Sunday, December 28, 2014

அமெரிக்காவையும் ,இணையத்தையும் தனது நேர்மையால் நெகிழவைத்த வீடற்ற மனிதர்


மெரிக்காவைப்பற்றி ஒரு பதிவை  சில நாட்களுக்கு முன்னர் இட்டிருந்தேன் .பலரும் பார்த்திருப்பீர்கள் .அமெரிக்காவில் வீடு இல்லாமல் வாகனங்களில்  வாழ்கின்ற மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள்.அதைவிட ரோட்டில் படுத்து எழும்புபவர்களும் இருக்கிறார்கள் .அதில் ஒருவரைப்பற்றிய சம்பவம் தான் நான் சொல்ல போவது .

கடந்த சில தினங்களாக யூரியுப் இல் பலகோடிப் பேர்களால் பார்வை இடப்பட்டு அமெரிக்காவிலும் இணையத்திலும் புகழடைந்த ஒரு சம்பவம் இது .

இவர்களை போன்ற மனிதர்களை இங்கு கனடாவில் கூட பெருந்தெருக்களுக்கு அண்மையில் கண்டிருக்கிறேன் .பெரும்பாலும் இவர்கள் மது ,போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள்
அவர்களை பார்க்கும் போதே அதை தெரிந்து கொள்ளலாம் .பொலிஸ் இவர்களை கண்டால் கூட்டிக்கொண்டு போய் காப்பகங்களில் ஒப்படைத்து விடுவார்கள் .அங்கு உடை ,உணவு உட்பட
அத்தியாவசியமான  பொருட்கள் கொடுப்பார்கள் .அனால் இவர்களுக்கு அத்தியாவசியம் மது ,போதைவஸ்து அல்லவா ? எனவே சில நாட்களில் அங்கிருந்து கம்பி நீட்டிவிடுவார்கள் .
பெரும்பாலும் வெள்ளையர்களை தான் கண்டிருக்கிறேன் . ஒரே ஒரு முறை ஒரு முஸ்லிம் பெண்மணியை கண்டேன் .ஒரு அட்டையில் "பசிக்கிறது உதவவும்", "வீடில்லாதவன் உதவவும்"
இப்படி தான் எழதி வைத்திருப்பார்கள் ,வாயால் எதையும் கேட்கமாடடார்கள்.

இனி விடையத்துக்கு வருகிறேன்

அந்த யுரியுப் விடியோ எடுக்கப்பட்டது என்னவோ நையாண்டி மற்றும் கிண்டலுக்காக தான் .அந்த விடியோவை எடுத்த ஜோஸ் என்பவரோ அல்லது விடியோவைப்  பார்த்துக்கொண்டிருக்கும் நாமோ அந்த வீடில்லாத மனிதர் எங்கு போவார் என்று எதிர் பார்த்தோமோ அங்கு தான் போகின்றார் .பின்பு வெளியில் வந்து அவர் செய்வது தான் திருப்பம்' மனிதநேயத்தினைப் பற்றி
யாவருக்கும் உணர்த்தியிருக்கிறார் அந்த வீடற்றவர் .

சரி இனி வீடியோவை  பாருங்கள்

அமெரிக்கா இளைஞரான ஜோஸ் பேலர் லின் (josh Paler Lin) யூரியூப் உலகில் வெகு பிரபலம். ஜோஷ் குறும்பும் நையாண்டியும் கலந்த
வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு,  உலகில் தனக்கென ரசிகர்களை
தேடிக்கொண்டிருப்பவர். அவரது வேலையே இப்படி ஏதேனும் குறும்பு செய்து அதில் சிக்குபவர்களை வீடியோவில் படம் பிடித்து தன்னுடையை யூரியூப் சேனலில் வெளியிடுவதுதான்.
இதற்காக என்றே பிரத்யேகமாக யோசித்து புத்துப்புது குறும்புகளாக உருவாக்கி இருக்கிறார்.இப்படி பல சனல்கள் இருக்கின்றன

இப்படிதான் கடந்த வாரம் அவர்   வீடில்லாத மனிதர் ஒருவரிடம் 100 டாலரை கொடுத்து அவர் என்ன செய்கிறார் என ரகசியமாக படம் பிடித்து வெளியிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கண்ணில் பட்ட வீடில்லாத மனிதர் ஒருவரை தேர்வு செய்தார். அவர் யார் என்றும் தெரியாது.
அவரது பெயரும் தெரியாது. அவரிடம் ஜோஸ் 100 டாலர்களை கொடுத்தார். வீடில்லாத மனிதருக்கு முதலில் ஆச்சர்யம். 100 டாலர்களை திகைப்புடன் வாங்கியவர், பின்னர் அது மிக அதிகம் என திருப்பிக்கொடுக்க முயன்றார். ஜோஸ் உங்களுக்குதான் பணம் என்று வலியுறுத்திக் கொடுத்தார்.

வீடில்லாத மனிதர் பணத்தை வாங்கி கொண்டு விடைபெற்று சென்றார். ஜோஸ் சிறிது இடைவெளி விட்டு அவரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றார். எதிர்பாராமல் 100 டாலர் கையில் கிடைத்ததும் வீடில்லாத மனிதர் என்ன செய்கிறார் என அவர் படம் பிடித்துக்காட்ட விரும்பியிருந்தார். வீடில்லாத மனிதர் கொஞ்ச தூரம் நடந்து மதுக்கடை ஒன்றுக்கு சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.நாம் நினைத்தபடியே

இது வரை ஜோஷ் மனதில் உருவாக்கி வைத்திருந்த திரைக்கதை படி எல்லாம் நடந்தது,
ஆனால் இதன் பிறகு அந்த வீடில்லாத மனிதர் செய்தது தான் ஜோஸ்கொஞ்சமும் எதிர்பாரதது. அந்த மனிதர் அருகே இருந்த பூங்காவுக்கு சென்று, அங்கே இருந்த தன்னைப்போன்ற வீடில்லாத மனிதர்களுக்கு தான் வாங்கி வைத்திருந்த உணவு பொருட்களை விநியோகிக்க துவங்கினார்.
மதுக்கடையில் உணவுப்பொருட்கள் தான் வாங்கியிருக்கிறார் அந்த வீடற்றவர் .


