Saturday, February 10, 2007

"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து
வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி
லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது
பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று
பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்
எண்டு நம்புகிறேன்.

சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு
பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று
யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.
பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.

வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ரேடியோ கேட்க:-http://www.oruradio.com/

கொசுறு:-

எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை
பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு
பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்
7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து
உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.

ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே
கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய
பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப
ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை
நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்
போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........

Tuesday, February 06, 2007

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.

""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ்ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் புதிய சர்வதேச ""குரலாக'' திருமதி அடேல் விளங்குவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் அது குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் "த டெய்லி டெலிகிராப்' குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் திருமதி அடேல், தமது கணவர் அன்ரன் பாலசிங்கம் வகித்த பதவியை ஏற்றுப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அவரைக் கைது செய்யுமாறு ஸ்ரீ லங்காவின் ராஜதந்திரிகள் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் 57 வயதான திருமதி அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் நீண்டகால தீவிர ஆதரவாளர் என்பதாலும் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையிலும் கணவருடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவம் உள்ளவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருக்குக் குறிப்பிடத்தக்க இடமொன்று உண்டு என்று புலிகளுக்கு நெருங்கிய வட் டாரங்கள் கருதுவதாகவும் "த டெய்லி கிராப்' தெரிவித்துள்ளது.

உதயன்

Sunday, February 04, 2007

சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்

எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையேசந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்அவர்களின் உரையாடல் இருக்கும்.

எண்ணத்தில் உதித்து சில மாதங்களேஆன ,முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? சரி ,சரி கைதட்டியது போதும்.இன்றைக்கு அவர்கள் கதைக்கும் விடையம் அரசியலாக இருந்தாலும்தொடர்ந்து பல்வேரு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்..இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்.................................... என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.ஒரு பெயரை முன்மொழியுங்கள்.

அன்புடன் கரிகாலன்..

Photobucket - Video and Image Hosting



.சுப்புக்குட்டி:-வணக்கம் அம்மான்.

சுப்பு அம்மான்:-வணக்கம்டா மோனை.எங்க துலையாலையோ?

சுப்புக்குட்டி:-இல்லை அம்மான் சும்மா ஒரு தேத்தண்ணி குடிப்பம் எண்டு வந்தனான்.

சுப்பு அம்மான்:-இல்லையடா மோனை நீ அடிக்கடி அம்மான் அம்மான் எண்டு கூப்பிட எனக்கொரு விசியம் எல்லோ ஞாபகத்துக்கு வருது.அம்மான் எண்டு யாரை சொல்லுறது எண்டு தெரியுமோ. அந்த காலங்களில அப்பு,ஆச்சி ,குஞ்சிஅப்பு எண்டு கூப்பிட்ட காலங்களில தாயின்னரை சகோதரங்களை தான் அம்மான் எண்டு சொல்லுறது.அனால் இப்ப சிலதுகள் அம்மான் எண்டால்அது இது எண்டு கரடிவிட்டுக்கொண்டிருக்கினம்.

சுப்புக்குட்டி:- அம்மான் நீங்கள் சந்தடி சாக்கில எங்கேயோ அம்பு விடுறீங்கள் போல கிடக்கு.

சுப்பு அம்மான்:- அதை விடு மோனை.. என்ன மோனை புதினங்கள்?

சு.குட்டி:-எங்கடை ரணிலார் எல்லோ நேபாளம் போயிருந்தவராம்.

சுப்பு அம்மான்:-எட மோனை அவர் அங்க என்னத்துக்கடா மோனை போனவராம்.?எங்கடை அரசியல் வாதிகள் அங்கை எல்லாம் போகமாட்டினமே.

சுப்புக்குட்டி:-நேபாளத்திலே சண்டைஎல்லாம் முடிஞ்சு போச்செல்லே அம்மான்.அதுதான் அங்கை ஒரு மகாநாடாம் இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் மோதலின் பின்னரான பொருளாதார முகாமைத்துவம்எண்ட தலைப்பிலே.அதுக்கு தான் ரணிலை கூப்பிடவையாம்.

சுப்புஅம்மான்:-அடிடா எண்டானாம் புறப்படலையிலை.சரி,சரி அவர் அங்கை என்ன சொன்னவராம்?

