Sunday, August 28, 2016

மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.!...

மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்!!.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு !

மூவரின் மரணமும்.... மகாத்மாவின் மௌனமும்..... !!
ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு........ !!
பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலடப்பட்டு இன்றோடு 85 ஆண்டுகள் 4மாதங்கள் 9 நாட்கள் ஆகிவிட்டன; என்றாலும் அதன் மறைக்கப்பட்ட வரல்லற்றுப் பின்னணி என்ன என்பதை வருங்கால சந்ததிக்கு சொல்வது நமது கடமையாகிறது...... !! அவர்கள் மார்ச் 23, 1931 அன்று லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரவு 7 மணிக்கு
தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர் !!

எத்தனையோ பேர்கள் தங்களின் குடும்பங்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை முத்தமிட்டுள்ளனர். பகத்சிங், உத்தம்சிங் போன்ற எண்ணற்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை; ஆனால், அதையெல்லாம் பின்னிருத்தி விட்டு; மகாத்மா என்று சொல்லிக்குள்ளும் மிஸ்டர் காந்தி மட்டுமே வெற்றி வலம் வந்ததேன் என்று நம்மை நாமே ஒரு நாளாவது கேள்வியாக நம் மனதிற்குள் கேட்டிருப்போமா ?

வெள்ளைக்காரன் ஒன்றும் காந்தியின் உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும், இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.
இரண்டாம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ பலத்தை முற்றிலும் இழந்திருந்தது. காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ் இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும் காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல் சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ” புத்தகத்தில் “நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு காரணமாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.

ஆனால் வெறும் சத்தயசோதனையைப் படித்திட்டுவிட்டு எல்லோரும் மகாத்மாவாகிவிடுவது போன்ற மாய வலையில் இன்றும் இருக்கிறோம் என்பதை நம்மில் யாரும் மறுக்கவோ மறுதலிக்கவோ இயலவில்லை ஏன் ? காந்தியைப் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் உடனே அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு வருவதற்கென்றே ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த போலி சமூகம் என்பதுதான் உண்மை !! காந்தி என்றாலே அவரின் சத்தியாகிரகம், அகிம்சை அதாவது “கத்தியின்றி இரத்தமின்றி” நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய பலப் பத்தாண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது. 

மறைக்கப்பட்ட வரலாற்று சுருக்கம்:
1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ணுற்ற பகத்சிங் விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். பகத்சிங்கும், சுகதேவும் தேசியக் கல்லூரியில் பயின்ற போது சந்தித்துக்கொண்டனர். சக மாணவர்களோடு இணைந்து சுதந்திரப் போராட்டதில் பங்கேற்றனர். தேசியக் கல்லூரியின் நூலகத்தில் சோசலிச இலக்கியங்களையும், தத்துவங்களையும் கற்றிந்து தன்னை செழுமைப் படுத்திக்கொண்டனர். இன்னொருவர் ராஜகுரு, கோரக்பூரைச் சேர்ந்த சுதேஷ் என்ற வாரப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான முனீஸ்வர அவஸ்தியின் தொடர்பால் இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படையில் இணைந்தவர், இந்த பிண்ணனியில் தான் பகத்சிங் அவரது தோழர்கள் சோசலிச இலட்சித்திற்காகவும், விடுதலைக்காகவும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டார்கள்.

1928 ஆம் ஆண்டு ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை விரிவாக்க சர் ஜான் தலைமையில் ஒரு குழுவை ஆங்கில அரசு அமைத்தது. அக்குழு பிப் 7ல் பம்பாய் துறைமுகம் வந்தது. அதை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விட்டது. அதில் சைமனே திரும்பிப் போ, ஏகாதிபத்தியம் ஒழிக, சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கங்கள் ஒலிக்கிறது. தொடர்ச்சியாக அக்குழு அக்டோபர் 1930ல் லாகூர் வந்நது. இந்த குழுவின் வருகையை எதிர்த்து லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் போலீஸ் லாலாஜி மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் லாலாஜி நிலைகுலைந்து போய் நவ. 17ஆம் நாள் உயிர் இழந்தார்.

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில் புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’ பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’. அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத் தான் அனுப்பியது.

இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப் படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
காலனியாட்சிக்கெதிராக போராடும் சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ் இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன் மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும் தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும் போது மகாத்மாவுக்கு தெரியாதா
என்ன ? 

ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’ காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால் அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்’’.

(ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின் பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)
காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில் சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

”அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (ஆதாரம் : ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).

இதே காலகட்டத்தில் இவர் உதிர்த்த முத்துக்கள் “ நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

”ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும் பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.

இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர்...... !!

மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக் கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா - காங்கிரஸ்; (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்
இதுகுறித்து இர்வின் கூறியதாவது..... ” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.

பகத் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட இந்த தூக்கு தண்டனை காந்திக்கும், இர்வினுக்கும் நடந்த ஒப்பந்த்த்தில் விவாதத்திற்கு வந்திருக்க வேண்டும். லார்டு இர்வின் இது தொடர்பாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்ற போதிலும், இடைக்காலத்தில் காந்தியின் உரை, இர்வின் தன் வரம்புக்குட்பட்டு மூன்று இளைஞர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுப்பார் என்று நம்பிக்கை தருவதாக இருந்தது. ஆனால், இந்த ஊகங்களும், எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் வீணாய் போயின. லாகூர் மத்திய சிறையில் 23 மார்ச், 1931ல் மாலை 7 மணிக்கு தூக்கிலப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று எவரொருவரும் கெஞ்சவில்லை.

ஏற்கனவே வெளியிடப்பட்டதை போல, தூக்கிலிட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கடைசி வார்த்தை நிறைவேற்றப்படவில்லை, தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தனர். துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் தீர்ப்பை மீறியதாய் ஆகியிருக்கும். ஆகையால், நீதிதேவதையின் கட்டளையில் அச்சுபிசகாமல் அப்படியே நிறைவேற்றிவிட்டனர்.

1931 மார்ச் 24 தூக்கு தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது...... !!
தேவைப்பட்டால் இன்னமும் ஆய்ந்து சொல்வேன்......

நன்றிகள்
பார்த்திபன். ப   முகநூல் பதிவு
01/08/2016

Sunday, March 06, 2016

ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்!

