Saturday, April 05, 2014

காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல் !!

மிழருவி மணியனால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையினை இன்று படிக்க முடிந்தது.சரி நான் மட்டும் படித்து என்ன பயன்? நீங்களும் படிக்க வேண்டாமா எனும் ஆதங்கத்தில் இங்கு பகிர்ந்து உள்ளேன்.படித்துவிட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள் .

காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு... வணக்கம்!கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார்.

நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல முயல்கிறேன்.ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஓர் அந்தரங்க ஊழியன் பக்கத்திலிருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சில நாட்களாக அரசன் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருப்பதைக் கண்டு, அதற்கான காரணம் கேட்டான் <அந்த உண்மை ஊழியன். 'சகல சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய ஓர் இளைஞனின் அழகான முகத்தில் அன்றாடம் நான் விழித்தெழுந்தால், வெற்றி மேல் வெற்றி பெற்று உலகம் முழுவதையும் ஆள முடியும் என்று ஒரு முனிவர் என்னிடம் மொழிந்தார். திசைகள் அனைத்திலும் ஆளனுப்பிப் பார்த்துவிட்டேன். அப்படியோர் இளைஞனை இன்றுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுதான் என் கவலைக்குரிய காரணம்’ என்றான் அரசன்.

'இதற்காகவா வருத்தப்படுகிறீர்கள்? கவலையை விடுங்கள். நாளை காலை நீங்கள் எதிர்பார்க்கும் பூரண லட்சணங்கள் பொருந்திய பிள்ளையை உங்கள் பார்வையில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்’ என்று வாக்குறுதி வழங்கிவிட்டு அந்த ஊழியன் அகன்றான்.

மறுநாள் வைகறை புலர்ந்தது. அரசன் ஆர்வத்துடன் விழித்தெழுந்தான். அரைப் பார்வையும் ஒழுகிய மூக்குமாய் ஒரு பையனை அழைத்து வந்தான் ஊழியன். 'யார் இவன்?’ என்றான் அரசன் ஆத்திரத்துடன். 'அரசே! இவன் நான் பெற்றெடுத்த பிள்ளை. இந்தப் பூவுலகில் சகல சாமுத்திரிகா லட்சணங்கள் நிறைந்தவன் எனக்குத் தெரிய வேறு யாரும் என் பையனைப்போல் இல்லை’ என்றான் அந்தரங்க ஊழியன்.

நம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்த ஊழியனுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதுதான் உண்மை. 1984 முதல் 2009 முடிய நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நின்ற ப.சிதம்பரம் பார்த்த பதவிகள் போதும் என்று துறவு நிலையில் நின்று, காந்தியப் பாதையில் நலிவுற்ற மக்களுக்கான நிவாரணப் பணியில் ஈடுபட முடிவெடுத்துவிட்டார். 'சொர்க்கபுரியாய்’ தான் உருவாக்கிய தொகுதியைப் பழுதின்றிப் பராமரிக்க யார் தகுதிமிக்க இளைஞர் என்று சிந்தித்த சிதம்பரம் கண்டெடுத்த வேட்பாளர்தான் கார்த்தி சிதம்பரம்.‘Charity begins at home’(மன்பதை அன்பு வீட்டிலிருந்தே வெளிப்படுகிறது) என்பதை அறியாதவரா நம் அறிவார்ந்த நிதியமைச்சர்!

வாரிசு அரசியல் நோய் நாடு முழுவதும் பரவுவதற்கு வாசற்கதவை முதலில் திறந்து வைத்தது நேரு குடும்பம்தான் என்பது வரலாறு. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு மூல முழு முதற்காரணம் இந்த வாரிசு அரசியல்தான். உங்கள் தந்தை முன்னாள் மந்திரியோ, தலைவரோ, எம்.பி-யோ இல்லையா... உங்களுக்குக் காங்கிரஸில் எதிர்காலமே இல்லை. 'போலோ மகாத்மா காந்திக்கு ஜே!’ என்று தொடர்ந்து தொண்டைவற்றக் குரல் கொடுக்க வேண்டியதுதான். பாவம் நீங்கள்!

