Sunday, October 26, 2008

சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது,

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இதேவேளை, ஜேர்மன் மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.
தமிழ்வின்.

வைகோ கைது: கலைஞரின் உபாயம்

சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது.

அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகைகளான தினமலர், ஹிந்து ஆகியவையே தமிழகத்தில் பிராமணியத்தின் எச்சமாக உள்ள 4 அம்சங்களாகும். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் என்றால் இந்தப் பிராமண ஆதிக்கப்பீரங்கிகள் மட்டுமேதான் என்ற நிலை இருந்தது. அதாவது தமது ஆதிக்கத்தில் வாசகர்களை வைத்துப்பூட்டி வைத்து பிராமண மேலாதிக்க நிலையை பேண இவர்கள் கடுமையாக முயன்றனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் என அடுக்கடுக்காக தோன்றிய சீர்திருத்தவாதிகள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறியலாயினர்.

மிரண்டுபோன பார்ப்பனியம் தமிழகத்தின் பார்ப்பனர்களால் இயலாததை சாதிக்க கர்நாடகத்திலிருந்து இறக்குமதியான பார்ப்பனியமான ஜெயலலிதாவையும் அவரது சினிமாவையும் பயன்படுத்த முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இன்றைய நிலையில் ஏற்கனவே இனி ஒருபோதுமே ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வரமுடியாத அவலம் உள்ளது. இது பார்ப்பனியத்தால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.

அப்படியானால் இருதடவை தேர்தல்களில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றாரே அது எப்படி என்ற கேள்வி எழலாம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆள்வது தானே வழமை என்ற கேள்வியையும் கேட்கலாம். மாறி மாறி ஆள்வது என்பது இதுவரை நடந்தது என்னவோ உண்மைதான். இனிமேல் அது நடக்கவே போவதில்லை என்பதும் உண்மையே.

காரணம் 1991 இல் ஜெயலலிதா வென்றது ராஜீவ் கொலையில் அள்ளுண்டே. 2001 இல் வென்றது காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரித்ததால் ஆகும். அந்த தேர்தலில் தி.மு.க.வானது பிஜேபியுடன் கூட்டணி கொண்டதால் சகல நடுநிலைவாத சக்திகளும் தி.மு.க.வை வெறுக்கத் தொடங்கினர். வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் தி.மு.க.பிஜேபியுடன் உறவு கொண்டது.

நாஸ்திகர்களான தி.மு.க.இவ்வாறு செய்தது பல மட்டங்களில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. வீரமணி, நெடுமாறன், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தமிழறிஞர்கள் என பலரும் தி.மு.க.வுக்கு பாடம் கற்பிக்க சபதம் எடுத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட்களோ தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியை உறுதியாக அமைத்துக் கொடுத்தனர். இவற்றின் ஒட்டு மொத்தப்பலனே 2001 தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியாகும். மற்றப் படி ஜெயலலிதா அந்த தேர்தலில் வெல்வார் என அவர்கூட நம்பியிருக்கவில்லை. பிஜேபியின் மதவாதத்தை சகிக்க முடியாத முற்போக்கு சக்திகள் எல்லாம் தமது பிராமண எதிர்ப்பை தற்காலிகமாக கைவிட்டு; ஜெ;விடம் சரண் புகுந்தனர்.

இப்போதைக்கு அவசரம் மதவாதத்தை ஒழிப்பதே. பிராமணர்களை அழிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இவர்கள் கருதினர். தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகைகள், திரையுலகில் உள்ள முற்போக்கு சக்திகள் சகலரும் பிஜேபியை ஒழிக்கும் ஒரே நோக்கத்துக்காக ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவர் இரண்டாம் முறையாக ஆட்சிபீடமேறிய பின்னணி இதுவே. மற்றப்படி ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த 2 தடவையுமே அவரது சொந்தக்காலில் வெல்லவில்லை என்பதே உண்மை. உண்மையைச் சொன்னால் இந்த 2 தடவையும் வென்ற 160,134 ஆகிய தொகுதிகளை விட 1989 தேர்தலில் ஜெயலலலிதா தனித்து நின்று பெற்ற 32 தொகுதிகளும் மிக சிறந்த சாதனையாகும். காரணம் அப்போது அரசியலுக்கு அவர் புதிது. ஜானகி ராமச்சந்திரன் அணி, மூப்பனாரின் காங்கிரஸ், தி.மு.க.கம்யூனிஸ்ட் என பலமுனைப்போட்டியில் தனித்து நின்று காங்கிரசையும், ஜானகியையும் முந்தி 2 ஆவது இடத்தைப் பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார். அவரது இந்த சாதனையை பொறுக்கமுடியாத தி.மு.க.வினர் சட்டசபையில் அவரைத் துகிலுரிந்து அநாகரிகம் புரிந்தமை வரலாறு. தி.மு.க.விற்கு தான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது மூலம் பெரும் தவறு புரிந்தோம் என்பது விளங்கியுள்ளது.

இனி ஒரு காலத்தில் கலைஞர் இருக்கும் வரை யாராவது பிஜேபியுடன் தி.மு.க. கூட்டணி வைக்க விரும்பாது. அத்தகைய பாரிய இழப்பு கலைஞருக்கு ஏற்பட்டது. தான் தனித்து சொந்தக்காலில் 2 முறையும் ஆட்சிபீடமேறவில்லை என்பது அம்மாவுக்கும் உறுத்தலாக உள்ளது. எனவே கூடுமானவரை தனித்து நிற்கவே ஜெ சமீப தேர்தல்களில் முயன்றுள்ளார். தான் தனித்து வெல்லமுடியும்.

தன்னுடன் சேர்வதால் ஏனைய கட்சிகளுக்கே இலாபம் என்பதை நிரூபிக்க அவர் பல தடவை முயன்றுள்ளார். ஆனால் தோற்றுத்தான் போயுள்ளார். இந்தப் பின்னணியில் இன்று தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலை நிச்சயமாக தமிழகத்தின் பார்ப்பனர்கட்கு விரோதமானது என்பது தெளிவு. இந்த எழுச்சியை அடக்க ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகள் வெகுவாக முயன்றன. ஹிந்து பத்திரிகைகள் சமீபத்தில் மாலினி பார்த்தசாரதி என்பவர் எழுதிய ்சுதமிழ் ஆதிக்க வெறிஎன்ற கட்டுரைக்கு எதிர்ப்புக் காட்டி ஈழ அனுதாபிகள் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஹிந்துவின் 3000 பிரதிகள் தீயிடப்பட்டன. சோவும் ஜெயலலிதாவை அவசரமாக சந்தித்து அவரை ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். மறுபுறம் சுப்பிரமணியசாமி அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறார். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் தேர்தல்களில் சிங்கள பேரினவாதக் கட்சிகள்தான் வெற்றி பெறும்.