காலத்துக்கேற்ற  ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது ,தமிழ் இந்து நாளிதழ் காலத்தின் தேவை கருதி உங்களுடன் அதை பகிர்ந்து கொள்கிறேன் .எழுதியவர்களுக்கு நன்றிகள் 

 jaya_2764326f.jpg

 
திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு

ஜெயலலிதாவின் அரசியல்.

இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’ பிம்பம் ஜெயலலிதா.

தலைவர் போட்ட பாதை

ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.
திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள். “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?” என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும்
‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார். அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.

குப்பனும் பரிமளமும்

காஞ்சிபுரம் குப்பன் அதிமுகவில் அடிமட்டத்திலிருந்து வந்தவர். ஒன்றிய அவைத் தலைவர் பதவியைத் தாண்டி குப்பனால் வளர முடியவில்லை. தன் மகன் பரிமளத்தை அரசியல் களத்தில் இறக்கினார். எனினும் பெரிய வளர்ச்சி இல்லை. பரிமளம் இடையில் ஒரு முறை தன் விரலை வெட்டிக் காணிக்கை அளித்தார். ஒரு அரசு பஸ்ஸை எரித்தார். இப்போது பரிமளத்தின் நிலை என்ன என்று விசாரித்தேன். நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். கூடவே, அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். பட்டு நெசவுக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.
பொது இடத்தில், “அம்மாவுக்காக பஸ்ஸை எரித்துச் சிறை சென்ற அம்மாவின் உண்மைத் தொண்டன் காஞ்சி கே.பரிமளம்” என்று இப்போது தேர்தல் சமயத்தில் ஒரு பதாகை வைக்கிறார் என்றால், பரிமளம் வெகுளி அல்ல. இன்றைய அரசியல் சூட்சமங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்.

மாயக்கோட்டையின் கடவுள்

ஜெயலலிதா இன்றைக்கு இருக்கும் தொட முடியா உயரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு நடிகையாக கட்சிக்குள் வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிக்கொண்டதற்கு நியாயங்கள் உண்டு. காலப்போக்கில் மக்கள் தன் பக்கம் திரண்ட பின், மக்களைக் கோட்டையாக மாற்றிக்கொண்டு, மாயக்கோட்டையை அவர் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். மாறாக, மாயக்கோட்டை உண்மை என நம்பினார். மேலும் மேலும் கோட்டைச் சுவர்களைப் பலப்படுத்தினார். ஒருகட்டத்தில் கோட்டை கோயிலானது. ஜெயலலிதா கடவுளானார். இன்றைக்கு அந்த மாய அரண் ஜெயலலிதாவுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையிலானதாக இல்லை; ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் இடையிலானதாக மாறிவிட்டது. இதன் மோசமான விளைவுகளையே இங்கு ஸ்டிக்கர்களாக, பச்சைக்குத்தல் கதறல்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இந்திய அரசியலில் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் அதிகாரம் அரிதானது. ஒரு தலைவருக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான நெருக்கம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவு மக்களுக்கும் தலைவருக்குமான இடைவெளி அதிகரிக்கும் என்பதையே ஜெயலலிதாவிடமிருந்து பார்க்கிறோம்.
இந்திய அரசியல் எதிர்கொள்ளும் அபாயம், ஒரு ஜெயலலிதா அல்ல. சமகால அரசியல்வாதிகள் பலர் ஜெயலலிதாவாக மாறிக்கொண்டிருப்பது. உதாரணத்துக்கு மூன்று பேர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி.
முதலாமவர், இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். இரண்டாமவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர். மூன்றாமவர், பெண் அரசியலின் எளிமையான பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்பவர். ஜெயலலிதா அம்மா என்றால், மாயாவதி பெஹன்ஜி (அக்கா), முலாயம் சிங் யாதவ் நேதாஜி (தலைவர்), மம்தா தீதிஜி (அக்கா).

இது பெஹன்ஜி பாணி

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாளானது மக்கள் நலனுக்கான நாள். அதாவது, வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களும் பண மாலைகளுமாகக் கட்சியின் தொண்டர்கள் தலைவியைக் கொண்டாடும் நாள். பதிலுக்கு ஏழைபாழைகளுக்கு மாயாவதி உதவிகள் அளிப்பார். ஒரு சாதாரண ஆசிரியையாகத் தன் வாழ்வைத் தொடங்கிய மாயாவதி 2007-08-ல் ரூ.26 கோடி வரி செலுத்தி, நாட்டில் அதிகம் வருமான வரி செலுத்திய 20 பேரில் ஒருவரானார். 2012-ல் மாநிலங்களவை உறுப்பினரானபோது அவர் அளித்த தரவுகளின்படியே சொத்து மதிப்பு ரூ.111.26 கோடி.
புத்தருக்கும் அம்பேத்கருக்கும் கன்ஷிராமுக்கும் சிலை வைக்கிறேன் என்று அறிவித்த மாயாவதி, தனக்கும் சிலைகள் வைத்துக்கொண்டார். உலகிலேயே அதிகம் பசி, பட்டினியால் வாடும் குழந்தைகள் வாழும் ஒரு பிராந்தியத்தை ஆள்கையில் இந்தச் சிலைகளுக்காக அவர் அரசு செலவிட்ட தொகை ரூ.2,500 கோடி. மாயாவதி தான் நடக்கும் பாதையைக்கூடப் பால் ஊற்றிக் கழுவிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் என்று குமுறினார் ஒரு உத்தரப் பிரதேச விவசாயி.

இது நேதாஜி பாணி

உத்தரப் பிரதேசத்தின் பரம ஏழைகளைக் கொண்ட ஊர்களில் ஒன்று சைஃபை. முலாயம் பிறந்த கிராமம். இப்போது சைஃபையில் விமான நிலையம் உண்டு. முலாயம் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் இங்குதான் நடக்கும். இந்த ‘சைஃபை மஹோத்சவ’த்தின் முக்கிய அம்சம் அமிதாப் பச்சன், சல்மான் கான், மாதுரி என்று பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள். இந்நிகழ்வில் பங்கேற்கும் பெரும் தொழிலதிபர்களும் பாலிவுட் பாதுஷாக்களும் வந்திறங்கும் தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்காகவே கட்டப்பட்ட விமான நிலையம் இது. ஏனைய நாட்களில் ஒரு விமானமும் வந்து செல்வதில்லை.
இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் 73 மாவட்டங்களில் 50 மாவட்டங்கள் கடுமையான வறட்சியில் சிக்கியிருந்தன. விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். முலாயம் கூட்டமோ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியது. முலாயமின் சகா ஆசம் கானின் எருமைகள் தொலைந்தபோது, தனிப்படை அமைத்து காவல் துறை தேடியதைப் பார்த்து நாடே சிரித்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆசம் கான் வீட்டு எருமைகளுக்கே இந்த மதிப்பென்றால், முலாயமின் அதிகாரம் எப்படிக் கொடிகட்டிப் பறக்கும்!