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று ஒரேயொரு குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்வது எந்தவகை ஜனநாயகம்? 125 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட காங்கிரஸ் ஒரேயொரு குடும்பத்திடம் அடகு வைக்கப்பட்டதனால்தான் இன்று அது மரணப் படுக்கையில் கண்மூடிக் கிடக்கிறது என்பதை உங்களால் உணர முடியவில்லையா? இந்தியாவின் 120 கோடி மக்களின் விதியெழுதும் வல்லமை நேரு குடும்பத்துக்கு மட்டும்தான் உண்டு என்று அடிமை மனோபாவத்திலிருந்து நீங்கள் விட்டு விடுதலையாகப் போவதே இல்லையா?

காங்கிரஸ் தேசிய அளவில் எப்படி வளர்ந்தது என்று யோசியுங்கள். அதனுடைய வளர்ச்சிக்கு அடித்தளமானது நான்கு முக்கிய காரணிகள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். விடுதலை வேள்வியில் ஈடுபட்டு, சொந்த சுகங்களைத் தியாகம் செய்த தலைவர்கள் தேடிக்கொடுத்த நற்பெயர், நாடு முழுவதும் கடைசி கிராமம் வரை இந்த இயக்கம் வளர்வதற்கு, வேர்வரை வியர்வை நீர் பாய்ச்சிய தொண்டர்களின் உழைப்பு, மாநிலங்களின் உணர்வுகளுக்கு உடன்பட்டு, தேசியத்தைக் கட்டிக் காத்த தலைவர்களின் அரசியல் தெளிவு, அரசியலைத் தொழிலாகவும், பிழைப்பாகவும் பாவிக்காத பண்பு நலன் ஆகியவற்றால் வளர்ந்த காங்கிரஸின் இன்றைய நிலை என்னவென்று சிந்தியுங்கள்.

நம் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இன்றுள்ள காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் யார்? கக்கன் யார்? எளிய வாழ்க்கைக்கும் இவர்களுக்கும் எள்ளளவு சம்பந்தம் உண்டா? ராஜாஜியைப் போன்ற கூர்த்த மதியும், அப்பழுக்கற்ற துறவு வாழ்க்கையும் ஒருங்கிணைந்த ஒரேயொரு தலைவரை இன்று தமிழ்நாடு காங்கிரஸில் இனங்காட்டக் கூடுமா?

சீரிய சிந்தனையாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், நேரிய பேச்சாளர்கள், அகத்திலும் புறத்திலும் அழுக்குப் படியாத ஒழுக்க சீலர்கள், பதவிப் பித்தற்றவர்கள், பணத்தின் மீது ஆசை துறந்தவர்கள், தொண்டு செய்வதே வாழ்வின் தவம் என்று எளிய மக்களின் நலன் நாடுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸில்? விரல் நீட்ட முடியுமா உங்களால்? 'உங்களுக்கு ஒழுங்காகப் பேசத் தெரியுமா? அழகாக எழுத வருமா? சுயமாகச் சிந்திப்பவரா? மக்களோடு நெருக்கமான தொடர்பு உள்ளவரா?' ஆம் எனில், நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக வாய்ப்பில்லை.

சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்தபடி அறிக்கையளிப்பதும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதும்தான் காங்கிரஸ் தலைவருக்கான கடமைகள். 'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலின்படி’ என்ற வார்த்தைகள் அறிக்கைகளிலும், பேட்டிகளிலும் தவறாமல் இடம் பெறுவது அவசியம். அவ்வளவுதான் கட்சிப் பணி. தேர்தல் நேரத்தில் பத்துப் பேர் நாடாளுமன்றம் செல்லவும், அதில் மூன்று பேர் அமைச்சர் பீடத்தில் அமரவும் தோள் கொடுப்பதற்கு இருக்கவே இருக்கின்றன இரண்டு திராவிட கட்சிகள். சட்டமன்றம் செல்ல வேண்டுமா? அதற்கு நிரந்தரமாக நாற்பது பேர் பட்டியல் தயார். ஒருமுறை போயஸ் தோட்டம், மறுமுறை கோபாலபுரம் என்று காவடி எடுத்தால் போதும். எல்லாம் நினைத்தபடி நடக்கும்.

