Thursday, December 31, 2015

திரு ‘த்தூ’ விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்?

’த்தூ..!’ என்று செய்தியாளர்களை விஜயகாந்த் இகழ்ந்ததற்கு பெருமளவு ஆதரவு கருத்துக்கள் வெளிப்படுவது என்னவிதமான மனநிலை என்று தெரியவில்லை. அது பற்றிய விவாதம் இப்போதைக்கு தேவையில்லை. விஜயகாந்த் செய்தது சரியா என்பதை மட்டும் இப்போதைக்கு பேசுவோம்!
‘2016-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆட்சியமைக்க அ.தி.மு.க.விற்கு வாய்ப்புள்ளதா?’ என்பது செய்தியாளர்களின் கேள்வி. ‘நிச்சயம் வாய்ப்பில்லை’ என்பது வலுவான எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் பதில். கேள்வியில் எந்தத் தவறும் இல்லை. அது கேட்கப்பட வேண்டிய கேள்விதான். அதற்கு விஜயகாந்த் சொன்ன பதிலும் தொடக்கத்தில் தவறாக வெளிப்படவில்லை. ஆனால், பதிலின் நீட்சியாக தொடர்ந்த வார்த்தைகள், ‘இதே கேள்வியை ஜெயலலிதாவிடம் போய்க் கேட்பீர்களா? செய்தியாளர்களா நீங்கள்? த்தூ..’ என்று தெரித்தது, வழக்கம்போல தன்னிலை மறந்தவராக அன்று விஜயகாந்த் இல்லை. ஆனாலும்கூட, செய்தியாளர்களின் கேள்விக்கான பதிலில் வார்த்தைகள் வன்மத்துடன் தெரித்தன. அதில் உடைந்து நொறுங்கியது விஜயகாந்தின் ‘தராதரம்’ மட்டுமல்ல, அது ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்தில், பொதுக்கூட்ட மேடையில், தேர்தல் பிரசாரத்தில், ஊடகங்களில் உடைந்து சிதறி நொறுங்கிப்போய் இருக்கிறது. விஜயகாந்தின் அநாகரீக வார்த்தைகள் இப்போது கலைத்துப்போட்டது, தமிழக அரசாங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல், அதை அம்பலப்படுத்தி கேள்விக்குட்படுத்தாத பெரும்பான்மை ஊடகங்களின் நிலைப்பாட்டைதான். ஊடகத்தினரை விஜயகாந்த் இவ்வளவு கிள்ளுக்கீரையாகக் கருதக் காரணம் என்ன?
விஜயகாந்தை ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கவில்லை!
மதுரையில் பிரம்மாண்ட மேடை அமைத்து, நல்ல நேரம் பார்த்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று ஒன்றைச் சொல்லவில்லை. அப்போது செய்தியாளர்கள் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டனர். அதற்கு, மழுப்பலாக, ‘மக்கள் நலன்தான் என் கட்சியின் கொள்கை’ என்று சொல்லிச் சமாளித்தீர்கள். அந்தக் கேள்விக்கு அதற்கு மேல் உங்களால் பதில் சொல்லமுடியவில்லை. இப்போதும் அந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. அப்படியிருக்கும்பட்சத்தில், நீங்கள் சொல்லிய அந்த ஒற்றை வார்த்தையைச் சொல்லியே, ‘விஜயகாந்த் கொள்கை இல்லாத ஒரு கட்சியின் தலைவன்’ என்று ஊடகங்கள் விமர்சித்திருக்க வேண்டும்.
2006 சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. விருத்தாச்சலம் தொகுதியில் நீங்கள் மட்டும் வெற்றி பெற்றீர்கள். ஆனால், மொத்தமாக உங்கள் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. சில இடங்களில், 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கூட உங்கள் வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். எதிர்காலத்தில் வலுவான கட்சியாக வரும் என்று ஊடகங்கள் தே.மு.தி.கவை அடையாளப்படுத்தின. அந்தச் சூழலில், நீங்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தீர்கள். அப்போது தி.மு.க ஆளும்கட்சி. கருணாநிதி முதலமைச்சராக இருந்த அந்த சட்டமன்றத்தில், சர்வாதிகாரப்போக்கு, இன்று இருப்பதுபோல் நிச்சயம் இருக்கவில்லை. ஆனால், அப்போதுகூட உங்கள் தொகுதிக்காக, நீங்கள் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. வந்தீர்கள். கையெழுத்துப்போட்டுச் சென்றீர்கள். சட்டமன்றத்தில்தான் எதுவும் சாதிக்கவில்லை என்றால், உங்களை நம்பி வாக்களித்த விருத்தாச்சலம் தொகுதி மக்களையாவது எட்டிப் பார்த்தீர்களா? அதுவும் இல்லை. அதனால்தான், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடாமல், ரிஷிவந்தியம் சென்றீர்கள். உங்களின் அந்த பொறுப்பற்ற செயல்பாட்டை ஊடகங்கள் அன்றைக்கு நீங்கள் சொல்லி அந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு விமர்சிக்கவில்லை!
கட்சி தொடங்கிய நாள் முதல், ‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி’ என்று தொடர்ந்து லாவணி பாடிக் கொண்டிந்தீர்கள். இடையில் வந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் தனித்தே போட்டியிட்டு உங்களின் ஓட்டு சதவீதத்தை நிரூபித்துக் கொண்டே வந்தீர்கள். அந்த நேரத்தில், 2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. உங்களுக்கு எல்லா பக்கமும் இருந்து அழைப்பு வந்தது. அதனால் தெய்வத்தை அம்போ என விட்டீர்கள். மக்களைத் தெருவில் விட்டீர்கள். ‘குடிகாரன்’ என்று உங்களை குறிப்பிட்ட ஜெயலலிதாவும், ‘அவர் வந்து ஊற்றிக் கொடுத்தாரா?’ என்று அவரிடம் கேட்ட கேட்ட நீங்களும் கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். அந்தக் கூட்டணி குறித்து பலப்பல ஹேஷ்யங்கள் உலவியபோது, அதைக் குறிப்பிட்டு நீங்கள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை கொண்டு உங்களை ஊடகங்கள் விமர்சிக்கவில்லை!
அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எதிர்க்க்ட்சித் தலைவராக சட்டசபைக்குள் கெத்தாக நுழைந்த உங்களால், ஒரு கூட்டத்தொடரைச் சமாளிக்க முடியவில்லை. கையை மடித்து நாக்கைத் துருத்தி வெளியில் வந்த உங்களை, நீங்கள் சொன்ன ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் புறக்கணிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க முடியாதவர்கள் நீங்கள் என்று செய்தியாளர்களைப் பார்த்து துப்புகிற விஜயகாந்த் அவர்களே, நீங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவைப் பார்த்து கேட்ட கேள்விகள் எத்தனை? உங்கள் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகள் எத்தனை? நீங்கள் கேட்கமுடியாதபடி உங்களை வெளியேற்றினால், அதைக் கண்டித்து நீங்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளும், சட்டமன்றத்தின் முன்பும் கூடி நடத்திய போராட்டங்கள் எத்தனை? 29 எம்.எல்.ஏக்கள் ஜெயித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் சட்டமன்றத்திற்குப் போய், ஜெயலலிதாவை எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாமல், அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்து, நீங்கள் சொல்லிய வார்த்தையைக் கொண்டு ஊடகங்கள் விமர்சிக்கவில்லை.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும் பணியாற்றாமல், தொகுதிக்குள்ளும் பணியாற்றாமல் தன்னிலை மறந்து கிடந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அத்தேர்தல் தொடர்பான ’பலனளிக்கும் கூட்டணி’ அமைக்க தி.மு.க.வுடனும் பாரதிய ஜனதாவுடனும் ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினீர்கள். ரகசிய ஒப்பந்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா அணியில் போய்ச் சேர்ந்ததுடன், 14 தொகுதிகளையும் வாங்கினீர்கள். அதில் ஒரு இடம் உங்கள் மச்சானுக்கு ஒதுக்கப்பட, மற்ற இடங்களை வாங்க முடிந்தவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஆனால், போட்டியிட்ட 14 இடங்களிலும் தோல்வி. அப்போது கட்சியை விஜயகாந்த் அடகு வைத்துவிட்டார் என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி ஊடகங்கள் உங்களை விமர்சிக்கவில்லை!
தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியையும் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கட்சிகளில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் யாரும், கட்சியின் மேடையிலோ, தேர்தல் பிரச்சார மேடைகளிலோ என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவதுமான காட்சியைத் தமிழகம் ஒருநாளும் கண்டதில்லை. ஆனால், விழுப்புரத்தில் நீங்கள் நடத்திய லஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உங்கள் நிலை எப்படி இருந்தது? அங்கு உங்களைத் தலைவராக நம்பி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு நீங்கள் ஆற்றிய அந்த அரிய உரை, என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியவில்லை. அந்தக் காட்சிகள் தேவைப்பட்டால், உங்கள் கேப்டன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் போய்க் கேளுங்கள். போட்டுக்காட்டுவார்கள். இல்லையென்றாலும் பிரச்னை இல்லை. இப்போதும் அந்த அவமானப் பேச்சு வலைத்தளங்களில் இருக்கிறது. அன்றே ஊடகங்கள் உங்களை நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லி உங்களை விமர்சிக்கவில்லை!
“ஜெயலலிதாவைப் பார்த்து கேள்வி கேட்க தைரியமில்லை. செய்தியாளர்களா நீங்கள்? த்த்தூ” என்று துப்பிய திரு. விஜயகாந்த் அவர்களே… நீங்களே சொந்தமாக ஒரு ஊடக நிறுவனம் நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? அ.தி.மு.க தலைமைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், அறிவாலயத்தில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்புகள், கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நடத்தும் கூட்டங்களில் உங்கள் செய்தியாளர்களும், சுற்றி சுற்றி வந்து மற்ற செய்தியாளர்களைப்போல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அங்கெல்லாம் அவர்கள் மிக கண்ணியமாகவே நடத்தப்படுகிறார்கள். ’நீ கேப்டன் டி.வியா? உன் கேள்விக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்று தி.மு.க தலைவர் கருணாநிதியோ, அன்புமணி ராமதாஸோ ஒருநாளும் அவர்களிடம் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் பிற ஊடகவியலாளர்களை அதன் நிர்வாகத்தை மனதில் வைத்தே எதிர்கொள்கிறீர்கள்… வசை பாடுகிறீர்கள். ஆக, திரு விஜயகாந்த் அவர்களே, உடனடியாக நீங்கள் ஏன் கேப்டன் டி.வி செய்தியாளர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்து, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கக் கூடாது? ஒருவேளை அது முடியாதென்றால், அப்போது நீங்கள் யார் மீது துப்பிக்கொள்வீர்கள். உங்கள் மீதா?
ஊடகங்களைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு அச்சமா?
ஜெயலலிதாவும் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். போயஸ் கார்டன் வேதா நிலைய வாசல், தலைமைச் செயலகம், அ.தி.மு.க அலுவலகம் மற்றும் ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்று வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடமும் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். ஆனால், கருணாநிதியிடம் கேள்வி கேட்கும் போது, இருக்கும் எளிமையான மனநிலை-உரிமையான மனநிலை, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்கும்போது செய்தியாளர்களிடம் இருக்காது என்பது உண்மை. ஜெயலலிதா ‘சிடுசிடு’ முகத்தையே காட்டுவார். இறுக்கமாக இருப்பார். ‘பிரஸ். அமைதி’ என்று அதட்டவும் செய்வார். அதனால், அவர் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு இறுக்கம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், பத்திரிகையாளர்களை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சந்தித்த ஜெயலலிதா, இனிமேல் நான் உங்களை வாரம் ஒருமுறை சந்திப்பேன். நான் போகும் இடங்களில் எல்லாம் நீங்கள் மைக்கை எடுத்துக்கொண்டு என்னைத் துரத்தத் தேவையில்லை என்று ஒரு ஒப்பந்தம் போட்டார். சொன்னதுபோல் முதல் வாரம் சந்திக்கவும் செய்தார். ஆனால், அதற்கடுத்த வாரத்தில் இருந்து அந்த பிரஸ்மீட் நடக்கவில்லை. அதன்பிறகு, பத்திரிகையாளர்களும் கேமராவும் தன்னை நெருங்க முடியாத வகையில் ஜெயலலிதா தனக்குத் தானே ஒரு இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டார். எந்தச் சூழலிலும் கேள்விகளை எதிர்கொண்டு, அதில் தன் நிலை என்ன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆற்றல் ஜெயலலிதாவிடம் கிடையாது. அதனால், அவர் அந்த இரும்புத் திரையை அணிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார். அவர் அதைத் தனக்குப் போட்டுக் கொண்டதோடு அல்லாமல், தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி அடிப்படை உறுப்பினர் வரை அனைவரையும் அதற்குள் சிக்க வைத்துள்ளார். பொதுநிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை பக்கத்திலேயே அனுமதிப்பதில்லை. வார இதழ்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று ஒரு சர்வாதிகாரத்தன்மையோடு அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு அர்த்தம் ஊடகங்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறது என்பதல்ல… ஜெயலலிதா ஊடகங்களை எதிர்கொள்ள அஞ்சுகிறார் என்பதே..!
ஜெயலலிதாவைப் பிடித்துள்ள அந்த அச்சம், அவர் தலைமையின் கீழ் இயங்கும் ஒட்டுமொத்த அரசு எந்திரத்திற்கும் இன்று கடத்தப்பட்டுள்ளது. அதன்விளைவுதான், கடந்த மாதம் சென்னையை வெள்ளம் மூழ்கடித்து தேசியப் பேரிடர் அளவிற்கு சேதத்தை உருவாக்கிய நிலையிலும் ஒரு முதலமைச்சரை ஊடகங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊடகங்களைத் தொடர்பு கொள்ள முதலமைச்சரும் விரும்பவில்லை. சரி உடல்நிலையில் கோளாறா? என்று சந்தேகத்தை கிளப்பி செய்தி வெளியிட்டால், அதற்குப் பதில் இல்லை. ஆனால், கேள்வி எழுப்பிய பத்திரிகை மீது அவதூறு வழக்குப் போடப்படுகிறது. அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேச மறுக்கிறார்கள். குறிப்பிட்ட அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் ஓடி ஒளிகிறார்கள். இப்படிப்பட்ட இருட்டான அரசாங்கம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் போகிற போக்கில் நீங்கள் ‘தூ’ என்று துப்புவது சரியா திரு.விஜயகாந்த் அவர்களே!
இங்கு விஜயகாந்த் த்த்த்தூ என்றதும், அவரைத் நோக்கித் திருப்பித் துப்புவதற்கு செய்தியாளர்களிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிரச்னையின் மையப்புள்ளி அதுவல்ல. இப்படிப்பட்ட அராஜகப் போக்கை முதன் முதலில் உருவாக்கி வைத்த, ஜெயலலிதாவின் இருட்டு அரசாங்கத்தை மௌனமாக வேடிக்கை பார்ப்பதை விடுத்து, அதை கேள்விகளால் உடைக்கத் தொடங்க வேண்டும் ஊடகங்கள்.
இல்லையென்றால், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியாத முதலமைச்சரும், 24 மணி நேரமும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத ஒரு தன்னிலை மறந்த எதிர்க்கட்சி தலைவரும் உள்ள மாநிலத்தில் இப்படிப்பட்ட அவமானங்களைச் செய்தியாளர்கள் தினமும் சந்திக்கத்தான் வேண்டும்!
– ஜோ.ஸ்டாலின்