இந்த காட்சியை பார்த்ததும் ஜோஸ் வியந்து போனார். வீடில்லாதவர் கையில் கிடைத்த பணத்தை குடித்து மகிழ்வார் என நினைத்தற்காக தன்னை தானே நொந்துகொண்டார். உடனே அந்த மனிதரிடம் சென்று தான்
 அவரைப்பற்றி தவறாக நினைத்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது செயலை படம் பிடித்துக்கொண்டிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

அப்போது அந்த மனிதர், "பணத்தை வாங்கி நான் குடித்து மகிழ்வேன் என நினைத்தீர்களா? பணத்தால் வாங்க முடியாத பல இருக்கின்றன, நான் செய்யும் செயல்கள் மூலம் மகிழ்ச்சியை பெற முயற்சிக்கிறேன் “ என்று பதில்
சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நெகிழந்து போன ஜோஸ் அவரது பின்னணியை கேட்டிருக்கிறார்.

தோமஸ் எனும் பெயர் கொண்ட அந்த மனிதர் , நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது பெற்றோர்களை கவனித்துக்கொள்வதற்காக வேலையை விடும் நிலை ஏற்பட்டதாகவும், அதன் பிறகு பெற்றோர்கள் இறந்துவிட , பார்த்து கொண்டிருந்த வேலை, இருந்த  பெற்றோர்களின் வீடு இரண்டும் போய் வீதிக்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
 ஜோஸ் அவரிடம் மீண்டும் 100 டாலர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு , தனது போன் நம்பரையும் தந்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாக தனது சனலில் பகிர்ந்து கொண்டார். "இது போன்ற ஒரு காட்சியை நான்
எதிர்பார்க்கவில்லை, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வீடில்லாதவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இத்தகைய ஒரு அருமையான காட்சியை படம் பிடிக்க முடிந்தது எனக்கு மகிச்சியை தருகிறது . இந்த சனலின் வரலாற்றில்
 இதுதான் அற்புதமான தருணம். ஒரு வீடில்லாதவருக்கு நான் உதவ முடிந்ததுடன் ,ஒரு மகத்தான் மனிதர் மற்றும் நண்பரையும் சந்தித்துள்ளேன்”
 எனும் அறிமுகத்துடன் இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

வீடில்லாமல் வசிக்கும் எல்லோரும் சோம்பேறிகள் அல்ல, வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோட்டு
 விடக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த எல்லோருமே வீடில்லாத மனிதர் தோமசின் கருணையால் நெகிழ்ந்து போயினர். தன்னிடம் காசு இல்லாத நிலையிலும், தனக்கு கிடைத்த பணத்தை
தன்னைப்போன்றவர்களுக்கு கொடுத்து மகிழந்த அவரது செயல் எல்லோரையும் உருக வைத்தது. அடுத்த சில நாட்களில்
அந்த வீடியோ விரைவாக  பரவியது. நான்கு நாட்களுக்குள் அந்த வீடியோ 2 கோடிக்கும் அதிமான முறை பார்க்கப்பட்டுள்ளது


இதனிடையே ஜோஸ் அந்த மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவருக்காக நிதி திரட்டும்
முயற்சியில் ஈடுபட்டார். இணையம் மூலம் நிதி திரட்டுவதற்கான இண்டிகோகோ  இணையதளத்தில் தோமஸுக்காக  ஒரு பக்கத்தை துவக்கி , அவருக்கு நிதி அளிக்க கோரிக்கை வைத்தார். தோமஸ் புது வாழ்வு துவங்க கைகொடுங்கள் எனும் கோரிக்கையோடு , இந்த வீடியோவையும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிட்டு நிதி உதவி கேட்டிருந்தார்.

தன்னிடம் எதுவும் இல்லாத நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய தோமஸு க்கு உதவுவோம் என அவர் குறிப்பிட்டிருந்ததை இணையவாசிகள் பலரும் ஏற்றுக்கொண்டு நிதி அளித்தனர். விளைவு.. வீடியோ நான்கு நாளில் ஹிட்டானது போல் நான்கே நாட்களில் தோமாஸுக்கு உதவுதற்காக ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்திருக்கிறது. இன்னும் குவிகிறது.
இப்பொது நான் இந்த பக்கத்தினை பதிவேற்றும்  போது அண்ணளவாக $116,693 USD கிடைத்திருக்கிறது.அவரின் இலக்கை விட அதிகம் பணம் திரட்டப்பட்டுள்ளது

நிதி அளித்த பலரும் இந்த பக்கத்தில் தோமஸ் பற்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்,
 தோமஸுக்குகு பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் அவருக்கு உதவி செய்ததன் மூலம், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிகவும் சிறப்புமிக்கதாக மாறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

 உங்கள் செயலால் அசந்து போனேன். உங்களைப்போல் மேலும் பலருக்கு, கொடுக்கும் தன்மை வர வேண்டும் அத்துடன்  கிறிஸ்மசின் உண்மையான அர்த்ததை இது புரிய வைத்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய எல்லோரும் அதை கருத்தைதான் கொண்டிருந்தனர். கூடவே மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இனி தோமஸ் தனது புது வாழ்க்கையினை புது வருடத்தில் தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் கரிகாலன் ........................

Friday, December 26, 2014

அமெரிக்காவைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் .

