Monday, October 15, 2007

இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகக் காத்திரமான விடயங்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை விஜயம் முடிவடைந்துவிட்டது.
எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை நிலைமை தொடர்பான தெளிவான பார்வை ஒன்றை ஆர்பர் அம்மையாரின் இந்தப் பயணம் மூலம் உலகம் தரிசிக்கக்கூடிய நல்லதோர் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.
இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நாவின் அவதானிப்பு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் ஐ.நா.உறுதியாக இருப்பதும்
அதற்கு இடமளிப்பது இல்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது என்பதும்
ஆர்பர் அம்மையாரின் கொழும்பு விஜயத்தின் முடிவின்போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டன.
இலங்கை விவகாரத்தைக் கண்காணிப்பதற்காக சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்பதிலும் அரசு உறுதியாக இருக்கின்றது.
மேற்படி அலுவலகம் திறப்பதைப் பிரேரிக்கும் விதத்தில் ஆர்பர் அம்மையார் தெரிவித்த கருத்துக்கு அதே பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அரசின் திட்டவட்டமான நிராகரிப்புப் பதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இலங்கை அரசின் சார்பில் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை உறுதியாகத் தெளிவுபடுத்தினார்.
அந்த மாநாட்டில் வைத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் ஆர்பர் அம்மையார், தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இங்கு நோக்கற்பாலது.
""மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் வெறும் தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றம் இருந்தால் மட்டும் போதுமானது என நான் நம்பவில்லை. மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் இதில் ஐ.நாவின் பங்களிப்பு உயர்ந்தளவுக்கு மேம்படுத்தப்படவேண்டும்.
""மனித உரிமை மீறல்கள் கட்டுமட்டில்லாமல் நடக்கின்றன. இவை அரசுக்கு எதிரான புலிகளின் வெறும் பிரசார உத்தியின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டாலும் கூட, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் அவற்றில் புதைந்திருப்பதை உணர முடிகின்றது.
""பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசரகாலச்சட்ட விதிகள் தொடர்பான இறுக்கமான ஏற்பாடுகள், சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நலிவு நிலைமை, குற்றமிழைத்தோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் விசேட சட்டவிலக்களிப்பு வசதிகள் போன்றவை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அபாய எச்சரிக்கையை ஏற்படுத்துவனவாக உள்ளன.
""ஊன்றிய கவனிப்புடன் கூடிய விசாரணைகள், குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துதல், அத்தகையோரைத் தண்டித்தல் போன்றவை தொடர்பாக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை கவலையைத் தருகின்றது.''
இப்படியெல்லாம் தமது இலங்கை விஜய முடிவில் ஆர்பர் அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
ஆர்பர் அம்மையார் தமது இலங்கை விஜயத்தை அடுத்து, கொழும்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து ஊன்றிக் கவனிக்கத்தக்க அம்சங்களாக வெளிப்பட்ட விடயங்களை இனிப் பார்ப்போம். அவை:
* மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று இலங்கை அரசு கூறினாலும், அவ்வாறு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டிய பல்வேறு சம்பவங்கள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளன.
* அவ்வாறு நிலுவையில் விடப்பட்டிருக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் போதுமானவையல்ல.
*குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படாத நிலைமை நீடிப்பது பெரும் குழப்பத்தைத் தருகின்றது.
இவையே ஆர்பர் அம்மையார் வெளிப்படுத்தும் முக்கிய விடயங்களாகும்.
ஏற்கனவே சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய முக்கிய தேசங்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைக் கையாண்ட நிரம்பிய அனுபவம் பெற்றவரே லூயிஸ் ஆர்பர் அம்மையாராவார்.
முன்னாள் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, அந் நாடுகளின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நடத்திய முன் அனுபவம் ஆர்பர் அம்மையாருக்கு நிறையவே உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தில் சிறந்த வழக்குத் தொடுநராகப் பணியாற்றிய ஆர்பர் அம்மையாருக்கு, இலங்கைக்கு உள்ளே இனப்பிரச்சினை ரீதியாகத் தமிழர் அடக்கி, ஒடுக்கப்பட்டு, அவலப் படுத்தப்படும் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது (அவருக்கு) ஒன்றும் அப்படிக் கஷ்டமான விடயமே அல்ல.
இந்தப் பின்னணியில்
இங்கு தாம் கண்ட உண்மைகளை சர்வதேச மயப்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் மேற்குலகு உட்பட்ட பெரும்பான்மை சர்வதேச சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்பர் அம்மையார் உதவி செய்வார்; உறுதியாக நடவடிக்கை எடுப்பார் எனத் தமிழர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.

நன்றி- சுடரொளி