Tuesday, December 29, 2015

விஜயகாந்த்"தூ " சிறப்பு பதிவு -01- -- அறிவுடையார் ஆவதறிவார்? அறிவிலார்?

மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பஞ்சத்தின் வெளிப்பாடே சகாயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வராக கேட்பதும், விஜயகாந்தை அனைத்து அரசியல் கட்சிகளும் விழுந்து விழுந்து அழைப்பதும்.
அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே செயல்படாத அரசாகத்தான் இருந்து வந்தது. குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த ஆண்டு வந்ததற்கு பிறகு, ஒரு பொம்மை அரசாங்கமாகத்தான் செயல்பட்டது. நாஞ்சில் சம்பத் சொல்வது போல, அனைத்து திட்டங்களும், “அம்மா வருகைக்காகவே காத்திருந்தன”. நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் வளைத்து, விலைக்கு வாங்கி, ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்பதில், அதிமுக அடிமைகளுக்கு அப்படியொரு அபார நம்பிக்கை. கணிதமேதை குமாரசாமி அளித்த தீர்ப்பினால் ஜெயலலிதா விடுதலை ஆன பிறகும் தமிழக அரசு செயல்படாத மந்த அரசாகவே இருந்து வந்தது.
“அம்மா உத்தரவுக்கிணங்க” என்ற லாவணிகள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலங்கள் அனைத்திலும் இருந்தே வந்தன. புதிது கிடையாது. ஆனால், வெள்ள நிவாரணப் பணிகளின்போது, பாடப்பட்ட அம்மா லாவணிகள்தான் பொதுமக்கள் இடையே, குறிப்பாக இளைஞர்கள் இடையே கடும் கோபத்தை எழுப்பின. அதுவரை, ஜெயலலிதாவை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளை அதிமுக அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதை ஊன்றி கவனிக்கத் தொடங்கினார்கள். அதிமுக அடிமைகளின் அம்மா புகழ் லாவணி, அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது.
குறிப்பாக இளைஞர்கள் கடும் கோபமடைந்தனர். அவர்களின் கோபத்தின் வெளிப்பாட்டை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. இந்த கோபத்தின் மறு பரிமாணம்தான் சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை. அந்த இளைஞர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், அது நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம் என்பதை அந்த இளைஞர்கள் புரிந்து கொள்ளவில்லை. சகாயம் போலவே பல்வேறு நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். சகாயம் மட்டுமே நேர்மையான அதிகாரி அல்ல. ஆனால் சகாயத்துக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவின் காரணமாக, அவரால் முதல்வராக முடியும் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை. டெல்லி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழகம் டெல்லி இல்லை. டெல்லி தேர்தலில் சாதி என்பது ஒரு பெரிய காரணி அல்ல. 
பல்வேறு மதத்தினரும், பல்வேறு சாதியினரும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மொழி பேசுபவர்களும் டெல்லியில் இருக்கிறார்கள். ஆனால் தமிழக தேர்தலில், சாதி ஒரு முக்கிய அடிப்படைக் காரணியாக தொடர்ந்து இருந்து வருகிறது. வேட்பாளரின் சாதியை கணக்கில் கொள்ளாமல் எந்த கட்சியும் தேர்தலை சந்திப்பதில்லை. எந்த தொகுதியில் எந்த சாதி அதிகம், எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பவை அனைத்தையும் தீர்மானித்த பிறகே கட்சிகள் தேர்தலில் நிற்கின்றன. இது தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம். மேலும், இரண்டு திராவிடக் கட்சிகளும் வலுவான வாக்கு வங்கிகளை வைத்துள்ளன. இந்த வாக்கு வங்கிகளை, சகாயத்தால் ஒரு போதும் உடைக்க முடியாது. திமுக, அதிமுகவைத் தவிர, தமிழகத்தின் ஆயிரக்கணக்கான பூத்களில் உட்கார வைக்க, எந்த கட்சியிடமும் ஆட்கள் கிடையாது. அப்படி இருக்கையில், சகாயம் எந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவார் ? இவை எல்லாவற்றையும் விட, தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் பணம் வேண்டும். சகாயம் மட்டும் ஒரு தொகுதியில் நிற்பதாக இருந்தால்கூட கோடிக்கணக்கான பணம் வேண்டும். அந்தப் பணத்தை, சகாயத்துக்கு ஆதரவாக கூடும் இளைஞர்களால் ஒருபோதும் திரட்ட முடியாது.
முகத்தில் அறையும் உண்மைகள் இவ்வாறு இருக்க, இளைஞர்கள் சகாயம் வேண்டும் என்று அணிவகுப்பது, அத்தனை அரசியல் கட்சிகளின் மீது உள்ள கோபம் மற்றும் வெறுப்பினாலேயே. இப்படிப்பட்ட ஒரு வெறுப்பில்தான் தேமுதிகவுக்கு 2006 தேர்தலில் பத்து சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிகவை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர் எம்ஜிஆரும் அல்ல, என்.டி.ராமாராவும் அல்ல என்றே கருதினார்கள். இந்த சூழ்நிலையிலேயே 2006ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 10 சதவிகித வாக்குகளை பெற்று, பல்வறு அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது தேமுதிக. இந்த தேர்தல், தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தை ஒரு முக்கிய புள்ளியாக மாற்றியது.
2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளை பெற்றது. எந்தக் கட்சியோடும் கூட்டணி சேராமல், தன்னிச்சையாக தேமுதிக பெற்ற வாக்குகள் தமிழகத்தில் விஜயகாந்தை ஒரு வலுவான சக்தியாக மாற்றியது. இந்த வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையிலேயே, 2011 சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்தோடு கூட்டு சேர்ந்தார் ஜெயலலிதா. நெருங்கி வரும் சொத்துக் குவிப்பு வழக்கு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி போன்றவையே ஜெயலலிதாவை விஜயகாந்த் பக்கம் இழுத்தது. அந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் தேர்தலை சந்தித்து, 29 இடங்களில் வெற்றி பெற்றார் விஜயகாந்த். அந்த வெற்றி 2006-2011 திமுக ஆட்சியின் மீது இருந்த கடுமையான கோபத்தின் வெளிப்பாடே.
ஆனால் விஜயகாந்தோ, நாம்தான் அடுத்த ஆட்சியை பிடிக்கப்போகிறோம் என்ற கனவில் மிதக்கத் தொடங்கினார். 2011ல் பெற்ற வெற்றி தனது சொந்த செல்வாக்கில் பெற்ற வெற்றி என்று நம்பத் தொடங்கினார். இந்த மிதப்பின் அடிப்படையிலேயே 2013ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தினார். ஒரு வட இந்தியா மாநிலத்தில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கட்சி போட்டியிட்டு வெற்றி பெறுவது சாத்தியமா என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். எதிர்ப்பார்த்தது போலவே, அனைத்து தேமுதிக வேட்பாளர்களும், இரட்டை இலக்க வாக்குகளோடு மண்ணைக் கவ்வினர்.
கூட்டணி, இரு திராவிடக் கட்சிகள் மீதுள்ள வெறுப்பு ஆகியவற்றால் பத்து சதவிகித வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த், தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாகவே தன்னை கருதினார். ஒரு அரசியல் தலைவராக கூட அல்ல. ஒரு சாதாரண மனிதனாகக் கூட இருக்க தகுதியில்லாதவர் விஜயகாந்த் என்பது அவரது நடவடிக்கைகளால் வெளிப்படையாக தெரிந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களை அடிப்பது. பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கொடி தெரிந்தால் அதை அகற்றச் சொல்வது, பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது என்று அவரது நடவடிக்கைகள் ஒரு பைத்தியக்காரனையே நினைவுபடுத்தின.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நெறிமுறைகளைக் கூட பின்பற்றாதவர் விஜயகாந்த். பொதுவாழ்வில் உள்ள தலைவர்களும் மனிதர்களே. அவர்ளும் கோபப்படுவதென்பது இயல்புதான் என்றாலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற நேர்வுகளில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்தோ, கேமரா இருக்கிறது, பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்தெல்லாம் துளியும் கவலைப்படாதவர். “குண்டக்க மண்டக்க திட்டுவேன்” “நீயா எனக்கு சம்பளம் குடுக்குற.. போடா” என்பது போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுபவர். செய்தியாளர்கள் கருத்து கேட்டால், நான் ஒரு வாரமா பேப்பர் படிக்கல என்பதை பதிலாகச் சொல்பவர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புதான் இப்படியென்றால், அவர் கட்சியை நடத்தும் விதமும் கேலிக்கூத்தானது. வேட்பாளர்களை அடிப்பது, தேர்தலில் போட்டியிட பணம் கேட்பது என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு தேர்ந்த ஊழல் அரசியல்வாதியின் குணநலன்களை கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, குடும்ப அரசியலை அமல்படுத்துகிறார். அவர் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷை மீறி கட்சியில் எதுவுமே நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே, இப்படியெல்லாம் நடந்து கொள்பவர், ஆட்சியை பிடித்து விட்டால் என்னவெல்லாம் செய்வார் என்பதை ஊகிப்பது ஒன்றும் சிரமமல்ல.