மாற்று அபிப்பிராயம் கொண்ட விக்ரமபாகு கருணாரட்ன போன்ற சிறுபான்மை அனுதாபிகளான நடுநிலையாளர்களால் வெல்லவே முடியாது. காரணம் இனவாதம் எடுபடுவதுதான். அதேபோல்தான் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் ஜனதாகட்சி தனித்துநின்று செல்லமுடியாது. விக்ரமபாகுவும் சுப்பிரமணியசாமியும் பெரும்பான்மையான வாக்காளர்களினால் அங்கீகரிக்கப்படாத ஒரே வகையினை சேர்ந்தவர்கள். ஒரே வித்தியாசம் விக்ரமபாகு யதார்த்தமான கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதுதான். சுப்பிரமணியசாமி விடும் அறிக்கைகளை இலங்கைப் பேரினவாத சிங்களப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் பிரசுரிக்கின்றன. அப்படியானால் விக்ரமபாகு கருணாரட்ன வெளியிடும் அறிக்கைகளையும் முதல் பக்கத்தில் ஏன் பிரசுரிக்கக்கூடாது? விக்ரமபாகு இலங்கைத் தேர்தலில் தோற்பது சரியாயின் சுப்பிரமணியசாமி இந்திய தேர்தலில் தோற்பதும் நியாயமே. இதேவேளை, இந்திய நாட்டின் இறைமைக்கு விரோதமாக பேசியதாக வைகோவும் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்றவாரம் கைதுசெய்யப்பட்டனர்.

இது கலைஞரின் பழிவாங்கல் எனக் கூறப்பட்டாலும் அ.தி.மு.க.வையும் ம.தி.மு.க.வையும் சங்கடத்தில் ஆழ்த்தவே கலைஞர் பொறி வைத்துள்ளார் என கருத முடிகிறது. புலி ஆதரவாளரை கைதுசெய் என காட்டுக்கத்தல் போடும் அம்மாவுக்கு பதிலளிக்கும் விதமாக "முதலில் உன் வீட்டுகள் இருக்கும் புலியை கைதுசெய்கிறேன்" என கலைஞர் பதிலளித்துள்ளார். இப்போது ஜெயலலிதா வாயடைத்துப் போயுள்ளார். மேலும்,ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது வேறு, புலிகட்கு ஆதரவு என்பது வேறு என்பதை கலைஞர் தெளிவாக விளக்கியுள்ளார். "ஈழத் தமிழரும் புலிகளும் ஒன்றேதான் வேறல்ல" என்பது உள்ளத்தில் இருந்தாலும் வெளியே அதனைச் சொல்ல இந்திய சட்டத்தில் இன்றைக்கு இடமில்லை. எனவே, அவசரப்பட்டு புலிகட்கு வெளிப்படையாக ஆதரவு காட்டுவது சமயோசிதமல்ல. முதலில் ஈழத் தமிழரையும் தமிழக மீனவர் பிரச்சினையையும் முன்வைத்து போராட வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை அழுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் புலி ஆதரவு, புலியை ஆதரியாது ஈழத் தமிழரை மட்டும் ஆதரிப்பது, இலங்கைஅரசை எதிர்ப்பது என்ற மூன்று அம்சங்கள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் தவறை பலர் புரிகிறார்கள். உதாரணமாக, இலங்கையின் பேரினவாதிகள் ஜெயலலிதா புலி எதிரி என்பதால் தமது ஆதரவாளர் என்று முடிவு கட்டுகின்றனர். ஜெயலலிதா புலி எதிரி சரிதான்.

அதற்காக அவர் நூறு வீதம் இலங்கை பேரினவாதத்தினதும் அரசினதும் ஆதரவாளர் அல்ல. கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறவேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளார். அது இலங்கைக்கு சார்பான கொள்கையா என்ற கேள்வியை சிங்களப் பேரினவாதிகளிடம் கேட்க வேண்டும். "எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்" என்ற கோட்பாடு எல்லா இடத்திலும் பொருந்தாது. எனது எதிரியின் எதிரி எனக்கும் எதிரியாக இருக்கலாம். இதுதான் இலங்கை அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையோன நட்பின் நிலை. கலைஞர் தான் ஈழத்தமிழருக்கு மட்டுமே ஆதரவு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். புலிக்கு ஆதரவாக அவர் இருந்தாலும் அதை வெளியே சொல்ல சட்டத்தில் இடமில்லை. மற்ற கட்சியினர்க்கும் இதே புத்திமதியை கலைஞர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியும் இதேவிதமாக கருத்துக் கூறியுள்ளது. தமிழகத்தின் புத்திஜீவிக் கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பா.ம.க. இவ்வாறு கூறுவது சரியே. ஆனால், பிராமண ஆதரவு தமிழக பத்திரிகையான தினமலர் "பா.ம.க. ஈழப்பிரச்சினையில் திடீர் பல்டி" என தலையிட்டு இதனைக் கொண்டாடியுள்ளது. உண்மை அதுவல்ல, பா.ம.க ஈழப்பிரச்சினையில் எந்த பல்டியும் அடிக்கவில்லை. கொள்கை மாறவுமில்லை. சட்டத்திலும் மாட்டிக் கொள்ளாது சமயோசிதமாக நடந்துள்ளது; அவ்வளவே.

ஊடகத்துறை தனது தனிப்பட்ட நலன்களை முன்னிட்டு வாசகர்களை தவறாக வழிநடத்துவதற்கு இந்த தினமலர் தலைப்பு சிறந்த உதாரணமாகும்.

அபிஜித்
thinakkural

Monday, July 21, 2008

குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் !

குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும்

“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல…….

இதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுது கொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி. பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த விதப் புதினமும் இல்லை.

மே மாதம் 24ம் திகதி மதியம் ஒரு மணி ஏ-9 நெடுஞ்சாலையின் 155 வது மைல்கல்லில் மேற்காகப் பிரிந்து செல்லும் கிரவற் தெருவிற் பயணிக்கிறோம். குன்றும் குழியுமான அந்தப் பாதையில் ஒரு திடீர் நெரிசல். பாரதிபுரம் பாடசாலையை நோக்கிப் பார்த்திருந்தவர்களும் இறுகிய முகங்களோடு விரைகின்றனர்.