மெரிக்காவை பற்றி பலருக்கும் பல விதமான கனவுகள் இருக்கின்றன .உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவில் குடியேற விரும்புவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்தே செல்கிறது .குறிப்பாக இந்தியர்களுக்கு அமெரிக்காவில் குடியேறுவது  என்பது ஒரு கனவாகவே ஆகிவிட்டது .அமெரிக்காவை பற்றி நினைத்ததை விட அமெரிக்க வந்தபின்பு தெரியும் உண்மைகள் பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கும் .ஆனாலும் நீதியா நேர்மையாக உழைத்து வாழ்பவர்களுக்குஅமெரிக்கா ஒரு சொர்க்கம் தான்

 .இனி அமெரிக்காவைப்பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் .


அமெரிக்காவில் வாழும் 313 மில்லியன் மக்களில் 46 மில்லியன் மக்களே உணவுக்கான சலுகைகளைப் பெற்றுள்ளனர் .

சுமார் 48 சதவீத அமெரிக்கர்கள் தற்போது வறுமையில் அல்லது குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர்.

அமெரிக்காவில்  ஒவ்வொரு வருடமும் சராசரியாக 3000 பவுண்டுகள் உணவுகளை பல்பொருள் அங்காடிகள் கழிவுகள் ஆக வெளியேறுகின்றன .
1950 ஆண்டுகளில் அமெரிக்காவில் 80 சதவீதம் பேர் வேலையில் இருந்தனர் .அனால் இன்று 65 சதவீதத்திற்கு குறைவானவர்களே
 வேலை வாய்ப்பினை பெற்றுஉள்ளனர் .

கிளிவ்லாண்டில் வாழும் அனைத்து குழந்தைகளில் 52 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வறுமையில் வாழ்கின்றனர் .

வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் உள்ள மக்களுக்கே மன நோய் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

கடமையில் இருக்கும் பொழுது  மரணமடையும் பொலிஸ்காரர்களின் எண்ணிக்கை உலகிலேயே அமெரிக்காவில் அதிகம் .

ஐடி கணக்கின்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 19 மில்லியன் பேருக்கு சிபிலிஸ் ,கொனோரியா கிளைமீடியா போன்ற பாலியல் நோய்கள்
கண்டுபிடிக்கப்படுகிறது .

விவாகரத்து விகிதம் உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம் .

அமெரிக்காவில்22 சதவித பெண்கள் இளமையில் கர்ப்பம் அடைகின்றனர் ,இது உலகில் முதல் இடத்தில் இருக்கிறது .

1940 ஆண்டின் கணக்கின் படி இருபது தொடங்கி 30 வயதுக்குட்பட்ட பெண்களில் 68% திருமணம் செய்து கொண்டனர் .இதுவே 2010 இல் இதே வயதுப்பிரிவினர்  39.2%. மட்டுமே திருமணம் செய்து கொண்டனர்.

வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில்தான் அதிக அளவில் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சராசரி அமெரிக்கர் ஒருவர் வருடத்துக்கு 600 மேற்பட்ட அளவில் குளிர்பான போத்தல்களை குடித்து தள்ளுகின்றனர்

66 சதவீத அமெரிக்கர்கள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள் .

பணியில் இருக்கும் போது 25 சதவீத அமெரிக்கர்கள் ஆபாச இணைய தளங்களை பார்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது

நியுயார்க் பெடரல் ரிசேர்வ் வங்கியின் கணக்கெடுப்பின் படி சுமார் 167.000 அமெரிக்க மாணவர்கள் $ 200/000 அதிகமாக கல்விக்கடன்  பெற்றவர்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி துப்பாக்கி  வைத்துக்கொள்ள குடிமக்களுக்கு சட்ட ரீதியாக உரிமை உண்டு .இதனால் துப்பாக்கி தொடர்பான குற்றங்களும் இங்கு மிக  அதிகம்


Sunday, December 07, 2014

கதவினை திறவுங்கள் கரிகாலன் வரட்டும்.

கதவினை திறவுங்கள் கரிகாலன் வரட்டும்.

நீண்ட நாட்களின் பின்னர் எழுத வந்திருக்கின்றேன்,இனி தொடர்ந்து எழுதலாம் என் எண்ணியுள்ளேன்.
ஆடின கால்களும் பாடிய வாயும்.எழுதிய கரங்களும் சும்மா இருந்ததாக  சரித்திரம் இருக்கிறதா என்ன?

நீண்ட நாட்கள் எழுதாவிட்டாலும் தமிழ்மணத்தினை நுகர தவறுவதில்லை.புதிய வலைப்பதிவர்கள்  நிறையப்பெர் எழுத வந்திருக்கின்றனர்,இங்கு எழுதும் பலரும் புகழ் பணத்துக்காக எழுதவரவில்லை.ஒரு ஆத்மதிருப்திக்காகவே எழுதுகின்றனர்.ஒரு சிலர் விதி விலக்கு என்றாலும் இதுதான் உண்மை.
என்னைப் பொறுத்தவரையிலும் அதுதான் உண்மை,

தினமும் பதிவிட்ட பலரை  பல நாட்களாக காணவில்லை,இடையிடை பதிவிடும் பலர் பல நாட்களாக தொடர்கின்றார்,எதற்கும் அடிமையானால் அதன் பாதிப்பு எமக்கு தான்,இது புகழ் ,பணம்,மது ,மாது முதல் தொடங்கி இணையம்,தொலைக்காட்சி ,வந்து இப்பொது செல்பேசியில் நிற்கிறது,படுக்கை அறையில் கூட செல்பேசி விளைவு  குடும்பங்களில் பல குழப்பங்கள்,