இந்த கூத்துகளுக்கெல்லாம் உச்சகட்டம்தான் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து தூ என்று துப்பியது. ஜெயலலிதாவிடம் இந்தக் கேள்வியை கேட்பீர்களா என்ற அவரது கேள்வி நியாயமே என்றாலும், பொதுவெளியில் அதை வெளிப்படுத்தும் முறை உள்ளது. துப்புவதும், அடிப்பதும், உளறுவதும் தனக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே விஜயகாந்த் கருதுகிறார். அவர் அவ்வாறு கருதுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்சிகளான கம்யூனிஸ்டுகளே அவரை பிடித்துத் தொங்குவதும், தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான திமுக அவரை வலிய அழைப்பதும் அவருக்கு இந்த இறுமாப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேரமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள கம்யூனிஸ்டுகள், தேமுதிக என்ற சாக்கடையில் கால் நனைக்கிறார்கள். திமுக அதிமுகவிடம் உள்ள அனைத்து குறைகளும், தேமுதிகவிடமும் இருக்கிறது. திராவிடக் கட்சிகளை புறக்கணிக்க கம்யூனிஸ்டுகள் கூறும் அனைத்து காரணங்களும் விஜயகாந்துக்கும் பொருந்தும். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, பொதுவெளியில் வேட்பாளர்களையோ, தொண்டர்களையோ ஒருபோதும் தாக்கியதில்லை. சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திக் கொண்டு சண்டைக்கு போனதில்லை. ஆனால் விஜயகாந்த் இவை அனைத்தையும் செய்தவர். ஒரு மனிதனாக அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்கத் தெரியாதவர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கிறேன் என்று கம்யூனிஸ்டுகள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கால்வாயில் விழுந்ததைப் போன்ற நிலையில்தான் கம்யூனிஸ்டுகள் நிற்கிறார்கள். கட்சியின் மீது விசுவாசம் கொண்ட தோழர்களையும், பொதுவாழ்வில் கண்ணியத்தையும் கடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகள் ஒரு லும்பனிடம் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். விஜயகாந்தோடு கூட்டணி சேர்வதற்கு பதிலாக அவர்கள் திமுக அல்லது அதிமுகவோடே சேரலாம். தேமுதிகவை விட அந்த கட்சிகள் எவ்வளவோ மேல். ஒன்றிரண்டு எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு போவதை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். பத்துக்கும் மேற்பட்ட கட்சி எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு வெளியேறுகின்றனர் என்றால் குறை யாரிடம் இருக்கிறது. தனது கட்சியைக் கூட கட்டுக்கோப்பாக நடத்தத் தெரியாதவர்தான் விஜயகாந்த்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்பதைக் கூட தவிர்க்கும் கட்சி தேமுதிக. ஒவ்வொரு கட்சியும் பெயரளவிலாவது ஒரு கொள்கை வைத்துள்ளது. ஆனால் எந்த கொள்கையும் இல்லாத ஒரே கட்சி தேமுதிகதான். மனைவியும், மைத்துனரும் நடத்தும் கட்சி தேமுதிக. இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் நடந்து கொள்ளாத வகையில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் கட்சி தேமுதிக. ஆனால் இவர்களோடு கைகோர்க்க துடிக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். திராவிட அரசியலின் முக்கிய தலைவரான வைகோ, “கேப்டன் விஜயகாந்த்” என்று அழைக்கிறார். அரசிலில் இருந்து ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் விஜயகாந்திடம் மடிப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறார் வைகோ.
மற்றொரு புறம், திமுக தலைவர் கருணாநிதி, எங்கே நால்வர் அணிக்கு விஜயகாந்த் போய் விடுவாரோ என்று அவசர அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கிறார். பல முனைகளிலும் இருந்து விஜயகாந்தை நோக்கி வரும் பட்டுக்கம்பள விரிப்புகள்தான் அவரை பத்திரிக்கையாளர்களை நோக்கி துப்ப வைத்திருக்கிறது.
இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “துப்புவது சரியா தவறா என்று விவாதம் நடத்துவது நமது காலகட்டத்தின் அவல நிலை. இது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய அவலச் சூழலில் நாம் இருக்கிறோம். 1994ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக, வாழப்பாடி ராமமூர்த்திக்கு அறிக்கை எழுதித் தரும் தி.சு.கிள்ளிவளவன் ஒரு முறை “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுகவை மக்கள் கொண்டாடும்படி செய்து விடுவார்கள். அவ்வளவு மோசமானவர்கள் இந்த காங்கிரஸ் காரர்கள்” என்றார். அது போல, திமுக மற்றும் அதிமுகவுக்கான மாற்று, அச்சம் தரும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கிறது. இவற்றுக்கான மாற்று சகித்துக் கொள்ள முடியாத வகையில் உள்ளது. அதிமுக மற்றும் திமுகவுக்கான மாற்றாக பார்க்கப்பட்ட தேமுதிக, இந்த இரண்டு கட்சிகளையும் விட மோசம் என்பதையே இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.
விஜயகாந்த் துப்பியது ஊடகங்களின் மீது அல்ல. அவரையும் உள்ளடக்கிய இந்த சமூகத்தின் மீது. தமிழகத்தில் ஊடகங்களின் நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஜெயலலிதாவை தங்கக் கரங்கள் கொண்டு ஊடகங்கள் தாங்கி வருகின்றன. இது குறித்த கோபத்தையே விஜயகாந்த் துப்பி வெளியிட்டிருக்கிறார்.
ஜெயகாந்தன் ஒரு முறை பேசுகையில், ‘நான் நண்பர்களோடு பேசுகையில், தயக்கமில்லாமல் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்திப் பேசுவேன். மேடையில் பேசுகையில், அவற்றை குறைத்துக் கொள்வேன். என் எழுத்துக்களில், எவ்விதமான தவறான வார்த்தையும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வேன்’ என்றார். அது போல பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான தகுதி இது. ஆனால் விஜயகாந்த், இவை பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படுவதில்லை. ஊடகங்கள் மீதான தன் கோபத்தை அவர் வேறு வார்த்தைகளில் வெளியிட்டிருந்தால், ஊடகங்களின் கள்ள மவுனம் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். மாறாக விஜயகாந்த், ஊடகங்களைப் பார்த்து துப்பியதால், தற்போது துப்பியது சரியா தவறா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது.
விஜயகாந்தின் செயல்பாடு மன்னிக்க முடியாதது என்றாலும், அதற்கான காரணங்களை நாம் ஆராயத்தான் வேண்டும்.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து செய்தி வெளியிட்டனர். ஆனால், ஆட்சியே நடத்தாத, தலைமைச் செயலகத்துக்கே செல்லாத, பத்திரிக்கையாளர்களையே சந்திக்காத ஜெயலலிதாவை விமர்சிக்க இந்த ஊடகங்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றன.
ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் பணி, மிக மிக முக்கியமானது. அந்தப் பணியை செய்யத் தயங்கும் ஊடகங்களை மன்னிக்கவே முடியாது. இது வரை 190 அவதூறு வழக்குகளை போட்டிருக்கிறார் ஜெயலலிதா. எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அரசு மோசமான அரசு என்றால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்மணி மீது கூட அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்கள். ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை, தான் படித்த செய்திக்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாத அந்த செய்தி வாசிப்பாளரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து அலைக்கழிக்கும் வேலையை தமிழக அரசு செய்துள்ளது.
இதை எதிர்த்து எந்த பத்திரிக்கையாளர் சங்கம் இது வரை ஆர்ப்பாட்டத்தையோ கண்டனக் கூட்டங்களையோ நடத்தியுள்ளது. ஜெயலலிதா அரசின் அவதூறு வழக்கு தொடுக்கும் போக்கினை கண்டித்து கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு அரங்கக் கூட்டத்தைக் கூட பத்திரிக்கையாளர்கள் நடத்தியதில்லை.
ஜெயலலிதாவின் 1991-96 மற்றும் 2001-2006 ஆட்சிகாலத்தில், இதே போன்ற அடக்குமுறைகள் நடந்தன. ஆனால் அன்று ஊடகங்கள் தலை நிமிர்ந்து நின்றன. ஜெயலலிதா அரசை கடுமையாக விமர்சித்தன. ஆனால் இன்று அதே ஊடகங்கள், ஜெயலலிதா அரசின் விளம்பரத்துக்காக, வாலைக் குழைத்துக் கொண்டு அவர் காலடியில் மன்றாடிக் கொண்டிருக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஒரு செல்வச் செழிப்பான ஊடகமே, அரசு விளம்பரங்களுக்காக, அரசுக் எதிரான செய்திகளை தயக்கத்தோடு வெளியிடுவதும், பல சமயங்களில் தவிர்பதுமென இருக்கையில், இதர ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
ஜெயலலிதாதான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்றால், அவரது அமைச்சர்களைக் கூட இந்த ஊடகங்கள் மென்மையாகத்தான் அணுகுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை எந்த அரசும் ஊடகங்களின் மீது தொடுத்ததில்லை. நெருக்கடி நிலை காலத்தில் கூட இப்படி வழக்குகள் தொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தமிழகத்தில் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் வகையில் அவதூறு வழக்குகள் சகட்டுமேனிக்கு தொடுக்கப்படுகின்றன. ஆட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்களை அரசு ஊக்குவிக்கிறது. ஆனால் இதைப்பற்றி சற்றும் கவலையில்லாமல் ஊடகங்கள் தங்கள் ஆன்மாவை விற்று விட்டு, செயல்பட்டுக் கொண்டு வருகின்றன.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் ஒரு முறை பேசுகையில், இந்தியாவில் நீதித்துறை உள்ளிட்ட எந்த அமைப்புகள் தங்கள் கடமையில் இருந்து தவறினாலும் மன்னிக்கலாம். ஆனால் ஊடகங்கள் தவறுவதை மன்னிக்கவே முடியாது என்றார். அவர் கூறியதைப் போல ஊடகங்கள் இன்று தங்கள் கடமையை மறந்து, ஆலாபனைகளைத்தான் பாடிக் கொண்டிருக்கின்றன.” என்றார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
அவர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் விஜயகாந்துக்கு ஆதரவாக, குவியும் கருத்துக்களை காண முடிகிறது. விஜயகாந்த் செய்தது சரியே என்று ஏராளமானோர் கருத்தளித்து வருகின்றனர். அவ்வாறு கருத்து கூறுபவர்களுக்கும், ஊடகத்துக்கும் எவ்விதமான தகராறும் கிடையாது. ஆனால் ஊடகங்கள் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதன் மிதான அறச் சீற்றத்தை காண முடிகிறது. அந்த அறச்சீற்றத்தின் வெளிப்பாடே, விஜயகாந்தின் அநாகரிகச் செயலுக்கு குவியும் ஆதரவுகள்.
செயல்படாத ஒரு அரசை தூக்கி நிறுத்துவதற்கு ஊடகங்கள் போட்டி போடுகின்றன. ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் தகவல் தொடர்புத் துறை செயலர் ராஜாராம் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டால், அரசுக்கு எதிரான செய்திகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக லட்சக்கணக்கான மதிப்புள்ள விளம்பரங்களை அள்ளித் தருகிறது அரசு.
“மக்களே போல்வர் கயவர்” என்பதற்கு ஏற்ப, அரசியல் கட்சித் தலைவர்கள் எப்படியோ அதுபோலத்தான் ஊடகங்களும் இருக்கின்றன.
இந்த துப்பல் விவகாரத்தால், அதிகப்பயனடைந்தது ஸ்டிக்கர் சுந்தரியே. வெள்ள பாதிப்புகளை அரசு கையாண்ட விதத்தின் மீதான கோபம் மெள்ள மெள்ள உருமாறி, இன்று விஜயகாந்த் துப்பியதில் வந்து நிற்கிறது. விஜயகாந்தின் பழைய வீடியோக்களை ஜெயா டிவி மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டுகிறது.
ஜெயலலிதாவை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள், துப்புவது போன்ற அற்ப விஷயங்களை விவாதப்பொருளாக்கி ஸ்டிக்கர் சுந்தரியின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அயோக்கியத்தனமாக கட்சி என்றால், நமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சிகள் அதை விட மோசமாக இருக்கின்றன. தமிழகத்தின் தலையெழுத்து, இப்படிப்பட்ட கட்சிகளையெல்லாம் நம்ப வேண்டியுள்ளது. எதிர்காலம் இன்னும் எப்படிப்பட்ட வேடிக்கைகளை எல்லாம் நமக்காக வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.
விஜயகாந்துக்காகவே வள்ளுவர் இந்த குறளை எழுதியுள்ளார்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