நாங்கள் அங்கே சென்று சேர்கையில் இருபுறமும் தென்னங்குருத்துக்களான சோகத்தைக் குறிக்கும் தோரணங்களாலும் கறுப்புத் துணியிலான கொடிகளாலும் நிறைந்திருந்த தெருவழியே இரண்டு திறந்த வாகனங்களில் எடுத்துவரப்பட்டிருந்த அந்தப் 16 உடலப் பேழைகளும் பாடசாலையின் முகப்பிலே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

மெய்யாகவே திரண்டிருந்தவர்களின் கண்ணீரிலே தோய்ந்து போயின பேழைகள். பாடசாலைக்கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. மீளக் கட்டியெழுப்பப்படும் அக்கிராமத்தின் இதயமாக விளங்கும் பாரதி வித்தியாலய வளாகம் ஊரவர்களாலும் அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களாலும் நிறைந்திருக்கிறது. அனைவரது முகங்களிலும் ஒருவித பதைப்பைக் காணமுடிந்தது பரஸ்பரம் அவர்களால் ஒரு மெல்லிய தலையசைப்பை மட்டுமே மறுக்காகப் பரிமாறிக்கொள்ளக் கூடியதாகத் தம்மை இறுக்கிக் கொண்டிருந்தனர் பிரமுகர்கள். உடைத்துவிடக் கூடாதென்பது அவர்களது பிரயத்தனம்.

மறுபுறம் ஊரோ மனமுடைந்தும் வயிறெரிந்து புலம்பிக் கொண்டிருந்தது “பதினாறும் போகுதே” “பதினாறும் போகுதே” எனப் பாரதிபுரமே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தப் பொழுதில்;

முறுகண்டி அக்கராயன் வீதியில் மே 23 ம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிற் பலியான பாரதிபுரம் மக்கள் 16 பேரினதும் உடலங்கள் மக்களின் இறுதியஞ்சலிக்காக கிளி. பாரதி வித்தியாலத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது காணப்படாத மேற்படி சூழலாகும்.

இது உடலுழைப்பையே நம்பியிருக்கக் கிராமம் இப்படித்தான் படிப்படியாக மீளக் கட்டியெழுப்பப்படுவது நாங்களும் எங்கட பாடசாலைச் செயற்பாடுகளைப் படிப்படியாக ஒழுங்குக்குக் கொண்டு வந்து மாணவர்களின்ர உளவியலைப் படிக்கிறதுக்கேற்ற மாதிரி நிமிர்த்திக்கொண்டு வரேக்க நிகழ்ந்திருக்கிற இந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்துப் போட்டுது.

ஏனென்டா ஒரு சிறிய கிராமத்தில் ஓரே நாளில் 16 பேர் இல்லாமற் போறதென்பது தாங்கிக் கொள்ளக்கூடிய விடயமல்ல. எங்கட ஐஞ்சு மாணவர்கள் இதில பலியாகியிருக்கினம். ஒரு மாணவர்களின்ர பெற்றோர் பலியாகியிருக்கினம். கொல்லப்பட்டவர்க்ள் எல்லோருமே எங்கட பிள்ளையின் இரத்த உறவுகள். எங்கட பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கிற அம்மாவும் இதில செத்துபோனா.

எங்கட ஒவ்வொரு வகுப்பிலயும் இந்தச் சம்பவம் ஏதோ ஒரு பாதிப்பை இழப்பக் குடுத்திருக்கிறது. ஓண்டில் வகுப்பில் படிச்ச பிள்ளை செத்திருக்கிறது. இல்லாட்டி செத்த பிள்ளையின்ர உறவினரைப் பறித்திருந்த பிள்ளையோ படிக்கினம். இதால எல்லா வகுப்புமே எல்லாப் பிள்ளைகளுமே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கினம்.

இதிலயிருந்து எங்கட பிள்ளைகளை மீட்டு அவையளைத் திரும்பவும் கல்வி கற்கிற மனநிலைக்குக் கொண்டுவாறதெண்டது ஒரு மிகப்பெரிய சவால் என்று தனது பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் தீவிரத்தை விளக்கினார் திரு.க.இராஜேந்திரம்.

ஒரு கிளைமோர் வெடிப்பு ஒரேயொரு கிளைமோர் வெடிப்பு ஏற்படுத்திய தாக்கமே இது இப்படி ஒன்றல்ல பல கிளைமோர்கள் மக்களை அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி வெடிக்கும் பகுதியாக வன்னி மாறிவருகிறது.

இது நடந்து வெகுசில நாட்களிலேயே மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் வெடித்த மற்றொரு கிளைமோர் மேலும் 06 பொதுமக்களைப் பலியெடுத்து இவர்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புதுர்ர் நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களாவர். இங்கேயும் இழப்பு குடும்பம் குடும்பமாக பலியெடுத்தும் காயமடைய வைத்ததுமான நெஞ்சையுலுக்கும் பதிவாகவே இருக்கிறது.

10 வயதான மு.ஜனனி வைத்தியசாலைக் கட்டிலிற் கட்டுபோட்ட காயங்களுடன் பேதலித்துப் போய் இருக்கிறாள் அவளது தந்தை கணபதிப்பிள்ளை முருகதாசும் நான்குவயது தம்பி தனுசனும் வைத்தியசாலைப் பிரேத அறையிலே கிடக்கின்றார்.

ஜனனிக்கு அருகே வ.சித்திரா தனது ஒன்றரை வயது மகள் சுஜித்தனைக் கைகளிலே தாங்கியபடி இந்தப்பிரமை பிடித்தாற்போல் இருக்கிறார். இவரது கணவர் ஐ.வசந்தகுமார் கூடப் பயணித்த முருகதாசுடனும் தனுசனுடம் வளர்த்தப்பட்டிருக்கின்றார். ஒற்றை வெடிப்பிலே தந்தையாரை இழந்துவிட்ட இரண்டு குழந்தைகளும் கணவனை இழந்துவிட்ட ஒரு இளந்தாயும் தாங்களும் காயங்களுடன் உறைந்து போய் இருக்க நேர்ந்திருக்கிறது.

இப்படியான உயிருறையும் நிகழ்வுகளை அடிக்கடி காணும் துயரம் கிளிநொச்சி மல்லாவி முழங்காவில் மருத்துவமனைகளின் வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் நேர்கிறது.

