Sunday, December 02, 2007

தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு

போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது.

வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது.

தெற்கின் பாதுகாப்பென்பது வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களைப் பொறுத்ததே. வடக்கில் எந்த அழிவுகளைச் செய்தாலும் எவருமே கேட்கக் கூடாதெனக் கருதும் இனவாதிகள், தெற்கில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பயங்கரவாதத்தின் உச்சமென்கின்றனர்.

வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முகாம்களிருப்பதால் வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் மக்களின் இழப்பு தவிர்க்க முடியாததெனத் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த முயலும் அரசு, தெற்கில் மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலும் வர்த்தக பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் படைமுகாம்களிருப்பதை மறந்துவிட்டது.

கொழும்பு நுகேகொடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த வன்முறையிலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவரதும் குற்றங்களுக்காக ஏதுமறியாதவர்கள் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

பாதிக்கப்படுபவர்கள் எந்த மக்களாயிருந்தாலும் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது கோழைத்தனமானது. அவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதும் அப்படியொரு தாக்குதல் நடைபெற்றதா, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களே இவ்வாறான தாக்குதல் பற்றிய தகவல்களெனக் கூறப்படுவதும் மேலும் அப்பாவிகளை பழிவாங்கப் போவதற்கான செயல்களேயாகும்.

முழு அளவில் போர் தொடங்கிவிட்டது. சமாதானத்திற்கான வாய்ப்புகள் இனி சாத்தியப்படமாட்டாது. புலிகளைத் தடை செய்வதில் அரசு தீவிரம் காட்டுகிறது. வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறுவதற்கு முன் புலிகளை அரசு தடை செய்துவிட வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும்பாலும் சாத்தியப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் விசனமடைந்துள்ளது. இதனால், போர்நிறுத்த உடன்படிக்கையை நேரடியாக முறிக்காமல், புலிகள் மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவர்களைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி விடலாமென சில தரப்புக்கள் சிந்திக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்முறைகள் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகின்றது.

கடந்த 25 வருட காலப்போரில் புலிகளுக்கெதிராக துணிச்சலாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என அவரைப் புகழுவோர் தற்போது தெற்கில் அதிகம். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் கண்டுவிடக் கூடாதென விரும்புவோர் இராணுவத் தீர்வைத் தூண்டி வருகின்றனர்.

இனப்பிரச்சினை வேறு பயங்கரவாதப் பிரச்சினை வேறென அதற்கு வியாக்கியானம் கூறும் அவர்கள், பயங்கரவாதப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் கண்டுவிடலாமென விளக்கமும் கூற முற்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வை காணுமாறு அரசை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதென்பது ஈழத்தை உருவாக்குவதற்கு சமனென அவர்கள் விளக்கம் கூற முற்படுகின்றனர். இதனால், தமிழ் மக்களின் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக்கி புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டுமென இனவாதிகள் துடிக்கின்றனர்.

புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இனவாதிகள் கருதுகின்றனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலால் தென்பகுதி அதிர்ந்து போயிருந்தது. ஆனால், புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், இழந்த உற்சாகத்தை அவர்கள் மீளப்பெற்றதுடன் புலிகளின் ஏனைய தலைவர்களையும் இவ்வாறு அழித்துவிடலாமென்ற நப்பாசையில் உள்ளனர்.

இதனால், வன்னியில் தினமும் விமானத் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் ஆழ ஊடுருவும் படையினரின் கிளேமோர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. வடக்கே அனைத்து தடைகளையும் விதித்துவிட்டு அங்கு நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை அரசு முழு உலகுக்கும் மறைத்து வருகிறது.

தெற்கில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களும் மிகப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுகிறது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக்கி வருகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அவை பற்றி மூச்சும் விடுவதில்லை. இதனால், தென்னிலங்கை மக்களுக்கு அங்கு தினமும் நடைபெறும் கொடூரங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. முற்றாகவே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

வடக்கு - கிழக்கில் தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். யுத்தமென்ற பெயரில் வடக்கே தினமும் தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் குண்டுத் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றின் தாக்கம் சொல்லில் உணர்த்தப்பட முடியாது. நேரில் அனுபவிக்கும் மக்களுக்கே அதன் தாக்கம் புரியும்.

