Tuesday, December 29, 2015

விஜயகாந்த்"தூ " சிறப்பு பதிவு -01- -- அறிவுடையார் ஆவதறிவார்? அறிவிலார்?

மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த பஞ்சத்தின் வெளிப்பாடே சகாயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வராக கேட்பதும், விஜயகாந்தை அனைத்து அரசியல் கட்சிகளும் விழுந்து விழுந்து அழைப்பதும்.
அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே செயல்படாத அரசாகத்தான் இருந்து வந்தது. குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த ஆண்டு வந்ததற்கு பிறகு, ஒரு பொம்மை அரசாங்கமாகத்தான் செயல்பட்டது. நாஞ்சில் சம்பத் சொல்வது போல, அனைத்து திட்டங்களும், “அம்மா வருகைக்காகவே காத்திருந்தன”. நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் வளைத்து, விலைக்கு வாங்கி, ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்பதில், அதிமுக அடிமைகளுக்கு அப்படியொரு அபார நம்பிக்கை. கணிதமேதை குமாரசாமி அளித்த தீர்ப்பினால் ஜெயலலிதா விடுதலை ஆன பிறகும் தமிழக அரசு செயல்படாத மந்த அரசாகவே இருந்து வந்தது.
“அம்மா உத்தரவுக்கிணங்க” என்ற லாவணிகள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலங்கள் அனைத்திலும் இருந்தே வந்தன. புதிது கிடையாது. ஆனால், வெள்ள நிவாரணப் பணிகளின்போது, பாடப்பட்ட அம்மா லாவணிகள்தான் பொதுமக்கள் இடையே, குறிப்பாக இளைஞர்கள் இடையே கடும் கோபத்தை எழுப்பின. அதுவரை, ஜெயலலிதாவை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளை அதிமுக அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதை ஊன்றி கவனிக்கத் தொடங்கினார்கள். அதிமுக அடிமைகளின் அம்மா புகழ் லாவணி, அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது.
குறிப்பாக இளைஞர்கள் கடும் கோபமடைந்தனர். அவர்களின் கோபத்தின் வெளிப்பாட்டை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. இந்த கோபத்தின் மறு பரிமாணம்தான் சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை. அந்த இளைஞர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், அது நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம் என்பதை அந்த இளைஞர்கள் புரிந்து கொள்ளவில்லை. சகாயம் போலவே பல்வேறு நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். சகாயம் மட்டுமே நேர்மையான அதிகாரி அல்ல. ஆனால் சகாயத்துக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவின் காரணமாக, அவரால் முதல்வராக முடியும் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை. டெல்லி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழகம் டெல்லி இல்லை. டெல்லி தேர்தலில் சாதி என்பது ஒரு பெரிய காரணி அல்ல. 
பல்வேறு மதத்தினரும், பல்வேறு சாதியினரும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மொழி பேசுபவர்களும் டெல்லியில் இருக்கிறார்கள். ஆனால் தமிழக தேர்தலில், சாதி ஒரு முக்கிய அடிப்படைக் காரணியாக தொடர்ந்து இருந்து வருகிறது. வேட்பாளரின் சாதியை கணக்கில் கொள்ளாமல் எந்த கட்சியும் தேர்தலை சந்திப்பதில்லை. எந்த தொகுதியில் எந்த சாதி அதிகம், எந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பவை அனைத்தையும் தீர்மானித்த பிறகே கட்சிகள் தேர்தலில் நிற்கின்றன. இது தவிர்க்கவே முடியாத ஒரு விஷயம். மேலும், இரண்டு திராவிடக் கட்சிகளும் வலுவான வாக்கு வங்கிகளை வைத்துள்ளன. இந்த வாக்கு வங்கிகளை, சகாயத்தால் ஒரு போதும் உடைக்க முடியாது. திமுக, அதிமுகவைத் தவிர, தமிழகத்தின் ஆயிரக்கணக்கான பூத்களில் உட்கார வைக்க, எந்த கட்சியிடமும் ஆட்கள் கிடையாது. அப்படி இருக்கையில், சகாயம் எந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவார் ? இவை எல்லாவற்றையும் விட, தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் பணம் வேண்டும். சகாயம் மட்டும் ஒரு தொகுதியில் நிற்பதாக இருந்தால்கூட கோடிக்கணக்கான பணம் வேண்டும். அந்தப் பணத்தை, சகாயத்துக்கு ஆதரவாக கூடும் இளைஞர்களால் ஒருபோதும் திரட்ட முடியாது.