ஆனால் இவை பற்றிய வெளியுலகக் கவனம் எந்தளவுக்கு இருக்கிறது குறைந்த பட்சம் கொழும்பின் ஊடகங்களிற்காவது இவை தெரியுமா இந்த அவலங்கள் எந்தளவுக்கு அவற்றாற் கவனத்துக்கெடுக்கப்படுகின்றதா?

இநதக் கேள்விக்கான பதிலாக உதட்டை பிதுக்கித்தான் முடியுமேயன்றி வார்த்தைகளால் பதிலளிப்பது விரயமாகும் ஏனென்றால் உட்பக்கங்களில் வரும் ஒரு சிறிய செய்தியாக இவற்றை இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. கொழும்பில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் சில இவற்றை புலிகளின் தாக்குதல் எனவும் கூறிவிடுகின்றன. இந்தப் போக்கு பல இணையத்தளங்களையும் பற்றிக்கொண்டிருக்கிறது.

கொழும்பின் படைத்தரப்போ பிலாத்துவதாகக் கைகழுவிடும் வார்த்தைகள் சிலவற்றை நிரந்தரமாக வைத்திருக்கிறது அது புலிகளின் பகுதி அங்கு நடக்கும் தாக்குதல்களுக்குப் புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் எங்களுடைய ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளையன்றி வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை என்பன இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் வாக்குமூலங்கள்.

பன்னாட்டுத் தரப்புகளுக்கோவெனில் இவை கண்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட வன்னியிற் செயற்படும் நிறுவனங்கள் உட்பட தமது பக்கஞ்சாரா நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொண்டு அரசியலிற் தலையிடாமற் பேசாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்கின்றன.

இது வன்னியின் நிலமை

எந்தத் தாக்கத்திற்கும் சமறும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்பது நியூட்டனின் விதி. கடந்த பல மாதங்களாகத் தென்னிலங்கையிலும் இந்த விதி செயற்படுவது போலத் தெரிகிறது. அதாவது பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் இழப்புக்களுக்காகக் கண்ணீர் வடித்த கதையும் இழப்புக்களின் ரணமும் தென்னிலங்கையாலும் இரத்தமும் சதையுமாக உணரப்படுகிறது.

ஆனால் தென்னிலங்கையில் ஏற்படும் இழப்புக்களும் இழப்புகளின் வலியும் மனித நேயத்தின் கண்ணோட்டத்திலான சித்தரிப்புக்களாக ஊடகங்களில் பெருக்கெடுக்கின்றன. செய்திகள் படங்கள் செய்திக் கட்டுரைகள் பிச்சர்கள் லெட்டர்கள் என ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுப் பல வாரங்களுக்குப் பின்னும் இந்தச் சித்தரிப்புகள் தொடருகின்றன.

தோரத்தான் வேண்டும் இழப்புக்களின் வலி எவ்வளவுதான் சித்தரித்தாலும் அற்றுபோய்விடுமா என்ன ஆனால் இந்த வலி என்பது அனைவரும் பொதுவான ஒன்று என்பது உணரப்பட வேண்டும்.

துரதிஸ்டவசமாக அந்த உணரப்படுதல் என்பதும் அதனது வெளிப்படுத்தல் என்பதுதான் தமிழர்களைப்பொறுத்த வரையிற் கானல் நீராகவே இன்னும் இருக்கின்றது உண்மையான துயரம் அதுதான்.

கணபதிப்பிள்ளை முருதாஸ் கொல்லப்படும்போது ஒருவித தாக்கமும் முதியாள்சாவே பொடி அப்புகாமி பலியாகும்போது விளைவும் ஏற்படுவதில்லையே.
ஆனால் கொழும்பு ஆட்சிப்பீடம் அவ்வாறுதான் பார்க்கிறது கணபதிப்பிள்ளை முருகதாஸ் சென்ற கார் கிளைமோர் தாக்குதலுக்கு ஆட்படும்போது அது புலிகளின் பகுதியில் வெடித்தது எனவும் தமது படைபினர் புலிகளைத் தவிர வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை எனவும் கூறும் அதே அரசாங்க வட்டாரங்கள்தான கொழும்புக் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கைகளிற் குண்டு வைத்தவர்கள் யாரென்பது குறிப்பிடவில்லையெனத் தூற்றுகின்றன

அரசின் இந்தப் போக்குத்தான் இப்போது எல்லாளன் படையின் எச்சரிக்கையாக வந்து முடிந்திருக்கிறது வன்னியில் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுமாயின் உடனடி பதிலடி தென்னிலங்கiயில் நடத்தப்படும் என்கிறது அந்த எச்சரிக்கை.

இது குறித்து மனிதாபிமானங்களும் கொழும்பின் விசுவாசிகளும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். பொதுமக்களைத் தாக்குவோம் எனப் பகிரங்கமாகக் கூறுவது கீழ்த்தரமான போக்கின் வெளிப்பாடு என அவர்களின் மனக்கொதிப்பும் மனிதநேயமும் ஜனநாயக விழுமியங்களும் வர்ணிக்கின்றன.

ஆனால் பாரதிபுரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் இது போலப் பலப்பல வன்னியில் ஊர்களிலும் ஆறாக ஓடும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களின் இந்த மனிதநேய நோக்குக்கு உட்படுவதில்லை.

உண்மையில் பாரதிபுரத்திலும் பிலியந்தலையிலும் ஓடுவது ஓரே கண்ணீரே. இரண்டிலும் வேறுபாடுகள் நிச்சயம் கிடையா ஆனால் ஒன்று நிற்கும்போது அடுத்ததும் நிற்கமுடியும்

குரூரமானதேயெனினும் இதுதான் யதார்த்தமாகிவிட்டிருக்கிறது.

எஸ்.வில்லவன்

Sunday, June 08, 2008

வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு

தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது.

கடலுக்குச் சென்ற தமது உறவுகள் மீனோடு திரும்புவரென எதிர்பார்த்து குடும்பங்கள் பசியோடு காத்திருக்க மீன்பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை கடற்படை சுறாக்களால் குதறப்பட்டு பிணமாகக் கரை ஒதுங்கும் சம்பவங்கள் இன்று தமிழக கடற்கரையோர கிராமங்களில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

தமிழக மீனவர்களின் இந்த அவலநிலை கண்டு அவர்கள் குடும்பங்களின் பரிதாப நிலை பார்த்து தமிழக அரசியல்வாதிகளைத் தவிர தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் துடித்துப் போய் கொதித்துப் போய் நிற்கின்றார்கள். ஆனால், அரசியலுக்காக பிணத்தையும் மணமுடிக்கும் கீழ்ப்புத்தி கொண்ட அரசியல்வாதிகள் மட்டும் இதனைப்பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை.