இது தீதிஜியின் பாணி

மம்தாவின் செயல்பாடுகளை ஆடம்பரங்களோடு பொருத்திப் பேச முடியாது. அவர் வேறு ரகம். கொல்கத்தாவின் பெரிய அரசு மருத்துவமனை எஸ்எஸ்கேஎம். சில மாதங்களுக்கு முன் அதன் இயக்குநர் பிரதீப் மித்ரா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மனிதர்களுக்கான அந்த மருத்துவமனையில், டயாலிஸிஸ் சிகிச்சைக்காக ஒரு நாய் அனுமதிக்கப்பட்ட ரகசியம் ஊடகங்களில் அம்பலமானதே காரணம். நாயின் சொந்தக்காரர் மம்தாவின் சகோதரர் அபிஷேக் பானர்ஜி.
கட்சி தொடங்கியபோது மம்தாவோடு நின்ற முன்னணித் தலைவர்கள் பலரும் அடையாளமற்றவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர். மம்தாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை.
ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், “வானமே எங்கள் இலக்கு” என்று அறிவித்தார் மம்தா. அதைப் பிரகடனப்படுத்துவதற்காக அவர் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் வானத்தின் நீல வண்ணம் பூசப்பட்டது. அரசு அலுவலகங்கள், பாலங்கள், சாலையோரச் சுவர்கள்.. எங்கும் நீலம். நிலம் மட்டும் சிவப்பு. நாட்டிலேயே இன்றைக்கு எதிர்க்கட்சியினர் அதிகம் கொல்லப்படும் ஆவேசக் களம் மேற்கு வங்கம்.

துடிக்கும் கனவுகள்

நாம் நம் பார்வையிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்கிறோம்; முகம் சுளிக்கிறோம். அரசியல்வாதிகளோ ஜெயலலிதாவைப் பார்த்து ஏங்குகிறார்கள். இடைவெளியே ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்படும் முடியாட்சிக் கால, தனி மனித ஆராதனைக் கலாச்சாரத்தைக் கடுமையாக ஏசுபவர்களில்கூடப் பலர் ஜெயலலிதாவாகத் துடிப்பவர்கள் அல்லது ஜெயலலிதாவாக முடியாதவர்கள் என்பதே கசப்பான உண்மை. அதிமுகவின் பரம வைரியான திமுகவின் எதிர்கால முகமாகப் பார்க்கப்படும் ‘தளபதி’ மு.க.ஸ்டாலினும், அடுத்த தலைமுறைக் கனவுகளோடு தமிழகத்தைச் சுற்றிவரும் ‘சின்ன ஐயா’ அன்புமணியும் யாருடைய அரசியலைப் பிரதிபலிக்கிறார்கள்?
காஞ்சிபுரத்தில் நடந்த திமுகவின் ‘நமக்கு நாமே மாநாடு’ ஒரு வெளிப்பாடு. பல லட்சம் தொண்டர்கள் கூடிய அந்நிகழ்வில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள்? வரவேற்பு, முன்மொழிதல், வழிமொழிதல், நன்றிகூறல் சம்பிரதாயங்களைத் தாண்டிப் பேசியவர்கள் 3 பேர். மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்த மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், கட்சியின் துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் இருவரும் பத்துப் பத்து நிமிடங்கள் பேச, மூன்றாவதாக ஸ்டாலின் பேசினார். கூட்டம் முடிந்தது.
மேடைகளில் தான் மட்டுமே பிரதான பிம்பமாய் நின்று முழங்குவது, தன்னைச் சுற்றி சிறு அதிகார வட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் கட்சியை / ஆட்சியை நிர்வகிப்பது, தொண்டர்களாலும் மக்களாலும் அணுக முடியாத தேவதூதராய்க் காட்சியளிப்பது இவையெல்லாம் ஜெயலலிதா பாணி அரசியலின் அடிப்படைச் சட்டகங்கள். ஸ்டாலினிடமிருந்து வெளிப்படுவது கருணாநிதி பாணி அரசியலா, ஜெயலலிதா பாணி அரசியலா? “கூட்டங்கள்ல மேடையிலயே தொண்டன் பேர் சொல்லிக் கூப்பிடுவார் கலைஞர். இப்போதெல்லாம் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டாலின் பதில் வணக்கம்கூடச் சொல்வதில்லை” என்கிறார்கள்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்கிறார் அன்புமணி. கவனிக்க: மாற்றம், முன்னேற்றம், பாமக அல்ல. சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும், மேடைகளிலும் அன்புமணியிடம் வியாபித்திருக்கும், ‘நான் நான் நான்’ என்கிற ‘நான்’ யாருடைய அரசியலின் தாக்கத்திலிருந்து வெளிப்படுகிறது? ராமதாஸிடமிருந்தா, ஜெயலலிதாவிடமிருந்தா?

மக்களைச் சந்திப்பது அரசியல்வாதிகளின் அன்றாடக் கடமைகளில் ஒன்று. இப்போதெல்லாம் ஏன் அது செய்தியாகிறது? ஒரு ஜெயலலிதா அல்ல; ஒவ்வொரு கட்சியிலும் ஜெயலலிதாக்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்!

நன்றி :-தமிழ்  ஹிந்து நாளிதழ் 

Wednesday, February 24, 2016

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' வுக்கு ஒரு தமிழனின் பகிரங்க கடிதம்!

மாண்புமிகு முதல்வர் 'அம்மா' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்!
                                  

இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை நீங்கள் கருத்தில்கொள்ளாமல், அது எந்த உணர்வில், எந்த மனநிலையில் எழுதப்பட்டதோ, அதை மட்டுமே
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் அம்மா.

ஆம்... ’அம்மா’தான். வெறும் உதட்டசைவில் மட்டுமல்ல; மனதின் அடியாழத்திலிருந்தே சொல்கிறேன். நீங்கள் எனக்கு அம்மாதான்... uங்களது மந்திரிகள், கட்சிக்காரர்களைப் போல்
 உங்களிடமிருந்து எனக்கு எந்த தேவையும் இல்லை. இருந்தாலும்
 நீங்கள் எனக்கு அம்மாதான். 
முதலில் உங்களுக்கு என் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்
 நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள் அம்மா...!!!

