Monday, July 21, 2008

குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் !

குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும்

“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல…….

இதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுது கொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி. பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த விதப் புதினமும் இல்லை.

மே மாதம் 24ம் திகதி மதியம் ஒரு மணி ஏ-9 நெடுஞ்சாலையின் 155 வது மைல்கல்லில் மேற்காகப் பிரிந்து செல்லும் கிரவற் தெருவிற் பயணிக்கிறோம். குன்றும் குழியுமான அந்தப் பாதையில் ஒரு திடீர் நெரிசல். பாரதிபுரம் பாடசாலையை நோக்கிப் பார்த்திருந்தவர்களும் இறுகிய முகங்களோடு விரைகின்றனர்.

நாங்கள் அங்கே சென்று சேர்கையில் இருபுறமும் தென்னங்குருத்துக்களான சோகத்தைக் குறிக்கும் தோரணங்களாலும் கறுப்புத் துணியிலான கொடிகளாலும் நிறைந்திருந்த தெருவழியே இரண்டு திறந்த வாகனங்களில் எடுத்துவரப்பட்டிருந்த அந்தப் 16 உடலப் பேழைகளும் பாடசாலையின் முகப்பிலே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

மெய்யாகவே திரண்டிருந்தவர்களின் கண்ணீரிலே தோய்ந்து போயின பேழைகள். பாடசாலைக்கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. மீளக் கட்டியெழுப்பப்படும் அக்கிராமத்தின் இதயமாக விளங்கும் பாரதி வித்தியாலய வளாகம் ஊரவர்களாலும் அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களாலும் நிறைந்திருக்கிறது. அனைவரது முகங்களிலும் ஒருவித பதைப்பைக் காணமுடிந்தது பரஸ்பரம் அவர்களால் ஒரு மெல்லிய தலையசைப்பை மட்டுமே மறுக்காகப் பரிமாறிக்கொள்ளக் கூடியதாகத் தம்மை இறுக்கிக் கொண்டிருந்தனர் பிரமுகர்கள். உடைத்துவிடக் கூடாதென்பது அவர்களது பிரயத்தனம்.

மறுபுறம் ஊரோ மனமுடைந்தும் வயிறெரிந்து புலம்பிக் கொண்டிருந்தது “பதினாறும் போகுதே” “பதினாறும் போகுதே” எனப் பாரதிபுரமே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தப் பொழுதில்;

முறுகண்டி அக்கராயன் வீதியில் மே 23 ம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிற் பலியான பாரதிபுரம் மக்கள் 16 பேரினதும் உடலங்கள் மக்களின் இறுதியஞ்சலிக்காக கிளி. பாரதி வித்தியாலத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது காணப்படாத மேற்படி சூழலாகும்.

இது உடலுழைப்பையே நம்பியிருக்கக் கிராமம் இப்படித்தான் படிப்படியாக மீளக் கட்டியெழுப்பப்படுவது நாங்களும் எங்கட பாடசாலைச் செயற்பாடுகளைப் படிப்படியாக ஒழுங்குக்குக் கொண்டு வந்து மாணவர்களின்ர உளவியலைப் படிக்கிறதுக்கேற்ற மாதிரி நிமிர்த்திக்கொண்டு வரேக்க நிகழ்ந்திருக்கிற இந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்துப் போட்டுது.

ஏனென்டா ஒரு சிறிய கிராமத்தில் ஓரே நாளில் 16 பேர் இல்லாமற் போறதென்பது தாங்கிக் கொள்ளக்கூடிய விடயமல்ல. எங்கட ஐஞ்சு மாணவர்கள் இதில பலியாகியிருக்கினம். ஒரு மாணவர்களின்ர பெற்றோர் பலியாகியிருக்கினம். கொல்லப்பட்டவர்க்ள் எல்லோருமே எங்கட பிள்ளையின் இரத்த உறவுகள். எங்கட பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கிற அம்மாவும் இதில செத்துபோனா.

எங்கட ஒவ்வொரு வகுப்பிலயும் இந்தச் சம்பவம் ஏதோ ஒரு பாதிப்பை இழப்பக் குடுத்திருக்கிறது. ஓண்டில் வகுப்பில் படிச்ச பிள்ளை செத்திருக்கிறது. இல்லாட்டி செத்த பிள்ளையின்ர உறவினரைப் பறித்திருந்த பிள்ளையோ படிக்கினம். இதால எல்லா வகுப்புமே எல்லாப் பிள்ளைகளுமே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கினம்.