அண்மைய சில நாட்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது. அதுதவிர பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் நீதிமன்றங்களில் கூட ஆஜர்படுத்தப்படாமல் இலங்கை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் இந்த அவலநிலைக்கு தமிழக ஊடகங்களே முக்கிய பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகளை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் சிறுவிடயங்களைக் கூட ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிடுவதன் பலாபலனையே தமிழக மீனவர்கள் அனுபவிக்கின்றனர். பரபரப்புக்காகவும் பணத்துக்காகவும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு இனத்திற்கே சாவுமணி அடிப்பதை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல், இரசாயனப் பொருட்கள் கடத்தல், பற்றறிகள் கடத்தல், எரிபொருள் கடத்தல், தமிழக கடற்பரப்பில் நுழைந்த விடுதலைப்புலிகள் கைது, தமிழகத்திற்குள் கடல்வழியாக புலிகள் ஊடுருவல், தமிழக மீனவர்கள் புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றனர் என்று எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை தமிழக ஊடகங்களில் தினமும் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான செய்திகள், தகவல்களாலேயே தமிழக மீனவர்களை தமது பரமவிரோதிகளாக இலங்கை கடற்படையினர் கருதுகின்றனர். தமிழக மீனவர்களை கடற்பரப்புகளில் வைத்து சுட்டுக் கொல்வதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களை, அவர்களின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமென இலங்கை கடற் படையினர் கருதுகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது தான் வளர்ந்துவரும் ஒரு போராட்டக்குழுவல்ல. அவர்கள் 30 வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். விமானப்படை, கடற்படையை வைத்துள்ளவர்கள். இலங்கைக் கடற்படையின் யுத்தப் படகுகளுக்கும் அதிவேக படகுகளுக்கும் ஒப்பான கடற்கலங்களை வைத்துள்ளவர்கள். கப்பல்களில் ஆயுதங்களை தருவிப்பவர்கள் .

அவ்வாறானவர்கள் சிறிய மீன்பிடிப்படகுகளில் ஆயுதங்களை கடத்துகிறார்கள். அவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் தமிழக செய்தியாளர்களால் மட்டுமே எழுதக்கூடிய விடயம். 25 லீற்றர் டீசல் ஒருபடகில் கொண்டு செல்லப்பட்டால் கூட அது விடுதலைப்புலிகளுக்கு கடத்தப்பட்டதாக இந்த தமிழக ஊடகங்கள் கண்டுபிடித்துவிடும்.

இந்த ஊடகங்களின் ஆதாரமற்ற செய்திகளால் தாம் பல சிக்கல்களை எதிர்கொள்வதுடன், சில சம்பவங்கள், வழக்குகளின் போக்கையே தமிழக ஊடகங்கள் மாற்றி விடுவதாக சில உயர் பொலிஸ் அதிகாரிகளே விசனப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு. புலிகளுக்கெதிராக செயற்படுவதாக நினைத்துக் கொண்டு தமது உறவுகளுக்கே இந்த தமிழக ஊடகங்கள் கொள்ளி வைக்கின்றன.

கடந்த வாரம் கூட கச்சதீவுக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவரான தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த இலங்கை கடற்படை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பிவந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவரின் படுகொலையையடுத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டது. மீனவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மருத்துவமனை முன்பாக திரண்ட மீனவர்கள் இலங்கை கடற் படைக்கெதிராகவும் தமிழக அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழக அரசோ மத்திய அரசோ எந்தவிதமன நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோவும் அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதாவும் மட்டுமே இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். வைகோ வழக்கம் போலவே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

ஆனால் இந்த மீனவர் படுகொலை தொடர்பில் சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் ஹம்சா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவரொருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி எமது கவனத்தை ஈர்த்துள்ளது.இது தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம்.

இலங்கை கடற்படையினரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த போது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவி செய்துள்ளதாக தமிழக மீனவர்களே பலமுறை நன்றியுடன் கூறியுள்ளனர்.

எனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்குள்ள நற்பெயரைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை துணைத்தூதுவர் ஹம்சாவின் அறிக்கை கடைந்தெடுக்கப்பட்ட பொய் என மீனவர்கள் கூறுகின்றனர். ஹம்சா இலங்கைக்கான துணைத் தூதுவரல்ல.அவர் ஒரு உளவாளி. தமிழக மீனவர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்கள் கொல்லப் படுவதற்கு முக்கிய காரணமானவர் இந்த ஹம்சா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் பல சூழ்ச்சிகளை இங்கு செய்து கொண்டிருப்பவர் இந்த ஹம்சா.

எம்முடன் வந்த மீனவர் சந்தியா இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் எமது கண்களால் பார்த்தோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இலங்கை கடற்படையே காரணம். வேறு எவரும் எம்மை சுடுவதில்லை. இலங்கை கடற்படை இப்படுகொலைகளை செய்வதை பல முறை எமது மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலில் இந்த இலங்கைத் துணைத்தூதரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அந்த மீனவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களையும் கைது செய்யப்படும் மீனவர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை துணைத் தூதுவர் சொன்ன கருத்து மிகப்பெரும் நகைச்சுவையென்கிறார் பல நாட்களாக இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மீனவரான அருளானந்தம்.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அருளானந்தம் கூறுகையில்;

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலும் கடற்படைத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு கொடூர சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர்.

கடந்த மே 9 ஆம் திகதி இலங்கை கடற்படை எம்மை பிடித்துச் சென்றது. எம்மில் 19 பேர் இருந்தோம். அங்கு சிறையிலடைத்தனர். கண்களைக் கட்டி உணவு வழங்காமல் சித்திரவதை செய்தனர். 6 நாட்களாக சாப்பாடு தரவில்லை. இதனால் மயக்கமடைந்தோம். பிளாஸ்டிக் பையில் பெற்றோலை ஊற்றி எமது முகத்தை அதனால் மூடி சித்திரவதை செய்தனர். துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டினர்.

கடுமையாகத் தாக்கினர். போனவர்கள், வந்தவர்கள் எல்லாம் எம்மை மோசமாகத் தாக்கினர். நாம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களெனக் கூறியே எம்மைத் தாக்கினர். புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் படகுகளை காட்டிக்கொடுத்தால் எம்மை விட்டு விடுவதாகக் கூறினர்.