ஆனால், இந்தக் கடிதம் நான் உங்களை வாழ்த்த மட்டும் எழுதப்பட்ட வெறும் வாழ்த்து மடல் அல்ல.
 அதை உங்கள் கட்சிக்காரர்கள் விதம்விதமாக வீதியெங்கும் பேனர்களாக 
இந்நேரம் நிறைத்திருப்பார்கள். உங்களுடன் நான் கொஞ்சம் உரையாடவே விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள்  படிப்பீர்களா என்பது நிச்சயமில்லை. 
அது என் நோக்கமும் இல்லை. என் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே இந்தக் கடிதம். என் விரக்தி, என் கோபம் இந்த வார்த்தைகளில் வழிந்து ஓடி விடாதா என்ற ஏக்கத்தில்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்...

 
அம்மா... உங்களை நான் முதன்முதலாக பார்த்தது என் 7 வயதில். அப்போது நான் இரண்டாம் வகுப்பு மாணவன். தஞ்சையில் நடந்த ‘எட்டாவது உலக தமிழ் மாநாட்டில்’ கலந்து கொள்வதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். வீதியெங்கும் மக்கள் கூட்டம், என்னை என் அப்பா தோள் மீது தூக்கி வைத்து உங்களைக் காண்பித்தார். உண்மையைச் சொல்லவேண்டுமானால், அப்போது உங்கள் மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆண்கள் நிறைந்திருந்த அந்த மேடையில் தனியொரு பெண்ணாக கம்பீரமாக நீங்கள் நின்று கூட்டத்தினரை எதிர்கொண்டது, இன்றும் நினைவில் நிழலாடுகிறது. வீதி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும், உங்களைப் பார்த்ததை மகிழ்வுடன் ஒரு வாரத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தேன்...
 

சில மாதங்கள் சென்றது. எங்கள் வீட்டிலும், எங்கள் கிராமத்திலும், உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம் குறித்துப் பேசத் துவங்கினார்கள். 'பல கோடி செலவழித்து நடந்த திருமணம், ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டார்களாம், மிக டாம்பீகமான ஆடம்பரம்' என்று துவங்கும் அவர்கள் பேச்சு, இறுதியில் கோபமாக முடியும். ஏனெனில் அப்போது எங்கள் கிராமத்தில் நிலவிய வறுமை. உங்களது ஆடம்பரங்கள், அவர்களைக் கிண்டல் செய்வதாக இருந்திருக்கலாம். கோபமூட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.
                                                                               

அதே சமயம் மன்னார்குடி பின்னணி கொண்ட சிலர்,  மிரட்டி இடங்கள் வாங்குவது, சொத்துக் குவிப்பது என வரைமுறை இல்லாமல் செயல்படுவதாகவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு இது புரியாவிட்டாலும், உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்ற ஈர்ப்பே அந்த உரையாடலில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. உங்கள் மீது பலர் அவதூறு பேசினாலும், எங்கள் கிராமத்து பெண்கள் உங்கள் பக்கமே நின்றார்கள்... உங்களை அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பார்த்தார்கள்... 

பின்பு தேர்தல் வந்தது, வீதியெங்கும் ‘ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் சீமாட்டிக்கு, எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்’ என்று போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில் நீங்களும், உங்கள் தோழி சசிகலாவும் நகைகள் அணிந்திருக்கும் படங்கள் இருந்தது... எங்கள் வீட்டு சுவற்றிலும் அது ஒட்டப்பட்டு இருந்தது, ஆனால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் நான் கிழித்தெறிந்தேன். எனக்கு அப்போது எந்த அரசியல் புரிதலும் இல்லாவிட்டாலும், உங்களை எனக்குப் பிடித்திருந்தது, அதற்கு உங்களை நேரில் பார்த்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
                                                                
                                                        


அரசியல் களம் சூடு பிடித்தது! வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிராகப் பெரிய அணி திரண்டது. கருணாநிதியின் அரசியல் சாதுர்யம், மூப்பனாரின் அரவணைக்கும் திறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவின் பிம்பம் எல்லாம் கரம் கோர்த்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. உங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததாக என் சித்தப்பா கூறினார். எங்கள் கிராமத்தில் இருந்த ஆண்கள் எல்லாம் மகிழ்வுடன் கருணாநிதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிறப்பு பேருந்துகள் அமர்த்திப் புறப்பட்டனர். ஆனால், அப்போதும் எங்கள் ஊர் பெண்கள் உங்கள் தோல்வியை ரசிக்கவில்லை. 


அப்போது எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு அத்தை சொன்னது நன்றாக நினைவிருக்கிறது, “நான் அந்தம்மாவுக்கு எதிராத்தான் ஓட்டு போட்டேன். ஆனா, அவங்க தோத்துப் போவாங்கனு நினைக்கலை. பயமா இருக்கு. எங்கே திரும்ப கிராமம் முழுக்க சாராயம் பரவிடுமோ..” என்று பதபதைத்தார். ஆம், எனக்கு உறைத்தது, உங்களால்தான் சாராய சாவுகள் குறைந்தது என்று அவர்களது நம்பிக்கை. அதில் அப்போது உண்மையும் இல்லாமல் இல்லை. 

    
மீண்டும் தி.மு.க ஆட்சி. வருடங்கள் உருண்டோடின, வழக்கமான அரசியல் சலிப்புகள் வந்தது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க ஒரு வரலாற்று பிழையை செய்தது... ஜாதி கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணி அமைத்தது. நீங்கள் பலமான கூட்டணி அமைத்தீர்கள்... தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து, மீண்டும் அரியணை ஏறினீர்கள்.
                  அந்த ஆட்சிக் காலத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  வேலை நிறுத்தம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு போராட்ட வழிமுறை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் அதை உணர்ந்தீர்களா என தெரியவில்லை. எஸ்மா சட்டத்தைப் பாய்ச்சினீர்கள். ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்களை கைது செய்தீர்கள். நான் உங்கள் தைரியத்தைக் கண்டு வியந்தேன். 