முகத்தில் அறையும் உண்மைகள் இவ்வாறு இருக்க, இளைஞர்கள் சகாயம் வேண்டும் என்று அணிவகுப்பது, அத்தனை அரசியல் கட்சிகளின் மீது உள்ள கோபம் மற்றும் வெறுப்பினாலேயே. இப்படிப்பட்ட ஒரு வெறுப்பில்தான் தேமுதிகவுக்கு 2006 தேர்தலில் பத்து சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிகவை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர் எம்ஜிஆரும் அல்ல, என்.டி.ராமாராவும் அல்ல என்றே கருதினார்கள். இந்த சூழ்நிலையிலேயே 2006ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 10 சதவிகித வாக்குகளை பெற்று, பல்வறு அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது தேமுதிக. இந்த தேர்தல், தமிழக அரசியல் களத்தில் விஜயகாந்தை ஒரு முக்கிய புள்ளியாக மாற்றியது.
2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளை பெற்றது. எந்தக் கட்சியோடும் கூட்டணி சேராமல், தன்னிச்சையாக தேமுதிக பெற்ற வாக்குகள் தமிழகத்தில் விஜயகாந்தை ஒரு வலுவான சக்தியாக மாற்றியது. இந்த வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையிலேயே, 2011 சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்தோடு கூட்டு சேர்ந்தார் ஜெயலலிதா. நெருங்கி வரும் சொத்துக் குவிப்பு வழக்கு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி போன்றவையே ஜெயலலிதாவை விஜயகாந்த் பக்கம் இழுத்தது. அந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் தேர்தலை சந்தித்து, 29 இடங்களில் வெற்றி பெற்றார் விஜயகாந்த். அந்த வெற்றி 2006-2011 திமுக ஆட்சியின் மீது இருந்த கடுமையான கோபத்தின் வெளிப்பாடே.
ஆனால் விஜயகாந்தோ, நாம்தான் அடுத்த ஆட்சியை பிடிக்கப்போகிறோம் என்ற கனவில் மிதக்கத் தொடங்கினார். 2011ல் பெற்ற வெற்றி தனது சொந்த செல்வாக்கில் பெற்ற வெற்றி என்று நம்பத் தொடங்கினார். இந்த மிதப்பின் அடிப்படையிலேயே 2013ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தினார். ஒரு வட இந்தியா மாநிலத்தில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கட்சி போட்டியிட்டு வெற்றி பெறுவது சாத்தியமா என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வேட்பாளர்களை நிறுத்தினார் விஜயகாந்த். எதிர்ப்பார்த்தது போலவே, அனைத்து தேமுதிக வேட்பாளர்களும், இரட்டை இலக்க வாக்குகளோடு மண்ணைக் கவ்வினர்.
கூட்டணி, இரு திராவிடக் கட்சிகள் மீதுள்ள வெறுப்பு ஆகியவற்றால் பத்து சதவிகித வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த், தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாகவே தன்னை கருதினார். ஒரு அரசியல் தலைவராக கூட அல்ல. ஒரு சாதாரண மனிதனாகக் கூட இருக்க தகுதியில்லாதவர் விஜயகாந்த் என்பது அவரது நடவடிக்கைகளால் வெளிப்படையாக தெரிந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களை அடிப்பது. பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி கொடி தெரிந்தால் அதை அகற்றச் சொல்வது, பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது என்று அவரது நடவடிக்கைகள் ஒரு பைத்தியக்காரனையே நினைவுபடுத்தின.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நெறிமுறைகளைக் கூட பின்பற்றாதவர் விஜயகாந்த். பொதுவாழ்வில் உள்ள தலைவர்களும் மனிதர்களே. அவர்ளும் கோபப்படுவதென்பது இயல்புதான் என்றாலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற நேர்வுகளில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்தோ, கேமரா இருக்கிறது, பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்தெல்லாம் துளியும் கவலைப்படாதவர். “குண்டக்க மண்டக்க திட்டுவேன்” “நீயா எனக்கு சம்பளம் குடுக்குற.. போடா” என்பது போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுபவர். செய்தியாளர்கள் கருத்து கேட்டால், நான் ஒரு வாரமா பேப்பர் படிக்கல என்பதை பதிலாகச் சொல்பவர்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புதான் இப்படியென்றால், அவர் கட்சியை நடத்தும் விதமும் கேலிக்கூத்தானது. வேட்பாளர்களை அடிப்பது, தேர்தலில் போட்டியிட பணம் கேட்பது என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு தேர்ந்த ஊழல் அரசியல்வாதியின் குணநலன்களை கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, குடும்ப அரசியலை அமல்படுத்துகிறார். அவர் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷை மீறி கட்சியில் எதுவுமே நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே, இப்படியெல்லாம் நடந்து கொள்பவர், ஆட்சியை பிடித்து விட்டால் என்னவெல்லாம் செய்வார் என்பதை ஊகிப்பது ஒன்றும் சிரமமல்ல.