சவுக்கு-

நன்றிகள் சவுக்கு இணையதளத்துக்கு சேரவேண்டும் . இக் கட்டுரை பலரையும் சென்று அடையவேண்டும் என்ற  நோக்கில் இங்கு தந்திருக்கிறேன் .உங்கள் கருத்துக்கள்  வரவேற்கப்படுகிறது .

Friday, December 18, 2015

இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா..?

கொளத்தூரில் முத்துகுமார் உடல் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள் பல்வேறு உணர்வலைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
பத்திரிகை நண்பர்கள் நாங்கள் சிலபேர் ஒரு சுவர் ஓரம் நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றிலிருந்து ஒரு பெண் நிருபர் வந்தார்.

அவருக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. ஏதோ ஒரு சினிமா ரசிகனின் தீக்குளிப்பு என்றே நினைத்திருப்பார் போலிருக்கிறது.
மேடையில் முழங்கிக் கொண்டிருந்த வைகோவை யாரென்று கேட்டார் (நல்லவேளை.. வைகோவுக்கு அந்த மேட்டர் இன்னும் தெரியாது.. wink emoticon ) ஈழம் தொடர்பாக உணர்வு சார்ந்து ஒரு போராட்டம் நடைபெறுகிறது.
அதுபற்றிய எந்த பார்வையும் இல்லாத ஒரு நிருபரை அந்த ஊடகத்தின் செய்தி ஆசிரியர் அனுப்பி வைக்கிறார் என்றால் மறுநாள் அந்த செய்தி என்ன லட்சணத்தில் வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் பத்திரிகையாளர்கள்.. என்ன வேண்டுமானாலும் கேட்போம் என்று பொங்கும் ஊடகப்போராளிகள் பெரும்பாலானவர்களின் லட்சணம் இப்படிதான் இருக்கிறது.இப்போது இளையராஜா விசயத்திற்கு வருவோம்.. இரண்டு முண்டங்கள் பாத்ரூமில் பாடியதை இணையத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக இளையராஜாவிடம் கருத்து கேட்கிறார் அந்த நிருபர். அந்த கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டது அவமானமாக உணர்ந்ததால் இளையராஜா கோபப்படுகிறார். அவ்வளவுதான் விசயம்.
அபத்தமான நிருபரின் கேள்வி.. பெரியவரின் உணர்ச்சிவசப்பட்ட கோபம் என்றளவில் இதை கடந்து சென்றிருந்தால் பிரச்னை இல்லை.
ஆனால் இதுதான் சாக்கு என்று சிலபேர் தங்களின் வன்மத்தை தீர்த்துக்கொள்ள இதை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு இசை பற்றிய சர்ச்சைக்கு அத்துறையை சார்ந்த ஒருவரிடம் கேள்வி கேட்பது தவறா என்று ரொம்ப அறிவாளித்தனமாக மடக்கிவிட்டதுபோல் வேறு கேட்கிறார்கள்.அந்த பெரியவாக்களுக்கெல்லாம்,சர்ச்சைக்குரிய அந்த குப்பைக்கு முதலில் ஒரு பாடல் எனும் அங்கீகாரம் கொடுப்பதே அபத்தமானது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் மைலார்ட்.
அதற்கு இசைத்துறையை சேர்ந்த ஒரு மூத்தவரிடம் கருத்து கேட்பது அதைவிட அபத்தமானது. அதுவும் என்னமாதிரியான நிகழ்வில் சென்று அந்த கேள்வி கேட்கிறோம் என்ற புரிதல் வேண்டும்.
அதுதவிர.. ஒருவனுக்கு  எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயமா என்ன.
அப்படியானால் இளையராஜா என்ன கேள்விக்கு அப்பாற்பட்டவரா. பாடலை ரசிக்கவும் கைதட்டவும் நாங்கள் வேண்டும். ஆனால் கேள்வி கேட்க கூடாதா.
நிச்சயமாக.. கேள்வி கேட்க வேண்டும்.. கேள்வி கேட்பதே பத்திரிகையாளனின் அடிப்படை. ஆனால் அந்த கேள்வியில் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். அதோடு கேள்வி அதிகாரத்தை நோக்கி கேட்கப்பட வேண்டும்.
இளையராஜாவின் பாடலை ரசிக்க ரசிகனாக இருந்தால் போதும். ஆனால் அவரிடம் கேள்வி கேட்க அவரின் இசை பங்களிப்பும் இசைத்துறை குறித்த அறிவும் அவசியம்.

ஒரு துறை சார்ந்த பிரபலத்தை நேர்காணலுக்காக சந்திக்கப்போகிறோம் என்றால் முதலில் அந்த நபர் குறித்து கொஞ்சம் படித்துவிட்டு செல்ல வேண்டும். எதுவுமே படிக்காமல் கேள்வி கேட்க போனால் இப்படிதான் குப்பை பாடல்கள் குறித்து கருத்து கேட்கும் கேள்விகள்தான் வரும்.
சரி.. நாங்கள் பத்திரிகையாளர்கள்.. அப்படிதான்டா கேப்போம் என்று பொங்கல் வைத்து போராளி அவதாரம் எடுப்பவர்களுக்கு..
இணையத்தில் தினசரி ஏதேனும் ஒரு ஹோம் மேட் வீடியோக்கள் ரிலீஸாகிக் கொண்டேதான் இருக்கிறது. ஷகிலா, ரேஷ்மா படங்கள் எல்லாம் வெளியாகின்றன.
சினிமாக்காரர்கள் தான் ஆட்சியாளர்கள் என்பதற்காக இந்த படங்கள் குறித்தெல்லாம் உங்க கருத்தை சொல்ல முடியுமா.. என்று ஜெயாவிடமோ கருணாவிடமோ ரஜினியிடமோ கமலிடமோ போய் கேள்வி கேட்பார்களா என்ன.
அட.. அதுகூட ஆபாசமான விசயம் விடுங்கள்..
போயஸ் தோட்டத்திற்கு சென்று ”முதல்வர் அவர்களே.. வெளியே வாருங்கள்.. மழை வெள்ளத்திற்கு மக்களுக்கு பதில் சொல்லுங்கள்.. பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்” என்று சொல்ல தமிழ்நாட்டில் பத்திரிகை போராளிகள் எவருக்காவது நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கிறதா என்ன.

காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறீர்கள். “உங்க பக்கத்துவீட்டுக்காரன் பொண்டாட்டியை எவனோ வச்சுருக்கானாமே.. அவர்களின் கள்ளக்காதல் பற்றி கருத்து சொல்ல முடியுமா..” என்று உங்கள் மூக்குக்குள் மைக்கை சொருகி கேட்டால் கோபப்படுவீர்களா மாட்டீர்களா..?
அதுபோல்தான் ஒரு படைப்பாளிக்கு வரும் இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடாக இளையராஜா அந்த அபத்தமான கேள்விக்கு கோபப்பட்டார்.. விசயம் அவ்வளவுதான். இதில் விவாதிக்கவோ சர்ச்சைக்கோ இடமில்லை.
72 வயதான ஒரு பெரியவரிடம் எப்படியான ஒரு இயல்பு இருக்குமோ அதுதான் இளையராஜாவிடமும் இருக்கிறது. அதை கடந்து தான் ராஜாவை அவரின் ரசிகர்கள் பலர் ரசிக்கிறார்கள்.
அதே சமயம் இளையாராஜவும் அந்த கேள்வியை புன்முறுவலுடன் கடந்து சென்றிருக்கலாம்.
தமிழ்நாட்டில் எக்கச்சக்கமாக இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இதுபோன்று அபத்தமான கேள்விகளால் உருவாகும் சர்ச்சைகளை தவிர்க்க, கொஞ்சம் பத்திரிகையாளர்களுக்கு அடிப்படை விசயங்களை போதிக்க சண்டே கிளாஸ்களை எடுத்து உருப்படியாக ஏதாவது செய்யலாம்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
18-12-15

Friday, December 11, 2015

வெள்ளத்தால் பரிதவிக்கும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஓர் மடல்!