இன்னும் சில வாரங்களில் புது வருடம் பிறக்க இருக்கின்றது,இங்கு கனடாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
களை கட்ட ஆரம்பித்து விட்டன.ஜனவரி மட்டும் இனி கொண்டாட்டங்கள் தான் ,வர்த்தகர்களுக்கு கூட கொண்டாடங்கள் தான்.காஸின் விலை (பெற்றோலின்) குறைந்து $1.07.99 அக இருக்கிறது. யாவருக்கும் மகிழ்ச்சி.எல்லாம் பெரிய அண்ணனின் வேலைதான்,

கதம்பம் அல்லது கனடா கதம்பம் என்னும் பெயரில் எனது எழுத்துக்கள் வரும். சிறு சிறு துணுக்களாக எழுதலாம் என எண்ணியிருக்கின்றேன்,சுவாரசியமாக என்னால் முடிந்தை தருவேன்.அரசியல் முதல் ஆசிரமம் வரை எழுதுவேன் (அந்தப்புரம் என எழுதத்தானென்னினேன் அனால் இன்றைய நிலையில் இரண்டும் எறக்குறைய ஒன்றுதானே)

கண்டதையும் படித்து பண்டிதன் ஆனான் என எனது தமிழாசிரியர் சொல்வார்.நான் கண்டதையும் எழுதி பண்டிதன் ஆக முயற்சிக்கிறேன்?அப்பொழுது உங்கள் கதி

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வலைபதிவை படிக்க நேர்ந்தது அமெரிக்காவுக்கு வந்து விட்டு தாயகம் திரும்பி இருந்த அவர் ஆபிரிக்க அமெரிக்கர்தான் அமெரிக்காவின் ஆதிகுடிகள் என்ற ரீதியில் அள்ளிவிட்டிருந்தார்,இதுக்குதான் சொல்லுறது கண்டதையும் படிக்கவேண்டும் என்று.

நீண்ட நாட்களாய் கடையை சாத்தியிருந்த பதிவர்" நம்பள்கி"மீண்டும் கடையை திறந்து விட்டார் .இடையில்
எங்காவது ஆசிரமத்தில் கடையை விரித்திருந்தாரொ தெரியவில்லை.ஆசிரமவாசனை தூக்கலாக இருக்கு.
வாயிலை நன்கு திறவுங்கள் காற்று வரட்டும்.


மீண்டும் சந்திக்கிறேன்
கரிகாலன்

Monday, April 14, 2014

சொல்லுராங்கப்பா! சொல்லுராங்கப்பா! நோட் பண்ணிக்கங்க !

 

இந்திய அரசியலை அரசியல் வாதிகளை தொடர்ந்து கவனித்து வருபவன் நான் .மக்களை அடிமுட்டாள்கள் என் நினைக்கும் வகையில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில உள்ளன,இடதுக்கு இடம் மதத்துக்கு மதம் ஜாதிக்கு ஜாதி ,மாநிலத்துக்கு மாநிலம் அர்களின் கருத்துக்கள் மாறுபடும்..சில தினங்களுக்கு முன்னர் இங்கு கனடாவில் இருந்து வெளிவரும் குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில் இந்திய தேர்தல் பற்றி இரு பக்கங்களில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது.அதிலும் இவ்விடயம் பற்றியும் எழுதி இருந்தார்கள் .

தமிழ்நாட்டினை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டினை சீரழித்த பெருமை இரு திராவிட கட்சிகளையே சேரும் ,ஆடம்பரம் ,பிரியாணி ,குவாட்டர் ,ஓட்டுக்கு பணம் ,கட்டவுட் ,காலில் விழும் கலாச்சாரம்,அதிகார துஷ்பிரயோகம்,ஊழல் இப்படி பலவற்றினை அறிமுகப்படுதிய பெருமை இரண்டு பெரிய திராவிட கட்சிகலையே சாரும் .கருனாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவர் மற்றவர் மேல் குற்றம் சுமத்த எந்த அருகதையும் இல்லாதவர்கள் ,இருவரும் செய்த ஊழல்கள் பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை .மற்றைய திராவிட வழிவந்த அரசியல் வாதிகளும் இவற்றில் குறைந்தவர்கள் அல்லர்.

விஜயகாந்த் அரசியலுக்கு வரும் பொது ஒரு எரிபார்ப்பு இருந்தது ஆனால் அதுவும் புஸ்வானம் ஆகிவிட்டது .

சரி அரசியல் வாதிகளின் சில் கருத்துக்களை பார்க்கலாமா?

சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான்,

  சஞ்செய் காந்தியின் கட்டாய மலட்டுத்தன்மை திட்டத்துக்காக, பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜிவ் காந்தி உத்தரவிட்டார்.இவை காரணமாக இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார் என்று கூறியுள்ளார்.

 

தமிழக முதலமைச்சர் ஜே .ஜெயலலிதா :-

தமிழகத்தில், மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமும் இப்படி மின் உற்பத்தி நிலையங்களில், பழுது ஏற்படுகிறது என்றால், இது திட்டமிட்ட சதி தானோ என்று தோன்றுகிறது.எனவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து, இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு, யார் காரணம் என்பதை நிச்சயமாக, கண்டுபிடித்தே தீருவோம்.மக்களின் துன்பத்தை பற்றி கவலைப்படாமல், மின்வெட்டு என்ற துன்பத்தை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், வேண்டும் என்றே, இப்படி நாச வேலையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மின் நிலைமை சீர் செய்யப்படும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

 

சமாஜ்வாதி  கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்,

'ஆம்பள பசங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வர்; கற்பழிக்கவும் செய்வர்; அதற்காக அவர்களை துாக்கில் போடுவதா...'

 

மகாராஷ்டிர மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி,

முலாயமை விட ஒருபடி மேலே போய், ''திருமணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ, பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களையும் துாக்கிலிட வேண்டும்,'' என கூறி, பரபரப்பை அதிகரித்துள்ளார்.