இந்த கூத்துகளுக்கெல்லாம் உச்சகட்டம்தான் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து தூ என்று துப்பியது. ஜெயலலிதாவிடம் இந்தக் கேள்வியை கேட்பீர்களா என்ற அவரது கேள்வி நியாயமே என்றாலும், பொதுவெளியில் அதை வெளிப்படுத்தும் முறை உள்ளது. துப்புவதும், அடிப்பதும், உளறுவதும் தனக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே விஜயகாந்த் கருதுகிறார். அவர் அவ்வாறு கருதுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்சிகளான கம்யூனிஸ்டுகளே அவரை பிடித்துத் தொங்குவதும், தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றான திமுக அவரை வலிய அழைப்பதும் அவருக்கு இந்த இறுமாப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேரமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள கம்யூனிஸ்டுகள், தேமுதிக என்ற சாக்கடையில் கால் நனைக்கிறார்கள். திமுக அதிமுகவிடம் உள்ள அனைத்து குறைகளும், தேமுதிகவிடமும் இருக்கிறது. திராவிடக் கட்சிகளை புறக்கணிக்க கம்யூனிஸ்டுகள் கூறும் அனைத்து காரணங்களும் விஜயகாந்துக்கும் பொருந்தும். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, பொதுவெளியில் வேட்பாளர்களையோ, தொண்டர்களையோ ஒருபோதும் தாக்கியதில்லை. சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திக் கொண்டு சண்டைக்கு போனதில்லை. ஆனால் விஜயகாந்த் இவை அனைத்தையும் செய்தவர். ஒரு மனிதனாக அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்கத் தெரியாதவர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கிறேன் என்று கம்யூனிஸ்டுகள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கால்வாயில் விழுந்ததைப் போன்ற நிலையில்தான் கம்யூனிஸ்டுகள் நிற்கிறார்கள். கட்சியின் மீது விசுவாசம் கொண்ட தோழர்களையும், பொதுவாழ்வில் கண்ணியத்தையும் கடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகள் ஒரு லும்பனிடம் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். விஜயகாந்தோடு கூட்டணி சேர்வதற்கு பதிலாக அவர்கள் திமுக அல்லது அதிமுகவோடே சேரலாம். தேமுதிகவை விட அந்த கட்சிகள் எவ்வளவோ மேல். ஒன்றிரண்டு எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு போவதை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். பத்துக்கும் மேற்பட்ட கட்சி எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு வெளியேறுகின்றனர் என்றால் குறை யாரிடம் இருக்கிறது. தனது கட்சியைக் கூட கட்டுக்கோப்பாக நடத்தத் தெரியாதவர்தான் விஜயகாந்த்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்பதைக் கூட தவிர்க்கும் கட்சி தேமுதிக. ஒவ்வொரு கட்சியும் பெயரளவிலாவது ஒரு கொள்கை வைத்துள்ளது. ஆனால் எந்த கொள்கையும் இல்லாத ஒரே கட்சி தேமுதிகதான். மனைவியும், மைத்துனரும் நடத்தும் கட்சி தேமுதிக. இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் நடந்து கொள்ளாத வகையில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் கட்சி தேமுதிக. ஆனால் இவர்களோடு கைகோர்க்க துடிக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். திராவிட அரசியலின் முக்கிய தலைவரான வைகோ, “கேப்டன் விஜயகாந்த்” என்று அழைக்கிறார். அரசிலில் இருந்து ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் விஜயகாந்திடம் மடிப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறார் வைகோ.
மற்றொரு புறம், திமுக தலைவர் கருணாநிதி, எங்கே நால்வர் அணிக்கு விஜயகாந்த் போய் விடுவாரோ என்று அவசர அவசரமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கிறார். பல முனைகளிலும் இருந்து விஜயகாந்தை நோக்கி வரும் பட்டுக்கம்பள விரிப்புகள்தான் அவரை பத்திரிக்கையாளர்களை நோக்கி துப்ப வைத்திருக்கிறது.