இதற்கிடையில் இந்தியக் கடற்படை எம்மைத் தேடுவதாக அறிந்து மன்னார் நீதிமன்றில் எம்மை மே மாதம் 15 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். பின்னர் 26 ஆம் திகதியே நீதிமன்றம் எம்மை விடுதலை செய்தது.

எம்மைப் போல் பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். எனவே, அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவர்களை இந்திய கடற்படை சுடுவதில்லை. அவர்களை கைது செய்து மிகவும் கௌரவமாக நடத்தி ஒரு சில தினங்களுக்குள் நீதிமன்றில் கூட ஆஜராக்காமல் விடுதலை செய்துவருகின்றது. ஆனால், இலங்கை கடற்படை தமிழக மீனவரை சுட்டுக் கொல்கிறது. கைது செய்து சிறைகளில் அடைக்கிறது. கொடுமைப்படுத்துகிறது. இதனைப்பார்த்தால் இந்தியா வல்லரசா? இலங்கை வல்லரசா என்ற சந்தேகம் தமக்கு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதும் அதனை தமிழக, மத்திய அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் வரை தொடரத்தான் போகின்றது.

எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக மக்கள் எதனையாவது செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும்.

கலைஞன்/thinakkural

Saturday, May 03, 2008

ஆனையிறவுக்கான விலை!!


டந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முப்படையினரும் இணைந்த ஒரு நடவடிக்கையாக அது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் கொழும்பில் இருக்கும் படைத்துறை வட்டாரங்களில் நிலவுவதாகத் தெரிகிறது. கிழக்குத் தேர்தல் முடிந்த கையோடு அங்கிருந்தும் சில அணிகளைத் தருவிக்கும் வாய்ப்புக்களையும் சிலர் கோடி காட்டுகின்றார்கள்.

உத்தரவுகளும் விருப்பங்களும் எப்படி அமைந்தாலும் கள யதார்த்தத்திற்கு அமைவாக திட்டமொன்றைத் தீட்டுவதில் சிங்களப் படைத் தளபதிகள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளப் போவது உறுதி.

குறிப்பாக, கிளாலி-முகமாலை-கண்டல்-நாகர்கோவில் என்று கிட்டத்தட்ட 12 கி.மீ. நீளமான அந்த முன்னரங்கு, பட்டாலியுன் கணக்கில் சிறிலங்காப் படையினரைத் தின்று தீர்த்திருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு வெளியே நின்று திட்டமெதையும் தீட்டிவிட முடியாது.

இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை எந்தவொரு தனியிலக்கிற்குமான சமர்களிலும் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட, ஆனையிறவிற்காக அதன் உள்ளும் புறமும் நிகழ்ந்த மோதல்களே சிறிலங்காப் படைத்தரப்பிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதன் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற இயல்பும் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் இருதரப்பினருக்கும் உள்ளவை என்றே கொள்ளல் வேண்டும்.

ஆகாயக் கடல் வெளிச் சமரில் விடுதலைப் புலிகள் குறித்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் சிங்களப் படைகளைக் கொன்றிருந்தார்கள்.

அதன்பின்னர் ஓயாத அலைகள் நடவடிக்கைத் தொடரில் 2,000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிய போது சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிச் நாம் சொல்லவேண்டியதல்லை.

ஓற்றைச் சமரில் ஒரு டிவிசனையே இழுத்து மூடியது சிறிலங்கா தரைப்படை என்ற தகவல் மட்டுமே அச்சமரில் சிறிலங்கா தரப்பினர் அடைந்த இழப்பின் ஏனைய பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் போதுமானது.

அதன்பின்னர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த 'அக்கினிச் சுவாலை" நடவடிக்கையின் இழப்புக்கள் உலகப் பிரசித்தம் பெற்றன என்றால் மிகையில்லை. இறந்த தொகையைவிட இரு மடங்கானோர் களத்திற்குத் திரும்ப முடியாயாதபடி காயப்பட்டனர்.

அச்சமரில் சிறிலங்காப் படையினர் வாங்கிய அடியின் வேகம் சில காலத்திற்கு பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை எதையும் நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தில் பல மாதங்கள் கழிந்த நிலையிலேயே அந்த டிவிசன்கள் மீண்டும் முழுமையாக்கப்பட்டன.

பின்னர் நாலாம் கட்ட ஈழப்போரில் 2006 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நிகழ்ந்த மோதல்களிலும் நூற்றுக்கணக்கில் படையினர் கொல்லப்பட்டார்கள். ஒக்ரோபர் மாதச் சண்டையில் பலத்த இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அந்த முன்னரங்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பெருமெடுப்பிலான படையெடுப்புக்களை ஒத்திப்போட்டிருந்தது சிறிலங்காப் படைத்தரப்பு.

இப்போது, 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் அங்கே படையெடுத்து கையைச்சுட்டுக்கொண்டு நிற்கிறது சிங்களப்படை. இருநூறு சிப்பாய்கள் வரை உயிரிழந்தார்கள், கிட்டத்தட்ட அதே அளவானோர் களத்திற்குத் திரும்ப முடியாதபடி காயப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆனையிறவிற்காக மீண்டும் விலை கொடுப்பதற்குச் சிங்களம் கங்கணங் கட்டி நிற்பதன் மூலகாரணங்களை அலாதியானவை.

இந்தப் படைச் செயற்பாடுகளின் அவசரமும் அதில் ஏற்பட்ட இழப்புக்களை ஒழித்து மறைக்க முயன்ற விதமும் படைய நோக்கங்களை விட அரசியல் உள்நோங்கங்களையே கோடிகாட்டுகின்ற என்று கொழும்பு ஊடகங்களில் பத்திற்கு ஒன்பது விழுக்காடானவை கருத்து வெளியிட்டிருக்கின்றன.

அதை உண்மையாக்குவது போலவே வடபோரரங்கில் மீண்டும் மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆயினும் ஆனையிறவின் மீது போர் தொடுப்பதற்கான படைய நோக்கங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.