 

அரவிந்த் கெஜ்ரிவால்

:டில்லி மக்களுக்காக பல வாக்குறுதிகளை அளித்திருந்தேன். அவற்றை நிறைவேற்றாமல், 49 நாட்களில் முதல்வர் பதவியிலிருந்து விலகியது, மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.நான் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை மக்கள் புரிந்து கொள்வர் என நினைத்தேன். பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் சரி என்றாலும், அதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும். இது, நான் செய்த மிகப்பெரிய தவறாக கருதுகிறேன்.அதனால் தான், பொது இடங்களில் மக்கள் தங்கள் கோபத்தை என் மீது காட்டுகின்றனர்

 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

ராசா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சக்திகள் அவரை பழி வாங்குவதற்காக வீன் பழி சுமத்தியுள்ளனர், என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.  : வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவே நீலகிரியை திரும்பி பார்க்கும் தேர்தலாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஆ.ராசாவை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் விடுதலை ஆன போது அவரது சொந்த ஊர் பெரம்பலூருக்கு கூட செல்லாமல் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் உங்களை காண வந்தார். அவர் உங்களின் உடன் பிறந்த சகோதரனாக வாழ்கிறார். அவர் ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார். அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது. தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களாகிய நீங்கள் நீதி வழங்க வேண்டும். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சக்திகள் அவரை பழி வாங்குவதற்காக குற்றம் சுமத்தி வருகின்றன.

 

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி

60 ஆண்டாக நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை 60 மாதங்களில் சரிசெய்ய வாய்ப்பளிக்கும்படி பீகாரில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டுக்கு தலைமை தாங்குபவராக நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் தற்போது நாட்டுக்கு தேவை நிர்வாகிகள் இல்லை என்று மோடி கூறினார். சிறந்த சேவகரே நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றை கேட்டவுடன் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஏற்படுகிறதோ அதே  தான் .எனக்கும் ஏற்படுகிறது ,தேர்தல் திருவிழாவை சந்தோஷமா அனுபவியுங்கள் .இதுக்கே ரென்சன் ஆனால் எப்படி ? இன்னும் நிறைய வரும்

கரிகாலன்

Saturday, April 05, 2014

காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல் !!

மிழருவி மணியனால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையினை இன்று படிக்க முடிந்தது.சரி நான் மட்டும் படித்து என்ன பயன்? நீங்களும் படிக்க வேண்டாமா எனும் ஆதங்கத்தில் இங்கு பகிர்ந்து உள்ளேன்.படித்துவிட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள் .

காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு... வணக்கம்!கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார்.

நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல முயல்கிறேன்.ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஓர் அந்தரங்க ஊழியன் பக்கத்திலிருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சில நாட்களாக அரசன் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருப்பதைக் கண்டு, அதற்கான காரணம் கேட்டான் <அந்த உண்மை ஊழியன். 'சகல சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய ஓர் இளைஞனின் அழகான முகத்தில் அன்றாடம் நான் விழித்தெழுந்தால், வெற்றி மேல் வெற்றி பெற்று உலகம் முழுவதையும் ஆள முடியும் என்று ஒரு முனிவர் என்னிடம் மொழிந்தார். திசைகள் அனைத்திலும் ஆளனுப்பிப் பார்த்துவிட்டேன். அப்படியோர் இளைஞனை இன்றுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுதான் என் கவலைக்குரிய காரணம்’ என்றான் அரசன்.

'இதற்காகவா வருத்தப்படுகிறீர்கள்? கவலையை விடுங்கள். நாளை காலை நீங்கள் எதிர்பார்க்கும் பூரண லட்சணங்கள் பொருந்திய பிள்ளையை உங்கள் பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்’ என்று வாக்குறுதி வழங்கிவிட்டு அந்த ஊழியன் அகன்றான்.

மறுநாள் வைகறை புலர்ந்தது. அரசன் ஆர்வத்துடன் விழித்தெழுந்தான். அரைப் பார்வையும் ஒழுகிய மூக்குமாய் ஒரு பையனை அழைத்து வந்தான் ஊழியன். 'யார் இவன்?’ என்றான் அரசன் ஆத்திரத்துடன். 'அரசே! இவன் நான் பெற்றெடுத்த பிள்ளை. இந்தப் பூவுலகில் சகல சாமுத்திரிகா லட்சணங்கள் நிறைந்தவன் எனக்குத் தெரிய வேறு யாரும் என் பையனைப்போல் இல்லை’ என்றான் அந்தரங்க ஊழியன்.

நம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்த ஊழியனுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதுதான் உண்மை. 1984 முதல் 2009 முடிய நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நின்ற ப.சிதம்பரம் பார்த்த பதவிகள் போதும் என்று துறவு நிலையில் நின்று, காந்தியப் பாதையில் நலிவுற்ற மக்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட முடிவெடுத்துவிட்டார். 'சொர்க்கபுரியாய்’ தான் உருவாக்கிய தொகுதியைப் பழுதின்றிப் பராமரிக்க யார் தகுதிமிக்க இளைஞர் என்று சிந்தித்த சிதம்பரம் கண்டெடுத்த வேட்பாளர்தான் கார்த்தி சிதம்பரம்.‘Charity begins at home’(மன்பதை அன்பு வீட்டிலிருந்தே வெளிப்படுகிறது) என்பதை அறியாதவரா நம் அறிவார்ந்த நிதியமைச்சர்!