இது குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “துப்புவது சரியா தவறா என்று விவாதம் நடத்துவது நமது காலகட்டத்தின் அவல நிலை. இது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய அவலச் சூழலில் நாம் இருக்கிறோம். 1994ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக, வாழப்பாடி ராமமூர்த்திக்கு அறிக்கை எழுதித் தரும் தி.சு.கிள்ளிவளவன் ஒரு முறை “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுகவை மக்கள் கொண்டாடும்படி செய்து விடுவார்கள். அவ்வளவு மோசமானவர்கள் இந்த காங்கிரஸ் காரர்கள்” என்றார். அது போல, திமுக மற்றும் அதிமுகவுக்கான மாற்று, அச்சம் தரும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கிறது. இவற்றுக்கான மாற்று சகித்துக் கொள்ள முடியாத வகையில் உள்ளது. அதிமுக மற்றும் திமுகவுக்கான மாற்றாக பார்க்கப்பட்ட தேமுதிக, இந்த இரண்டு கட்சிகளையும் விட மோசம் என்பதையே இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.
விஜயகாந்த் துப்பியது ஊடகங்களின் மீது அல்ல. அவரையும் உள்ளடக்கிய இந்த சமூகத்தின் மீது. தமிழகத்தில் ஊடகங்களின் நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஜெயலலிதாவை தங்கக் கரங்கள் கொண்டு ஊடகங்கள் தாங்கி வருகின்றன. இது குறித்த கோபத்தையே விஜயகாந்த் துப்பி வெளியிட்டிருக்கிறார்.
ஜெயகாந்தன் ஒரு முறை பேசுகையில், ‘நான் நண்பர்களோடு பேசுகையில், தயக்கமில்லாமல் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்திப் பேசுவேன். மேடையில் பேசுகையில், அவற்றை குறைத்துக் கொள்வேன். என் எழுத்துக்களில், எவ்விதமான தவறான வார்த்தையும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வேன்’ என்றார். அது போல பொதுவாழ்வில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான தகுதி இது. ஆனால் விஜயகாந்த், இவை பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படுவதில்லை. ஊடகங்கள் மீதான தன் கோபத்தை அவர் வேறு வார்த்தைகளில் வெளியிட்டிருந்தால், ஊடகங்களின் கள்ள மவுனம் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். மாறாக விஜயகாந்த், ஊடகங்களைப் பார்த்து துப்பியதால், தற்போது துப்பியது சரியா தவறா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது.
விஜயகாந்தின் செயல்பாடு மன்னிக்க முடியாதது என்றாலும், அதற்கான காரணங்களை நாம் ஆராயத்தான் வேண்டும்.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, தங்கள் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து செய்தி வெளியிட்டனர். ஆனால், ஆட்சியே நடத்தாத, தலைமைச் செயலகத்துக்கே செல்லாத, பத்திரிக்கையாளர்களையே சந்திக்காத ஜெயலலிதாவை விமர்சிக்க இந்த ஊடகங்கள் மிகுந்த தயக்கம் காட்டுகின்றன.
ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் பணி, மிக மிக முக்கியமானது. அந்தப் பணியை செய்யத் தயங்கும் ஊடகங்களை மன்னிக்கவே முடியாது. இது வரை 190 அவதூறு வழக்குகளை போட்டிருக்கிறார் ஜெயலலிதா. எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அரசு மோசமான அரசு என்றால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்மணி மீது கூட அவதூறு வழக்கு போட்டிருக்கிறார்கள். ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை, தான் படித்த செய்திக்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாத அந்த செய்தி வாசிப்பாளரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து அலைக்கழிக்கும் வேலையை தமிழக அரசு செய்துள்ளது.
இதை எதிர்த்து எந்த பத்திரிக்கையாளர் சங்கம் இது வரை ஆர்ப்பாட்டத்தையோ கண்டனக் கூட்டங்களையோ நடத்தியுள்ளது. ஜெயலலிதா அரசின் அவதூறு வழக்கு தொடுக்கும் போக்கினை கண்டித்து கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு அரங்கக் கூட்டத்தைக் கூட பத்திரிக்கையாளர்கள் நடத்தியதில்லை.
