Friday, June 01, 2012

சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?—ஈழத்து பாடல்கள்.

 

னது பதின்ம கால இராத்திரி கனாக்களை எப்படி பருவப் பெண்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களோ அதே போல எனது பதின்ம வயதின் மற்றைய பொழுதுகளில் என்னை ஆட்கொண்டது இந்தப் பாடல். இன்று எனது வயதில் இருக்கும் பலரின் பால்யகாலத்தில் அவர்களின் மனதில் ரீங்காரமிட்டதும் இந்தப் பாடலாகவே இருக்கும். இதைப் போலவே பல பொப்பிசைப் பாடல்கள் (பைலா பாடல்கள்).
சின்னமாமியே பாடல் இப்படி என்னில் கூடி தாக்கம் செலுத்த காரணம் உண்டு. எனக்கும் ஒரு சின்னமாமி இருந்தார்.அவருக்கும் ஒரு சின்ன மகள் இருந்தார்.இப்போது சொல்லுங்கள் இந்த பாடல் எனக்கு பிடித்துவிட இதை விடவா வேறு காரணம் வேண்டும்.Open-mouthed smile


1977-,83 காலப் பகுதிகளில் இலங்கையின் எங்கும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தவை இந்த பாடல்கள்.இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆகி இலங்கை தாண்டி இந்தியாவிலும் பிரபல்யமானது இந்த "பொப்பிசை பாடல்கள்". தமிழ் நாட்டு சினிமா பாடல்கள் இலங்கையில் செலுத்திவந்த தாக்கத்தினையும் மீறி பிரபலமாகியது ஒரு சாதனை என்பதை மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் வெளிவருகின்ற "ராப்" பாடல்கள் போல' ஏன் தமிழில் வந்த கானாப் பாடல்கள் போல சாதாரண மக்களின் தரத்திற்கு இறங்கி இங்கே சாதாரண மக்கள் என்று நான் சொல்லுவது ஈழத்து மக்களின்,அவர்களின் மொழியில்,அவர்களின் நடையில், அவர்களின் பேச்சு வழக்கில் துள்ளிசையுடன் இப் பாடல்கள் வெளிவந்த போது மக்களிடம் பெருவரவேற்பு பெற்றதில் ஆச்சரியம் இல்லைத்தானே.


Image hosted by Photobucket.com


அத்துடன் அந்த காலகட்டத்தில் தான் ஜ.தே.க கட்சி ஆட்சி பீடம் ஏறி இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்திய காலம் புதிய நாகரீகங்கள் வெள்ளமென பாய்ந்த நேரம். எல்லாவற்றினையும் அனுபவிக்க துடித்த மக்கள், இந்த நேரத்தில் வெளிவந்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அப்பாடல்களைப் பாடிய பாடகர்களை புகழின் உச்சியில் கொண்டு போய்வைத்தது.


Image hosted by Photobucket.com
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்கு சென்றாளோ,படிக்க சென்றாளோ .........
கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்..............
இந்தப் பாடல்களுக்கு (குரலுக்கு) சொந்தக்காரர் யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம். யாழ்பாணம் எப்படி பனைகளுக்கு பெயர் போனதோ அப்படி கள்ளுக்கும் பெயர் போனது. அந்தக் காலகட்டத்தில் பெரும் பாலானவர்கள் கள்ளு அருந்துவது வழமை.படித்தவர்,பட்டம் பெற்றவர், படியாதோர் என வித்தியாசம் இல்லாமல் எல்லொரும் ஒன்றாக கூடும் இடம் கள்ளுத் தவறணை யாக இருந்தது. எனது நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் சமரசம் உலாவும் இடம் எது என்றால் மயானமும்,கள்ளுத்தவறணையும் தான் என்பான்.சரி விடயத்துக்கு வருகிறேன்.இதில் பலர் கள்ளுக்கு அடிமை. இது அந்தக் காலத்தில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இருந்தது. இதனைப் பிரதிபலித்த பாடல் தான் கள்ளுக்கடை பக்கம் போகாதே.பாடல்களில் ஒரு வரி இப்படி வரும் "கடவுள் செய்த பனை மரங்கள் தானடா,கடவுள் கள்ளை தொட்டதுண்டோ கேளடா" எங்கேயோ போய் விட்டேன் விடயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாட்டில் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக திரு எம்.ஜி.ஆர் அவர்களால் இப் பாடல் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு,ஸ்டெனி சிவாநந்தன்,அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.
சுராங்கனி பாடல் மூலம் ஏ.ஈ மனோகரன் புகழ் பெற்று பொப்பிசை சக்கரவர்த்தி என்னும் பட்டம் கூட அவருக்கு கிடைத்தது. எத்தனையோ மனதுமறக்காத பாடல்கள். இப்படி புகழடைந்த பொப்பிசை பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து 83 இனக் கலவரத்துடன், பாடகர்கள்,மக்கள் எல்லோரினதும் இடப்பெயர்வுகள் காரணமாக கிட்டத்தட்ட மறைந்தே போயிற்று.