வாரிசு அரசியல் நோய் நாடு முழுவதும் பரவுவதற்கு வாசற்கதவை முதலில் திறந்து வைத்தது நேரு குடும்பம்தான் என்பது வரலாறு. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு மூல முழு முதற்காரணம் இந்த வாரிசு அரசியல்தான். உங்கள் தந்தை முன்னாள் மந்திரியோ, தலைவரோ, எம்.பி-யோ இல்லையா... உங்களுக்குக் காங்கிரஸில் எதிர்காலமே இல்லை. 'போலோ மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று தொடர்ந்து தொண்டைவற்றக் குரல் கொடுக்க வேண்டியதுதான். பாவம் நீங்கள்!

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று ஒரேயொரு குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்வது எந்தவகை ஜனநாயகம்? 125 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட காங்கிரஸ் ஒரேயொரு குடும்பத்திடம் அடகு வைக்கப்பட்டதனால்தான் இன்று அது மரணப் படுக்கையில் கண்மூடிக் கிடக்கிறது என்பதை உங்களால் உணர முடியவில்லையா? இந்தியாவின் 120 கோடி மக்களின் விதியெழுதும் வல்லமை நேரு குடும்பத்துக்கு மட்டும்தான் உண்டு என்று அடிமை மனோபாவத்திலிருந்து நீங்கள் விட்டு விடுதலையாகப் போவதே இல்லையா?

காங்கிரஸ் தேசிய அளவில் எப்படி வளர்ந்தது என்று யோசியுங்கள். அதனுடைய வளர்ச்சிக்கு அடித்தளமானது நான்கு முக்கிய காரணிகள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். விடுதலை வேள்வியில் ஈடுபட்டு, சொந்த சுகங்களைத் தியாகம் செய்த தலைவர்கள் தேடிக்கொடுத்த நற்பெயர், நாடு முழுவதும் கடைசி கிராமம் வரை இந்த இயக்கம் வளர்வதற்கு, வேர்வரை வியர்வை நீர் பாய்ச்சிய தொண்டர்களின் உழைப்பு, மாநிலங்களின் உணர்வுகளுக்கு உடன்பட்டு, தேசியத்தைக் கட்டிக் காத்த தலைவர்களின் அரசியல் தெளிவு, அரசியலைத் தொழிலாகவும், பிழைப்பாகவும் பாவிக்காத பண்பு நலன் ஆகியவற்றால் வளர்ந்த காங்கிரஸின் இன்றைய நிலை என்னவென்று சிந்தியுங்கள்.

நம் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இன்றுள்ள காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் யார்? கக்கன் யார்? எளிய வாழ்க்கைக்கும் இவர்களுக்கும் எள்ளளவு சம்பந்தம் உண்டா? ராஜாஜியைப் போன்ற கூர்த்த மதியும், அப்பழுக்கற்ற துறவு வாழ்க்கையும் ஒருங்கிணைந்த ஒரேயொரு தலைவரை இன்று தமிழ்நாடு காங்கிரஸில் இனங்காட்டக் கூடுமா?

சீரிய சிந்தனையாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், நேரிய பேச்சாளர்கள், அகத்திலும் புறத்திலும் அழுக்குப் படியாத ஒழுக்க சீலர்கள், பதவிப் பித்தற்றவர்கள், பணத்தின் மீது ஆசை துறந்தவர்கள், தொண்டு செய்வதே வாழ்வின் தவம் என்று எளிய மக்களின் நலன் நாடுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸில்? விரல் நீட்ட முடியுமா உங்களால்? 'உங்களுக்கு ஒழுங்காகப் பேசத் தெரியுமா? அழகாக எழுத வருமா? சுயமாகச் சிந்திப்பவரா? மக்களோடு நெருக்கமான தொடர்பு உள்ளவரா?' ஆம் எனில், நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக வாய்ப்பில்லை.

சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்தபடி அறிக்கையளிப்பதும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதும்தான் காங்கிரஸ் தலைவருக்கான கடமைகள். 'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின்படி’ என்ற வார்த்தைகள் அறிக்கைகளிலும், பேட்டிகளிலும் தவறாமல் இடம் பெறுவது அவசியம். அவ்வளவுதான் கட்சிப் பணி. தேர்தல் நேரத்தில் பத்துப் பேர் நாடாளுமன்றம் செல்லவும், அதில் மூன்று பேர் அமைச்சர் பீடத்தில் அமரவும் தோள் கொடுப்பதற்கு இருக்கவே இருக்கின்றன இரண்டு திராவிட கட்சிகள். சட்டமன்றம் செல்ல வேண்டுமா? அதற்கு நிரந்தரமாக நாற்பது பேர் பட்டியல் தயார். ஒருமுறை போயஸ் தோட்டம், மறுமுறை கோபாலபுரம் என்று காவடி எடுத்தால் போதும். எல்லாம் நினைத்தபடி நடக்கும்.

நேற்றுவரை இது நிஜம். ஆனால், இன்று? ஆடிய ஆட்டமும், பாடிய பாட்டும் பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீழ்ந்ததற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை இப்போது சொல்கிறேன். அ.தி.மு.க-வில் ஒவ்வொரு முறையும் புதிய முகங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும். தி.மு.க-வில் சில தலைவர்கள் மட்டும் நிரந்தரமாக நின்றாலும் புதியவர்களுக்கும் வாய்ப்புண்டு. ஆனால், இந்த இரண்டு கட்சிகளின் தயவில் களம்காணும் காங்கிரஸில் மட்டும் நேற்று வரை புதியவர்களுக்கு இடமே கிடையாது. நான் மாணவர் காங்கிரஸில் இருந்தபோது 1972-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் அது. காமராஜர் என்.எஸ்.வி.சித்தனை வேட்பாளராக அறிவித்தார். எஸ்.ஜி.விநாயகமூர்த்தி தலைமையில் நானும் சென்று பரப்புரையில் ஈடுபட்டேன். இடையில் 42 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று வரை திண்டுக்கல் தொகுதிக்கு அவர்தான் காங்கிரஸ் வேட்பாளர்.