நேற்றுவரை இது நிஜம். ஆனால், இன்று? ஆடிய ஆட்டமும், பாடிய பாட்டும் பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீழ்ந்ததற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை இப்போது சொல்கிறேன். அ.தி.மு.க-வில் ஒவ்வொரு முறையும் புதிய முகங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும். தி.மு.க-வில் சில தலைவர்கள் மட்டும் நிரந்தரமாக நின்றாலும் புதியவர்களுக்கும் வாய்ப்புண்டு. ஆனால், இந்த இரண்டு கட்சிகளின் தயவில் களம்காணும் காங்கிரஸில் மட்டும் நேற்று வரை புதியவர்களுக்கு இடமே கிடையாது. நான் மாணவர் காங்கிரஸில் இருந்தபோது 1972-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் அது. காமராஜர் என்.எஸ்.வி.சித்தனை வேட்பாளராக அறிவித்தார். எஸ்.ஜி.விநாயகமூர்த்தி தலைமையில் நானும் சென்று பரப்புரையில் ஈடுபட்டேன். இடையில் 42 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று வரை திண்டுக்கல் தொகுதிக்கு அவர்தான் காங்கிரஸ் வேட்பாளர்.

சிதம்பரம் 25 ஆண்டுகளுக்குப் பின்பு மகனுக்கு வாய்ப்பளித்து சிவகங்கையில் ஒதுங்கிவிட்டார். ஆனால், சித்தனோ டெபாசிட் இழந்தாலும் திண்டுக்கல்லை யாருக்கும் தாரைவார்க்கத் தயாராக இல்லை. தி.மு.க. கூட்டணியில் மட்டும் இடம் பெற்றிருந்தால் காங்கிரஸில் சொந்த மகனாக இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வந்து சேர்ந்திருக்காது. தேர்தல் பாற்கடலில் அமுதம் பெருகியவரை தலைவர்கள் அருந்தினார்கள். ஆலகால விஷம் என்றதும் இளையவர்களுக்குப் பெருந்தன்மையுடன் பரிமாறத் தொடங்கிவிட்டார்கள். சித்தனைப் போன்றவர்களோ, அமுதமோ ஆலகால விஷமோ எதையும் அடுத்தவருக்குத் தருவதாக இல்லை. சுயபிரக்ஞை இழந்து கோமாவில் கிடக்கும் காங்கிரஸுக்குப் புதிய ரத்தம் தந்தாலும் புண்ணியம் ஒன்றுமில்லை.

பெருந்தலைவர் காமராஜரின் பாதம் படாத நிலப்பரப்பு தமிழகத்தில் எதுவும் இல்லை. ஓயாமல் அவர் சுற்றுப்பயணம் செய்தார். கடைசி கிராமத்து மக்களோடும் அவருக்கு நீங்காத தொடர்பிருந்தது. காந்தியத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவருடைய வாழ்க்கை நாணயத்தில் தொண்டு ஒரு பக்கமாகவும், தியாகம் மறுபக்கமாகவும் ஒளிவீசின. இந்திரா காந்தியின் செல்வாக்கு அவரிடம் செல்லுபடியாகவில்லை. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 42 சதவிகிதம் வாக்குகளையும், கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகளையும் சேர்த்து வைத்துவிட்டு அவர் சென்றார். இன்று அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு கூடிவிட்டது. ஆனால், அவர் உருவாக்கி வைத்த வாக்கு வங்கி சிதைந்து 5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது. கோடிகளில் மிதக்கும் தலைவர்கள், 'பத்து வேட்டி - சட்டையுடன் செத்தவர் எங்கள் காமராஜர்’ என்று சிறிதும் சமூகக் கூச்சமின்றிப் பேச்சரங்கில் வாய் திறப்பதை நீங்கள் இன்னும் எத்தனை நாள் கரவொலி எழுப்பிக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள்?

இன்று நம்மிடையே இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைப் பெறவும், பணத்தைப் பெருக்கவும், அதிகாரத்தை அனுபவிக்கும் அகில இந்தியத் தலைமையின் ஏவல் கூவலாக இருப்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். நண்பர் ஞானதேசிகனுக்கு ஒரு நகராட்சி வார்டு தேர்தலில்கூட ஒரு வேட்பாளரைச் சுயமாக அறிவிக்கும் அதிகாரம் அறவே இல்லை. ஒரு வரலாற்றுச் செய்தியை நீங்கள் அனைவரும் அவசியம் அறிந்துகொள்வது நல்லது.

