Tuesday, May 26, 2015

கொத்து ரொட்டி-- 004





அ ண்மையில் இங்கு கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில சஞ்சிகை கனடாவில்  இருக்கும் பெரும்தொழில் அதிபர்களை பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தது .பலருடைய பேட்டிகள் பலவிதமான பின்னணிகள் ,சுவாரசிகமான சம்பவங்கள் அந்த பேட்டிகளின் இடையே இறைந்து கிடந்தது .அந்த சம்பவங்களை எல்லாம் நான் இங்கு எழுதப்போவது இல்லை .

எல்லாப் பேட்டிகளிலும் ஒரு மைய இழையான ஒரு கருத்தினை காணமுடிந்தது .பெரும்பாலான தொழிலதிபர்கள் தெரிவித்தது
தாங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியில் இறங்கும் போது தங்கள் மனதில் தொழிலில் வெற்றிபெறுவோம் என்ற மனநிலையை விட தோல்வியடைந்தால் அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும் என்பதுடன் எப்போதும் எச்சரிக்கையுடன் தான் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும்
அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார்கள் .உண்மையில் தோல்வி அடைந்துவிட கூடும் என்ற எச்சரிக்கையே அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியிருந்தது .

உண்மையில் நீங்களே நினைத்துப்பாருங்கள்  வளைவில் திரும்பும்போது  எதிரே வாகனமோ, மனிதர்களோ ,இல்லை வேறு ஏதாவதோ எதிர்ப்படும் என எண்ணி எந்தநேரமும் பிரேக்கில் கால் வைக்க தயாராக செல்பவன் சிறந்த சாரதியா அல்லது இவற்றை எல்லாம் எண்ணாமல் அலட்சியமாக சென்று விபத்தில் சிக்குபவன் சிறந்தவனா ?ஒரு போர் வீரன் சண்டைக்கு போனால் எப்போதும் தன்னை நோக்கி குண்டுகள் வரும் என்று எதிர்பார்த்து எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் அவதானிப்பவனே வீட்டுக்கு மீண்டு வரமுடியும் .இப்படி பல உதாரணங்களை காட்டமுடியும் .

முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் பலரையும்  பல சமயங்களில் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது .இதற்கு உதாரணமாக ஓசோ சாமியார் (ரஜனிஸ்) சொன்ன கதை ஒன்று .புத்திசாலித்தனமான ஒரு
முன்னெச்சரிக்கை எப்படி ஒரு உயிரை காப்பாற்றியது சரி கதையை பார்ப்போமா?

கொரில்லா குரங்குகளை பிடித்து விற்பவர் ஒருவர் ஆபிரிக்காவுக்கு போனார் குரங்குகளை பிடிப்பதற்காக .அங்கு ஒரு  பெரிய வேடைக்காரனை சந்தித்து தனது தேவையை சொல்லி ஒரு கொரில்லாவை பிடித்துக்கொடுக்க எவ்வளவு காசு  என்று கேட்டார் .

அதற்கு அந்த வேட்டைக்காரன் சொன்னான் எனக்கு 500 டொலரும் என்னுடன் துப்பாக்கியுடன் வரும் குள்ளனுக்கு 500 டொலரும் அடுத்து என்னுடன் வேட்டைக்கு வரும் என்னுடைய நாய்க்கு 500 டொலருமாக
1500 டொலர் தரவேண்டும் என்றான் இதைகேட்ட குரங்குகளை பிடித்து விற்பவர் குழம்பிப்போனார் எதற்கு 500 டொலர் நாய்க்கு என்று யோசித்தவாறே 1500 கொடுக்கப்போகிறோம் எப்படி பிரித்தால் எனக்கென்ன என்று வேட்டைக்காரன் சொன்ன தொகைக்கு சம்மதம் தெரிவித்தார் .அத்துடன் வேட்டைக்கு வந்து தானும் பார்வை இடப்போவதாக சொல்ல வேட்டைக்காரன் சம்தித்தான்.

வேட்டைக்கு சென்றார்கள் ஒரு மரத்தில் கொரில்லா அமர்ந்திருந்ததை கண்ட வேட்டைக்காரன் மெதுவாக மரத்தில் ஏறி குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் ஓங்கி அடித்தான் .குரங்கு சுருண்டு  தரையில் விழுந்தது .மறுகணம் வேட்டைக்காரனின் நாய்  ஓடி வந்து குரங்கின் பால் உறுப்பை இறுக்கி கவ்விப்பிடித்து குரங்கை அசையாமல் செய்ய மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரன் கொரில்லாவை பிடித்து ஒரு கூண்டில் அடைத்தான் .

இதைக்கண்டு ஆச்சரிய்ம்டைத்த குரங்கு விற்பவன் .இதைப்போல ஒரு ரெக்னிக்கை நான் இதுவரையில் பார்த்தே இல்லை உனக்கும் நாய்க்கும் தலா 500 டொலர்கள் தருவது நியாயம் தான் ஆனால் அந்த குள்ளனுக்கு என்ன வேலை அவனுக்கு எதற்கு 500 டொலர் என்று கேட்க வேட்டைக்காரன் சொன்னான் .அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் .பிறகு உங்களுக்கு புரியும் என்றான் .வேட்டைக்காரன் .


                                   



கொரில்லா வேட்டை இப்படியே தொடர்ந்து அந்தக்காட்டில் நடந்துவந்தது .இவர்கள் இப்படி குரங்குகளை பிடிப்பதை ஒரு புத்திசாலி குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது .வழக்கம் போல வேட்டைக்காரன் மரத்தில் ஏறி அந்தக்குரங்கின் பின்பக்கமாக சென்று அதன் தலையில் அடிக்கப்போகும் போது  குரங்கு முந்திக்கொண்டு வேட்டைக்காரனின் தலையில் அடித்து அவனை தரையை நோக்கி தள்ளிவிட்டது .

தரையை நோக்கி விழுந்துகொண்டே வேட்டைக்காரன் துப்பாக்கி ஏந்திய குள்ளனை நோக்கி கத்தினான் ."விரைவாக  அந்த நாயை சுடு " என்று

இதுதான் வழிமுறைகளை உண்டாக்கும் மனத்தின் புத்திசாலித்தனம் .அது சகல பரிணாமத்தினையும் முன் கூட்டியே சிந்தித்து வைத்துவிடும்  என்கிறார் ஓசோ

இதுதான் ஓசோவின் அந்தக் கதை .இனி நீங்களும் வாழ்க்கையில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பிர்கள் என நம்புகிறேன்



**********************************************************************************


இதை படிக்கும் நீங்கள்  எப்படியும் புத்தகப்பிரியர்கள் ஆக இருப்பீர்கள் என நம்புகிறேன்.புத்தகங்களை பற்றி சில விடயங்கள்

1 என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.

2 மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

3 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

4 பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று 5 மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

6 ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

7 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.


***********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானி தனது பதவியிலிருந்து ஒய்வு பெறுகின்றார்

                                  pilot                                               


கடந்த 37 வருடங்களாக எயர் கனடாவில் விமானியாக தொழில்செய்த  ஜூடி கமரன் என்ற இவர் தனது 24வயதில் 1978ல் விமானியாக பதவி ஏற்றார். அந்த காலகட்டத்தில்  முதல் பெண் விமானியாக கமரன் பதவி ஏற்றது ஒரு திருப்பு முனையாக அமைந்ததால் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது. கடந்த ஞாயிற்றுகிழமை Munich ல் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானத்தை  தரையிறங்கிய கமரன் தனது இறுதி மரியாதைக்கு அறிகுறியான தலைவணக்கத்தை தெரிவித்தார்.அத்துடன் அவரது விமானத்துக்கு நீரால் (water cannon salute) மரியாதையும் செலுத்தப்பட்டது


                                 pilot1



பின்னர் விமானநிலையத்தில் திரண்டிருந்த நண்பர்கள் மத்தியில் பேசும் போது தான்  தனது 37வருடகால பதவியை தான் மிக பெரிய அளவில் நேசித்ததாகவும் வேலையின் அருமையை தான் இப்போது உணர்வதாகவும் குறிப்பிடதுடன்   . எதிர்வரும் காலங்களில் அதிக அளவிலான பெண் விமானிகள் உருவாக வேண்டும் என விரும்புவதாக கமரன் கூறினார். தற்சமயம் 5 சதவிகிதமான பெண் விமானிகளே  உள்ளதாக கூறப்படுகின்றது.


**********************************************************************************

கனடாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்த்தீர்கள் .இந்தியாவின் முதல் பெண் விமானியின் படத்தினை பார்க்க ஆவலா? 


இவர்தான் இந்தியாவின் முதல் விமானம் செலுத்தும் அனுமதியைப் பெற்றவர் .



*******************************************************************************