இதிலயிருந்து எங்கட பிள்ளைகளை மீட்டு அவையளைத் திரும்பவும் கல்வி கற்கிற மனநிலைக்குக் கொண்டுவாறதெண்டது ஒரு மிகப்பெரிய சவால் என்று தனது பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் தீவிரத்தை விளக்கினார் திரு.க.இராஜேந்திரம்.

ஒரு கிளைமோர் வெடிப்பு ஒரேயொரு கிளைமோர் வெடிப்பு ஏற்படுத்திய தாக்கமே இது இப்படி ஒன்றல்ல பல கிளைமோர்கள் மக்களை அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி வெடிக்கும் பகுதியாக வன்னி மாறிவருகிறது.

இது நடந்து வெகுசில நாட்களிலேயே மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் வெடித்த மற்றொரு கிளைமோர் மேலும் 06 பொதுமக்களைப் பலியெடுத்து இவர்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புதுர்ர் நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களாவர். இங்கேயும் இழப்பு குடும்பம் குடும்பமாக பலியெடுத்தும் காயமடைய வைத்ததுமான நெஞ்சையுலுக்கும் பதிவாகவே இருக்கிறது.

10 வயதான மு.ஜனனி வைத்தியசாலைக் கட்டிலிற் கட்டுபோட்ட காயங்களுடன் பேதலித்துப் போய் இருக்கிறாள் அவளது தந்தை கணபதிப்பிள்ளை முருகதாசும் நான்குவயது தம்பி தனுசனும் வைத்தியசாலைப் பிரேத அறையிலே கிடக்கின்றார்.

ஜனனிக்கு அருகே வ.சித்திரா தனது ஒன்றரை வயது மகள் சுஜித்தனைக் கைகளிலே தாங்கியபடி இந்தப்பிரமை பிடித்தாற்போல் இருக்கிறார். இவரது கணவர் ஐ.வசந்தகுமார் கூடப் பயணித்த முருகதாசுடனும் தனுசனுடம் வளர்த்தப்பட்டிருக்கின்றார். ஒற்றை வெடிப்பிலே தந்தையாரை இழந்துவிட்ட இரண்டு குழந்தைகளும் கணவனை இழந்துவிட்ட ஒரு இளந்தாயும் தாங்களும் காயங்களுடன் உறைந்து போய் இருக்க நேர்ந்திருக்கிறது.

இப்படியான உயிருறையும் நிகழ்வுகளை அடிக்கடி காணும் துயரம் கிளிநொச்சி மல்லாவி முழங்காவில் மருத்துவமனைகளின் வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் நேர்கிறது.

ஆனால் இவை பற்றிய வெளியுலகக் கவனம் எந்தளவுக்கு இருக்கிறது குறைந்த பட்சம் கொழும்பின் ஊடகங்களிற்காவது இவை தெரியுமா இந்த அவலங்கள் எந்தளவுக்கு அவற்றாற் கவனத்துக்கெடுக்கப்படுகின்றதா?

இநதக் கேள்விக்கான பதிலாக உதட்டை பிதுக்கித்தான் முடியுமேயன்றி வார்த்தைகளால் பதிலளிப்பது விரயமாகும் ஏனென்றால் உட்பக்கங்களில் வரும் ஒரு சிறிய செய்தியாக இவற்றை இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. கொழும்பில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் சில இவற்றை புலிகளின் தாக்குதல் எனவும் கூறிவிடுகின்றன. இந்தப் போக்கு பல இணையத்தளங்களையும் பற்றிக்கொண்டிருக்கிறது.

கொழும்பின் படைத்தரப்போ பிலாத்துவதாகக் கைகழுவிடும் வார்த்தைகள் சிலவற்றை நிரந்தரமாக வைத்திருக்கிறது அது புலிகளின் பகுதி அங்கு நடக்கும் தாக்குதல்களுக்குப் புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் எங்களுடைய ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளையன்றி வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை என்பன இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் வாக்குமூலங்கள்.

பன்னாட்டுத் தரப்புகளுக்கோவெனில் இவை கண்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட வன்னியிற் செயற்படும் நிறுவனங்கள் உட்பட தமது பக்கஞ்சாரா நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொண்டு அரசியலிற் தலையிடாமற் பேசாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்கின்றன.

இது வன்னியின் நிலமை

எந்தத் தாக்கத்திற்கும் சமறும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்பது நியூட்டனின் விதி. கடந்த பல மாதங்களாகத் தென்னிலங்கையிலும் இந்த விதி செயற்படுவது போலத் தெரிகிறது. அதாவது பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் இழப்புக்களுக்காகக் கண்ணீர் வடித்த கதையும் இழப்புக்களின் ரணமும் தென்னிலங்கையாலும் இரத்தமும் சதையுமாக உணரப்படுகிறது.

ஆனால் தென்னிலங்கையில் ஏற்படும் இழப்புக்களும் இழப்புகளின் வலியும் மனித நேயத்தின் கண்ணோட்டத்திலான சித்தரிப்புக்களாக ஊடகங்களில் பெருக்கெடுக்கின்றன. செய்திகள் படங்கள் செய்திக் கட்டுரைகள் பிச்சர்கள் லெட்டர்கள் என ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுப் பல வாரங்களுக்குப் பின்னும் இந்தச் சித்தரிப்புகள் தொடருகின்றன.

தோரத்தான் வேண்டும் இழப்புக்களின் வலி எவ்வளவுதான் சித்தரித்தாலும் அற்றுபோய்விடுமா என்ன ஆனால் இந்த வலி என்பது அனைவரும் பொதுவான ஒன்று என்பது உணரப்பட வேண்டும்.

துரதிஸ்டவசமாக அந்த உணரப்படுதல் என்பதும் அதனது வெளிப்படுத்தல் என்பதுதான் தமிழர்களைப்பொறுத்த வரையிற் கானல் நீராகவே இன்னும் இருக்கின்றது உண்மையான துயரம் அதுதான்.

கணபதிப்பிள்ளை முருதாஸ் கொல்லப்படும்போது ஒருவித தாக்கமும் முதியாள்சாவே பொடி அப்புகாமி பலியாகும்போது விளைவும் ஏற்படுவதில்லையே.
ஆனால் கொழும்பு ஆட்சிப்பீடம் அவ்வாறுதான் பார்க்கிறது கணபதிப்பிள்ளை முருகதாஸ் சென்ற கார் கிளைமோர் தாக்குதலுக்கு ஆட்படும்போது அது புலிகளின் பகுதியில் வெடித்தது எனவும் தமது படைபினர் புலிகளைத் தவிர வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை எனவும் கூறும் அதே அரசாங்க வட்டாரங்கள்தான கொழும்புக் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கைகளிற் குண்டு வைத்தவர்கள் யாரென்பது குறிப்பிடவில்லையெனத் தூற்றுகின்றன

அரசின் இந்தப் போக்குத்தான் இப்போது எல்லாளன் படையின் எச்சரிக்கையாக வந்து முடிந்திருக்கிறது வன்னியில் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுமாயின் உடனடி பதிலடி தென்னிலங்கiயில் நடத்தப்படும் என்கிறது அந்த எச்சரிக்கை.

இது குறித்து மனிதாபிமானங்களும் கொழும்பின் விசுவாசிகளும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். பொதுமக்களைத் தாக்குவோம் எனப் பகிரங்கமாகக் கூறுவது கீழ்த்தரமான போக்கின் வெளிப்பாடு என அவர்களின் மனக்கொதிப்பும் மனிதநேயமும் ஜனநாயக விழுமியங்களும் வர்ணிக்கின்றன.

ஆனால் பாரதிபுரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் இது போலப் பலப்பல வன்னியில் ஊர்களிலும் ஆறாக ஓடும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களின் இந்த மனிதநேய நோக்குக்கு உட்படுவதில்லை.

உண்மையில் பாரதிபுரத்திலும் பிலியந்தலையிலும் ஓடுவது ஓரே கண்ணீரே. இரண்டிலும் வேறுபாடுகள் நிச்சயம் கிடையா ஆனால் ஒன்று நிற்கும்போது அடுத்ததும் நிற்கமுடியும்

குரூரமானதேயெனினும் இதுதான் யதார்த்தமாகிவிட்டிருக்கிறது.

எஸ்.வில்லவன்