Tuesday, July 31, 2012

குளிர்பானம் குடித்த இருவருக்கு அடி, உதை: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் கூல்டிரிங்ஸ் குடித்த 2 பேரை பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்து கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் டமானிகோ என்ற சுற்றுலா தலத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இங்குள்ள உயரமான பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நகரின் அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அன்வர் அப்பாஸ், மாலிக் சயீத் என்ற 2 இளைஞர்கள் காரில் அமர்ந்து கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆத்திரம் அடைந்து இருவரையும் தாக்கினார். ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடித்ததால் இருவரையும் பொலிஸ் அதிகாரி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பொலிஸ் கமிஷனர் பானியாமின் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட அப்பாஸ் கூறுகையில், நான் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கவில்லை. எனினும், மக்கள் முன்னிலையில் கூல்டிரிங்ஸ் குடிப்பது தார்மீக அடிப்படையில் தவறு என்பதை அறிவேன்.
அதற்காகதான் யாரும் இல்லாத இடத்தில் கூல்டிரிங்ஸ் குடித்தேன். அதை ஏற்காமல் அதிகாரி தனது பெல்ட்டை கழற்றி அடித்தார். பின்னர் அங்கிருந்து துரத்திவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டு புகாரை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தனர் என்றார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பார் அசோசியேஷன் முன்னாள் பொதுச் செயலாளர் ரியாசட் அலி ஆசாத் கூறுகையில், பொது இடங்களில் உண்பதற்கு தடை எதுவும் பாகிஸ்தான் சட்டத்தில் இல்லை.
எனினும் ரம்ஜான் மாதத்தில் தார்மீக அடிப்படையில் பொது இடங்களில் உண்ண கூடாது என்று வேண்டுகோள் விடுக்கலாம். அதற்காக தாக்குதல் நடத்துவதற்கு பொலிசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
tamilwin