Tuesday, May 19, 2015

நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு தப்பிவரும் ஜெயலலிதா: மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குற்றச்சாட்டு!


நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு ஜெயலலிதா குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதாக மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்ட போது, அவர் கைதாகி சிறையில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் பெற்று தந்தவர் ஆவார்.அவர் தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.அந்த கட்டுரையில், நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெயலலிதா தப்பித்து இருக்கிறார்.டான்சி வழக்கு, லண்டன் ஹொட்டல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹொட்டல் வழக்கு, வருமான வரி வழக்கு என அத்தனை வழக்குகளிலும் குறுக்கு வழிகளில் ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார்.


தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்தும் தப்பித்து இருக்கிறார். இதற்காக அவர் நீதியை வளைத்த முயற்சிகள் சிறிதல்ல.2003ல் ஓய்வுப் பெறவிருந்த நீதிபதி பாலகிருஷ்ணனை நீதிபதியாக தொடர வைக்க முயற்சித்தார்.2015ல் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்த விதம் வியப்புக்குரியது.


கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணக்கியல் தவறுகள் திருத்தப்படுமாயின் தீர்ப்பே மாறுபடும்.10% வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வைத்துக்கொள்ளலாம் என கிருஷ்ணானந்து வழக்கை காட்டி ஜெயலலிதாவை விடுவித்திருப்பது சரியல்ல.கிருஷ்ணானந்த் கூடுதலாக வைத்திருந்த பணம் ரூபாய் 11,349 மட்டுமே.


தவறுகள் நிறைந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலே ஜெயலலிதாவின் கூடுதல் வருமானம் ரூபாய் 2,82,36,812.அதன் தற்போதைய மதிப்பு பணவீக்கம் காரணமாக இன்னும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.


கிருஷ்ணானந்த் வழக்கில் கூடுதல் வருமானம் மிக மிக குறைவு என்பதால் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.அந்த வழக்கின் சாராம்சங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் குவித்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சமும் பொருந்தாது.ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்படக் கூடியவர் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Anonymous said...

பகிர்விற்கு மிக்க நன்றி.

செங்கதிரோன் said...

Failure of judicial system will be threat to the nation.