சில பொப்பிசைப்பாடகர்களின் நடவடிக்கைகளும் இந்த பாடல்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதையும் இங்கு சொல்லவேண்டும். இன்றும் கூட இவ் இசையினை ரசிக்க பலர் இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் கூட அமுதன் அண்ணாமலையின் பொப்பிசை நிகழ்ச்சி ஒன்று ரொரன்றோ மண்ணில் நடைபெற்றது.
ஏ.ஈ மனோகரன் என்றால் சிலருக்கு புரியாது "சிலோன் மனோகர்" என்றால் புரியும் என நினைக்கிறேன். இப்போது சென்னையில் வசிக்கும் இவர் இடையிடை சில பொப்பிசை பாடல் இசைவட்டு (அதுதாங்க சீடி)வெளியிடுகிறார்.அத்துடன் சில மேடை நிகழ்சிகளிலும் பங்கு கொள்கிறார். அண்மையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்திருக்கிறார்.படத்தின் பெயர் மறந்து விட்டது.
அவுஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் நித்தி கனகரத்தினம் இடையிடையே மேடைகளில் எப்போதாவது பாடுவதுடன்
சரி. இப்படி ஈழத்திலிருந்து வெளிவந்த பொப்பிசை பாடல்களின் கதி இப்படி ஆகிவிட்டது.பின்னாளில் சிலர் ஈழத்து மெல்லிசையில் பிரபல்யம் ஆகஇருந்து வருகின்றனர்.


தனித்தன்மையுடன் இருந்த ஈழத்து மெல்லிசைகூட தற்போது இந்திய தமிழ் சினிமா பாடல்களை ஒற்றி வர ஆரம்பித்து இருக்கிறது.அண்மையில்
சில ஈழத்து மெல்லிசை பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்பது போல இருந்தது.மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பொப்பிசையும் போயிற்று. ஈழத்து திரைப்படங்களும் போயிற்று. மிஞ்சியிருந்தது மெல்லிசை.அதுவும்தமிழ் சினிமாப்பாடல்கள் போல போய்க் கொண்டிருக்கிறது.
சரி புலம் பெயர்ந்த நாடுகளில் சிலர் முயற்சி செய்கிறார்கள் தானே என்றால் அவர்களுக்கும் தேவைப்படுவது தமிழ்சினிமா பாடகர்கள்,அவர்கள் தரும் இசை கூட தமிழ் சினிமா இசையினை ஒத்தே இருக்கிறது. வியாபாரம் தான் இந்த சமரசத்திற்கு காரணமாக இருப்பதாக சொல்வார்கள்அவர்களினை கேட்டால்,
தற்போது ஓரளவுக்கு நம்பிக்கை தருவது இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து வரும் பாடல்கள்.அவை மண்வாசனையுடன்தனித்தன்மையுடன் வருவதால் மனதில் இலகுவாக இடம் பிடித்து விடுகின்றன.தற்போது ஓரளவு நம்பிக்கை அளிப்பவை அப்பாடல்கள் தான்.

எ.ஈ மனோகரனின் சில பாடல்கள் இங்கே உள்ளன. இவை பிற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல இருக்கிறது. பழைய பாடல்கள் கேட்க வேண்டும் என்றால் கூல்கூஸ் இணைய தளத்திற்கு செல்லவும் சில பாடல்கள் அங்கு இருக்கின்றன.
இங்கே நான் இன்னுமொன்றினையும் சொல்ல வேண்டும்.இலங்கைக்கு இந்த பொப் எனப்படும் பைலா இசையினை அறிமுகப்படுத்தியவர்கள் இலங்கையினை கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கீசர் என்றே சொல்லப்படுகிறது. இதனைப் பற்றி மேலதிக தகவல் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளலாமே
சிங்கள மொழியில் இந்த பைலா பாடல்கள் மிகவும் பாரிய வளர்ச்சியினைக் கண்டிருக்கிறது. சிங்களவர்களால் பெரிதும் ரசிக்கப்படுவதுடன் மதிக்கப்படுவதும் இவ் பைலா பாடல்களே.


இது மே 12 ,2005  இல் என்னால் எழுதப்பட்ட ஒரு பதிவு .கிட்டதட்ட  ஆறு  வருடங்களின் பின்பு இப்போது இப்பதிவினை  மீளவும் இடுகிறேன் .இப்போது உள்ள பலருக்கும இது பற்றி தெரியவேண்டும் என்பதால் . அத்துடன் யாழ் ஜனா எழுதிய ஒரு பதிவினையும் இத்துடன் தந்திருக்கிறேன். இத்துடன் சில பாடல்களையும்   இணைத்திருக்கிறேன்

 

 

 

1 comment:

விச்சு said...

மறக்கமுடியாத சிறந்த தமிழ் பாப்பிசை பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைப்பற்றிய பல அறிய விடயங்களையும் சொல்லியுள்ளீர்கள். அருமை.