சிதம்பரம் 25 ஆண்டுகளுக்குப் பின்பு மகனுக்கு வாய்ப்பளித்து சிவகங்கையில் ஒதுங்கிவிட்டார். ஆனால், சித்தனோ டெபாசிட் இழந்தாலும் திண்டுக்கல்லை யாருக்கும் தாரைவார்க்கத் தயாராக இல்லை. தி.மு.க. கூட்டணியில் மட்டும் இடம் பெற்றிருந்தால் காங்கிரஸில் சொந்த மகனாக இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வந்து சேர்ந்திருக்காது. தேர்தல் பாற்கடலில் அமுதம் பெருகியவரை தலைவர்கள் அருந்தினார்கள். ஆலகால விஷம் என்றதும் இளையவர்களுக்குப் பெருந்தன்மையுடன் பரிமாறத் தொடங்கிவிட்டார்கள். சித்தனைப் போன்றவர்களோ, அமுதமோ ஆலகால விஷமோ எதையும் அடுத்தவருக்குத் தருவதாக இல்லை. சுயபிரக்ஞை இழந்து கோமாவில் கிடக்கும் காங்கிரஸுக்குப் புதிய ரத்தம் தந்தாலும் புண்ணியம் ஒன்றுமில்லை.

பெருந்தலைவர் காமராஜரின் பாதம் படாத நிலப்பரப்பு தமிழகத்தில் எதுவும் இல்லை. ஓயாமல் அவர் சுற்றுப்பயணம் செய்தார். கடைசி கிராமத்து மக்களோடும் அவருக்கு நீங்காத தொடர்பிருந்தது. காந்தியத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவருடைய வாழ்க்கை நாணயத்தில் தொண்டு ஒரு பக்கமாகவும், தியாகம் மறுபக்கமாகவும் ஒளிவீசின. இந்திரா காந்தியின் செல்வாக்கு அவரிடம் செல்லுபடியாகவில்லை. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 42 சதவிகிதம் வாக்குகளையும், கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகளையும் சேர்த்து வைத்துவிட்டு அவர் சென்றார். இன்று அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு கூடிவிட்டது. ஆனால், அவர் உருவாக்கி வைத்த வாக்கு வங்கி சிதைந்து 5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது. கோடிகளில் மிதக்கும் தலைவர்கள், 'பத்து வேட்டி - சட்டையுடன் செத்தவர் எங்கள் காமராஜர்’ என்று சிறிதும் சமூகக் கூச்சமின்றிப் பேச்சரங்கில் வாய் திறப்பதை நீங்கள் இன்னும் எத்தனை நாள் கரவொலி எழுப்பிக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்?

இன்று நம்மிடையே இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைப் பெறவும், பணத்தைப் பெருக்கவும், அதிகாரத்தை அனுபவிக்கும் அகில இந்தியத் தலைமையின் ஏவல் கூவலாக இருப்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். நண்பர் ஞானதேசிகனுக்கு ஒரு நகராட்சி வார்டு தேர்தலில்கூட ஒரு வேட்பாளரைச் சுயமாக அறிவிக்கும் அதிகாரம் அறவே இல்லை. ஒரு வரலாற்றுச் செய்தியை நீங்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்வது நல்லது.

1946-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜியைத் தேர்தெடுக்க வேண்டுமென்று மகாத்மா காந்தியும், பார்லிமென்டரி போர்டின் தலைவர் வல்லபபாய் படேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரை அழைத்து நேரில் அறிவுறுத்தினர். சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமையில் தன்னால் தலையிட முடியாது என்று காமராஜர் மறுத்துவிட்டார். ஆந்திரகேசரி பிரகாசமும் முத்துரங்க முதலியாரும் களத்தில் நின்றனர். பிரகாசத்தை மகாத்மா விரும்பாத நிலையிலும், அவர்தான் அன்று முதல்வராக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஜனநாயக மரபுகளை இன்று சோனியா காங்கிரஸில் எதிர்பார்க்க முடியுமா? எப்படி இருந்த காங்கிரஸ் எப்படியாகிவிட்டது?!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், 'ஈழத் தமிழருக்கு நாங்கள்தான் நிறைய நன்மை செய்திருக்கிறோம்’ என்று சொல்வதை அவர்களுடைய மனச்சான்றே அங்கீகரிக்காதே! ஈழ நிலத்தில் சிந்திய தமிழினத்தின் ரத்தக்கறை காங்கிரஸின் 'கை’யில் படிந்திருப்பதை உலகின் எந்தப் புனித நதியாலும் போக்கிவிட முடியாது.

சிறைக் கம்பிகளுக்குள் 23 ஆண்டுகள் இருந்தபடி வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இழந்துவிட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று வீதிகளில் இறங்கிக் குரல் கொடுத்த, உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற காங்கிரஸுக்கும் மனிதநேயத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா? ராஜீவ் படுகொலை மாபாதகச் செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, ஒரு லட்சம் தமிழரை உயிர்ப்பலி வாங்கிய பின்பும் காங்கிரஸின் ரத்தப் பசி நீடித்தால் நியாயம்தானா? 'வெறுப்புக்கு மாற்றாக அன்பு’ என்று போதித்த காந்தியின் பாதையில்தான் உங்கள் காங்கிரஸ் பயணிக்கிறதா?

நண்பர்களே... நீதி தேவதையின் நியாயத் தராசை நெஞ்சில் சுமந்தபடி நன்றாகச் சிந்தியுங்கள்... சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் மன்மோகன் அரசில் அரங்கேறிய ஊழல்களுக்கு ஓர் அளவுண்டா? அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், நிலக்கரி ஊழலில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கைக் குழு அறிவித்தது. பல லட்சம் கோடிக்கான ஊழல்களுக்கு உற்சவம் நடத்திவிட்டு உங்கள் இளவரசர் ராகுல், 'ஊழலை ஒழிப்போம்’ என்று உரத்த குரலில் முழங்கி வருகிறார். முள்ளை முள்ளால் எடுக்கலாம். வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஆனால், ஊழலை ஊழலால் ஒழிக்கலாம் என்ற ரகசியத்தை உங்கள் ராகுல் மூலம்தான் அறிந்துகொள்ள முடிந்தது.

காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஐந்து ஆண்டுகள் அரசிதழில் வெளியிடாமல் கர்நாடகத்துக்கு உதவியது காங்கிரஸின் கை. முல்லை பெரியாறு அணையை இடிப்பதற்கு முடிவெடுத்த கேரள அரசுக்குத் துணை போனது காங்கிரஸின் கை. காமராஜரின் முயற்சியால் வடிவம்பெற்று ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தரும் நெய்வேலித் திட்டத்தில் முதலில் 10 சதவிகிதம் பங்கைத் தனியாருக்குத் தாரைவார்க்க திட்டமிட்டது காங்கிரஸ் அரசின் கை. ஏறக்குறைய 700 தமிழகத்து மீனவர்கள் சிங்கள கடற்படையால் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டபோதும் இலங்கை அரசை 'நட்பு நாடு’ என்று பாராட்டி, ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் ரத்தினக் கம்பள வரவேற்பளித்துப் பரவசப்பட்டுக் கைகுலுக்கியது மன்மோகன் சிங்கின் கை. தமிழினத்தின் நலனுக்கு எதிராகவே சகல தளங்களிலும் முனைப்போடு செயற்பட்ட 'கை’ எந்த முகத்தோடு வாக்கு கேட்பதற்கு வந்து நிற்கிறது? யோசியுங்கள்.

வரலாறு காணாத ஊழல்கள், சொந்தக் கால்களில் நின்று சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாத பிரதமர், ரிமோட் கன்ட்ரோலில் அரசை இயக்கும் சோனியாவின் குடும்ப ஆதிக்கம், மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலுவுடன் கூச்சமற்றுக் கூட்டணி, அலைக்கற்றை ஊழல் தி.மு.க-விடம் ஐந்து தொகுதிகளையாவது பெற்றுவிட முயன்ற பேரம், கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாத தமிழக காங்கிரஸின் ஆழ்ந்த உறக்கம் அனைத்தையும் 'மதவாதம்’ என்ற மாயமோதிரம் அணிந்த கையால் மறைத்துவிட முடியும் என்று காங்கிரஸ் கற்பனையில் மூழ்கியிருக்கிறது.

மதவாதம் பற்றிப் பேசவும், எழுதவும் காங்கிரஸுக்குத் தார்மிகத் தகுதியில்லை. உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14, 1989 அன்று 'எந்த அமைப்பும், குழுவும் பாபர் மசூதி விவகாரத்தில் 'இதுகாறும் உள்ள நிலையில்’ (ஷிtணீtus னிuஷீ) எந்த மாற்றத்தைச் செய்யவும் முயலக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது. ஆனால், ராஜீவ் அரசு செப்டம்பர் மாதம் பாபர் மசூதிக்குப் பக்கத்தில் விஸ்வ இந்து பரிஷத் 'ராமர் பூஜை’ நடத்துவதற்கு அனுமதியளித்தது. ராஜீவ் காந்தி, பாபர் மசூதிக்குச் சிறிது தூரத்தில்தான் தேர்தல் பிரசாரத்தை முதலில் தொடங்கினார். இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஒரு பக்கம் விஸ்வ இந்து பரிஷத்துடன் நேசக்கரம் நீட்டி, மறுபக்கம் இஸ்லாமியரின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்று பாபர் மசூதியைப் பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ். மதங்களின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பிரிப்பதும், பேதத்தை வளர்ப்பதும்தான் 'மதவாதம்’ என்றால், இந்திய அரசியல் களத்தில் காங்கிரஸ் உட்பட ஒவ்வொரு கட்சியும் அதைத்தான் செய்கிறது.

நண்பர்களே... நீளப் பேசிப் பயனில்லை. 2006-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 35 தொகுதிகளில் வென்றது. ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் வாய்ப்பிருந்தும் அதை இந்தக் காங்கிரஸ் தலைமை பயன்படுத்திக் கட்சியை வளர்க்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அடுத்தவர் தோள்களில் அமர்ந்துகொண்டே சொந்தக் கால்களில் நடப்பதுபோல் 'அரசபாவனை’ காட்டி வந்த காங்கிரஸை சுமப்பதற்கு இனி எந்தத் தோள்களும் தமிழகத்தில் தயாராக இல்லை. விளைச்சலை எதிர்பார்த்தே விவசாயி விதை நெல்லைத் தூவுகிறான். மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மீனவ நண்பன் மழைக்கால இரவிலும் கடலுக்குள் செல்லக் கட்டுமரம் ஏறுகிறான். பாலை நிலத்தில் போய் எந்தப் பைத்தியக்காரனும் மாலை கட்டுவதற்காக மலர்களைத் தேடுவதில்லை. இனியாவது விழித்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தோற்கலாம்; அழிந்துவிடக் கூடாது. இப்போதாவது இன உணர்வு கொள்ளுங்கள். மக்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவர்களை நாடிச் செல்லுங்கள். தேர்தலுக்குப் பின்பாவது காமராஜரை நெஞ்சில் சுமந்தபடி, புதிய வடிவில், புதிய பாதையில் புறப்படுங்கள்.

அன்புடன்,

காமராஜ் என்ற தேவனின் புகழ்பாடும் தெருப்பாடகன், உங்கள் பழைய நண்பன்

- தமிழருவி மணியன்