இதைவிட கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கில் மட்டும் விமானங்கள் ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. கிபிர் மற்றும் மிக் விமானங்கள் வீசும் ஒவ்வொரு குண்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டன. ஒவ்வொரு குண்டும் குறைந்தது ஒரு வீட்டையாவது தரைமட்டமாக்கும். இன்று வரை ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெறும் பூமி வடக்கு - கிழக்கு என்பதால் அங்கு மட்டும் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்பது என்ன நியாயம்? இதே தாக்குதல்களில் ஒன்று,இரண்டு தெற்கில் நடைபெற்றால் எப்படியிருக்குமென்பதை இன்று வரை சிங்கள மக்கள் எவருமே உணரவில்லை. இதனால்தான் தெற்கில் சிறிய குண்டுவெடித்தால் உலகம் முழுவதற்கும் மரண ஓலம் எழுப்பப்படுகிறது.

அதேநேரம், புலிகளை எந்தளவு தூரம் ஆத்திரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு ஆத்திரப்படுத்தி அவர்களை வன்முறைகளில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்பதில் அரசும் இனவாதிகளும் தீவிரம் காட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், விமானப் படையினரின் துல்லியமான செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. வழமைபோல் வன்னியில் குண்டுகளை வீசியபோது எதேச்சையாக ஏற்பட்டதொன்றென்பதை அனைவரும் அறிவர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதான முயற்சிக்கே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதாக தென்பகுதி மக்கள் கூட உணர்ந்தபோது, தமிழ்ச்செல்வனை எந்தளவில் அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்குறித்து அரசும் இனவாத ஊடகங்களும் மிக மோசமாகப் பிரசாரம் செய்தன. தங்கள் தரப்புடன் சமாதானம் பேசியவர், தங்களுடன் இனியும் சமாதானம் பேச இருந்தவரெனக் கூடப் பார்க்காது அவரை அரசு மிகவும் கேவலப்படுத்தியது.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று, அவரை கொல்லப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ சபதமிட்டார். அடுத்த மாவீரர் தினத்தில் உரையாற்ற அவர் இருக்கமாட்டாரெனவும் கூறி புலிகளை எந்தளவுக்கு சீண்ட முடியுமோ அந்தளவுக்கு சீண்டினார்.

மாவீரர் தினமன்று வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் ஆற்றும் மாவீரர் தின உரையை எவருமே கேட்கக் கூடாதென்பதற்காக, ஊடக நிலையமென்றும் பாராது அன்று மாலை `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது 12 குண்டுகள் வீசி அந்த நிலையம் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனாலும், பிரபாகரனின் உரையை முழு உலகமும் கேட்டது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் புலிகளை ஆத்திரமூட்ட முயன்று பார்க்கிறார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போமென்றும் அவ்வாறு உயிருடன் பிடிக்க முடியாது, இராணுவ நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டால் அவரது உடல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ புலிகளிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் பிரபாகரனின் உடலை இந்தியா கேட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைப்போமென்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இவ்வாறெல்லாம் கூறி அவர்களை சினமுறச் செய்து அதன்மூலம் அவர்கள் ஏதாவது வன்முறையில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கில் அரசு செயற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், கடந்த காலங்களிலெல்லாம் இவ்வாறான ஆத்திரமூட்டல்களை புலிகள் சந்தித்தவர்களென்பதால் உரியவர்கள் மட்டுமே இதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பார்களென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையெனக் கூறி வடக்கில் தமிழ் மக்கள் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை முகமாலையுடன் அரசு மூடியது. தற்போது வன்னிக்கான பாதையை மூடியதுடன் மட்டுமல்லாது மதவாச்சியுடன் ரயில் சேவையை நிறுத்தி வடபகுதிக்கான போக்குவரத்தையே அரசு முடக்கியுள்ளது.

ஏற்கனவே, யாழ்.குடா மக்களை குடாநாட்டுக்குள் முடக்கிய அரசு இன்று வடபகுதி மக்களை முழுமையாக முடக்கியுள்ளது. தென்பகுதியின் பாதுகாப்புக்காக வடபகுதியை அரசு முழுமையாகத் தனிமைப்படுத்தியுள்ளது. தெற்கை முதன்மைப்படுத்தியே நாட்டின் நலன்கள் அனைத்துமிருப்பதை இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு உணர்த்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இதனடிப்படையிலேயே செயற்படுகின்றது.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த ஐ.நா.வும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன. வன்முறைகளை கண்டிப்பதில் கூட சர்வதேச சமூகமும் ஒரு வரைமுறைக்குள் தான் நிற்கின்றதென்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என உலக நாடுகளிடமிருந்தெல்லாம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு இவற்றை வைத்திருப்பது சமாதானம் பேசவல்ல. படையினருக்கு ஏற்படும் இழப்புகளால் படைகளை விட்டுத் தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் படைகளுக்குச் சேருவோரின் தொகையும் குறைவடைந்து வருவதால் இனிமேல் போர்த் தளபாடங்களையே அரசு பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர். வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும்.

-விதுரன்- thinakkural.