சிறிலங்காவின் படைய வரலாற்றில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவமாக ஆனையிறவு இழக்கப்பட்டதையே சொல்லவேண்டும். ஆனையிறவு இழக்கப்பட்டதால் குடாநாட்டின் முக்கிய கேந்திர நிலையமான பலாலி வான்தளம் புலிகளின் கணை வீச்செல்லைக்குள் வந்துவிட்டது மட்டுமல்லாது, குடாநாட்டின் மீது புலிகள் படையெடுப்பைச் செய்ய வசதியான பல கரையோர நிலைகளும் புலிகளின் வசம் வந்துவிட்டன.

ஆனையிறவு புலிகளின் கைகளிலே வீழ்வதற்கு முன்பாக அங்கு வருகை புரிந்த பன்னாட்டுப் போர் விற்பன்னர்கள், அந்தத் தளத்தை வீழ்த்துவது புலிகளுக்குச் சாத்தியமில்லை என்று கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சத்தியம் செய்திருந்தார்கள்.

அவர்கள் மதிப்பீட்டு அறிக்கை வழங்கி ஒரு வருட காலத்திற்கு உள்ளேயே, வரலாறு அவர்களைப் பொய்யர் ஆக்கியது.

அந்தத் தளத்தை வீழ்த்துவதற்காகப் புலிகள் பயன்படுத்திய படைவலு, படைக்கலச் சக்தி மற்றும் உத்திகள் என்பவை பற்றிய முழுமையான ஆய்வொன்றை சிறிலங்கா படைத்தரப்போ அல்லது எந்தவொரு பன்னாட்டு விற்பன்னரோ இதுவரை செய்து முடித்ததாகத் தெரியவில்லை.

இப்போது நடைபெறுவதைப்போல தமக்குள்ளே ஆள் ஆளுக்குக் கரிபூசுதல் மற்றும் அதிகாரிகளுக்குக் காற்றை இறக்கி விடுதல் போன்ற செயற்பாடுளிலேயே சிறிலங்கா படைத்தரப்பு அப்போதும் இறங்கியது. பன்னாட்டு விண்ணர்கள் வாய்களை இறுக மூடிக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில்தான், அக்கினிச் சுவாலை, 2006 ஒக்ரோபர் மாத நடவடிக்கை மற்றும் 2008 ஏப்ரல் மாத நடவடிக்கை என்பவற்றைச் செய்துவிட்டு நெட்டுயிர்த்து நிற்கிறது சிறிலங்கா படைத்தரப்பு.

செறிவான காலாட்படை நகர்த்தல், பல கிலோ மீற்றர்கள் அகலமான முனையை ஏக காலத்தில் திறத்தல், வரலாற்றுச் சாதனை படைக்கும் அளவிற்குச் செறிவான கணைவீச்சு, கவசப் படைகளின் செயற்பாடு, இப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட மக்-இன்பன்றியின் பங்கேற்பு, இரவு நகர்வுகள், வான்படை ஆதரவு என்று ஈரூடக முயற்சி போன்ற ஓரிரு உத்திகளைத் தவிர இன்னோரன்ன எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டது சிறிலங்காப் படைத் தரப்பு.

இதைவிட, நாலாம் கட்ட ஈழப்போரில் சிறிலங்கா தரப்பு பெரிதும் நம்பியிருக்கும் படைக்கலச் சக்திப் பயன்பாட்டில் அடியொற்றிய மூலோபாயத்தில் ஆண்டுக்கணக்கில் தொங்கி நிற்பதற்கான ஆயத்தங்களையும் கொள்வனவுகளையுமே படைத்தரப்பினர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

தமது தரப்புப் படைக்கலச் சக்தி மேம்பாட்டிற்குத் தாரளமாக உதவக்கூடிய கூட்டாளி நாடுகளையே மகிந்தர் தேடித்தேடிப் பிடிப்பதாக தாயகப் படைத்துறை அவதானி ஒருவர் தெரிவித்தார். ஆயினும், முக்கிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடையே கொழும்பு நிருவாகம் அமைத்து வரும் கூட்டணிகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும், அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் சொன்னார்.

இயற்கை, வாழ்வு அனுபவம், வரலாறு என்பவற்றில் இருந்து தனது உத்திகளையும் மூலோபாயங்களையும் வகுத்துக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்களின் வியூகங்களின் சிறப்பு, ஆனையிறவைக் கைப்பற்றுதல் மற்றும் அதற்கான பாதுகாப்பு வியூகங்களை வனைதல் என்பவற்றில் மிளிர்வதை இலங்கைத் தீவின் படைய நிகழ்வுகளை ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதில்லை.

அந்த நுட்பங்களுக்கு முன் வெறும் படைக்கலச் சக்தி எடுபடாது என்பதை ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மீளவும் நிரூபித்திருக்கிறது என்ற கருத்தையே அவர்களும் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் மீண்டும் முகமாலை வட போரரங்கில் ஏற்படக்கூடிய மோதல்கள் இத்தீவின் படைய வரலாற்றில் புதிய சில பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்கள்.

-- சேனாதி- வெள்ளிநாதம் (02.05.08) --

Sunday, January 13, 2008

புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ்

-கலைஞன்- /thinakkural

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூட அவர்களை விடுதலைப் புலிகளாக காட்டவே பொலிஸ்துறையும் சில ஊடகங்களும் தீவிரமாக முயற்சிக்கின்றன.

பீடி பண்டல் கடத்துவோர், 1015 லீற்றர் டீசல் கடத்துவோர், ஒன்றிரண்டு பற்றரிகள் கடத்துவோர், கடன் அட்டை மோசடிக்காரர்கள், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றக்காரர்கள் இவர்களை கைது செய்துவிட்டுத்தான் பாரிய கடத்தல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிக்கை விடுக்கின்றனர்.

ஊடகங்களும் உடனடியாக அச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதுடன் கிழடு தட்டியவர்களினதும் விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளுமற்றவர்களினதும் புகைப்படங்களை பிரசுரித்து இவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களெனக் கொட்டை எழுத்துகளில் போட்டு தம்மை திருப்திப்படுத்திக் கொள்கின்றன.

அண்மையில் மங்களூரில் வைத்து இரு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி கடவுச்சீட்டுகள், ஒன்றரை லட்சம் ரூபா பணம், சில நகைகள் மீட்கப்பட்டன. எவ்வித விசாரணைகளும் இடம்பெறாத நிலையில் உடனடியாகவே இவர்களை விடுதலைப் புலிகளென பொலிஸ் அறிவித்தது. அதனை அப்படியே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.

அத்துடன், இவர்கள் போலி கடனட்டைகளை பயன்படுத்தி நகைக் கடைகளில் நகைகளை கொள்வனவு செய்வதாகவும் பின்னர் அந்த நகைகளை வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிவருவதாகவும் ஊடகங்கள் தமது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கதையளந்தன.