வந்தாரை வாழ வைக்கும் தாய்த் தமிழகம் -இன்று
வானத்துச் சுனாமியால் தனித் தீவானதே
தொப்புள் கொடி உறவுகளான
எம் சொந்தங்கள் படும் அவல நிலை கண்டு
எம் மனங்கள் துயர் தாளாமல் வெதும்பி உருகுகிறதே …!
வரலாறு காணாத மனிதப் பேரவலத்தால்
வந்தது மனிதப் பேரவலம்
இயற்கைத் தாயே … பதில் சொல்லு
ஏனடி உனக்கு இத்துணை கோபம் ?
போதுமம்மா…! போதும்..!
எம் உறவுகள் நிம்மதியாய் வாழ
இனியேனும் வழி விடு
இன மத மொழி பேதமின்றி
எல்லோர் மனதிலும் இடம்பிடித்த
சென்னை மாநகரம் -இன்று
யார் கண் பட்டதோ…!
தரையாய் இருந்து வந்த நிலங்கள்
கடலாய் மாறிட ….
திகைத்துப் போன மக்கள் கூட்டம்
இன்று செய்வதறியாது திகைத்து நிற்கும் பரிதாப நிலை
ஈழத் தமிழருக்கு ஏதும் இன்னலென்றால்
முதலில் ஒலிக்கும் குரல் உங்களுடையதே-அதை
எப்படி நாம் மறப்போம் ?
எம் மண்ணின் விடிவுக்காக நீங்கள் செய்த உன்னத தியாகங்களுக்கும்
தொடர்ச்சியான போராட்டங்களுக்கும்
நாம் என்ன தான் கைமாறு செய்வோம் ?
கரை காணாத் துயர் கடலுள் அகப்பட்டு
கதி கலங்கிப் போயிருக்கும்
ஒட்டு மொத்த எம் உதிர உறவுகளும்
விரைவில் வெள்ளத்தால் மீள
எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் மன்றாடுகின்றோம்
வளம் கொழிக்க வாழ்ந்த எம் உறவுகள் -இன்று
ஒரு வேளை உணவுக்காகக்
கையேந்தும் அவல நிலை கண்டு
எங்கள் எல்லோர் விழியிலும்
கண்ணீர் மழை கொட்டுகிறதே !
கடல் எல்லை நம்மைப் பிரித்தாலும்
உணர்வு எல்லையால் நாங்கள்
என்றும் ஒன்றுபட்டவர்களே…!
அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்
எப்போதும் நாங்கள் உங்களுடனேயே இருக்கிறோம்
உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் உறவுகளே ..!
ஆறாத் துயருடன் : குறிஞ்சிக் கவி செ -ரவிசாந்,
வீரமனை, குப்பிளான்.யாழ்ப்பாணம் 

Thursday, December 10, 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு!

வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.
உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.
   
நவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்!
சரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்? ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே! டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா? இல்லை!

மோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா? பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது?

பாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே! ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும்,  சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா? ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.

சாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா? கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.
 
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்? இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..!?

‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

பதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே!

உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும்,  நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.

தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்!

இப்படிக்கு, 
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி!


இந்த கடிதம் மற்றும் படங்கள்  யாவும்  விகடனுக்கு உரியது .உண்மையில் இதை  எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இதை  இங்கு தந்திருக்கிறேன்   விகடன் இணையதளத்துக்கு நன்றிகள் .

Sunday, December 06, 2015

ஒரு அவசர உதவி .இலங்கையில் தமிழக உறவின் சடலம் !

மழையில் சிக்கி தமிழக உறவுகள்  சொல்லணா துயரங்களை அனுபவித்துவரும் நிலையில் இன்றைய தினம் இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் ஒரு தமிழக உறவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது .அந்த சடலத்தில் ஒரு அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது . கண்டெடுக்கப்பட்ட சடலத்திலிருந்து மீட்கப்பட்ட சாரதி அடையாள அட்டையில், அவர் சென்னை சூளைமேடு காமராஜ் நகர், என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த வாகனச்சாரதியான என்.பூமிதுரை என குறிப்பிடப்பட்டுள்ளது.வீட்டு இலக்கம் 13/15

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு இவர் இலங்கை கடற்பரப்பில் கரையொதுக்கியிருக்கலாம் என அந்த சந்தேகிக்கப்படுகிறது. நிலாவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சடலம் உருகுலைந்துள்ளமையினால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சக வலைபதிவர்கள்  இயலுமானவ்ர்கள் தயவு செய்து இந்த தகவலை அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய முறையில் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை தூதுவராலயதின் ஊடாக   செய்யலாம் என்பதனையும் தெரிவித்து விடவும் .சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ளவும் .தயவு செய்து  சென்னையில் உள்ளவர்கள் இதனை செய்யலாம் .

அடையாள அட்டையின் படம் கீழே இணைத்துள்ளேன் .கலைஞர் டி.வி – ஜெயா டி .வி! - இதுதாங்க வித்தியாசம்!!!

“அப்பா, சண்டே என்னையும் அண்ணாவையும் மாலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?’’ பள்ளி திறந்த சோகத்தில் சின்னவன் என்னிடம் கேட்டான்.
“இல்ல கண்ணு, சென்னை பூரா மழை பேஞ்சு கழுத்தளவு தண்ணி நிக்குது. சாப்பாடு, தண்ணி எதுவுமே கிடைக்கலை. நியூஸ் பார்க்கலியா நீ?’’ என்று கேட்டுவிட்டு, ஆதாரம் காட்ட, கலைஞர் செய்திகள் வைத்துக் காண்பித்தேன். இடுப்பளவு நீரில் சென்னை மக்கள் அங்கும் இங்கும் துன்பப்படும் செய்திகளைப் பார்த்ததும், என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி, “இந்த சானல் பாருங்கப்பா…’’ என்று ஜெயா நியூஸ் வைத்தான்.     
    
அம்மா படத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்கார்ந்திருக்க, `இதைவிட எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு துளிகூட பாதிப்பே இல்லை. தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது’ எனச் செய்தி சொல்லி சென்னை சாலை களைக் காண்பித்தார்கள், படுசுத்தமாக காய்ந்துபோய், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சிங்காரச் சென்னை.             
“எந்த மாலுக்குப் போகலாம்னு டிசைட் பண்ணி வைங்க. ஈவினிங் ஸ்கூல்லேர்ந்து வந்த உடனே எனக்கு சொல்லணும்’’ என்று கட்டளையிட்டுச் சென்றிருக்கிறான்.
கார்ட்டூன் மட்டும் பார்த்திட்டிருந்த புள்ளப்பூச்சிங்களுக்கெல்லாம் கொடுக்கு முளைக்க வெச்சிட்டீங்க ளேய்யா!
முகநூலில் சுட்டது .

Saturday, December 05, 2015

ஆளுங்கட்சியினரின் அராஜகம்... கொந்தளிக்கும் மக்கள்!

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்ட அரசு,  நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்,   நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி நாங்கள்தான்  விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னும் சில இடங்களில் அப்படி அபகரிக்கப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் வழங்குவதுபோல் இருக்க வேண்டும் என்று, அதற்காக முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.


இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை  வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்  நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல்,  மக்கள் திண்டாடி வருகின்றனர்.


இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஆளுங்கட்டியினர் பாகுபலி திரைப்பட போஸ்டர்போல் முதல்வரின் படத்தை போட்டு பெரிய பெரிய அளவில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டு மலிவான விளம்பரங்களை தேடிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதையெல்லாம் தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாரும் முன்வராமல் கண்டும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அதிர்ச்சியாகவும் இருக்கிறது என்று பலர் குமுற ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். 

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தோழர்களிடத்திலும் அ.தி.மு.க.வினர் நெருக்கடியை கொடுத்தனர். தங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும்படியும், இப்பகுதி எங்களுடையது, எங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று மிரட்டினர்.அந்த  மக்களிடம் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மே 17 தோழர்கள் நிவாரணப்பணி செய்கின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களே அ,தி.மு.க.வினருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தோழர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.
வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது,  ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர்,  அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாக, பல தோழர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.
இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த  காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட  மக்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிக்க அனைத்து ஜனநாயக இயக்கத் தோழர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது

அதோடு மே17 இயக்கம், உதவி தேவைப்பட்டாலோ, பங்களிப்பு செய்ய விரும்பினாலோ 9444146806, 9884072010, 9962670409 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், முகநூலிலும் செய்தி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களேவை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், சென்னை உள்ள தற்போதைய நிலையில், அவரை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். 2004 பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களே. மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவிட்டு சாலை தர கட்டுப்பாட்டு பிரிவில், சென்னை மாநகராட்சி கூட்டு கமிஷனராக பணியாற்றியவர்.

இவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான காரணமாக, பிங்களே ஒரு நேர்மையான அதிகாரி. சமீபத்தில் சென்னையில் பல சாலைகள் செப்பணியிடப்பட்டது. சில சாலைகள் புதிதாக போடப்பட்டது. அப்படி போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து அவர் காண்டிராக்டரை கண்டித்ததாலும், அபராதம் விதித்ததாலும் மாற்றப்பட்டு இருக்கிறார் என்று சென்னை மாநகராட்சியின் சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது விகடன் இணையதளத்தின் ஒரு கட்டுரை .நன்றியுடன்  இதை இங்கு 
பதிந்திருக்கிறேன் .விகடனுக்கு நன்றி .

Thursday, November 26, 2015

ஆமிர்கானும் சகிப்புத்தன்மையும்! தினமணி ஆசிரியர் தலையங்கம்

சமீபத்தில் நடிகர் ஆமிர் கான் ஒரு நிகழ்ச்சியின்போது பேசிய பேச்சு, ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. தனது மனைவி கிரண், “இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழலாமா?’ என்று வீட்டுக்குள் நடந்த உரையாடலின்போது குறிப்பிட்டதாக ஆமிர் கான் ஒரு விழா மேடையில் பகிர்ந்துகொண்டார். இந்தப் பேச்சின் உள்ளுறைப்பொருள் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்பதுதான். ஆமிர் கான் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து, விவாதப் பொருளாக்கிவிட்டிருக்கின்றன.
ஆமிர் கான் நடித்து வெளியான பி.கே. திரைப்படத்தில் ஹிந்து கடவுள்கள், சாமியார்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தன. இதற்காக இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தபோது அதைப் புறந்தள்ளியது மத்தியில் ஆளும் இதே நரேந்திர மோடி அரசுதான். இந்தப் படம் தொடர்பான ஆதரவான கருத்தை முன்வைத்தவர் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் எல்.கே. அத்வானி.
நிலைமை இதுவாக இருக்கும்போது, ஆமிர் கான் ஏன் இந்த விவாதத்தை பொதுமேடையில் பேசினார் என்பது தெரியவில்லை. அவர் இயல்பாகச் சொன்னாரா அல்லது இந்த விவாதம் வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வேண்டுமென்றே தொடங்கி வைத்தாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில்தான் ஆமிர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோர் முன்னணி நடிகர்களாகக் கடந்த பதின் ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் கோலோச்சுகின்றனர். இவர்களுக்கு முன்னாலும், இந்தித் திரைப்பட உலகில் திலீப்குமார், பெரோஸ்கான், சஞ்சய் கான், பரூக் ஷேக் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த கதாநாயகர்களும், எண்ணிலடங்காத பல நடிகைகளும் மக்களின் பேராதரவுடன் வலம் வந்திருக்கிறார்கள். இந்திய மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், “முகம்மது: இறைதூதர்’ என்ற ஈரானிய படத்துக்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த அமைப்பு ஃபட்வா அறிவித்தபோது இந்தியத் திரைத் துறையும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் சகித்துக்கொண்டு சும்மா இருந்தார்களே, அது ஏன்? நடிகர் ஆமிர் கானின் தனிப்பட்ட கருத்து தேசத்தின் கருத்தாக மாற்றப்படும்போது, ரஹ்மான் மீதான மிரட்டல் ஏன் தனிப்பட்ட விவகாரமாகவே முடிந்துபோனது?
இப்போது இந்தியாவை ஏன் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றிவிடும் முயற்சியில் அறிவுஜீவிகளும் கலைஜீவிகளும் இறங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லாவிட்டாலும், அறிவுஜீவிகள், கலைஜீவிகள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஊகமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம், எம்.பில். பட்டம் படிப்போருக்கான உதவித் தொகையை ஆய்வுகளின் தர அடிப்படையில் தீர்மானிப்பது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் உதவித் தொகை தவறான நபர்களுக்குத் தரப்படுவதைத் தடுப்பதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 ஆராய்ச்சி மாணவர்களும், நாடு முழுவதிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். “நான்-நெட் ஃபெலோஷிப் திட்டங்களை’ ரத்து செய்யமாட்டோம் என்று மத்திய அரசு இறங்கி வந்தாலும், மற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், அறிவுஜீவிகளின் கோபம் அதிகரித்தது.
கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவில் 300 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது மத்திய உள்துறை அமைச்சகக் குறிப்பு. அக்டோபர் மாதம் வரை 630 மதக் கலவரங்களும், 86 மரணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுதான் மத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமையின் அடையாளம் என்று சொல்வார்களேயானால், இவர்கள் கடந்த ஆட்சியில் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2013-இல் நடந்த மதக் கலவரங்களின் எண்ணிக்கை 823. அப்போது அறிவுஜீவிகளுக்குப் புலப்படாத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை இப்போது திடீரென்று தோன்றுவதற்கு நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பும், காங்கிரஸ் மீதான அனுதாபமும்தான் காரணமாக இருக்க முடியும்.
மோடி முகத்தில் கரி பூச வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் அனைவரின் மீதும் கரி பூசுவதும், இந்தியா என்கின்ற நாடே சகிப்பின்மை அற்ற நாடென முத்திரை குத்தி, பயங்கரவாதிகளின் கோபத்தைக் கிளறிவிடப் பார்ப்பதும் விபரீதமான சிந்தனை. இதைச் சொல்லும் அதே நேரத்தில், இன்னொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். தனது கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சியினரும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் விதத்தில் பேசுவதைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் பிரதமர் மோடியின் கடமை. அவரது மௌனமும்கூட இப்படியொரு தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதை அவர் உணர வேண்டும்
தினமணி 

Monday, November 23, 2015

நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா ? கண்டிப்பாக இதை படிக்கவேண்டாம்!நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்.கண்டதையும் கற்பவன்  பண்டிதன் ஆவான் என்று எங்கள் பாடசாலை நூலகத்தில் எழுதப்பட்டிருந்தது  இப்போதும் எனது நினைவில் இருக்கிறது .இங்கு கண்டது என்பது பலதரப்பட்ட நூல்கள் என்ற பொருள் கொள்ள வேண்டும் .இனி வாசிப்பு சம்பந்தமாக சில  விடயங்கள்                                                                      


                                       
                                         


• நாம் ஒரு நூலில் .சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.

• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.என சொல்லப்படுகிறது

• என்ன புத்தகத்தினை படிக்க  வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் புத்தகங்களின் எழுத்தின் அளவினையும் கவனத்தில் கொள்ளவேண்டும்

• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும்.. வாசிக்கும் எதையும்  புரிந்து கொண்டு மனதில்  பதியவைத்தல் எப்போதும் நினைவிலிருக்கும்.

• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளவும் ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.

• தினசரி  பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.

• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.

• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.

• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன். நான் எனது தொலைபேசியில்  நிறைய நூல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் .எங்கு சென்றாலும் என்னோடு  இருக்கும்  எதற்காகவும் காத்து இருக்கும் நேரங்களில்  இப்பொழுது எல்லாம் ஈ -நூல்களை படிக்கிறேன் தொலைபேசியில்  .அதைவிட எனது வாகனத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களாவது  வைத்திருப்பேன் .முக்கியமாக தொலைபேசியில் தேவை இல்லாமல் நோண்டிக்கொண்டு இருப்பதை சுத்தமாக விட்டுவிட்டேன்

.இப்பொது சில காலங்களாக நிறைய நூல்களை படிக்க முடிகிறது. முக்கியமாக உங்கள் பிள்ளைகளை நூலகம் செல்ல புத்தகங்கள் வாசிக்க ,இரவல் பெற ஊக்கப்படுத்துங்கள் .இங்கு கனடாவில் பாடசாலையில் சீனியர்  கிண்டர்கார்டனுக்கு  பிள்ளை போனவுடனேயே  பொது நூலகத்தில்  அங்கத்தவர் ஆவதற்கு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படும் .படசாலையில் இருந்து தினசரி ஒரு நூல் வீட்டுக்கு கொண்டுவருவார்கள் .வாசித்து அது சம்பந்தமாக எழுதி மறுநாள் கொண்டு போகவேண்டும் .

எப்போதும் தாய் மொழி வாசிப்பே சிறந்தது ஏனெனில் தாய்மொழியில்  வாசிக்கும் போது,அல்லது பேசும் போது அது ஒருவரின் இதயத்தால் உணரப்படுகிறது ,மாறாக அந்நிய மொழி மூளையால் கிரகிக்கப்படுகிறது .இங்கு கனடாவில் பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளின் முதல் மொழி தமிழ் என்று குறிப்பிட்டாலும் நடைமுறையில் ஆங்கிலம் தான் முதல் மொழி .இது தான் இங்குள்ள யதார்த்தம்.

