Thursday, February 18, 2016

கொத்து ரொட்டி ---- 010

கடந்த  சில மாதங்களுக்கு முன்னர் சயீட் பாரூக் ,மாலிக் என்னும்
தம்பதிகள் இணைந்து  நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுமார் 14 பொதுமக்கள்  அமெரிக்காவில் கொல்லப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும் .தாக்குதலின்  இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். விசாரணையின் போது அவர்களிடம் இருந்த அப்பிள் ஐ-போன் ஒன்றை  கைப்பற்றிய அமெரிக்க FBI உளவுப் பிரிவால்  போனின்  உள்ளே செல்ல முடியவில்லை.  காரணம் பாஸ்வேர்ட் .பொதுவாக இப்படியான விடையங்களில் அனுபவம் பெற்ற நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவால் இந்த அப்பிள் ஐ-போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை .

.2014ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த பாஸ்-கோட் என்னும்  சிஸ்டம் தான் இதற்கு காரணம்  . இதனால் அவர்கள் அப்பிள் நிறுவனத்தைஅணுகி , அந்த ஐ போனை திறந்து தரும்படி கேட்டார்கள் . அப்பிள் ஐ போன் நிறுவனத்தால் மட்டுமே இந்த பாஸ்வேட்டை கடந்து செல்ல முடியும். ஆனால் அவர்கள் தமது பாவனையாளர் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, உரிமையாளர் கேட்டால் மட்டுமே நாம் அதனை செய்வோம் என்று கூறிவிட்டார்கள்.

இதனால் வேறு வழியில்லாத அமெரிக்க உளவுப் பிரிவினர்  அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள். இது பயங்கரவாதிகள் பாவித்த தொலைபேசி. அதில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கும். எனவே பாஸ்வேட் என்ன என்பதனை கண்டறிந்து , உளவுப் பிரிவுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாம் வழக்கு தொடுக்க உள்ளதாக அப்பிள் நிறுவனம் அதிரடியாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
 இது கண்டு பெரும்பாலான அமெரிக்கர்கள் அப்பிளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

அமெரிக்க FBI  உளவுப்பிரிவினர் பல தடவை பாஸ்வேட்டை முயற்சித்துப் பார்த்ததால், தற்போது இன்னும் ஒரு முறை பிழையாக பாஸ்வேட்டை அடித்தால் கூட ஐ-போன்  போனில் உள்ள அனைத்து தரவுகளும்  அழிந்து விடும் நிலையில்  உள்ளதாம் .  ஒரு குறிப்பிட்ட தடவைக்கு மேல் பாஸ்வேட்டை பிழையாக அடித்தால், மோபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் அழியும் படி புரோகிராம் செய்ய முடியுமாம் . இப்படி ஒரு தொழில்நுட்பம் ஜ -போனில் இருப்பதாக தெரிகிறது .நான் இதுவரையில் ஜ -போன் பாவித்தது கிடையாது .ஒரே ஒரு ஜ-பாட் 2 மட்டும் என்னிடம் இருக்கிறது .என்னவோ எனக்கு ஜ -போனில் பெரிதாக விருப்பம் இல்லை.அன்றோயிட்டில்தான் விருப்பம் அதிகம் .


@@@@@@@@@@


.இங்கு கனடாவில் பத்திரிகைகளை பார்த்தால் பல விதமான விளம்பரங்களை காணலாம் .ஆண் ஆணை தேடுதல் ,பெண் பெண்ணை தேடுதல் ,பெண் ஆணை தேடுதல் ,ஆண் தனக்கு பெண்ணை தேடுதல் போன்ற விளம்பரங்களையும் இதை விட பலவிதமான கேளிக்கைகளுக்குமான விளம்பரங்களை சர்வ  சாதாரணமாக காணலாம்.

ஆனால் காதலி தேவை என்று சொல்லி  வீதி ஓரத்தில் விளம்பரப்பலகை வாய்த்த ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  கனடாவில் . தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ள நபர் ஒருவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் வசிக்கும் ஒன்ராறியோ  மாநிலத்தில்  உள்ள லண்டன் நகரை(இங்கும் ஒரு லண்டன் உண்டு ) சேர்ந்த Peter Gould (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது ‘என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு காதலியை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.

இணையத்தளங்கள் அல்லது பார்ட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று காதலியை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு வெளியே 200 டொலர் செலவில் விளம்பர பலகையை வைத்துள்ளேன்.
என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், அதனை சுத்தமாக வைத்துள்ளேன். என்னுடைய துணிகளை நானே துவைத்து, நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன்.                                      
                            canada_gfriend 1   

என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டினுள்  LCD தொலைக்காட்சி என அனைத்து வசதிகளும் இருக்கிறது.

காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடவும், இந்த நாளின் கடைசியில் என்னுடன் அமர்ந்து பீயர் குடிக்கவும் அழகான ஒரு காதலி தேவை’ என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த விளம்பரத்தை பார்த்தும் யாரும் வரவில்லை என்றால், தன்னுடைய புகைப்படத்தையும் விளம்பர பலகையில் ஒட்டி மீண்டும் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.

முக்கியமாக, இந்த விளம்பரத்தை பார்த்தும் வரும் பெண் 35 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்,அவரின் காதலி கிடைத்தாரா  காதலர் தினதி அவருடன் கொண்டாடினாரா  என்பது தெரியவில்லை .ஆனால் கனடாவில் காசு இருந்தால் தினமும் காதலி கிடப்பார்கள் என்பது மட்டும் நிஜம் .


@@@@@@@@@@@@@


நேற்று தமிழகத்தில் நடைபெற்ற பா.ஜா.கா வின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மகன் திருமனத்தில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டாலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டது .நல்லதொரு ஆரம்பமாகவே பார்க்கிறேன் .எதிர் கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல .கடந்த காலங்களில் தமிழகத்தில் அரசியல் எதிரிகள் நிஜத்திலும் எதிரிகள் போலவே நடந்து கொண்டார்கள் .எம் ஜி ஆர்  இறந்தபோது கருணாநிதி இறப்புக்கு போக முடியவில்லை ..

உண்மையில் தமிழர்கள் ஒரு ஆரோக் கியமான ஒரு அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதில் வருத்தம் தான் .ஆதிகாலத்தில் இருந்து தலைவனை வணங்கும் குணம் கொண்ட தமிழனை அரசியல் வாதிகள் தங்கள் வசதிக்கு  ஏற்பஉருவேற்றி விட்டார்கள் .ஸ்டாலின் கூட ஒரு முறை ஜெயலலிதாவை சந்தித்தார் என நினைக்கிறேன்.

மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றன . இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாக வித்தியாசமாக இருப்பார்கள் என் நம்புகிறேன் .

@@@@@@@@@@@@@



பொதுவாகவே  ஓரளவு விபரம் தெரிந்த பெற்றோர்  தங்கள் பிள்ளைகள் தொடுதிரை கருவிகளை பயன்படுத்துவது பற்றி பலவிதமான கவலைகள் கொண்டிருப்பார்கள்

மேற்படி கருவிகளை குழந்தைகள் பயன்படுத்துவது பற்றி ஆராய்ச்சி யாளர்கள் என்ன சொல்கின்றனர்  என்பது  அண்மையில் நான் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு பகுதி  உங்களுக்காக தருகிறேன் .

டச்ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.


பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.

பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள்.

இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள்.


குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.


மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன்.

தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.


இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.

இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம்.இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள்.


முதலாவது, சிறு குழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை.அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.


இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.

தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

இனி நீங்கள் பொறுப்பான பெற்றோர் ஆக உங்கள் பிள்ளைகளை  நெறிப்படுத்துவீர்கள் என் நம்புகிறேன் .எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே  அது நல்லவராவதும் தீயவராவதும் எங்கள் வளர்ப்பினிலே .சரி இனி கிழே இருக்கும் படத்தையும் பார்த்துவிட்டு செல்லவும் . பலருடைய வீடுகளில் இப்படியும் நடக்கும் .ஹா ..ஹா ....




                                                   
                                       
    நன்றி