தவறான முடிவாக இருந்தாலும், ஓட்டு வங்கி அரசியலில் இருப்பவர்கள் அரிதினும், அரிதாக எடுக்கும் முடிவுகள் இவை. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கட்டமைக்கக்கூடிய அரசு இயந்திரம் முடங்கிய அந்த சமயம் வேறு எந்தகட்சியாவது இத்தகைய துணிச்சலான முடிவெடுத்திருக்குமா எனத் தெரியவில்லை. அதனாலேயே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் உங்களுக்கு எதிராக நின்றார்கள். 


அடுத்தடுத்து மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு - கோழி பலியிட தடை- பொடாவில் வைகோவை கைது செய்தது என உங்கள் துணிச்சலை நிரூபித்துக்கொண்டே இருந்தீர்கள். இது உங்களுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைய வித்திட்டது. இதுவே பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் படு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.
           


பின்பு, அனைத்து சட்டங்களையும் ரத்து செய்தீர்கள். இதுதான் நீங்கள் முதன்முறையாக சறுக்கிய இடம் என நினைக்கிறேன். இது மட்டுமல்லாமல் 2004ல், மிகபெரிய பேரிடர் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்போது உங்கள் அரசு மோசமாகச் செயல்படவில்லை. (சிறப்பாக செயல்பட்டது என்று கூறவில்லை..!).

 
மீண்டும் தேர்தல்... மீண்டும் கூட்டணி... மீண்டும் தி.மு.க ஆட்சி... இரண்டு ரூபாய் அரிசி திட்டம், 2 ஏக்கர் இலவச நிலத் திட்டம் என அவர்கள் ஆட்சியை சிறப்பாகவே தொடங்கினார்கள். ஆனால், நில ஆக்ரமிப்பு, அபகரிப்பு, மதுரையில் ஒரு பவர் சென்டர், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என அவர்களின் வெற்றி மமதை, நேரடியாக மக்களைப் பாதித்தது. இதில் ஈழப் பிரச்சனையும் சேர்ந்து கருணாநிதி மீதும், அவர் சகாக்களின் மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கியது. நீங்கள் அல்ல, மக்கள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 


தி.மு.க-வால், எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற முடியவில்லை! ஆனால் ஒன்று அம்மா எப்போதெல்லாம் திமுக எதிர்கட்சியாகிறதோ அப்போதெல்லாம்தான் அதன் செயல்பாடு வீரியமாக இருக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் கட்சி எதிர்கட்சியாகிறபோது நீங்கள் அந்தளவிற்கு செயல்புரிந்தாக கேள்வியுற்றதில்லை. உங்கள் கட்சிக்காரர்களும் தத்தம் தொழில்களில் முடங்கிப்போய்விடுவார்கள். திமுக மீதும் 'இந்த முறை இந்தம்மாவிற்கு போடுவோம்' என்ற மக்களின் வழமையான எண்ணத்தின் மீதும் உங்களுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை.
                                                      

எண்பதுகளில் பிறந்த என் தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வு பெற்ற காலம் இது. உங்கள் ஆட்சிக் காலத்தை உன்னிப்பாகக் கவனித்தோம். நான் உங்கள் அனைத்து முடிவுகளையும் ஆராயத் தொடங்கினேன். உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதத்துக்கு விட்டேன். எனக்கு இப்போது உங்கள் பலங்கள் எல்லாம் பலவீனமாக தெரிய தொடங்கியது.


தி.மு.க நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால், பல பவர் சென்டர் இருக்கிறது என்றால், அதற்கான தொடக்கமும் நீங்கள்தான் அம்மா. 1991-96 ல் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைத்தான் அவர்கள் 2006-11ல் செய்தார்கள். ஈழப் பிரச்னையில் தமிழின தலைவர், தமிழினத்திற்கு எதிராக தன் பெண்டு, தன் பிள்ளை நலனுக்காக மிகப் பெரிய துரோகம் செய்தார் என்றால்.... நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் அம்மா...? “போர் ஒன்று நடந்தால், மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றீர்கள் சர்வசாதாரணமாக..!


எனக்கு பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை... ஆனால், என் நண்பன் அடிக்கடி கூறுவான், “அதிமுகவும், ஈழ ஆதரவாளர்களும் எப்போதோ செய்த புண்ணியம்தான், ஈழப் போர் நடந்த காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது. இருந்திருந்தால், கருணாநிதி போல அவரும் அம்பலப்பட்டு இருப்பார். ஈழ ஆதரவாளர்களும் பல துயரங்களை அனுபவித்திருப்பார்கள்...” என்று! கூடங்குள அணு உலை போராட்டத்தில், நீங்கள் எடுத்த முடிவுகளைப் பார்த்த பின், அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது.

                                 

இன்னொரு நெருங்கிய நண்பர், தீவிர அ.தி.மு.க-காரர். அவர் நீங்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் சொல்வார், “ஏங்க.. அவுங்க நல்லவங்க... ஆனா, பல விஷயம் அவங்க கவனத்துக்கு தெரிவதில்லை.... எல்லாம் சுத்தியிருக்கிறவங்க பண்ற வேலை” என்பார். இது அவரின் கருத்து மட்டுமல்ல, எதிர் முகாமில் இருந்தாலும் உங்கள் மீது அபிமானமுள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்தும் கூட. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கெல்லாம் அவர்கள்தான் காரணமென்றால், உங்களுக்கு எதற்கு ’காவிரி தாய்’, சமூக நீதி காத்த வீராங்கனை என்றெல்லாம் பட்டங்கள்....? அதையும்கூட அந்த சுற்றியிருக்கிறவர்களுக்கு (சசிகலாவும் திவாகரனும்தான் அவர்கள் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்கிறார்கள்) பிரித்துக் கொடுத்துவிடலாமே...?


சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டீர்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற பெருமையை தமிழகத்திற்கு தேடி தந்தீர்கள். அப்போதும்கூட, தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு 'Soft Corner' இருந்தது. மன்னித்து விட்டிருக்கலாம் என்று கூட பேசத் துவங்கினர். ஆனால், அப்போது உங்கள் அமைச்சர்கள் செய்த காரியங்கள், உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியது. 


ஒரு குற்றவாளியாக நீங்கள் சிறையில் இருந்தபோது உங்கள் அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தில் துருத்தித் தெரிந்த உங்கள் படத்தை மேஜையில் வைத்து கும்பிட்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அரசியலமைப்பு சட்டத்தை ஆவணமாக முன்மொழிந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அதையே கேலிக்குள்ளாக்கிய விஷயங்கள் அவை. மொத்த இந்தியாவே தமிழகத்தை முகம் சுளிப்போடு பார்த்த தருணங்கள் அவை அம்மா. 