மங்களூரில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான செய்திகள் இலங்கையிலுள்ள அரசு ஊடகங்களிலும் இராணுவ இணையத் தளங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாது தமிழக ஊடகங்கள் புலிகள் தொடர்பாக வெளியிடும் தவறான செய்திகளையெல்லாம் இலங்கை அரசு, இராணுவ ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன.

மங்களூரில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமும் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகளின் போது இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமாக தொடர்புமில்லை என்பது தெரியவந்தது. இதனை மங்களூர் பொலிஸ் ஆணையாளரே தம்மால் கைது செய்யப்பட்ட இரு இலங்கையருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், பீடி பண்டல் கடத்தல்காரர்களைக் கூட விடுதலைப் புலிகளாக்கும் ஊடகங்கள் சில, நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான மறுப்புகளை வெளியிடும்போது அதனை திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்கின்றன. புலிகள் மீது பழியைப்போடும் வேலையை மட்டுமே இந்த ஊடகங்கள் செய்கின்றன.

தமிழக ஊடகங்களின் இவ்வாறான திட்டமிட்ட விஷமப் பிரசாரங்களால் இலங்கைத் தமிழர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்குக்கும் இலங்கைத் தமிழர்கள் அச்சுறுத்தலானவர்கள் என்ற எண்ணமொன்றை ஏற்படுத்துவதே இவ்வாறான ஊடகங்களின் தலையாய கடமையாகவுள்ளது.

முன்னர் இலங்கைத் தமிழர்கள் தமிழகம் சென்றால் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கமுடியும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகளை வாடகைகளுக்கு கொடுப்பதற்கு போட்டிநிலை ஏற்படும். எங்கும் சென்றுவரமுடியும். எவ்வேளையிலும் நடமாட முடியும். மிக இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், இன்று ஊடகங்களின் விஷமத் தனமான பிரசாரங்களினால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. தற்போது இலங்கைத் தமிழர்கள் வீடொன்றை வாடகைக்கெடுப்பது கூட முயற்கொம்பாகி விட்டது. ஓரிடத்தில் சிறிது நேரம் நின்றாலே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் கேவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள லொட்ஜ்களில் கூட இலங்கைத் தமிழர் தங்குவது ஆபத்தாக மாறி வருகிறது. புலிச் சந்தேக நபர்களை தேடுகிறோமென்ற போர்வையில் தமது இலஞ்ச லாவண்யங்களுக்காக லொட்ஜ்களில் தேடுதல்களை நடத்தும் பொலிஸார் தமது தலைமை அதிகாரிக்கு கணக்கு காட்டுவதற்காக அங்கு தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை புலிச் சந்தேக நபரென்ற பேரில் கைது செய்கின்றனர்.

இதைவிட தற்போது விசா மூலம் இந்தியா வந்து விசாக்காலம் முடிந்த பின்னரும் இங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பொலிஸ் ஆணையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இங்கு விசாக்காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்போரின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசாவில் வந்து அது முடிவடைந்த பின்னரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் இலங்கை யுத்தத்தில் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இலங்கைப் படைகளால் தேடப்படுவோர், உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளானோர் மற்றும் வசதி படைத்தவர்களே இவ்வாறு விசாவில் வந்து அது முடிந்த பின்னரும் இங்கே தங்கியுள்ளனர்.

தற்போது இவர்களின் விபரங்களை பொலிஸார் திரட்டி வருவதால் தமது எதிர்காலம் குறித்த அச்சத்தில் பலர் காணப்படுகின்றனர். கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களோ என்ற ரீதியில் பல இலங்கைத் தமிழர்கள் வீதியில் இறங்கக்கூட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் பரவிவரும் வதந்திகள் பொலிஸாருக்கு தலையிடியைக் கொடுப்பதுடன் அவர்களை இரவு பகலாக அலையவும் வைக்கிறது.

கடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகம் வந்துவிட்டதாக பரவிய வதந்தி பொலிஸாரை வெறுப்படைய வைத்துவிட்டது.

பிரபாகரனின் மனைவி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரையொன்றில் அதிவேகபடகு மூலம் அகதிகளுடன் அகதியாக வந்திறங்கியுள்ளதாக பரவிய செய்தியினால் உஷாரடைந்த பொலிஸார் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடாத்தியதுடன் அகதிமுகாம்களையும் விட்டு வைக்கவில்லை.

வீடு வீடாக தேடுதல்களை நடத்தியதுடன் வீதிகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் துருவித்துருவி சோதனையிட்டனர். அன்று காலை தொடங்கிய தேடுதல்கள் இரவு வரை நீடித்தது. இதில் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

காலை முதல் இரவுவரை தேடுதல்களை நடத்தி சோர்வடைந்த பொலிஸார் பின்னர் நடாத்திய விசாரணைகளிலேயே அச்செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. இதனால் பல பொலிஸ் உயரதிகாரிகள் கடுப்படைந்து காணப்பட்டனர். இவ்வாறான செய்திகளை இனிமேல் நம்ப வேண்டாமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்துடனான போரில் காயமடையும் புலிகள் சிகிச்சைக்கு தமிழகம் வருவார்கள். காயமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வரவுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்துக்கு வந்துவிட்டார். தமிழக டாக்டர்களை புலிகள் வன்னிக்கு கடத்திச் செல்லவுள்ளனர். சகல டாக்டர்களும வன்னி சென்றுவந்துள்ளனர். புலிகள் தமிழகத்துக்கு தப்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

இவையெல்லாம் தமிழகத்தையும் பொலிஸாரையும் அலைக்கழிக்க வைக்கும் ஊகங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளுமாகும். ஆனால், இவற்றின் உண்மைக் தன்மை என்னவென்பது குறித்து கொஞ்சம் கூட சிந்திக்காது தேடுதல்வேட்டைகளையும் சோதனைகளையும் நடத்தும் தமிழக பொலிஸாரின் நிலைதான் பரிதாபமாகவுள்ளது.

புலனாய்வுத்துறையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் மிகவும் பெயர் பெற்றவர்கள் தமிழக பொலிஸார். இந்தியாவிலேயே தமிழக பொலிஸாருக்கும் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் தனிமரியாதையுண்டு. ஆனால் இவர்களின் புலிகள் தொடர்பான அண்மைக்கால செயற்பாடுகள் இதனைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.