1946-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜியைத் தேர்தெடுக்க வேண்டுமென்று மகாத்மா காந்தியும், பார்லிமென்டரி போர்டின் தலைவர் வல்லபபாய் படேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரை அழைத்து நேரில் அறிவுறுத்தினர். சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமையில் தன்னால் தலையிட முடியாது என்று காமராஜர் மறுத்துவிட்டார். ஆந்திரகேசரி பிரகாசமும் முத்துரங்க முதலியாரும் களத்தில் நின்றனர். பிரகாசத்தை மகாத்மா விரும்பாத நிலையிலும், அவர்தான் அன்று முதல்வராக வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஜனநாயக மரபுகளை இன்று சோனியா காங்கிரஸில் எதிர்பார்க்க முடியுமா? எப்படி இருந்த காங்கிரஸ் எப்படியாகிவிட்டது?!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், 'ஈழத் தமிழருக்கு நாங்கள்தான் நிறைய நன்மை செய்திருக்கிறோம்’ என்று சொல்வதை அவர்களுடைய மனச்சான்றே அங்கீகரிக்காதே! ஈழ நிலத்தில் சிந்திய தமிழினத்தின் ரத்தக்கறை காங்கிரஸின் 'கை’யில் படிந்திருப்பதை உலகின் எந்தப் புனித நதியாலும் போக்கிவிட முடியாது.

சிறைக் கம்பிகளுக்குள் 23 ஆண்டுகள் இருந்தபடி வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இழந்துவிட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று வீதிகளில் இறங்கிக் குரல் கொடுத்த, உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற காங்கிரஸுக்கும் மனிதநேயத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா? ராஜீவ் படுகொலை மாபாதகச் செயல் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, ஒரு லட்சம் தமிழரை உயிர்ப்பலி வாங்கிய பின்பும் காங்கிரஸின் ரத்தப் பசி நீடித்தால் நியாயம்தானா? 'வெறுப்புக்கு மாற்றாக அன்பு’ என்று போதித்த காந்தியின் பாதையில்தான் உங்கள் காங்கிரஸ் பயணிக்கிறதா?

நண்பர்களே... நீதி தேவதையின் நியாயத் தராசை நெஞ்சில் சுமந்தபடி நன்றாகச் சிந்தியுங்கள்... சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் மன்மோகன் அரசில் அரங்கேறிய ஊழல்களுக்கு ஓர் அளவுண்டா? அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், நிலக்கரி ஊழலில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கைக் குழு அறிவித்தது. பல லட்சம் கோடிக்கான ஊழல்களுக்கு உற்சவம் நடத்திவிட்டு உங்கள் இளவரசர் ராகுல், 'ஊழலை ஒழிப்போம்’ என்று உரத்த குரலில் முழங்கி வருகிறார். முள்ளை முள்ளால் எடுக்கலாம். வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஆனால், ஊழலை ஊழலால் ஒழிக்கலாம் என்ற ரகசியத்தை உங்கள் ராகுல் மூலம்தான் அறிந்துகொள்ள முடிந்தது.

காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ஐந்து ஆண்டுகள் அரசிதழில் வெளியிடாமல் கர்நாடகத்துக்கு உதவியது காங்கிரஸின் கை. முல்லை பெரியாறு அணையை இடிப்பதற்கு முடிவெடுத்த கேரள அரசுக்குத் துணை போனது காங்கிரஸின் கை. காமராஜரின் முயற்சியால் வடிவம்பெற்று ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய் லாபம் ஈட்டித் தரும் நெய்வேலித் திட்டத்தில் முதலில் 10 சதவிகிதம் பங்கைத் தனியாருக்குத் தாரைவார்க்க திட்டமிட்டது காங்கிரஸ் அரசின் கை. ஏறக்குறைய 700 தமிழகத்து மீனவர்கள் சிங்கள கடற்படையால் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டபோதும் இலங்கை அரசை 'நட்பு நாடு’ என்று பாராட்டி, ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் ரத்தினக் கம்பள வரவேற்பளித்துப் பரவசப்பட்டுக் கைகுலுக்கியது மன்மோகன் சிங்கின் கை. தமிழினத்தின் நலனுக்கு எதிராகவே சகல தளங்களிலும் முனைப்போடு செயற்பட்ட 'கை’ எந்த முகத்தோடு வாக்கு கேட்பதற்கு வந்து நிற்கிறது? யோசியுங்கள்.