கட்சிக்காரர்கள் உங்கள் மேல் உள்ள மரியாதையில் அலகு குத்தினார்கள், உங்கள் மேல் உள்ள பாசத்தில் மண்சோறு சாப்பிட்டார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா....? நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். என் அம்மா நிச்சயம் அவ்வளவு முட்டாள் கிடையாது. சிறையிலிருந்து மீண்டீர்கள். 10 சதவீதத்திற்கும் கீழ் ஊழல் செய்திருந்தால் பிழை இல்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் விடுதலையானீர்கள். மீண்டும் தேர்தலில் நின்றதும், வென்றதும் முதல்வராக பொறுப்பேற்றதும் எங்களுக்கு கனவு போல் இருந்தது. நாட்கள் நகர்ந்தன.
                                            காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மதுவுக்கு எதிரான தமிழகம் தழுவிய போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழியாக இருந்தது. தமிழகமே உங்களிடமிருந்து மதுவுக்கு எதிரான ஓர் அரசாணையை எதிர்பார்த்தது. நானும் ஆவலாக இருந்தேன். ஆனால், நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். மதுவுக்கு எதிராகப் போராடியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தீர்கள். எந்தப் பெண்கள் நீங்கள் ஆட்சியில் இருந்தால், சாராய சாவுகள் இருக்காது என்று நம்பினார்களோ, அந்தப் பெண்கள் உங்களுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களில் பலபேர் தாலிக்கு தங்கம் கொடுத்த உங்களால் மன்னிக்கவும் உங்களது அரசு நடத்தும் மதுக்கடைகளால் தாலி இழந்தவர்கள். இன்னமும் போராடுகிறார்கள். நீங்கள் இன்னமும் மெளனமாகத்தான் இருக்கிறீர்கள் அம்மா. 


எல்லா எதிர்ப்புகளுக்கு பிறகும், உங்கள் மீது ஒரு பெருங்கூட்டம் நம்பிக்கை வைத்திருந்தது. அது எப்போது சரிந்தது தெரியுமா....? ’அம்மா ஸ்டிக்கர்’களுக்குப் பிறகுதான் .... அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம் என்று எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சுயபுராணத்தில் லயித்த உங்கள் தொண்டர் படை, கடைசியில் சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ லாரி லாரியாக, கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் மீதும் உங்கள் முகம் பதித்த ஸ்டிக்கரை ஒட்டியது உங்கள் அரசியல் வரலாற்றில் மாபெரும் அசிங்கம். உங்கள் மீது இருந்த கடைசி நம்பிக்கையும் எங்களுக்கு சரிந்த தருணம் அதுதான்!
                                             
வரலாறு பல அசாதாரண ஆட்சியாளர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது. அவர்கள் எப்படி வீழ்ந்தார்கள் தெரியுமா அம்மா? மமதை, சுய புராணம் பாடும் ஒரு கூட்டத்தை பக்கத்தில் வைத்திருந்தது, ஜனநாய வழியில் தாங்கள் வெற்றியை தங்களது தனிப்பட்ட வெற்றியாக கருதி செயல்பட்டது இவைதான். துரதிருஷ்டவசமாக அது இங்கேயும் இருக்கிறது. அதை நீங்கள் உணர்கிறீர்களா....? ’மக்களிடையே உள்ள ’ஸ்டிக்கர் வெறுப்பு’ பற்றி எனக்கு தெரியவே தெரியாது’ என்று நீங்கள் சொன்னால், அது கூடத் தெரியாமல் இருக்கும் உங்களை நம்பி நாங்கள் எப்படி எங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பது? ஒருவேளை தெரிந்து நீங்கள் அமைதியாக இருந்தால், அப்போது நீங்களும் அந்த ஸ்டிக்கர்களை ரசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  

 
இன்னொரு புறம் அ.தி.மு.கவினர் உங்கள் பெயர், உருவத்தை பச்சை குத்துவதும், மொட்டை அடிப்பதும் உங்கள் மீது உள்ள பிரியத்தாலா...கண்டிப்பாக இல்லை; அதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. இதை எப்போதும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் ’முன்னாள் அமைச்சராக’ ஆவதை விரும்புவதில்லை. 


உங்களின் அரசியல் குரு எனப்படும் எம்.ஜி.ஆரும் ஒரு தருணத்தில்,  'கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் கட்சியின் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளவேண்டும்' என கட்சியினருக்கு வலியுறுத்தினார். அதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் எழுப்பிய அதிருப்தியில், கட்சியே கொஞ்சம் ஆட்டம் கண்ட வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் மவுனமானார். அதிமுகவில் சுயமரியாதை உள்ள தலைவர்கள் இருந்த காலம் அது. 


ஆனால் அப்படி சுயமரியாதை உள்ளவர்களை இன்று தேடிப்பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும். இப்போதுள்ளவர்கள் பொய்கள் சொல்லியாவது, உங்களைக் குஷிப்படுத்த வேண்டும். ஆனால், எனக்கு அப்படியான நிர்பந்தம் எதுவுமில்லை. உங்கள் மீதுள்ள பாசத்திலும் அபிமானத்திலும் உண்மையைச் சொல்கிறேன்.
                                                                              

தவறுகளிலிருந்து பாடம் கற்க மறுக்கும்போதுதான் ஒரு தலைவனின் தோல்வி தொடங்குகிறது . நீங்கள் அதைத்தான் தொடர்ந்து செய்கிறீர்கள். வரலாறு தொடர்ந்து உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிளசண்ட் ஸ்டே, டான்சிக்கு பிறகு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, தருமபுரியில் மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பிறகும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஆனால், அதை நீங்கள் மிக மோசமாகக் கையாள்வதாகவே நினைக்கிறேன் அம்மா. 


இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அம்மாவைத் தவறாகப் பேசுவதை எந்த மகனும் விரும்பமாட்டான். நானும் விரும்பவில்லை. நீங்கள் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். ஆனால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, தமிழ் நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் காட்டியிருந்தால், தமிழகமே உங்கள் பிறந்த நாளுக்கு மனப்பூர்வமாக வாழ்த்தி இருக்கும்.