சுப்புக்குட்டி:-நேபாளம் முன்னேற வேண்டும் எண்டால் நாடும் அதன் மக்களும் ஒற்றுமைப்படவேண்டும் எண்டும் நேபளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என்றும் வேற பல விசியங்களையும் சொன்னவராம்.

சுப்பு அம்மான்:- எனக்கெண்டா சிரிப்புதான் வருதடா தம்பி.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி... எண்டெண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே.தன்ரை நாட்டிலே,நாட்டையே சீரழிக்கும் இனப்பிரச்சனையையே தீர்க்க மனதில்லாதவர்கள் அடுத்த நாட்டுக்கு போய் அவர்களுக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா சிரிப்பு சிரிப்பு தான் வருது. ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லையடி பெண்ணே எண்டதுதான் எனக்கு ஞாபகம் வந்து துலைக்குது.

சுப்பு குட்டி:- கூப்பிட்டவர்களை தான் சொல்லவேணும்.அம்மான் நீங்கள் நீங்கள் சிரிப்பா சிரிக்க எண்டு சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது இவர் இப்படி வெளிநாட்டில இருக்க இவரின் கட்சியிலை இருந்து 17 பேர் எல்லோ கூண்டோட கட்சி மாறிட்டினம்.கட்சி மாறினதுமல்லாமல் எல்லாருக்கும் அமைச்சு பதவிகள் நாடே சிரிப்பா சிரிக்குது.

சுப்பு அம்மான்:- இப்ப இலங்கையின்னரை அமைச்சரவையயை பாத்தியே தம்பி 107 பேர்.2 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டுக்கு 107 அமைச்சர்கள் எண்டால் ,இனி அவயின்றை சம்பளம்,கிம்பளம் எண்டு எவ்வளவு செலவுகள் பாத்தியேடா மோனை. பதவியாசை எப்படி எல்லாம் மனுசரை ஆட்டுது பாத்தியோ தம்பி. முந்தின காலங்களிலே எல்லாம் தொண்டமானின்றை கட்சி மட்டும்தான் யார் ஆட்சிக்கு வரீனமோ அவரோடை கூட்டு வைக்கும்.அதிகாரத்தில் இருந்தால் தான் தனது ம்க்களுக்கு எதாவது? நன்மை செய்யலாம் எண்டு.இதிலே கண்டியோ ஆருக்கு நன்மை எண்டு சொல்லாமலே தெரியும் தானே.

சுப்பு குட்டி:-ஓம் அம்மான் இண்டைக்கும் அந்த மலையக மக்கள் கல்விஅறிவு பெறாமல் ,சரியான வீட்டு வசதிகூட இல்லாமல்,குடிக்கும்,சினிமாவுக்கும் அடிமையாக இருப்பதற்கே காரணமே மேற்படி தலைவர்கள் தான்

சுப்பு அம்மான்:-இப்படி இருந்த இலங்கையில் இப்ப பிரதான எதிர்க்கட்சியில் இருந்தே கட்சி தாவுறாங்கள் எண்டால் இலங்கை அரசியல் எப்படி சாக்கடையா போட்டுது பாத்திட்டியோ?இலங்கையிலே பெரும்பாலான அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள்,படித்தவர்கள் இருந்தும் அதிகார போதை அவங்களை எப்பிடி ஆட்டுது பாத்தியோ?இதில இரண்டு பேர் மகிந்தவை கடுமையா விமர்சித்தவை

சுப்புக்குட்டி:-இப்பிடி வர்றவைக்கு எல்லாம் பதவி குடுத்தால் மகிந்தற்றை கட்சிக்குள்ள பிரச்சனை வராதோ அம்மான்.சு.அம்மான்:-ஏன் வராது? இப்பவே புகைச்சல் கிளம்பிட்டுது எண்டு லேசுபாசா கதை வருது.ஜே.வி.பி காரங்கள் வேற முறுக்கிக்கொண்டு நிக்கினம் பாப்பம் என்ன நடக்குதெண்டு.சில வேளை இலக்சன் வந்தாலும் வரும் கண்டியோ.

சுப்புக்குட்டி:- சரி, அம்மான் வீட்டை போகவேணும் பிறகு சந்திப்பம் என்ன?சுப்பு அம்மான்:- ஓமடா தம்பி பிறகு சந்திப்பம் என்ன?
சு.குட்டி:- ஓமோம்