எனது பிள்ளைகளை நான் முதல் முதலில் பாடசாலையில் சேர்க்கும் போது எனது  இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர்கள் இருவரும் வெள்ளை இனத்தவர்கள் ,ஆங்கிலேய பெண்கள்   எனக்கு சொன்னது  ஆங்கிலத்தை உங்கள் பிள்ளை இலகுவாக கற்றுக்கொள்ளுவார்கள்  .அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் .  நீங்கள் உங்கள் பிள்ளைக்கு உங்கள் தாய் மொழியை சொல்லிக்கொடுங்கள் என்று .ஒருவர் அல்ல இருவருமே சொன்னார்கள் .இன்றைக்கு எனது பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்கள் .ஓரளவு எழுதுவார்கள் ஓரளவு வாசிப்பார்கள் .நாளை எனது பிள்ளைகள் தமிழ்
சார்ந்து சிந்திப்பார்கள், தமிழ் சார்ந்து செயற்படுவார்கள்  என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம் .

ஏனெனில் எனது பிள்ளைகளுக்கு நான் சொல்லியிருக்கிறேன் தமிழ் கதைப்பவர்கள் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறோம் ,கொல்லப்பட்டிருக்கிறோம்.தமிழுக்கா உயிர் கொடுத்தோர் வரலாறுகளையும் சொல்லியிருக்கிறேன் .

ஏனெனில் வரலாறு முக்கியம் அல்லவா அமைச்சரே !!!!!!!!!!!!

மீண்டும் மறு பதிவில்  சந்திப்போம்  அன்புடன் கரிகாலன்.

Saturday, November 21, 2015

நகைக் கடைகளின் ஏமாற்று வேலைகள்.(ரொறன்ரோ பதிப்பு )

முகுந்த் அம்மா  என்னும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வலைப்பதிவர் வித்தியாசமான பல விடையங்களை எழுதுபவர் .அவருடைய பல பதிவுகளை  படித்து வருபவன் .ஊசி போட தெரியாவிட்டாலும் பெயருக்கு அருகில் ஒரு டொக்டர் பட்டம்  இருப்பதாக குறிப்பிட்டு இருந்தவர்.இருந்தவர் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்பொழுது அந்த வரியை காணவில்லை என நினைக்கிறேன்   

ஒரு பெண்மணியான அவர் இன்றைய தினம் எழுதி இருக்கும்  குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைகடைகளின் பம்மாத்து ஏமாற்று வேலை! எனும் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்  விடையம் முக்கியமாக பெண்களால்  கவனிக்க பட வேண்டிய ஒரு விடையம்.அனால் இந்த விடையத்தினை மட்டும் பெண்கள் முக்கியமாக மறந்து விடுகிறார்கள் வசதியாக என்றும் 
எடுத்துக் கொள்ள(ல்ல)லாம் 

(அதுசரி முகுந்த் அம்மா ,பம்மாத்து என்பது ஏமாற்றுதல் என்றுதானே பொருள்படும் பின்பு ஏன்  மீண்டும் ஏமாற்று என்று ஒரு சொல் ?அத்துடன் நகைக்கும் கடைக்கும் இடையில் "க்" வரவேண்டும் .)
என்னம்மா இப்படி பண்ணிறிங்களே அம்மா ?


                                                                                       

சரி விடையத்துக்கு வருகிறேன் .சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் மாமன் வீட்டு விசேடத்துக்கு நகை பரிசளிக்கவேண்டிய தேவை வந்தது .சரி  வெளிக்கிடுங்கோ நகைக்கடைக்கு போய்  ஒரு ஆரம் வாங்குவோம் என்று கதைத்தபோது  மனைவி சொன்னார் எனது சில நகைகள் பாவிக்காமல் இருகின்றன .அவற்றையும் கொடுத்துவிட்டு, மிகுதிக்கு பணத்தினையும் கொடுப்போம் என்று சொன்னார் .சரி என்று தலையாட்டிக்கொண்டு ரொறன்ரோவில்  பிரபல்யமான  ஒரு நகைக்கடைக்கு போனால் ஒரு ஆரம் ஒன்று மனைவிக்கு பிடித்து விட்டது .கதைத்து பேசி ஒருவழியாக   விலை சொன்னார் விற்பனையாளர். சரி  என்று  சொல்லிவிட்டு மனைவி  சொன்னார் இரண்டு  நகைகள் இருக்கின்றன அதை ஒரு விலைபோட்டு எடுங்கோ மிகுதிக்கு பணம் தரலாம் என்று

கடைக்காரர்  இரண்டு நகைகளையும் பரிசோதித்து விட்டு ஒரு நகையை காட்டி சொன்னார்  இது நல்ல தங்கம் இதுக்கு அதிக விலைதருகிறேன் என்றதுடன்  மனைவி கொடுத்த இரண்டாவது நகையை காட்டி இது தங்கம் கொஞ்சம்  தரம் சரியில்லை எனவே இதுக்கு விலை குறைவாகத்தான் தருவேன் என்றார் .நான் சொல்ல  வாய் எடுப்பதற்கு முன்னர் மனைவி சொன்னார் 

சரி முதலாவது நகையை எடுத்துக்கொள்ளுங்கள் மிகுதிக்கு பணம் தருகிறோம் என்று சொன்னதுடன் எனக்கு கண்ஜாடை காட்டினார் கதைக்கவேண்டாம் என்று.
பணத்தினை செலுத்தி நகையை வாங்கிக்கொண்டு வெளியில் வரும்போது மனைவியை  கேட்டேன் ஏன் நீங்கள் கொஞ்சம் விலை குறைவென்றாலும் இரண்டாவது நகையை  கொடுத்திருக்கலாம் தானே நீங்கள்  அந்த நகை போடப்போவது இல்லை என்றால் வைத்திருப்பதில் என்ன பிரயோசனம் என்று. நான் கேட்ட கேள்விக்கு  பதில் கூறாத மனைவி  கேட்டார் நான் ஒரு தோடு எடுக்கட்டோ என்று . தேவை என்றால் எடுங்கோ என்று நான் சொன்னேன் .இப்போது  இருவரும் ரொறன்ரோவின் பிரபல்யமான  இன்னுமொரு நகைக் கடையில், மனைவி ஒரு தோட்டை தெரிவு செய்து விட்டு முன்னர் போலவே பழைய நகை ஒன்று இருக்கிறது என்று சொல்ல 
வாங்கிப்பார்த்த கடைக்காரர் சொன்னார் 

இது நல்ல தரமான நகை என்றதுடன் முந்தைய கடைக்காரர் அதே நகைக்கு  சொன்ன விலையை விட சில டொலர்கள் அதிகமாகவே சொன்னார் . பழைய நகையை யும் கொடுத்து மிகுதிக்கு பணத்தினையும் கொடுத்து தோட்டை வாங்கிகொண்ட   மனைவி என்னைபார்த்த பார்வையில் ஒரு வெற்றிப் புன்னகை இழை ஓடியதை என்னால் உணர முடிந்தது.சரி சரி இதுக்குதானே அம்மா அப்பா மிகவும்கஸ்டப்பட்டு தேடி உங்களை எனக்கு கட்டி வைத்தவர்கள் என்பதுடன் நிறுத்திக்கொண்டேன் நான்.இதுக்கு மேலே கதையை  வளர்த்த நான் என்ன முட்டாளா?

என்னுடைய மனைவி கொஞ்சம் புத்திசாலி என்பதால் இதனை கண்டு பிடித்தார் .ரொறன்ரோவில் பெரும்பாலான கடைகளில் இப்படிதான் செய்கிறார்கள் ,நாங்கள் பிறகும் ஒரு முறை இந்த நடைமுறையை செய்து பார்த்தோம் .ஒரு முறை போன கடையிலேயே சில காலத்தின் பின்னர் போனபோது அதிக விலை சொன்னார்கள் 

முன்பு எல்லாம் எனது மனைவி அடிக்கடி நகை வாங்குவார் ,அந்த பாசன் போய்விட்டது இந்த பாசன் வந்துவிடடது என்று .இப்போது அவரின் நகை மோகம் பெருமளவில் குறைந்துவிட்டது. வருடத்தில்  350 நாளும் நகைகள் வைப்பகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் தானே  தூங்குகிறது ஆத்திர அவசரத்துக்கு கூட எடுத்து அழகு பார்க்க முடிவதில்லை என்ற ஏக்கம் காரணமாக இருக்கலாம் அல்லது பிள்ளைகள் நகைகளில் துளியும் அக்கறை காட்டாதால் இருக்கலாம்  அல்லது  கனடாவில் ஒரு வர் பணக்காரா  அந்தஸ்து உள்ளவரா எனக்  கணிப்பிடும் காரணிகளில் நகை இல்லாமல் போனதால் இருக்கலாம் .

எப்படியும் நகை என்றவுடன் வலையுலக பெண் -மணிகள்  எல்லோரும் இங்கு வந்திருப்பீர்கள் ,அதனால் என்னால் ஆன  சில நகைகளை பேணும் குறிப்புக்கள் .

முத்து நகைகள்:
* முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.
* முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.
* முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கி விடும்.
வெள்ளி நகைகள்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.
* அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி கருத்து விட்டதா? கவலை வேண்டாம். வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
தங்க நகைகள்:
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.
* தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.
* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.
எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.
கற்கள் பதித்த நகைகள்:
* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.
இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இணையத்தில் சுட்டது  .நன்றி