இப்போதும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அதிரடியாக எடுக்கலாம். முதலில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகச் செயல்படுங்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுங்கள். நீர் வழிப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஆக்ரமிப்புகள் என்றால் ஏழைகளின் குடிசைகள் மட்டுமல்ல... பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள், கட்சிக்காரர்கள் கம்பிவளை போட்டு மடக்கியிருக்கும் அரசு நிலங்கள். மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசாணையிடுங்கள். இவை எல்லாம் உடனே சாத்தியமாகக் கூடியவையே!
                                            

நாம் எப்போதும் அம்மாவிடம் அதிக உரிமை எடுத்து கொள்வோம். நம் கோபங்களை, வெற்றிகளை, தோல்விகளை அம்மாவிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். நானும், உங்கள் மீது உள்ள கோபங்களை, வருத்தங்களை, உங்களிடமே தெரிவிக்கிறேன், உண்மையான பாசத்துடன். தேர்தலில் வெற்றியோ... தோல்வியோ நான் உங்களை எப்போதும் ’அம்மா’வாகத்தான் பார்ப்பேன். ஆனால், ஒருவேளை தேர்தலில் வெற்றிக் கனி கிட்டாவிட்டால், உங்கள் சுயபுராணம் பாட நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் கனிகள் உள்ள இன்னொரு மரத்திற்கு பறந்து போய்விடும். நீங்கள் தனி மரமாக ஆகிவிடுவீர்கள்.


என் கடிதத்தின் ஏதேனும் ஒரு எழுத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் கூட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா, நன்றி!

- உண்மையான அன்புடன்,
மு. நியாஸ் அகமது
     

Thursday, February 18, 2016

கொத்து ரொட்டி ---- 010

கடந்த  சில மாதங்களுக்கு முன்னர் சயீட் பாரூக் ,மாலிக் என்னும்
தம்பதிகள் இணைந்து  நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுமார் 14 பொதுமக்கள்  அமெரிக்காவில் கொல்லப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும் .தாக்குதலின்  இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். விசாரணையின் போது அவர்களிடம் இருந்த அப்பிள் ஐ-போன் ஒன்றை  கைப்பற்றிய அமெரிக்க FBI உளவுப் பிரிவால்  போனின்  உள்ளே செல்ல முடியவில்லை.  காரணம் பாஸ்வேர்ட் .பொதுவாக இப்படியான விடையங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவால் இந்த அப்பிள் ஐ-போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை .

.2014ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த பாஸ்-கோட் என்னும்  சிஸ்டம் தான் இதற்கு காரணம்  . இதனால் அவர்கள் அப்பிள் நிறுவனத்தைஅணுகி , அந்த ஐ போனை திறந்து தரும்படி கேட்டார்கள் . அப்பிள் ஐ போன் நிறுவனத்தால் மட்டுமே இந்த பாஸ்வேட்டை கடந்து செல்ல முடியும். ஆனால் அவர்கள் தமது பாவனையாளர் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் கேட்டால் மட்டுமே நாம் அதனை செய்வோம் என்று கூறிவிட்டார்கள்.

இதனால் வேறு வழியில்லாத அமெரிக்க உளவுப் பிரிவினர்  அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள். இது பயங்கரவாதிகள் பாவித்த தொலைபேசி. அதில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கும். எனவே பாஸ்வேட் என்ன என்பதனை கண்டறிந்து , உளவுப் பிரிவுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாம் வழக்கு தொடுக்க உள்ளதாக அப்பிள் நிறுவனம் அதிரடியாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
 இது கண்டு பெரும்பாலான அமெரிக்கர்கள் அப்பிளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

அமெரிக்க FBI  உளவுப்பிரிவினர் பல தடவை பாஸ்வேட்டை முயற்சித்துப் பார்த்ததால், தற்போது இன்னும் ஒரு முறை பிழையாக பாஸ்வேட்டை அடித்தால் கூட ஐ-போன்  போனில் உள்ள அனைத்து தரவுகளும்  அழிந்து விடும் நிலையில்  உள்ளதாம் .  ஒரு குறிப்பிட்ட தடவைக்கு மேல் பாஸ்வேட்டை பிழையாக அடித்தால், மோபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் அழியும் படி புரோகிராம் செய்ய முடியுமாம் . இப்படி ஒரு தொழில்நுட்பம் ஜ -போனில் இருப்பதாக தெரிகிறது .நான் இதுவரையில் ஜ -போன் பாவித்தது கிடையாது .ஒரே ஒரு ஜ-பாட் 2 மட்டும் என்னிடம் இருக்கிறது .என்னவோ எனக்கு ஜ -போனில் பெரிதாக விருப்பம் இல்லை.அன்றோயிட்டில்தான் விருப்பம் அதிகம் .


@@@@@@@@@@


.இங்கு கனடாவில் பத்திரிகைகளை பார்த்தால் பல விதமான விளம்பரங்களை காணலாம் .ஆண் ஆணை தேடுதல் ,பெண் பெண்ணை தேடுதல் ,பெண் ஆணை தேடுதல் ,ஆண் தனக்கு பெண்ணை தேடுதல் போன்ற விளம்பரங்களையும் இதை விட பலவிதமான கேளிக்கைகளுக்குமான விளம்பரங்களை சர்வ  சாதாரணமாக காணலாம்.

ஆனால் காதலி தேவை என்று சொல்லி  வீதி ஓரத்தில் விளம்பரப்பலகை வாய்த்த ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  கனடாவில் . தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ள நபர் ஒருவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் வசிக்கும் ஒன்ராறியோ  மாநிலத்தில்  உள்ள லண்டன் நகரை(இங்கும் ஒரு லண்டன் உண்டு ) சேர்ந்த Peter Gould (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது ‘என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு காதலியை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.

இணையத்தளங்கள் அல்லது பார்ட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று காதலியை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு வெளியே 200 டொலர் செலவில் விளம்பர பலகையை வைத்துள்ளேன்.
என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், அதனை சுத்தமாக வைத்துள்ளேன். என்னுடைய துணிகளை நானே துவைத்து, நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன்.                                      
                            canada_gfriend 1   

என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டினுள்  LCD தொலைக்காட்சி என அனைத்து வசதிகளும் இருக்கிறது.

காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடவும், இந்த நாளின் கடைசியில் என்னுடன் அமர்ந்து பீயர் குடிக்கவும் அழகான ஒரு காதலி தேவை’ என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த விளம்பரத்தை பார்த்தும் யாரும் வரவில்லை என்றால், தன்னுடைய புகைப்படத்தையும் விளம்பர பலகையில் ஒட்டி மீண்டும் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.

