Sunday, November 25, 2007

மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?





மிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை.

கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன் சமாதானத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்து முகமாக இலங்கையரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருந்த போதும் இலங்கையரசு அதனை உதாசீனப்படுத்தி பெரும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் முக்கிய சரத்துக்களை மீறி கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து கோடிக்கணக்கான ரூபா சொத்துகளை அழித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை பகுதிகளை ஆக்கிரமித்தது.

அதன் தொடர்ச்சியாக பல படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக வன்னி பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு சிலாவத்துறை பிரதேசத்தை ஆக்கிரமித்தது. தற்போதும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் படை நடவடிக்கைகளை தொடர்வதால் வன்னி முன்னரங்க பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இது தவிர விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களெனக் கூறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சில கப்பல்களை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்தனர். குடும்பிமலை ஆக்கிரமிப்பு, கப்பல்கள் மூழ்கடிப்பென இலங்கையரசு வெற்றி விழாக்களை கொண்டாடி முழுவதுமான ஒரு போரை முன்னெடுத்தது.

இலங்கையரசின் ஒவ்வொரு செயலுக்கும் விடுதலைப் புலிகளும் பதிலடி வழங்கினர். காலி துறைமுகம் மீதான தாக்குதல், கட்டுநாயக்கா, பலாலி விமானத் தளங்கள், கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதல்கள், விளாத்திக்குள அதிரடித் தாக்குதல், பம்பைமடுவில் கனரக ஆயுதங்கள் அழிப்பு, அநுராதபுரம் விமானத் தளம் மீதான கரும்புலிப் படையணித் தாக்குதல்களென இலங்கையரசுக்கு பேரழிவை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தும் தாக்குதல்கள், தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களென புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்க, யால வன விலங்கு சரணாலய தாக்குதல், திஸ்ஸமகராம தாக்குதல்களென தென் பகுதி கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையரசின் வலிந்த தாக்குதல்களுக்கே புலிகள் பதிலடி வழங்கி வந்த அதேவேளை இலங்கையரசின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களை சர்வதேசத்தினதும் சமாதானப் பேச்சுக்களுக்கான அனுசரணையாளர்களினதும் கவனத்துக்கும் கொண்டு சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கையரசு சீராக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டினர்.

ஆனால் இலங்கையரசு போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதான பாத்திரமும் தம்முடனான சமாதான பேச்சுக்களில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் இடம்பெறும் சமாதான செயலகத்துக்கருகில் வைத்து விமானக் குண்டு வீச்சு மூலம் படுகொலை செய்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக்குழுவின் தலைவர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த இலங்கையரசு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஒரு கொடிய பயங்கரவாதியை கொன்றொழித்துவிட்டதாக தீவிர பிரசாரம் செய்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட அதேநாள் அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, தமிழ்ச்செல்வன் படுகொலையே ஆரம்பமெனவும் இனி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தலைவர்களையும் பலியெடுப்போமெனவும் சூளுரைத்தார். இதேபோன்றே விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக எச்சரித்தார்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் உடனடியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவததாக அறிவிப்பார்களென்றே அனைவரும் எதிர்பார்த்ததுடன் தமிழ்ச்செல்வன் இழப்புக்காக பாரிய பதிலடியொன்றை மேற்கொள்வார்களெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இவை எதனையும் இன்றுவரை புலிகள் செய்யாதது பலரையும் சந்தேகப் படவைத்துள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலையின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்த விடுதலைப் புலிகள் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மௌனத்தை கண்டித்ததுடன் சமாதான அனுசரணையாளரான நோர்வே எவ்வித கருத்தையும் வெளியிடாதது குறித்து தமது வருத்தத்தையும் தெரிவித்ததுடன் நோர்வே தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார்.

நிலைமை இவ்வாறிருக்க அரசின் மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப் புலிகள் விரைவில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தவுள்ளனரெனக் கூறி தென்னிலங்கையில் பீதியைக் கிளப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தில் தமிழீழ பிரகடனம், தைப்பொங்கலில் தமிழீழ பிரகடனமென தினமும் ஒரு செய்தி தென்னிலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதேநேரம், சமாதானத்தை விரும்பும் நாடுகளின் அழுத்தம் இலங்கையரசு மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன இலங்கையரசின் போர் இயந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக தாராளமான இராணுவ உதவிகளை அள்ளி வழங்கிவருவதால் இலங்கையரசு போர் மூர்க்கம் கொண்டு வன்னி மீதான படையெடுப்புக்கு தயாராகி வருகிறது.

விடுதலைப் புலிகளும் தற்போது தற்காப்பு போரிலேயே ஈடுபட்டு வந்தாலும் பாரிய படை நடவடிக்கையொன்றுக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான சில முன்னேற்பாட்டு, ஒத்திகை சண்டைகளையும் புலிகள் நடத்தியுள்ளனர். முப்படைப்பலத்தை கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தம்மை தயார்படுத்திவிட்டே உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இலங்கையரசும் விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தயாராகிவிட்ட நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவீரர்தின உரையில் தமிழீழ பிரகடனமென இலங்கையரசும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகல் அறிவிப்பு வருமென சர்வதேசமும் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

தமது விடுதலைப் போராட்டத்தில் இதுவரை சுமார் 20 ஆயிரம் வரையான போராளிகளையும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துவிட்ட புலிகள் இனியும் பொறுமை காக்கமாட்டார்களென்ற கருத்து வலுத்துவரும் நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர் பாலகுமார் அண்மையில் நிகழ்த்திய உரையொன்றில் இனியும் நாம் போராளிகளை விதைக்க தயாரில்லை என்பதால் விரைந்து முடிவொன்றை எடுப்போமெனக் கூறியதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் பாரிய தாக்குதலொன்றை மிக விரைவில் நடத்துவார்களென்று இலங்கையரசும் எதிர்பார்ப்பதால் அதற்கு முன்பாக தாம் முந்திவிட வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ளது. அதனாலேயே பூநகரி மற்றும் மடுப்பகுதிகளை கைப்பற்றிவிடத் துடிக்கிறது. பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் ஆட்டிலறி பலத்தை முறியடிக்கவும் மடுப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டாடவும் இராணுவம் முயற்சிக்கின்றது.

இவ்வாறான ஏட்டிக்கு போட்டியான இராணுவ முனைப்புகளுக்கு மத்தியில் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனைக் கூறப் போகின்றார்? தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அறிவிப்பா? அல்லது வழக்கம் போலவே இலங்கையரசுக்கு இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பான கவலையுமா?

இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனவே இலங்கையரசுக்கும் சமாதான அனுசரணையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் பல இம்மாவீரர் தின உரையில் வெளிவருமென்பதில் சந்தேகமில்லை.

தாயகன்,தினக்குரல்