Friday, July 03, 2015

முஸ்லிம் பெண்களின் குவளையில் தண்ணீர் அருந்திய கிறிஸ்த்துவ பெண்: உயிருக்கு போராடும் பரிதாபம்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண்மணி ஒருவரின் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால், அவரது கணவர் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஆசிக் மசிஹ், ஆசியா பீபி என்ற தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்களாவர், இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆசியா, தாகம் மிகுதியால் முஸ்லிம் பெண்கள் தண்ணீர் அருந்திய அதே குவளையில் தண்ணீர் அருந்தியுள்ளார்.
இதற்கு வயலில் வேலை பார்க்கும் முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் மத தலைவரை சந்தித்து, ஆசியா மத நிபந்தனையை மீறி விட்டார் என புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆசியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த அவரது குடலில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, உணவு உண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆசியாவின் கணவர் தனது மனைவிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஆசியாவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்காக லாகூர் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவரது தண்டனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

        

நன்றி /லங்கா சிறி