முக்கியமாக, இந்த விளம்பரத்தை பார்த்தும் வரும் பெண் 35 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்,அவரின் காதலி கிடைத்தாரா  காதலர் தினதி அவருடன் கொண்டாடினாரா  என்பது தெரியவில்லை .ஆனால் கனடாவில் காசு இருந்தால் தினமும் காதலி கிடப்பார்கள் என்பது மட்டும் நிஜம் .


@@@@@@@@@@@@@


நேற்று தமிழகத்தில் நடைபெற்ற பா.ஜா.கா வின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மகன் திருமனத்தில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டாலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டது .நல்லதொரு ஆரம்பமாகவே பார்க்கிறேன் .எதிர் கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல .கடந்த காலங்களில் தமிழகத்தில் அரசியல் எதிரிகள் நிஜத்திலும் எதிரிகள் போலவே நடந்து கொண்டார்கள் .எம் ஜி ஆர்  இறந்தபோது கருணாநிதி இறப்புக்கு போக முடியவில்லை ..

உண்மையில் தமிழர்கள் ஒரு ஆரோக் கியமான ஒரு அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதில் வருத்தம் தான் .ஆதிகாலத்தில் இருந்து தலைவனை வணங்கும் குணம் கொண்ட தமிழனை அரசியல் வாதிகள் தங்கள் வசதிக்கு  ஏற்பஉருவேற்றி விட்டார்கள் .ஸ்டாலின் கூட ஒரு முறை ஜெயலலிதாவை சந்தித்தார் என நினைக்கிறேன்.

மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றன . இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாக வித்தியாசமாக இருப்பார்கள் என் நம்புகிறேன் .

@@@@@@@@@@@@@பொதுவாகவே  ஓரளவு விபரம் தெரிந்த பெற்றோர்  தங்கள் பிள்ளைகள் தொடுதிரை கருவிகளை பயன்படுத்துவது பற்றி பலவிதமான கவலைகள் கொண்டிருப்பார்கள்

மேற்படி கருவிகளை குழந்தைகள் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி யாளர்கள் என்ன சொல்கின்றனர்  என்பது  அண்மையில் நான் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு பகுதி  உங்களுக்காக தருகிறேன் .

டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.


பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.

பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.

இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.


குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.


மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.


இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.


முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.


இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

இனி நீங்கள் பொறுப்பான பெற்றோர் ஆக உங்கள் பிள்ளைகளை  நெறிப்படுத்துவீர்கள் என் நம்புகிறேன் .எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே  அது நல்லவராவதும் தீயவராவதும் எங்கள் வளர்ப்பினிலே .சரி இனி கிழே இருக்கும் படத்தையும் பார்த்துவிட்டு செல்லவும் . பலருடைய வீடுகளில் இப்படியும் நடக்கும் .ஹா ..ஹா ....
                                                   
                                       
    நன்றி                                                            

Friday, February 12, 2016

கறுப்பின மக்களிடம் இனவெறியுடன் நடந்துகொள்ளும் இந்தியர்கள்!

இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times  இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம் , அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே…


ஜேசன்
                            black

மிக அன்பான நாடு என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இத்தனை இனவெறியை நான் இந்தியாவில் எதிர்பார்க்கவில்லை. எங்களை பார்த்தவுடன் கைக்குட்டையினால் முகத்தை மூடி கொள்கிறார்கள். எங்களுக்கு தீராத நோய் இருப்பதை போல, எங்களிடம் துர்வாடை வீசுவதை போல. ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல, ஒன்றுகூடி நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.


ஜேனதன்black01


மெட்ரோ ரயிலில் நாங்கள் அமர்ந்தால், அருகிலிருப்பவர் சட்டென்று வேறு இடத்திற்கு மாறி விடுகிறார். அது மட்டுமல்லாமல், வேறு திசையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முறை சொன்னார் “ஆப்பிரிக்கர் என்று தெரிந்தாலே போதும். அவன் குற்றம் செய்யாவிட்டாலும் கூட அவன் மீதுதான் குற்றம்சாட்டப்படும் என்று. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், என்ன ஏது என்று விசாரிக்காமலே ஏராளமான மக்கள் ஒன்று கூடி தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு மாலில், தன்னை மிகவும் தொந்தரவு செய்த குழந்தையை, என்னை காண்பித்து ஒரு தாய் மிரட்டினார். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
என்ன மாதிரியான வளர்ப்பு இது ? இந்த குழந்தை வளரும்போது எந்த கருப்பு நிற மனிதனுடனும் பழக விரும்பாது இல்லையா ???


ஜோனதன்:black05


எங்களை பார்த்தாலே ஓடுகிறார்கள். நட்பு வேண்டி, நாங்களே வலிய போய் பேசினால் கூட “உங்களிடம் என்னால் நட்பாக முடியாது” என்று சொல்லுகிறார்கள். நாங்கள் ஏதாவது எதிர்செயல் புரிய வேண்டும் என்று தூண்டுகிறார்கள். ஒருவேளை, நாங்கள் எதிர்த்தால், கும்பலாக கூடி அடிக்கிறார்கள்.


நுராblack04


எங்களை முகத்திற்கு நேராக பார்த்து, உரக்க சிரிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்கர்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறார்களா என்ன ???. எங்களை பார்த்தவுடன் “சிகரட், கஞ்சா” இருக்கிறதா என்று கூசாமல் கேட்கிறார்கள்.


ஏனாblack03

பொது இடத்துக்குச் சென்று உணவருந்த முடியவில்லை. மொத்தக் கூட்டமும் எங்களைப் பார்த்து சிரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். its Just Bad

டெமிடோப்black02


ன்னுடைய தோழிகள் சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் சென்ற போது, சில இந்திய ஆண்கள் அவர்களிடம் “ஒரு நாள் இரவுக்கு எவ்வளவு ரூபாய்” என்று கேட்டிருக்கிறார்கள். சிலர் எங்களைப் பார்த்த உடனே , காறித் துப்புவார்கள்.

இந்தியாவில் உங்களை அவமானபடுத்திய நபர்கள் , உங்கள் நாடுகளுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ? என்று, மேலே பேசிய ஆப்பிரிக்க மக்களிடம் பேட்டி எடுத்தவர்கள் கேட்டிருக்கிறார்கள் .

அதற்கு அவர்கள் இப்படி பதில் அளித்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடு அவர்களுக்கு அளித்து கொண்டிருக்கிறது.

நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே.

நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நிறங்களை மறந்து விடுங்கள்.