் பொருளாதார விருத்தியை வீழ்த்தி, வருமானத்தை முடக்கி, பொருளாதார நெருக்கடியை உருவாக்கி நிற்கின்றது. இவற்றுக்கு மத்தியில் புதிய வரிவிதிப்புகள், விலை அதிகரிப்புகள் என்று நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது சுமத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியேயில்லை. எனவே, வரவு செலவுத் திட்டத்தை ஒட்டியும் புதிய விலை அதிகரிப்புகள் வரும் என நம்பிக்கையாக நம்பலாம்.

இதே சமயம்,தொலைத் தொடர்புக் கட்டண (தொலைபேசிக்கட்டண) அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு என்று பல நிதிச் சுமை அறிவிப்புகள் அடுத்தடுத்துத் தொடர்ந்தும் வெளியாவதற்கு வரிசையாகக் காத்து நிற்கின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

நல்லாட்சி தவறி, ஊழலும், மோசடியும், லஞ்சமும் அரச நிர்வாகத்துக்குள் புரையோடிப் போயிருக்கின்றமையும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு அதல பாதாளத்துக்குள் வீழ்ந்தமைக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

இவ்வளவு குளறுபடிகளையும் "புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்ற ஏமாற்று நாடகத்தின் அரங்குகளினால் மூடி மறைத்துக்கொண்டு ஆட்சி வாகனத்தை ஓட்டுகின்றது அரசுத் தலைமை.
மிகவும் மோசமடைந்துவரும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு எப்படித் தாக்குப் பிடித்துப் பிழைத்து, மீண்டு, தப்பும் என்பதே தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களின் ஆச்சரியத்துடன் கூடிய வினாவாகவிருக்கின்றது.

கட்டுமட்டில்லாமல் எகிறிவரும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுத்து, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையாவது நிறைவு செய்து, எவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவது என்பது சாதாரண அப்பாவிப் பொதுமகனின் ஒரே வினாவாகவிருக்கின்றது. ஒரு வேளை கூட முழுமையாக உணவு அருந்தும் வசதியில்லாத "அன்றாடம் காய்ச்சி' நிலைக்குப் பல குடும்பங்கள் வந்துவிட்டன.
விலைவாசி அதிகரிப்புச் சுமையால் சமூகம் தடுமாறுகிறது என்றால், மறுபுறம் அதிகார நிர்வாகத் தவறுகளில் அதிருப்தி கொண்டுள்ள நாட்டு மக்கள் குறிப்பாகத் தென்னிலங்கை மக்கள் இந்த அரசுக்கு எதிராகத் தமது எரிச்சலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றார்கள். இதனால் அரச பாடசாலைகள் முற்றாகச் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழர் சார்பு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்படாததால், இந்த வேலைநிறுத்தத்தின் நேரடிப் பாதிப்பு வடக்கு, கிழக்கில் அநேகமாகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதேசமயம், சுகாதார சேவைத் தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.
அதேவேளை, மின்சாரசபை உட்பட பல அத்தியாவசியத் துறைத் தொழிற்சங்கங்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றன.
ஆட்சி, அதிகாரக் கையாள்கை தவறியதால் விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் சுமை உயர்வு, பண வீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்று நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அடிப்படை அங்கங்களும் வரிசையாகத் தளர்ந்து வருகின்றன.
தற்போதைய அரசின் யுத்தத் தீவிரப் போக்கு பல மோசமான பின்னடைவுகளையும், விளைவுகளையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வருவது அப்பட்டமாகப் புலப்படுகின்றது.

நாட்டுக்குப் பெரும் வருமானம் ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை, போர் விபரீதங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளின் வருகை ஏற்கனவே சுமார் இருபது வீதத்திலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. யால வனச் சரணாலயம் மற்றும் அநுராதபுர விமானப்படைத்தளம் ஆகியவை மீதான புலிகளின் வெற்றிகரத் தாக்குதல்கள் இந்தத் துறையை மேலும் மோசமாகப் பாதிக்கும் சூழ்நிலை தென்படுகிறது.
மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் கட்டையில் ஏறிப் படுக்கப்போகின்றது என்பது மெல்ல மெல்ல நிச்சயமாகி வருகின்றது.
இந்த மோசமான நிலைமைக்கு அரசை வழிப்படுத்திய "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம்பனியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

-sudaroli-

1 comment:

karuna said...

think about eelam ecconomic,. thanks