ஜெயலலிதாவின் 1991-96 மற்றும் 2001-2006 ஆட்சிகாலத்தில், இதே போன்ற அடக்குமுறைகள் நடந்தன. ஆனால் அன்று ஊடகங்கள் தலை நிமிர்ந்து நின்றன. ஜெயலலிதா அரசை கடுமையாக விமர்சித்தன. ஆனால் இன்று அதே ஊடகங்கள், ஜெயலலிதா அரசின் விளம்பரத்துக்காக, வாலைக் குழைத்துக் கொண்டு அவர் காலடியில் மன்றாடிக் கொண்டிருக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஒரு செல்வச் செழிப்பான ஊடகமே, அரசு விளம்பரங்களுக்காக, அரசுக் எதிரான செய்திகளை தயக்கத்தோடு வெளியிடுவதும், பல சமயங்களில் தவிர்பதுமென இருக்கையில், இதர ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
ஜெயலலிதாதான் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்றால், அவரது அமைச்சர்களைக் கூட இந்த ஊடகங்கள் மென்மையாகத்தான் அணுகுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை எந்த அரசும் ஊடகங்களின் மீது தொடுத்ததில்லை. நெருக்கடி நிலை காலத்தில் கூட இப்படி வழக்குகள் தொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தமிழகத்தில் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் வகையில் அவதூறு வழக்குகள் சகட்டுமேனிக்கு தொடுக்கப்படுகின்றன. ஆட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்களை அரசு ஊக்குவிக்கிறது. ஆனால் இதைப்பற்றி சற்றும் கவலையில்லாமல் ஊடகங்கள் தங்கள் ஆன்மாவை விற்று விட்டு, செயல்பட்டுக் கொண்டு வருகின்றன.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் ஒரு முறை பேசுகையில், இந்தியாவில் நீதித்துறை உள்ளிட்ட எந்த அமைப்புகள் தங்கள் கடமையில் இருந்து தவறினாலும் மன்னிக்கலாம். ஆனால் ஊடகங்கள் தவறுவதை மன்னிக்கவே முடியாது என்றார். அவர் கூறியதைப் போல ஊடகங்கள் இன்று தங்கள் கடமையை மறந்து, ஆலாபனைகளைத்தான் பாடிக் கொண்டிருக்கின்றன.” என்றார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
அவர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் விஜயகாந்துக்கு ஆதரவாக, குவியும் கருத்துக்களை காண முடிகிறது. விஜயகாந்த் செய்தது சரியே என்று ஏராளமானோர் கருத்தளித்து வருகின்றனர். அவ்வாறு கருத்து கூறுபவர்களுக்கும், ஊடகத்துக்கும் எவ்விதமான தகராறும் கிடையாது. ஆனால் ஊடகங்கள் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டதன் மிதான அறச் சீற்றத்தை காண முடிகிறது. அந்த அறச்சீற்றத்தின் வெளிப்பாடே, விஜயகாந்தின் அநாகரிகச் செயலுக்கு குவியும் ஆதரவுகள்.
செயல்படாத ஒரு அரசை தூக்கி நிறுத்துவதற்கு ஊடகங்கள் போட்டி போடுகின்றன. ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் தகவல் தொடர்புத் துறை செயலர் ராஜாராம் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டால், அரசுக்கு எதிரான செய்திகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக லட்சக்கணக்கான மதிப்புள்ள விளம்பரங்களை அள்ளித் தருகிறது அரசு.
“மக்களே போல்வர் கயவர்” என்பதற்கு ஏற்ப, அரசியல் கட்சித் தலைவர்கள் எப்படியோ அதுபோலத்தான் ஊடகங்களும் இருக்கின்றன.
இந்த துப்பல் விவகாரத்தால், அதிகப்பயனடைந்தது ஸ்டிக்கர் சுந்தரியே. வெள்ள பாதிப்புகளை அரசு கையாண்ட விதத்தின் மீதான கோபம் மெள்ள மெள்ள உருமாறி, இன்று விஜயகாந்த் துப்பியதில் வந்து நிற்கிறது. விஜயகாந்தின் பழைய வீடியோக்களை ஜெயா டிவி மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டுகிறது.
ஜெயலலிதாவை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள், துப்புவது போன்ற அற்ப விஷயங்களை விவாதப்பொருளாக்கி ஸ்டிக்கர் சுந்தரியின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அயோக்கியத்தனமாக கட்சி என்றால், நமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சிகள் அதை விட மோசமாக இருக்கின்றன. தமிழகத்தின் தலையெழுத்து, இப்படிப்பட்ட கட்சிகளையெல்லாம் நம்ப வேண்டியுள்ளது. எதிர்காலம் இன்னும் எப்படிப்பட்ட வேடிக்கைகளை எல்லாம் நமக்காக வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.
விஜயகாந்துக்காகவே வள்ளுவர் இந்த குறளை எழுதியுள்ளார்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


சவுக்கு-

நன்றிகள் சவுக்கு இணையதளத்துக்கு சேரவேண்டும் . இக் கட்டுரை பலரையும் சென்று அடையவேண்டும் என்ற  நோக்கில் இங்கு தந்திருக்கிறேன் .உங்கள் கருத்துக்கள்  வரவேற்கப்படுகிறது .

No comments: