Thursday, February 22, 2007

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார் !!!

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.

இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.

ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.

மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.
இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.

விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.

அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.

இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.