Thursday, November 26, 2015

ஆமிர்கானும் சகிப்புத்தன்மையும்! தினமணி ஆசிரியர் தலையங்கம்

சமீபத்தில் நடிகர் ஆமிர் கான் ஒரு நிகழ்ச்சியின்போது பேசிய பேச்சு, ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. தனது மனைவி கிரண், “இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழலாமா?’ என்று வீட்டுக்குள் நடந்த உரையாடலின்போது குறிப்பிட்டதாக ஆமிர் கான் ஒரு விழா மேடையில் பகிர்ந்துகொண்டார். இந்தப் பேச்சின் உள்ளுறைப்பொருள் இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்பதுதான். ஆமிர் கான் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து, விவாதப் பொருளாக்கிவிட்டிருக்கின்றன.
ஆமிர் கான் நடித்து வெளியான பி.கே. திரைப்படத்தில் ஹிந்து கடவுள்கள், சாமியார்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தன. இதற்காக இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தபோது அதைப் புறந்தள்ளியது மத்தியில் ஆளும் இதே நரேந்திர மோடி அரசுதான். இந்தப் படம் தொடர்பான ஆதரவான கருத்தை முன்வைத்தவர் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவர் எல்.கே. அத்வானி.
நிலைமை இதுவாக இருக்கும்போது, ஆமிர் கான் ஏன் இந்த விவாதத்தை பொதுமேடையில் பேசினார் என்பது தெரியவில்லை. அவர் இயல்பாகச் சொன்னாரா அல்லது இந்த விவாதம் வேறு தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வேண்டுமென்றே தொடங்கி வைத்தாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியாவில்தான் ஆமிர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் ஆகியோர் முன்னணி நடிகர்களாகக் கடந்த பதின் ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் கோலோச்சுகின்றனர். இவர்களுக்கு முன்னாலும், இந்தித் திரைப்பட உலகில் திலீப்குமார், பெரோஸ்கான், சஞ்சய் கான், பரூக் ஷேக் உள்ளிட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த கதாநாயகர்களும், எண்ணிலடங்காத பல நடிகைகளும் மக்களின் பேராதரவுடன் வலம் வந்திருக்கிறார்கள். இந்திய மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், “முகம்மது: இறைதூதர்’ என்ற ஈரானிய படத்துக்கு இசையமைத்தார் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த அமைப்பு ஃபட்வா அறிவித்தபோது இந்தியத் திரைத் துறையும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும் சகித்துக்கொண்டு சும்மா இருந்தார்களே, அது ஏன்? நடிகர் ஆமிர் கானின் தனிப்பட்ட கருத்து தேசத்தின் கருத்தாக மாற்றப்படும்போது, ரஹ்மான் மீதான மிரட்டல் ஏன் தனிப்பட்ட விவகாரமாகவே முடிந்துபோனது?
இப்போது இந்தியாவை ஏன் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றிவிடும் முயற்சியில் அறிவுஜீவிகளும் கலைஜீவிகளும் இறங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லாவிட்டாலும், அறிவுஜீவிகள், கலைஜீவிகள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஊகமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம், எம்.பில். பட்டம் படிப்போருக்கான உதவித் தொகையை ஆய்வுகளின் தர அடிப்படையில் தீர்மானிப்பது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் உதவித் தொகை தவறான நபர்களுக்குத் தரப்படுவதைத் தடுப்பதுதான் இந்த முடிவுக்குக் காரணம்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 ஆராய்ச்சி மாணவர்களும், நாடு முழுவதிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். “நான்-நெட் ஃபெலோஷிப் திட்டங்களை’ ரத்து செய்யமாட்டோம் என்று மத்திய அரசு இறங்கி வந்தாலும், மற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இதனால், அறிவுஜீவிகளின் கோபம் அதிகரித்தது.
கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவில் 300 மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. 35 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது மத்திய உள்துறை அமைச்சகக் குறிப்பு. அக்டோபர் மாதம் வரை 630 மதக் கலவரங்களும், 86 மரணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுதான் மத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமையின் அடையாளம் என்று சொல்வார்களேயானால், இவர்கள் கடந்த ஆட்சியில் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2013-இல் நடந்த மதக் கலவரங்களின் எண்ணிக்கை 823. அப்போது அறிவுஜீவிகளுக்குப் புலப்படாத சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை இப்போது திடீரென்று தோன்றுவதற்கு நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பும், காங்கிரஸ் மீதான அனுதாபமும்தான் காரணமாக இருக்க முடியும்.
மோடி முகத்தில் கரி பூச வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் அனைவரின் மீதும் கரி பூசுவதும், இந்தியா என்கின்ற நாடே சகிப்பின்மை அற்ற நாடென முத்திரை குத்தி, பயங்கரவாதிகளின் கோபத்தைக் கிளறிவிடப் பார்ப்பதும் விபரீதமான சிந்தனை. இதைச் சொல்லும் அதே நேரத்தில், இன்னொன்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். தனது கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சியினரும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் விதத்தில் பேசுவதைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் பிரதமர் மோடியின் கடமை. அவரது மௌனமும்கூட இப்படியொரு தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது என்பதை அவர் உணர வேண்டும்
தினமணி 

No comments: