Friday, June 19, 2015

இன்றைய திகதியில் இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!!



சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படம் எனக்கு மெயிலில் கிடைத்தது.உண்மையில் எடுக்கப்பட்ட படம் என்பது பார்த்தவுடன் விளங்கினாலும் யார் எடுத்தது என்பது உடனடியாக புரியவில்லை .இணையத்தினை மேய்ந்ததில் நதி மூலம் கிடைத்தது .

மத்திய புளோரிடாவில்  வனப்பகுதியில் ரிச்சார்ட் ஜோனஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சவாரி  சென்றதை கண்டு  அதிர்வுற்று  அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார்.

கடந்த வாரம் இந்த  புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகி  வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது


Embedded image permalink

.
முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி கலக்கி வருகிறது . பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த வாரத்தில்  இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்ட் ஜோனஸ் அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறி உள்ளார்.

 இது இப்படியே இருக்க இணையத்தில் கிடைத்த இன்னும் சில இதே மாதிரி படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 இதில் மனிதனின் படம் மட்டும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறேன் .மற்றவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் மனிதனை அடித்துக்கொள்ள உலகில் ஆளே கிடையாது .அதுவும் தேவைபட்ட இடம் வரை முதுகில் சவாரி செய்துவிட்டு தேவை முடிந்தவுடன் குதித்து ஓடுவது மட்டும் அல்லாமல் சவாரி செய்தவனின்  காலை வாருவதிலும் மனிதனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

இன்னும் சில படங்களை  கிழே தந்திருக்கிறேன் பார்த்து ரசியுங்கள்





































நன்றி ! மீண்டும் சந்திப்போம்.

Monday, June 15, 2015

நான் எப்படி இந்து ஆனேன் ? ஒரு உண்மைக்கதை

அண்மையில் செய்திகளில் இடம்பெற்ற ஒருஜெர்மனியரின்  உண்மைக்கதை எனது கவனத்தினை ஈர்த்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .


என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன்.
சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். போதைப் பொருள்களுக்கு அடிமையாகினேன். அதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டு, ஓர் போதைப்பொருள் தடுப்பு மையத்தில் சேர்த்து விடப்பட்டேன்.

அந்த மையத்தில் தான் எனது வாழ்வின் ஒரு புது அத்தியாயம் துவங்கியது. அங்கு நிறைய பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் தந்தனர். சில நேரங்களில் எனக்கு போதைப் பொருள்களை உண்பதற்கு கைகள் துடிக்கும்; உடம்பெல்லாம் மிகவும் பலவீனமாகும். ஒரு பைத்தியக்காரனைப் போல் தவிப்பேன். எனக்கு ஆறுதலாக யாருமே இல்லை என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினேன்.


அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நான் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எனினும் எனக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தியானங்களையும் செய்ய துவங்கினேன். மூச்சுப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். எல்லா சமயநூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். பைபிள், குரான் என்று படித்தேன். பகவத் கீதையையும் புராணங்களையும் படித்தேன்.

பின், ஆதிசங்கரர் வாழ்க்கையைப் பற்றி படித்தேன். ஸ்வாமி சிவானந்தாவின் வழித்தடங்களை பின்பற்றினேன். சிவபெருமானின் புகழைப் படித்தேன். வேறு எந்த மதமும் அளிக்காத முழு ஆன்மீகத்தையும் சனாதன தர்மம் எனக்கு அளித்தது. இத்தனை காலமும் என்னுள்ளே இருந்த இறைவனை நான் அறியாமல் நடந்து கொண்டதை எண்ணி வருந்தினேன்.



எனக்கு யோகா பயிற்சி அளித்த குரு, என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். உனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் உன் இறைவனை நினைத்துக் கொள். அவரின் பெயரையே சொல். நீ செய்யும் காரியங்களை எல்லாம் அவருக்காக செய்வதாகவே எண்ணிக் கொள் என்றார். இறைவன் என்றவுடன் என்னையே அறியாமல் மஹாதேவன் தான் என் கண் முன் தோன்றினார். எனக்கு எப்போதெல்லாம் போதைப்பொருளின் எண்ணம் வருமோ அப்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்று செப்புவேன். அப்படிதான் என் மனத்தை கட்டுப்படுத்த பழகினேன்.

ஆரம்பத்தில் இந்த போதை பழக்கத்தில் இருந்து விடுபெறவே நான் மஹாதேவரின் அருளை நாடினேன். காலப் போக்கில் தான், அவர் எப்போதும் என்னுள் தான் இருந்திருக்கிறார்; அதை இப்போது தான் நான் உணர்ந்தேன் என்பதை அறிந்தேன். தினமும் நான் வழிபாட்டின் மூலம் மஹாதேவரோடு பேசுகிறேன்; தியானத்தின் மூலம் அவர் பேசுவதை கேட்கிறேன். இதைவிட என் வாழ்க்கையின் வேறு என்ன வேண்டும்?

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது மஹாதேவர் தான். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், நான் முழுமையாக குணமடைந்து வெளியேறினேன். எனக்கு இனி எந்த பொருளின் மீதும் மோகம் இல்லை. மீண்டும் நிலையற்ற பொருளின் மீது மோகம் கொண்டு, மீண்டும் என்னுள் இருக்கும் மஹாதேவரை நான் மறக்க விரும்பவில்லை. எப்படியெல்லாம் வாழலாம் என்பதை சனாதன தர்மம் எனக்கு கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையில் சறுக்கும் போதெல்லாம் தூக்கிவிட மஹாதேவர் இருக்கிறார்.

ஒரு காலத்தில் பாவங்கள் செய்து வாழ்ந்திருந்தாலும், என்னையும் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்தார். சிலவேளைகளில் நான் கடந்தகாலத்தை எண்ணி வருந்துவேன். அப்போது, நீ பாவியல்ல; நீ தெய்வீகமானவன் என்பதை முதலில் உணர்ந்து கொள். நீ பாவி என்று எண்ணும் எண்ணம் தான் உன்னை பலவீனமானவன் ஆக்குகின்றது என்று என்னுள் இருக்கும் மஹாதேவர் எனக்கு அடிக்கடி நினைவுறுத்துகிறார்.

என் குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள். என்னுடைய மாற்றங்களைக் கண்டு அவர்கள் மனம் மிகவும் பூரித்தனர். இன்று என் வீட்டிலே பூஜை அறை வைத்திருக்கிறேன். அங்கு கணபதி, மஹாதேவர், தேவி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய அனைவரும் இருக்கின்றனர். தினமும் நான் அவர்களுக்கு மலர்கள் தூவி வழிபடுவேன். என்னுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று என்னுடைய வாழ்க்கை முறையான பாதையில் போகின்றது. மஹாதேவரை காணும் பாதையை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை நான் சுயநினைவுகளை இழந்து போனாலும் கூட, என் மஹாதேவரை நான் என்றுமே மறவாது இருக்க என் பெயரிலே அவரை சேர்த்துவிட்டேன்.

உடலுக்கு வலிமையை தர யோகாசனங்கள், மனத்திற்கு வலிமையை தர தியானம், ஆரோக்கியமான வாழ்விற்கு சாத்வீகமான உணவுமுறை, அனைத்திற்கும் மேலாக ஒரு தந்தையாய், நண்பராய் எப்போதும் என்னோடு இருக்கும் மஹாதேவர்....

"உங்களிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், நீங்கள் பிறந்திருக்கும் இந்த சமயம், இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் தோன்றியிருக்கிறான் என்பதை கற்று தருகின்றது. ஆகவே, இந்த உன்னதமான தத்துவத்தைப் போற்றி எல்லோரையும் சமமாக நேசியுங்கள்."