வரலாறு காணாத ஊழல்கள், சொந்தக் கால்களில் நின்று சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாத பிரதமர், ரிமோட் கன்ட்ரோலில் அரசை இயக்கும் சோனியாவின் குடும்ப ஆதிக்கம், மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலுவுடன் கூச்சமற்றுக் கூட்டணி, அலைக்கற்றை ஊழல் தி.மு.க-விடம் ஐந்து தொகுதிகளையாவது பெற்றுவிட முயன்ற பேரம், கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாத தமிழக காங்கிரஸின் ஆழ்ந்த உறக்கம் அனைத்தையும் 'மதவாதம்’ என்ற மாயமோதிரம் அணிந்த கையால் மறைத்துவிட முடியும் என்று காங்கிரஸ் கற்பனையில் மூழ்கியிருக்கிறது.

மதவாதம் பற்றிப் பேசவும், எழுதவும் காங்கிரஸுக்குத் தார்மிகத் தகுதியில்லை. உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 14, 1989 அன்று 'எந்த அமைப்பும், குழுவும் பாபர் மசூதி விவகாரத்தில் 'இதுகாறும் உள்ள நிலையில்’ (ஷிtணீtus னிuஷீ) எந்த மாற்றத்தைச் செய்யவும் முயலக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது. ஆனால், ராஜீவ் அரசு செப்டம்பர் மாதம் பாபர் மசூதிக்குப் பக்கத்தில் விஸ்வ இந்து பரிஷத் 'ராமர் பூஜை’ நடத்துவதற்கு அனுமதியளித்தது. ராஜீவ் காந்தி, பாபர் மசூதிக்குச் சிறிது தூரத்தில்தான் தேர்தல் பிரசாரத்தை முதலில் தொடங்கினார். இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஒரு பக்கம் விஸ்வ இந்து பரிஷத்துடன் நேசக்கரம் நீட்டி, மறுபக்கம் இஸ்லாமியரின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்று பாபர் மசூதியைப் பயன்படுத்திக்கொண்டது காங்கிரஸ். மதங்களின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பிரிப்பதும், பேதத்தை வளர்ப்பதும்தான் 'மதவாதம்’ என்றால், இந்திய அரசியல் களத்தில் காங்கிரஸ் உட்பட ஒவ்வொரு கட்சியும் அதைத்தான் செய்கிறது.

நண்பர்களே... நீளப் பேசிப் பயனில்லை. 2006-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 35 தொகுதிகளில் வென்றது. ஆனால், தி.மு.க-வுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் வாய்ப்பிருந்தும் அதை இந்தக் காங்கிரஸ் தலைமை பயன்படுத்திக் கட்சியை வளர்க்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அடுத்தவர் தோள்களில் அமர்ந்துகொண்டே சொந்தக் கால்களில் நடப்பதுபோல் 'அரசபாவனை’ காட்டி வந்த காங்கிரஸை சுமப்பதற்கு இனி எந்தத் தோள்களும் தமிழகத்தில் தயாராக இல்லை. விளைச்சலை எதிர்பார்த்தே விவசாயி விதை நெல்லைத் தூவுகிறான். மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மீனவ நண்பன் மழைக்கால இரவிலும் கடலுக்குள் செல்லக் கட்டுமரம் ஏறுகிறான். பாலை நிலத்தில் போய் எந்தப் பைத்தியக்காரனும் மாலை கட்டுவதற்காக மலர்களைத் தேடுவதில்லை. இனியாவது விழித்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தோற்கலாம்; அழிந்துவிடக் கூடாது. இப்போதாவது இன உணர்வு கொள்ளுங்கள். மக்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவர்களை நாடிச் செல்லுங்கள். தேர்தலுக்குப் பின்பாவது காமராஜரை நெஞ்சில் சுமந்தபடி, புதிய வடிவில், புதிய பாதையில் புறப்படுங்கள்.

அன்புடன்,

காமராஜ் என்ற தேவனின் புகழ்பாடும் தெருப்பாடகன், உங்கள் பழைய நண்பன்

- தமிழருவி மணியன்